Friday, December 30, 2011

இலவசம், இலவசம் ஓடிவாங்கோ

ஒரு பொருள் வாங்கும் போது இன்னொரு பொருள் இலவசமாக கிடைத்தால் பெரும்பாலனவர்களுக்கு சந்தோஷமே. எண்ணெய், லோஷன் பாட்டில்களில் 20% அதிகம் என்றோ அல்லது கடுகு, பெருஞ்சீரகம் 30% அதிகமாக அடைக்கப்பட்டுள்ளது என்று பொதிகளில் அச்சிடப்பட்டிருந்தால் உடனே வாங்கி வந்துவிடுவோம். சமீபத்தில் என் கணவர் ரெடிமேட் ஊத்தப்பம் மா வாங்கி வந்தார். எனக்கு ரெடிமேட் பொடி வகைகள், மா, இட்லி, தோசை மா வகைகள் எப்போதும் பிடிப்பதில்லை. இந்த ஊத்தப்ப மா பார்த்ததும் கடுப்பு வந்தது. கூடவே சாம்பார் பொடி இலவசம் என்று இருந்தது. என் ஆ.காரரிடம் இதை எதுக்கு வாங்கினீங்க என்று கேட்டேன். ஒரு நாளைக்கு சாப்பாடு செய்கிற வேலை மிச்சம் என்றார். ஒரு கல்லில் ரண்டு மாங்காய் அடிச்சிட்டேனே என்று ஒரே பெருமை வேறு. சாம்பார் பொடியும், ஊத்தப்பம் மிக்ஸூம் இரண்டு மாங்காய்களாம்.
பழி வாங்க நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்துக் கொண்டேன். அன்று இரவே ஊத்தப்பம் செய்வது என்று முடிவு செய்தேன். பொதியில் சொல்லப்பட்ட முறையின்படி மாவை மிக்ஸ் செய்ய, பொதியினைத் திறந்தால் ஏதோ ஒரு வகையான மணம். வேறு சாப்பாடுகளும் இதை நம்பி ஆயத்தமாக இல்லாத காரணத்தினால் இதையே கல்லில் ஊற்றினேன். என் கணவர் வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்தார்.

ஆனால் பாருங்கள் ஒரு விதமான புகாரும் இல்லை. இரண்டு மாங்காயில் ஒரு மாங்காய் பழுது என்று அவரின் முகத்தைப் பார்க்க விளங்கியது. சாம்பார் பொடியும் ஷெல்ஃபில் அப்படியே தூங்குது. மாங்காய் அல்ல கல்லுத் தான் திரும்ப வந்திருக்கு.

ஊரில் இடம் பெயர்ந்து சென்று ஒரு பள்ளியில் இருந்த போது சாப்பாடு வாங்க காசு இருக்கவில்லை. பெரும் பசி எல்லோருக்கும். ஒரு வகுப்பறைக் கதவில் பெரிய பூட்டுத் தொங்கியது. யாரோ சொன்னார்கள் அந்த அறையில் சாப்பாட்டுப் பொருட்கள் இருப்பதாக. சிலர் அதை திறக்க விடமாட்டோம் என்று வாசலில் காவல் இருந்து களைத்துப் போய் போன பிறகு, வேறு சிலர் கதவினை உடைக்க மக்கள் உள்ளே புகுந்து சாப்பாட்டுப் பொருள்களை எடுத்தார்கள். ஒரு பக்கம் நிறைய நோட்டுக்கள், பென்சில், பேனாக்கள் இருந்தன. கதவினை உடைத்தவர்கள் சொன்னார்கள், தயவு செய்து சாப்பாட்டுப் பொருள்களை மட்டும் எடுங்கள். வேறு எதையும் தொட வேண்டாம். சரி என்று தலையாட்டிய மக்கள் பேனா, பென்சில், நோட்டு என்று எதையும் விட்டு வைக்கவில்லை. என் பிள்ளைக்கு பொழுது போக வேண்டாமா? அவனும் எவ்வளவு நேரம் தான் விட்டத்தையே வெறிப்பது என்று ஒரு அப்பா சொன்னார். இலவசம் என்பதுக்காக எதுக்கு எமக்கு வேண்டாத பொருட்களை எடுக்க வேண்டும். அடுத்த நாள் நோட்டில் கிழிக்கப்பட்ட பேப்பர்கள் கப்பல், ராக்கெட், குப்பைகளாக மாறி இருந்தன.


இந்தியாவில் இருந்த போது, ஒரு முறை குரோசரி கடையில் ஒரு பெண்மணி ஒரு பொருளை வாங்கிய பின்னர் நகராமல் அங்கேயே நின்றார்.
என்னம்மா வேணும், என்றார் கடைகாரர்.
ஏதோ ஃப்ரீன்னு போட்டிருக்கு. அதை குடுத்தா என்ன குறைஞ்சா போடுயிவாய், என்றார் பெண்மணி.
அது கொலஸ்ட்ரால் ஃப்ரீன்னு போட்டிருக்கு. போய் வேலையைப் பாரும்மா, என்று கடைக்காரன் பதில் சொல்ல, பெண்மணியின் முகம் வாடிப் போய்விட்டது.

ஒரு வெள்ளைக்கார ஆன்டிக்கும் அங்கிளுக்கும் 25வது மணநாள். இன்று என் மனைவிக்கு ஏதாவது பரிசுப் பொருள் வாங்கி குடுத்துட்டுத் தான் மறுவேலை என்று கணவர் கிளம்பினார். அவர் ஏதோ வைரத்தால் மனைவியை இழைக்கப் போகிறார் என்று பார்த்தால் மனிதர் குப்பைத் தொட்டியை தேடிச் செல்கிறார். குப்பைக்குள் இறங்கி ஒரு வாடிய ரோஜாப் பூச்செண்டினை எடுக்கிறார். வேறு குப்பையில் ஒரு தேநீர் கேட்டிலும் எடுத்துக் கொள்கிறார். 1.68 டாலருக்கு இனிப்பு மிட்டாய், ஒரு மனித மண்டை ஓட்டு பொம்மை வாங்கிக் கொள்கிறார். இரவு மனைவியை சாப்பிட வெளியே அழைத்துச் செல்கிறார். மனைவி ஒரு கண்டிஷனோடு செல்கிறார். சரி அப்படியே ஆகட்டும் என்கிறார்கணவர். சாப்பிட்ட பின்னர் மனைவியின் கண்களை மூடச் சொல்கிறார். ஒரு பெரிய சாக்குப் பையினை காரிலிருந்து எடுத்து வந்து, ரோஜா செண்டினை வெளியே எடுத்து மனைவிக்கு கொடுக்க மனைவியின் முகத்தில் எரிச்சல். என்ன செத்துப் போன பூவை தருகிறாயே? என்கிறார். பின்னர் கேட்டில், மிட்டாய்கள், பொம்மை எல்லாவற்றினையும் கொடுத்த பின்னர் பக்கத்து மேசையினை நோக்கி ஓடுகிறார். அங்கே மிஞ்சிப் போன உணவுகளை சேகரித்துக் கொண்டிருக்கிறார்.

நீ வரும் போதே இந்த வேலை செய்யமாட்டேன் என்று சொன்னபடியால் தான் உன்னுடன் வந்தேன். இப்ப இப்படி செய்கிறாயே, என்றபடி மனைவி எழுந்து வெளியே போகிறார்.

அட! பதறே என்பது போலப் பார்க்கிறார்கள் அங்கிருந்த மக்கள். இவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மேசைக்கு மேசை ஓடி, ஓடி உணவுகளை சேகரிக்கிறார். இது மனநோயாக இருக்குமோ என்பது என் கருத்து.
இது அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி. உலக மகா கஞ்சன்கள் என்று வேறு சிலரைக் காட்டினார்கள்.

எங்கள் இடத்தில் இருக்கும் மிருக காட்சி சாலையில் கோடை காலம் குறிப்பிட்ட நாட்களுக்கு அனுமதி இலவசம். இதற்காக மக்கள் கூட்டம் அலை மோதும். என் பக்கத்து வீட்டுப் பெண்மணி காலையில் எழுந்து போகப் போவதாக சொன்னார். நீயும் போறியா, என்று என்னைக் கேட்டார்.
காசு கொடுத்து இல்லை காசு கொடுக்காமலும் பாம்பினை பார்க்க நான் ரெடி இல்லை என்று சொன்னேன்.
ஃப்ரீ தானே போய் பார்க்க வேண்டியது என்றார்.
மிருக காட்சி சாலைகளில் சிங்கம், புலி, கரடி இப்படி மிருகங்கள் தப்பி ஓடுவது போல பாம்பும் ஓடி, மறைந்து நின்று, நான் போக வெளியே வந்தால்...

இல்லை நான் வரவில்லை. நீ போய் நல்லா எஞ்சாய் பண்ணு என்று கழன்று கொண்டேன்.
எதுக்கு எல்லாம் இலவசம் என்று ஒரு வரை முறையே இல்லாமல் போய்விட்டது.

Monday, December 19, 2011

தோசைப் பொடிதேங்காய்பூ - 1 கப்
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
எள் - 1/4 கப்

காய்ந்த மிளகாயை வெறும் சட்டியில் வறுத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
சட்டியில் தேங்காய் துருவலை போட்டு, மிதமான தீயில் வறுக்கவும். கறிவேப்பிலை சேர்க்கவும். ஒரளவுக்கு வறுபட்டதும் எள், மிளகு சேர்க்கவும். தேங்காய் துருவல் பொன்னிறமாக நிறம் மாறும் வரை வறுக்கவும். இறக்கி நன்கு ஆற வைக்கவும்.

ஆறியதும் அரைத்து வைத்த மிளகாய்ப் பொடி, உப்பு கலந்து நன்கு அரைக்கவும்.
யம்மி... தோசைப் பொடி தயார்.
இது என் அம்மாவின் ரெசிப்பி. முன்பு அடிக்கடி செய்து அனுப்புவார்கள். இப்பெல்லாம் இந்தப் பொடியைக் கண்ணில் காட்டுவதே இல்லை. நானே முதன் முறையாக செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.
*********************************

ராசி பலன் எழுதுபவர்கள் எதுக்கு இப்படி எழுதுகிறார்கள் என்று நினைக்க சிரிப்பா வருகிறது. எங்க வீட்டில் நான் ஒரு ராசி, என் கணவர் ஒரு ராசி. எங்கள் இருவருக்கும் எதிரும் புதிருமாவே பலன் எழுதுகிறார்கள்.

எனக்கு வீம்பு - அவருக்கு சிரமம்
எனக்கு சிரமம் - அவருக்கு களிப்பு
எனக்கு செலவு - அவருக்கு பயம்
எனக்கு திறமை - அவருக்கு செலவு

ஒவ்வொரு நாளும் இதே கதையாத் தான் இருக்கு.

*****************************************


நானும், என் மகளும் செய்த நத்தார் ornament . மகள் தான் மணிகள் ஒட்டி, அலங்காரம் செய்தது.

Sunday, December 11, 2011

பூக்கள்
முதலில் இப்படி வட்டமாக புள்ளிகள் போட்டுக் கொள்ளவும்.

பிறகு படத்தில் காட்டியபடி, ஓரத்தில் நூலினால் தையல் போட்டுக் கொள்ளவும். இந்த நூல் கொஞ்சம் லைட்டான கலரில் இருக்குமாறு தைத்தால் நன்றாக இருக்கும்.


ஊசியில் கொஞ்சம் டாக்கான நூலினை கோர்த்து, பூவின் மையத்தில் ஊசியினை கீழிருந்து குத்தி மேலே கொண்டு வரவும். இந்த நூலினை லைட்டான நூலின் வழியாக கோர்த்து இழுக்கவும். மிகவும் டைட்டாக இழுக்காமல் பூவின் இதழ் போல இருக்குமாறு நூலினை சரி பார்த்துக் கொள்ளவும். நூலினை துணியின் கீழ் கொண்டு சென்று, மீண்டும் அடுத்த இதழினை இதே போல தைக்கவும். எல்லா இதழ்களையும் தைத்த பிறகு படத்தில் காட்டியது போல பூ ஷேப் கிடைக்கும்.


பூவின் மையத்திற்கு ஊசியில் sequin கோர்த்து, பிறகு முத்து கோர்க்கவும். பின்னர் நூலினை மீண்டும் சீக்கின்ஸ் வழியாக கொண்டு சென்று, துணியின் கீழே முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.

( திரும்ப முத்தின் வழியாகத் தான் நூலினைக் கொண்டு செல்வேன் என்று அடம்பிடித்தால் நான் ஒன்றுமே செய்ய முடியாது )

இப்ப அழகான பூக்கள் ரெடி.

சங்கிலித் தையல், அடைப்புத் தையல்களால் உருவான பூக்கள், வண்ணத்துப்பூச்சிகள் கீழே.


Monday, November 28, 2011

வீடு நிறையக் குழந்தைகள்

எங்களில் பெரும்பாலனவர்களுக்கு இரண்டு, மூன்று குழந்தைகள் வளர்ப்பதே பெரிய சவாலாக இருக்கு. ஆனால் சிலருக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது.

தொலைக்காட்சியில் வரும் சில நிகழ்ச்சிகளைப் பார்த்தால் எரிச்சல் மண்டிக் கொண்டு வரும். ஜான் & கேட் ப்ளஸ் 8. இவர்களுக்கு ஒரு பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள், இரண்டாவதில் 6 குழந்தைகள். அந்த அம்மா செய்யும் அலட்டகளைப் பார்த்தா ரத்தக் கண்ணீர் வராத குறை தான்.

ஒரு குழந்தையை வளர்க்கும் போது சுற்றுச் சூழல் எவ்வளவு மாசடைகிறது என்று விரிவாக காட்டினார்கள். அதாவது டயப்பர் செய்ய பயன்படும் மூலப் பொருட்களில் முக்கியமானது மரம். எவ்வளவு மரங்களை வெட்டி, டயப்பர் செய்து, டயப்பரை பயன்படுத்திய பின்னர் குப்பையில் எறியும் போது ஏற்படும் கேடுகள் இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு முறை கடைக்குச் சென்று குழந்தைகளுக்கு ஆடைகள் எடுக்க ஏற்படும் செலவுகளைப் பார்த்தா மலைப்பா இருக்கும்.

இந்த ஜான் & கேட் ஜோடி இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்கள். விளம்பரம் மூலம் நிறையப் பணம் வந்திருக்கும். படுக்கும் நேரம் தவிர்த்து மீதி நேரம் எப்போதும் வீடியோவும் கையுமாக ஆட்கள் வீட்டினுள் இருந்திருப்பார்களோ என்றே தோன்றுமளவுக்கு சாப்பிடுவது, சண்டை போடுவது என்று எல்லாமே காட்டுவார்கள். இறுதியில் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று சூப்பர் மார்க்கெட் நியூஸ் ஸ்டான்டில் செய்தி பார்த்தேன். இந்த நிகழ்ச்சியைப் பார்த்து கடுப்பான ஒரு ஆசாமி, துப்பாக்கியுடன் சென்று ஏதோ ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையத்தில் சிலரை கொன்று விட்டதாக சொன்னார்கள். இந்த ஆசாமி ஜான் & கேட் நிகழ்ச்சியை நிறுத்தும்படி நிறையத் தரம் சொன்னாராம். யாரும் காது கொடுத்துக் கேட்கவில்லையாம். அந்த ஆசாமியின் கூற்றுப்படி இந்த மாதிரி ஷோக்கள் அமெரிக்காவில் தடை செய்யப்பட வேண்டியவை.

இதே போல இன்னொரு நிகழ்ச்சி. 16 & counting ( அதாவது 16 பிள்ளைகள் ஆனால் இன்னும் பெற்று முடியவில்லை ). ஒரு முறை சானல் மாற்றிக் கொண்டு போகும் போது இந்த நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. அந்த அம்மா 16 குழந்தைகளைப் பெற்று, 16க்கும் J இல் ஆரம்பிக்குமாறு பெயர்களும் வைத்து, வயிற்றில் இன்னொன்று வளருவதாக சொன்னார். ஆண்டவன் கொடுக்கும் போது எப்படி வேண்டாம் என்று மறுப்பதாம், என்றார் அந்தப் பெண்மணி. ஆண்டவன் கொடுக்கிறார் என்று எல்லோரும் இப்படியே பெற்றுக் கொண்டிருந்தால் பூமி என்னாவது.

இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே பாவம் என்பது என் கருத்து. சமீபத்தில் அவருக்கு 19 வது குழந்தை பிறந்துவிட்டதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். இப்பவும் நிப்பாட்டுகிற ஐடியா எதுவும் அந்த அம்மாவுக்கு இல்லையாம்.

இவர்கள் பிரபலமாக யார் காரணம் என்று பார்த்தால் மக்கள் தான். இந்த மாதிரி நிகழ்ச்சிகளை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். அதனால் ஒளிபரப்பு நிலையங்களுக்கு விளம்பரங்கள் மூலம் நல்ல இலாபம் வருகிறது. நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு வேலையும் மிச்சம், பணமும் நன்றாக கொட்டும். நல்ல திறமையான நடிகர்களை இயக்கி நாடகங்கள் எடுப்பதானால் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால், இந்த மாதிரி ஷோக்களில் பெரிதாக மெனக்கெட ( கதை எழுதுவது, இயக்குவது, மேக்கப், ஆடைகள் ) தேவையில்லை. வீட்டில் இருக்கும் ஒரு வாண்டு எதையாவது உளறிக் கொட்டினாலும் மக்கள் பார்ப்பார்கள். இது மாதிரி நிகழ்ச்சிகள் எல்லாம் வளரும் நாடுகளில் இன்னும் வரவில்லை என்று நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவை பார்த்த பின்னர் யாருக்கும் ஐடியா வந்தாலும் வரலாம்.

Friday, November 4, 2011

குறட்டைப் புலி


இதில் வரும் கதை நாயகன் பெயர் தான் குறட்டைப் புலி. அவனுக்கு அவன் பெற்றோர் ஆசையாக வைத்த பெயர் குணசீலன். இவன் விடும் குறட்டையால் மனைவி வைத்த பெயர் " குறட்டைப் புலி ". மனைவி ரோகிணிக்கு இவனின் பட்டப்பெயர் சொல்லி அழைப்பது என்றால் கொள்ளை விருப்பம். அதுவும் மிகவும் கோபமாக இருக்கும் நேரத்தில் வரும் குறட்டைப் புலி என்ற பெயருக்கும், மகிழ்ச்சியாக இருக்கும் போது அழைப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை அறிய முடியும்.

ஐயா, குறட்டைப் புலியே, என்ன யோசனை என்று குரல் வந்ததும் விளங்கியது ஏதோ அர்ச்சனை நடக்கப்போகிறது என்பது.

என்ன சொல்லுங்க மேடம்?, என்றான் குணசீலன்.

ராத்திரி முழுக்க உங்க குறட்டையால் படுக்க முடியவில்லை. எழுந்து போய் டீ போடுங்க. நான் கொஞ்ச நேரம் படுக்கணும், என்று உத்தரவு வந்தது. இவன் புரண்டு படுத்தான்.

என் அப்பாவுக்கு கல்யாணம் பேசும் போதே கண்டிஷனா சொன்னேன் குறட்டை விடும் மாப்பிள்ளை வேண்டாம் என்று. அவர் கேட்டாத்தானே. இப்ப பாரு ஒவ்வொரு நாளும் நான் படும் பாடு, என்று தொடர்ந்த ரோகிணியை இடைமறித்தான் குணசீலன்.

மாப்பிளையை தூங்க வைச்சு, பக்கத்தில் இருந்து பார்த்திருக்க வேணும் என்று சொல்கிறாயா? என்றுவிட்டு பெருங்குரலில் சிரித்தான்.
இங்கை பாரு ரோகிணி, குறட்டை ஒரு வியாதி. குறைட்டை விடுபவர்கள் நிம்மதியாக படுப்பதில்லை. அவர்களுக்கு ஆயுளும் குறைவாம், என்று காரணங்கள் சொன்னான்.

இதையே எவ்வளவு நாட்களுக்குத் தான் சொல்வீங்க. second hand snoring
என்ற நோயால் நான் பாதிச்சுப் போய் இருக்கிறேன். இந்த மருத்துவ உலகம் இதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணவே மாட்டார்களா? என்றாள் ரோகிணி.

ம்ம்... கண்டு பிடிச்சு உன் பெயரையே வைக்கப் போறாங்களாம் என்று இடை மறித்தவனை முறைத்தபடி தொடர்ந்தாள். என் பாட்டிக்கு 95 வயசு. இப்பவும் குறட்டை விட்டுட்டு சந்தோஷமா இருக்கிறார்கள். ஆனால், எங்க தாத்தா பாருங்க 40 வருடத்துக்கு முன்னாடி போய் சேர்ந்துட்டார்.

ஓ! அப்படியா, என்றான் குணசீலன்.

என்ன நொப்படியா? எத்தனை முறை சொல்றது மருத்துவரிடம் போய் ஏதாவது தீர்வு கேட்கச் சொல்லி. நீங்க கேட்டாத் தானே, என்று அலுத்துக் கொண்டாள்.

தாயே! அது மட்டும் முடியவே முடியாது. போன வாரம் தொலைக் காட்சியில் ஒரு பொருள் காட்டினார்களே அதை வாங்கலாமா என்று யோசனை சொன்னான்.

போன மாசம் ஒரு பொருள் வாங்கினோமே அதுக்கு என்ன ஆச்சு?, என்று கேட்டாள் ரோகிணி.

ஓ! பந்து போல ஒரு பொருளை முதுகில் ஒரு பை தைச்சு, அதனுள் பந்தை வைச்சு படுக்கச் சொன்னாங்களே? அந்தப் பொருளா? , என்றான் குணா. எங்க வீட்டு டாமி போன வாரம் வைச்சு விளையாடிட்டு இருந்திச்சே என்றான்.

அதுக்கு 30 டாலர்கள் தண்டமாக அழுதோமே. அதை டாமிக்கு குடுத்துட்டு பேச்சைப் பாரு என்றாள்.
இன்னும் இரண்டு மாதத்தில் குழந்தை பிறக்கப் போகிறது. உங்களை வைச்சுட்டு நான் என்ன செய்யப் போறேனோ தெரியவில்லை என்று நொந்து கொண்டாள். என்னை மட்டும் இல்லை பிறக்க போகிற குழந்தையைக் கூட உங்கள் குறட்டை பாதிக்கத் தான் போகிறது என்றாள் ரோகிணி.

அந்த நாளும் வந்தது....

( தொடரும் )

பின்குறிப்பு: இந்தக் கதை இன்னும் முடியவில்லை. இது எங்களுக்குத் தெரியாதா என்று நீங்க முணு முணுப்பது விளங்குது. நான் கொஞ்சம் அவசர வேலையாகப் போவதால் கதையினை முடிக்க நேரம் இல்லை. எனவே நீங்க இந்தக் கதையின் முடிவு என்னவாக இருக்கும் என்று ஊகித்தால் பரிசெல்லாம் கொடுக்கமாட்டேன். ஆனால், கண்டிப்பாக பாராட்டு மழை உண்டு. குறட்டைப் புலி திருந்தினாரா? மருத்துவரைப் பார்க்கப் போனாரா? முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், குறட்டைப் புலியை கொல்லவோ அல்லது சித்ரவதை செய்வதாகவோ கண்டிப்பாக முடிவு இருக்கப்படாது. உங்கள் வீட்டில் கூட ஒரு குறட்டைப் புலி இருக்கலாம். அல்லது நீங்கள் கூட ஒரு குறட்டைப் புலியாக இருக்கலாம். உங்கள் கற்பனைக் குதிரையை கன்னாபின்னாவென்று ஓட விடுங்கள் பார்க்கலாம்.

******************************************************

இது நான் தைச்ச Honey Comb Smocking . கொஞ்சம் கடுப்பு பிடிச்ச வேலை தான். ஆனால், அழகோ! அழகு!!!!

Thursday, November 3, 2011

மூழ்காத கப்பலே....எனக்கு நண்பிகள் தான் இருந்தார்கள். நண்பர்கள் என்று யாரும் இருந்ததில்லை. 3 ஆம் வகுப்பு தொடக்கம் 5 வரை மட்டுமே ஆண்கள், பெண்கள் சேர்ந்து பயிலும் பள்ளியில் கல்வி கற்றேன். பெரிதாக யார் முகமும் ஞாபகம் இல்லை. ஒரே ஒரு பொடியன் மட்டும் பிள்ளையார் ஸைஸில் இருந்தான். அவன் முகம் மட்டும் இன்னும் ஞாபகம் இருக்கு. காரணம், ஊரில் அம்மன் கோயில் திருவிழாவின் போது பிள்ளையாரின் தேரில் அவனும் ஏறி ( அவன் அப்பா ஐயர் ) அமர்ந்திருப்பான். மோதகம், கொழுக்கட்டை என்று உள்ளே தள்ளியபடி இருப்பான். இடைக்கிடையில் சாமிக்கு தீபமும் காட்டுவான்.
நண்பிகள் என்றால் எனக்கு நிறைய இருந்தார்கள். பள்ளியில் ஒரு கூட்டம், ட்யூசனில் இன்னொரு கூட்டம். என்னை விட வயசு குறைந்த, கூடிய வகுப்புகளிலும் நண்பிகள் என்று ஏகப்பட்ட நண்பிகள்.
ட்யூசனில் ஆண்களும் இருந்தார்கள். அநேகம் பேர் இரட்டை வால்கள் தான். என் நெருங்கிய தோழியின் ஒன்றுவிட்ட அண்ணனும் எங்களோடு படித்தார். அவரின் குரல் சிம்மக்குரல் சிவாஜி கணேசன் போல அவ்வளவு கூர்மை. காது இரண்டும் டமால் ஆகி விடும் அளவுக்கு இருக்கும் அவரின் குரல். அவருக்கு நாங்கள் வைத்த பட்டப்பெயர், வீரையா சூரையா. இந்தப் பெயர் இலங்கை கடற்படையின் அதிவேக படகின் பெயர். கடலில் நின்றால் பல மைல்கள் தாண்டியும் அதன் இரைச்சல் காதுகளில் விழும்.

பெண் நண்பிகள் நிறைய இருந்தாலும் எல்லோரும் வீட்டுக்கு வருவதோ அல்லது நான் அவர்களின் வீடுகளுக்குப் போவதோ இல்லை. என் அப்பா இதில் மிகவும் கண்டிப்பானவர். அப்படியே போவதெனிலும் என் பாட்டியோடு தான் அனுப்புவார். பாட்டியோடு வருவதை விட நீ வராமல் இருப்பது மேல் என்று என் நண்பிகள் சொல்வார்கள்.

இந்தியாவில் இருந்த போது தோழிகள் அதிகம். குறிப்பிடத்தக்கவர்கள் மஞ்சுளா, ஜெயசிறீ இருவருமே. ஜெயசிறீ - இவர் நல்ல வசதியான குடும்ப பெண். என் மீது மிகவும் பிரியமாக இருப்பார். நான் கொண்டு போகும் சாப்பாட்டினை அவரும், அவருடைய சாப்பாட்டினை நானும் சாப்பிடுவதுண்டு. அவருக்கு நான் கொண்டு போகும் வாழைப்பழ தோசை என்றால் கொள்ளை விருப்பம். லஞ்ச் நேரம் வருவதற்கு முன்பே பெட்டி காலியாகி விடும். ஏன்டி! இப்படி பறக்கிறே. நான் ரெசிப்பி சொல்றேன் உங்க அம்மாவிடம் சொல்லி செய்து சாப்பிட வேண்டியது தானே, என்பேன்.


இல்லைடி. உங்க அம்மா செய்யுறது சூப்பரோ சூப்பர் என்பாள். ஒன்றாக சேர்ந்து படிப்பது, கடலை போடுவது என்று நன்றாகவே போனது. கல்லூரிக்கு போன பின்னர் இவரை நான் பார்க்கவே இல்லை. போன் நம்பர் வாங்கி வைத்திருக்கலாம் என்று இப்ப அடிக்கடி நினைப்பதுண்டு.
அடுத்தவர் மஞ்சுளா. இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகவும் நன்றாக படிப்பார். பள்ளி ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்தார். அவரின் அம்மா ஊரிலிருந்து கொண்டு வரும் நொறுக்குத் தீனிகள் எதுவாக இருந்தாலும் எனக்கும் கொண்டு வந்து தருவார். நான் வேண்டாம் என்று மறுத்து விடுவேன். காரணம் - பள்ளி விடுதியில் சாப்பாடு மிகவும் மோசமாக இருக்கும் என்று நண்பிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். மஞ்சுளாவே என்னிடம் அடிக்கடி சொன்னதுண்டு. அம்மா கொண்டு வரும் உணவுகளை அவரே வைத்து உண்ணச் சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளவே மாட்டார். சில நேரங்களில் கைகளை பொத்தியபடி வேகமாக வருவார். மூடிய கையினுள் மைசூர் பாகு இருக்கும். என் மேசையில் வைத்து விட்டு, வேகமாக ஓடி விடுவார்.

இப்ப நினைத்தாலும் மனது நிறைவது போல இருக்கும் மஞ்சுளாவின் நட்பு. பள்ளிப் படிப்பினை முடித்த பின்னர் இவரின் தாய்மாமனுக்கு இவரை கட்டாயமாக திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள் என்று பின்னர் அறிந்து கொண்டேன். கல்லூரியில் சேர்ந்திருக்கலாமே என்று ஒரு நாள் அவரிடம் கேட்டேன். வாணீ, நான் எங்கே போவேன் பணத்திற்கு என்றார் கண்கள் குளமாக. என் கைகளை சிறிது நேரம் பிடித்துக் கொண்டிருந்தவர் எதுவும் சொல்லாமல் போய் விட்டார். அதன் பிறகு நான் அவரை சந்திக்கவேயில்லை.

கனடா, அமெரிக்கா வந்த பிறகு எந்த நட்பும் நிலையாக இருக்கவில்லை. அமெரிக்கா வந்த புதிதில் ஃபர்கானா என்ற பங்களாதேஷ் தோழி இருந்தார். இவரைப் பற்றி நான் எழுதிய ஒரு பதிவு கூட இங்கே இருக்கு. அவரின் மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் அனுப்பினாலும் பதில் இல்லை. மற்றும்படி அறுசுவையின் மூலம் அறிமுகமான அதிரா, இமா, மகி ஆகியோரை நேரில் பார்த்ததே இல்லை. எல்லோரையும் நேரில் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை.
அதிரா சில மாதங்களின் முன்னர் எழுதச் சொன்ன பதிவு. எழுதி முடிச்சுட்டோம்ல்ல.

( மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட் ஷிப் என்பதை தமிழ் படுத்தி தலைப்பு போட்டிருக்கிறேன். )

Friday, October 21, 2011

செல்லப் பிராணிகள்

வெளிநாடுகளில் நாய், பூனை, பாம்பு, பல்லி, இப்படி இன்னபிற செல்லப் பிராணிகள் வளர்ப்பதெல்லாம் ஒரு கலை என்றே நம்புகிறேன். நல்ல ஜாதி நாய் வாங்குவதென்றால் அதற்கு ஒரு விலை, அதை பராமரிப்பதற்கு ஒரு விலை. பராமரிப்பு என்பதில் அதன் உணவு, கால் நடை வைத்தியருக்கு பெரும் பணம், இது தவிர தொலைக்காட்சிகளில் காட்டப்படும் பொருட்களை வாங்குவதற்கு ஒருவர் தனியாக வேலைக்குப் போய் வர வேண்டும்.

சிலர் செல்லப் பிராணிகளுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் மருத்துவருக்கு தண்டமாக நிறைய அழ வேண்டி இருக்கும். என் உறவினரின் நாய்க்கு தொண்டை சரி இல்லை. கத்தும்போது விநோதமான ஒலி வந்தது. அந்த நாய்க் குட்டிக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் இல்லை. ஒரு முறை மருத்துவரிடம் சென்று வந்தமைக்கு பில் 500 டாலர்கள். மருத்துவர் ஏதோ மாத்திரைகள் குடுத்தாராம். ஃபாலோ அப் செக்கப் வேறு இருக்காம். அட ராமா! என்று நினைத்துக் கொண்டேன்.

பிள்ளைகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு விளம்பரம்.. நாய்களுக்கு தண்டர் சேர்ட் என்று ஒரு பொருள் மார்க்கெட்டில் புதுசா வந்திருக்காம். அதாவது சில நாய்களுக்கு இடி முழக்கம், வாக்கும் கிளீனர் சத்தங்கள் கேட்டால் பயந்து நடுங்குமாம். அவைகளுக்கு இந்த வகை சேர்ட்டுகளை வாங்கி மாட்டி விட்டால் அவை இடிமுழக்கம் நேரம் கூட பயமில்லாமல் கூலாக இருப்பார்களாம். எங்க ஊர்ல கூட வீட்டுக்கு நாலு நாய்கள் இருக்குமே. அவை இடிமுழக்கம், பட்டாசு சத்தங்களுக்கு எங்கே போய் ஒளிந்து கொண்டன என்று இப்ப நினைப்பதுண்டு.

இன்னொரு பொருள், பூனைகள் ஆய் போக மண்ணை நிரப்பி, அதில் பேக்கிங் சோடா கலந்த ஒரு கலவையை நிரப்பி, எடுத்து குப்பையில் போடுவதற்கு ஒரு ப்ளாஸ்டி கரண்டி போன்ற ஒரு சாமான்.

வேறு ஒரு பொருள், பூனைகள் அவற்றின் தேய்ந்து போன நகங்களை கூர்மையாக்க ஒரு பொருள். மரத்தினால் திண்டு போன்ற ஒரு அமைப்பு செய்து, அதன் மீது தடிமனான துணி வைத்து, ஓரத்தில் ஒரு குச்சியில் கொடி போன்று ஒரு துணியினை கொழுவி இருந்தார்கள். பூனைகள் நகங்களை கூர்மையாக்கிய பின்னர் அந்தக் கொடியினை தட்டி விளையாடலாம் என்பது போலக் காட்டினார்கள். " முன்னாடியெல்லாம் என்னையே பிராண்டிட்டு இருப்பான் என் வீட்டு பூனை. இப்ப பிராண்ட ஒரு பொருள் வந்த பிறகு நான் தப்பிச்சேன்", என்று ஸ்டேட்மென்ட் விடுத்தார் ஒரு அம்மா.
போன வாரம் நாய்க்கு வாயில் ஸ்மெல் வராமல் ஸ்பிரே செய்ய வாசனைத் திரவிய பாட்டில் காட்டினார்கள். இதெல்லாம் ரெம்ப ஓவரா இருக்கே என்று மலைச்சுப் போனேன்.
பக்கத்து வீட்டில் ஒரு நாய். பரம சாது. அல்ஸேஷன் வகையை சார்ந்தது. ஒரு நாள் மழுங்க, மழுங்க மொட்டையுடன் ஒரு நாய் நின்றது அவர்கள் வீட்டில். என்ன இது பழைய நாய்க்கு என்ன ஆச்சு? ஏதாவது சீக்கு வந்து போய் சேர்ந்திடுச்சா என்று நினைத்தேன். ஆனால், முகத்தைப் பார்த்தால் பழைய அப்பிராணி போல இருக்கவே பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் விசாரித்தேன்.
ஓ! அதுவா இது என் பழைய நாயே தான். அதுக்கு முடியெல்லாம் groom பண்ணிட்டோம், என்றார். முடியை வழிக்கவே பெட் ஸ்டோர்களில் ஆட்கள் இருக்கிறார்கள்.

இது தவிர உடல் ஊனமுற்றவர்களை கவனிக்க நாய்களை பழக்கி குடுக்க ஆட்கள் இருக்கிறார்கள். அதாவது ஊனமானவர்களுக்கு சேவைகள் செய்ய, அவர்களைப் பாதுகாக்க என்று ஸ்பெஷலாக பழக்கி இருப்பார்கள். அது மிகவும் அவசியமான ஒன்று தான். நாங்கள் முன்பு குடியிருந்த அப்பார்ட்மென்டில் ஒரு ஊனமுற்ற ஒருவர். அவர் எப்போதும் சக்கர நாற்காலியில், நாயுடன் தான் திரிவார். ஒரு நாள் எலிவேட்டருக்கு காத்திருக்கும் போது அவரும் வந்தார். அவர் வந்தார் என்று நான் சொல்வது நாயும் கூடவே வந்தது என்று அர்த்தம். நல்ல திடகாத்திரமான, பார்க்கவே ஒரு வித அச்சம் தரும் வகையில் இருந்தார் மிஸ்டர். பில். அவரின் கழுத்தில் ஒரு அட்டை தொங்கியது. பக்கத்தில் நின்றமையால் படிக்க முடிந்தது. அதில் பின்வருமாறு அறிவிப்பு இருந்தது, " நான் பொல்லாதவன். எனக்கு பிஸ்கோத்து, கேக் தர பக்கத்தில் வந்தாலோ அல்லது சோ க்யூட் என்று தடவினாலோ மிகவும் பொல்லாதவனாக மாறிடுவேன். அன்புடன், பில்." பில் என்பது நாயின் பெயரா அல்லது ஓனரின் பெயரா தெரியவில்லை. நான் நாலடிகள் தள்ளி நின்று கொண்டேன். எலிவேட்டர் வந்த பின்னர் இரண்டு பில்களும் ஏறிக் கொண்டார்கள். பில் எலிவேட்டரின் பட்டனை அழுத்திப் பிடித்துக் கொண்டே என்னை உள்ளே வருமாறு கூப்பிட்டார்.
எலிவேட்டருக்குள் போய் நாயிடம் கடி வாங்கி சாக நான் என்ன லூஸா என்று நினைத்தபடி, நோ தாங்ஸ். நீங்க போங்க... நான் என் ஆ. காரர், இல்லை எலிவேட்டர்... இப்படி எதையோ புலம்பிக் கொண்டிருக்க அவர்கள் இருவரும் சென்று விட்டார்கள்.

இது தவிர நாய்களுக்கு ஸ்வெட்டர், சப்பாத்துக்கள், விதம் விதமான உணவுகள் என்று நிறைய இருக்கு பெட் ஸ்டோர்களில்.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது எங்க ஆட்கள் ஊரில் வளர்த்ததெல்லாம் நாய் வளர்ப்பு என்றே சொல்ல முடியாது. எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு மிஞ்சும் எலும்புகள், சோறு, மீன் முட்கள்... இவைகள் தான் பெரும்பாலும் நாய்களுக்கு உணவு. சிலர் விதிவிலக்காக இருப்பார்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், பெரும்பாலும் வீடுகளில் நாய், பூனை என்றாலே ஒரு இளக்காரம் தான்.

என் பிள்ளைகளுக்கு நாய், பூனை வளர்க்க ஆசை. ஊர் போல இங்கு இல்லை. அது ஆய் போக வெளியே கூட்டிட்டு போகணும். வின்டர் குளிரில் இதெல்லாம் ஆகிற காரியமா? ரோட்டின் ஓரத்தில் நாய்கள் இரண்டுக்குப் போனால் அதை க்ளீன் பண்ணனும். அதற்காகவே சில இடங்களில் பைகள் வைத்திருப்பார்கள். நீங்க இரண்டு பேரும் நாய், பூனை ஒண்ணுக்கு, இரண்டுக்கு போனால் க்ளீன் செய்ய ரெடி என்றால் வாங்கலாம் என்றேன். அதன் பிறகு மூச் ஒரு சத்தம் கூட இல்லை.

Tuesday, October 11, 2011

இரண்டு பயங்கள்

நான் பயப்படும் விடயங்கள் இரண்டு. 1. பாம்புகள் 2. ....
முதல்ல இதைப் படியுங்கள். பிறகு இரண்டாவது சொல்றேன். வீட்டினை சுத்தம் செய்து கொண்டிருந்த போது வெளியே சிறுவர்கள் எதையோ ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. வேலை முடித்த பின்னர் ஓய்வாக இருந்தபோது இரண்டு இளைஞர்கள் மீண்டும் அதே இடத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள். அட! என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேனே ஒழிய போய் பார்க்க வேண்டும் என்று எண்ணம் எழவேயில்லை. மாலை நேரம் தபால் பெட்டியில் அன்றைய தபால்களை எடுக்க சென்ற போதும் நினைவுக்கு வரவில்லை. தபால்களை எடுத்து விட்டு நிமிர்ந்த போது நீளமாக ஏதோ ஒன்று கண்ணில் பட்டது. முதலில் மனப் பிரமையாக இருக்குமோ என்று நினைத்தேன். மீண்டும் பார்த்த போது மனப்பிரமை அல்ல உண்மை என்று விளங்கியது. பக்கத்து வீட்டு கார் பார்க்கிங் செய்யும் இடத்தில் ஒரு ஓரடி நீள பாம்பு அடிபட்டுக் கிடந்தது. உடல் நடுங்கத் தொடங்கியது. சாவுக்கிராக்கி! இது சாக வேறு இடம் கிடைக்கவில்லையா? என் வீட்டருகில் தான் வந்து சாகணுமா? எனக்கு ஈரக் குலையே நடுங்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டு ஆசாமி காரை பார்க் செய்துவிட்டு இறங்கினார். செல் போனில் பயங்கர பிஸியாக இருந்தார். என் மிரண்ட விழிகளைப் பார்த்ததும் என்னாச்சு என்றார்.
பாம்...பு என்றபடி கைகளைக் காட்டினேன். ஓ! அதுவா நான் தான் கொன்றேன் இப்ப என்ன அதுக்கு, என்றபடி அதை மிதித்துக் கொண்டே கடந்து சென்றார்.
வேறு இரு வாண்டுகள் வந்து பக்கத்தில் நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். இதுங்களுக்கு பாம்பு என்றால் பயம் இல்லையா?
அன்று என் மகன் பள்ளியில் இருந்து வந்ததும் பாம்புக் கதையை சொன்னேன். இதென்ன பிரமாதம் அம்மா. எங்க ஸ்கூல் விளையாட்டு மைதானத்தில் நாங்க விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு ஸ்நேக் வந்திச்சு. எங்க கேம்ஸ் டீச்சர் காலினால் தள்ளிக் கொண்டு போய் ஓரமா விட்டாங்க. அது ஓடியே போயிருச்சு, என்றார்.
மனிதர் எங்கேயும் நிம்மதியா இருக்கவே முடியாது போலிருக்கே. இப்பெல்லாம் வெளியே இறங்கு முன்னர் பாம்பு ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்த பின்னர் தான் கீழேயே இறங்குவேன்.

இரண்டவாது பயம்... ஊசி.
சமீபத்தில் என் மருத்துவரைப் பார்க்கப் போயிருந்த போது வழமையான செக்கப் முடித்த பின்னர் ஒரு ஊசியின் பெயரைக் குறிப்பிட்டு அந்த ஊசி உனக்கு சிறு வயதில் போட்டதா என்றார்.
ம்ம்ம்... அதெல்லாம் போட்டாச்சு என்று அவசரமாக பதில் சொன்னேன்.
அதுக்கு ஆதாரம் இருக்கா, என்றார் மருத்துவர்.
ஊசி போட்ட மருத்துவரை கூட்டிட்டே அலைய முடியுமா? என்று நினைத்துக் கொண்டே, வாட் யூ மீன்?, என்றேன்.
இல்லை ஊசி போட்ட பிறகு ஒரு கார்ட் தருவார்களே அது இருக்கா என்றார்.
நல்லாக் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி. இலங்கையில் எங்க வீட்டின் மீது குண்டு போட்டவன் தலையில் இடி விழ என்று சாபம் போட்டுக் கொண்டே... இப்ப எதுக்கு அதையெல்லாம் கேட்கிறார் என்று யோசனை வந்தது.
இவ்வளவு நாட்களாக நான் இந்தியப் பெண் என்று நினைத்திருப்பார் போல என் மருத்துவர். அவருக்கு நான் என் சொந்தக் கதையினை நீட்டி முழக்காமல் சொன்னேன். அதாவது இலங்கையில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, பின்னர் கனடாவில் வளர்ந்து, இப்ப அமெரிக்காவில் ....
ஓ! ரியலி. அப்ப ஊசி போட்டுடலாம் என்று மீண்டும் ஊசி போடுவதிலேயே குறியாக இருந்தார்.
இப்ப எதுக்கு ஊசி, பூசின்னுட்டு. நான் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன், என்றேன்.
பெண்ணே! இது பத்து வருடங்களுக்கு ஒரு முறை போட வேண்டிய ஊசி. இப்ப போடுறியா அல்லாவிட்டால் அடுத்த தடவை..... இல்லை இப்பவே போடலாம் என்று அவரே பதில் சொல்லிய பின்னர், என் முதுகில் மெதுவாக தட்டி, Every thing is going to be alright என்றபடி போய் விட்டார்.

அவர் போன பின்னர் இரு நேர்ஸ்கள் உள்ளே வந்தார்கள். இரண்டும் ஆண்கள். எதுக்கு இரண்டு பேர் வரணும். ஒருவர் என்னைப் பிடிக்க, மற்ற ஆசாமி ஊசியால் குத்தப் போகிறாரோ..
நான் சமர்த்தாக இருப்பேன் என்று புலம்பிய என்னை விளங்காமல் பார்த்துக் கொண்டே மற்றைய ஆசாமி ஓரமாக நிற்க, அடுத்த ஆசாமி ஊசியை என்கையில் குத்திய பின்னர், இரண்டு நாட்களுக்கு வலி இருக்கும். ஹெவியான பொருட்கள் எதையும் தூக்காதே என்றபடி விடை பெற்றார்.
அடப்பாவிகளா! இப்பவே வலி உயிர் போகுதே. இன்னும் இரண்டு நாட்களில் கையே போயிடும் போலிருக்கே என்று புலம்பியபடி வீடு வந்து சேர்ந்தேன்.
கையை நகர்த்தவோ அல்லது வேறு எந்த வேலையும் செய்ய முடியாதபடி வலி பின்னி எடுத்தது.
விளையாடிக் கொண்டிருந்த மகனிடம் தண்ணீர் எடுத்து தரும்படி கேட்டேன்.
ஏன் உங்களுக்கு என்னாச்சு, என்றார் மகன்.
ஊசி போட்டார் மருத்துவர், என்றேன்.
அம்மா, உங்களுக்கு ஒரு ஊசி போட்டதுக்கே இவ்வளவு வலின்னா எங்களுக்கு எத்தனை ஊசி குத்தினாங்க. எவ்வளவு பெய்ன், நோவு இருந்திருக்கும்...
ராசா! தண்ணி எங்கே?
இருங்க. நான் இன்னும் பேசி முடிக்கவில்லை .....
சரி. தப்பு தான். ராசா, பழி வாங்கிற நேரமாய்யா இது. போய் தண்ணி கொண்டு வாங்க... என்றேன்.
இருங்க. போன வருடம் கூட நான் அழ அழ ஒரு ஊசி போட்டாங்களே ஞாபகம் இருக்கா அம்மா....
சே! இதுக்கு நானே போய் தண்ணியை எடுத்து குடிச்சு தொலைக்கலாம் என்று நினைத்தபடி சமையல் அறை நோக்கிப் போனேன்.
Monday, October 3, 2011

நவராத்திரி?!

நீங்கள் நவராத்திரி பற்றி ஒரு பதிவு எழுதலாமே - இது ரமணி அண்ணாவின் விண்ணப்பம். ஓ! எழுதலாமே. எதை எழுத, எதை விட?

நான் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக மாறிய கதையை எழுதவா? சரி அது இப்ப வேண்டாம். நானே நொந்து போய் இருக்கிறேன். என் மாமா ( அப்பாவின் தங்கை கணவர் ) இறந்து விட்டார். அவர் வசித்தது கனடாவில். தொலை பேசியில் என் கஸின் அழுத போது ஆறுதல் தான் சொல்ல முடிந்தது. ஒடிப் போய் அணைத்துக் கொள்ளவோ அல்லது பக்கத்தில் இருக்கவோ முடியவில்லை என்று ஏக்கம் இன்னும் இருக்கு. நினைச்ச உடனே ஓடிப் போய் ப்ளைட்டில் ஏற முடிவதில்லை. கணவருக்கு வேலை, பிள்ளைகளுக்கு பள்ளிக் கூடம். நான் என் சகோதரியிடம் அடிக்கடி சொல்வேன், அடுத்த ஜென்மத்தில் இலங்கையில் பிறக்கவே கூடாது. கூழோ, கஞ்சியோ குடித்தாலும் பக்கத்து பக்கத்து குடிசைகளில் இருந்து குடிக்க வேண்டும்.

சரி. இப்ப நவராத்திரிக்கு வருவோம். ஆக்சுவலா என்ன நடந்தது என்றால் எனக்கு நவராத்திரி என்பதே தெரியாது. என் அம்மா கனடாவில் இருந்திருந்தா பொங்கல், தீபாவளி, நவராத்திரி, சிவராத்திரி, இன்னும் என்ன என்ன பண்டிகைகள் இருக்கோ அதெல்லாம் மறக்காமல் தொலை பேசியில் சொல்லிவிடுவார். கடந்த 2 மாசங்களாக அம்மா கனடாவில் இல்லை.

என் கணவருடன் கூட வேலை பார்ப்பவர் என் கணவரை நவராத்திரி பற்றிக் கேட்ட போது தான் அவருக்கே தெரிய வந்தது. அதன் பிறகு எனக்குத் தெரியும். தெரிஞ்சு என்ன புண்ணியம். என் கணவர் என்னிடம் சொன்ன போது நேரம் இரவு 8.30. அதுக்குப் பிறகு என்னத்தை செய்வது என்று பேசாமல் இருந்தாச்சு.

இன்னும் நவராத்திரி முடியவில்லை தானே. கடைசி நாள் மட்டும் ஏதாவது செய்து சமாளிக்கலாம். எங்கள் வழக்கப்படி கொலு வைப்பது இல்லை. இந்தியாவில் இருந்த போது சுண்டலுக்காக லச்சுமி மாமியுடன் வீடு வீடாக போனதுண்டு. என் சகோதரிக்கு நல்ல குரல் வளம். அவர் பாட நான் சுண்டலை பார்த்து ஜொள்ளு விடுவதுண்டு. எல்லாம் முடிந்த பின்னர் பூ, சுண்டல், மஞ்சள், ஜாக்கெட் துணி இவற்றுடன் வீடு போவோம்.

***********************************

ஒரு முறை National Geography சானல் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் தீவுப் பகுதிகள், மலைப் பிரதேசங்கள், காட்டுப் பகுதிகள், எரிமலைப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய ஒரு நிகழ்ச்சி காட்டினார்கள்.
எரிமலைப் பகுதியில் வாழும் மக்களின் ஒரு தொழில் எரிமலையின் அடிவாரத்தில் போய் பாஸ்பரஸ் நிறைந்த பாறைகளை எடுத்து வருவது. நச்சு புகை சூழ்ந்த பகுதியினுள் எந்தவிதமான தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் செல்கிறார்கள். பாறைகளை தோளில் தூக்கி வருகிறார்கள். சிலர் நச்சு வாயு தாக்கி இறப்பதும் உண்டாம். இதை விட்டா பிழைப்புக்கு வேறு வழி இல்லை என்று சொல்கிறார்கள். பாறைகள் தூக்கி இவர்களின் உடம்பில் நிறைய தழும்புகள்.

காட்டுப் பகுதியில் வாழ்பவர்களுக்கு உண்ண உணவுப் பொருட்கள் இல்லை. பெரும்பாலும் காட்டில் விளையும் உணவுகளை உண்கிறார்கள். புரோட்டீனுக்கு எங்கே போவார்கள்? காட்டில் திரியும் வௌவால்களை பிடித்து உண்ணுகிறார்கள். பெரிய குடும்பங்களுக்கு ஒன்று, இரண்டு பறவைகள் போதுமான தாக இல்லை. அந்தக் குடும்பத்தின் முன்னோர்கள் மண்டையை குடைஞ்சு கண்டு பிடித்த ஐடியா தான் இப்பவும் புழக்கத்தில் இருக்காம். ஒரு பிரமாண்டமான வலையினை திறந்த வெளியில் கட்டி விடுகிறார்கள். தூரமாக போயிருந்து தடியினால் தகர டப்பாவில் ஒலி எழுப்புகிறார்கள். வவ்வால்கள் கூட்டமாக வலை இருக்கும் பக்கம் நோக்கி பறந்து வலையில் சிக்கிக் கொள்கின்றன. இன்று நல்ல விருந்து தான் என்கிறார் அப்பா. நெருப்பு மூட்டி ஆனந்தமாக சமையல் செய்கிறார்கள். கடன் அட்டைகள், கரன்ட், கரண்டி, சட்டி, பானைகள் எதுவும் இல்லாமல சந்தோஷமாக வாழ்கிறார்கள்.


ஆகாயத்தில் அடக்கம்
மலைப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை வரலாறு தான் கொஞ்சம் ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது. ஒரு வயதானவர் இறந்து விட்டார். அவரை எரிக்க விறகோ அல்லது புதைக்க இடமோ இல்லையாம். மலைப் பகுதியில் மரங்கள், சுடுகாடுகள் இல்லை. இறந்தவரை மூட்டையாக கட்டிக் கொண்டு மலையின் மீது ஏறுகிறார்கள் அவரின் மகன்கள். வேறு ஒருவர், இப்பெல்லாம் நிறைய அடிச்சா தான் வேலை செய்ய முடியுது, என்றபடி ஏதோ ஒரு பாட்டிலை வாயில் கவிழ்க்கிறார். மலையின் சம தளத்தினை அடைந்த பின்னர் மந்திரங்கள் சொன்ன பிறகு மகன்கள் அழுது கொண்டே கீழே இறங்கிச் செல்ல, ( மப்பில் இருந்த ) ஆசாமி இறந்தவரின் உடலை கழுகுக்கு இரையாக போடுகிறார்.
இன்று அப்பா, நாளை நான். இந்த வறண்ட பிரதேச்சத்தில் இதை விட்டா வேறு வழியில்லை. எங்களுக்கும் இந்து முறைப்படி அடக்கம் செய்ய விருப்பம் தான். இப்ப என் அப்பா இயற்கையோடு ஒன்றாக கலந்துவிட்டார், என்றார் மகன்.

Friday, September 16, 2011

மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்கணுமா?

என் மகனுக்கு 1 வயசாக இருந்த போது மாலில் வின்டோ ஷாப்பிங் & நடக்க போயிருந்தோம். அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன். ஒரு பெண்மணி என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு சங்கடமாக இருந்தது. முகத்தினை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். ஆனால், குறு குறுவென அவரின் பார்வையினை உணர முடிந்தது.
ஹாய், என்றேன்.
அவரும் ஹாய் என்றபடி பக்கத்தில் வந்தார்.
உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேன் ஆனால் எங்கே என்று சரியா ஞாபகம் இல்லை, என்றார்.
எனக்கும் அவரின் முகம் பரிச்சயமாக தெரிந்தது. ஒரு வேளை போன ஜென்மத்தில் தோன்றிய பந்தமாக இருக்குமோ? எப்படிக் கேட்பது என்று தயங்கி நின்றோம்.
இதற்கிடையில் என் கணவர் நான் இருந்த பக்கம் வந்தார். நாங்கள் இருவரும் தடுமாறுவதை பார்த்து புன்முறுவலுடன் சொன்னார், எனக்கு உங்களை ஞாபகம் இருக்கு என்றார் அந்தப் பெண்மணியிடம்.
நான் இப்பவும் ஙே தான். இவங்களை ஞாபகம் இல்லையா? ஒரு ஆறு வாரம் நான் பட்ட சித்ரவதையை எப்படி மறக்க முடியும்...... இப்ப கொஞ்சம் ஞாபகம் வந்தது.

நீங்க திருமதி. பிரவுன் தானே என்றேன். அவருக்கே ஆச்சரியம். எப்படி என் பெயரை ஞாபகம் வைத்திருக்கிறாய் என்றபடி கைகளை குலுக்கினார்.
*********************************
நான் மாசமாக இருந்தபோது உதவிக்கு என் கணவரை விட்டால் யாரும் இருக்கவில்லை. என் பெற்றோருக்கும் விசா பிரச்சினை. அவர்கள் வருவார்களா, இல்லையா என்று நிச்சயமாக சொல்ல முடியவில்லை. என் மருத்துவர் கர்ப்பமாக இருப்பவர்களுக்கு ப்ரோகிராம் நடத்தப்படுகிறது அதில் சேர்ந்தால் நலம் என்று சொன்னார். நானும் பிறந்த குழந்தைக்கு டயப்பர் மாற்றுவது, இன்னபிற வேலைகளை என் கணவருக்கு பழக்கப் போகிறார்களாக்கும் என்று நினைத்து, என் கணவரை நச்சரித்து வகுப்பில் சேர்ந்து கொண்டோம். இதில் என் ஆ.காரருக்கு கடுப்பினை ஏற்படுத்திய இரண்டு விடயங்கள்
1. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் காலை 7 மணிக்கு வகுப்புகள் ஆரம்பம்.
2. நான் எதுக்கு வெட்டியா வந்து அங்கனை உட்கார வேண்டும்

அதெல்லாம் முடியாது நீங்க கண்டிப்பா வர வேண்டும் என்று கூட்டிக் கொண்டு போனேன்.
அறிமுக படலம் நடந்தது. அதில் ஒருவர் தான் திருமதி. பிரவுன். தொடக்த்தில் அவர் தன்னைப் பற்றிச் சொன்ன போது பெரிதாக எதுவும் மனதில் பதியவில்லை.
எனக்கு பிரசவ வலியை நினைச்சா பயமா இருக்கு. ஆஸ்பத்திரியில் நான் நுழைஞ்ச உடனை எனக்கு வலியை குறைக்கும் மருந்தினை தந்திடோணும் என்று கண்டிப்பா கூறினார். நான் கொஞ்சம் தைரியமான ஆள். ஆனால் இவரின் பயத்தினை பார்த்ததும் எனக்கு பயம் தொற்றிக் கொண்டது.
உனக்கு எப்ப குழந்தை பிறக்கு என்று நேர்ஸ் கேட்க, அவர் பிப்ரவரி 29 என்று சொல்ல, எனக்கு அவரின் முகம், பெயர் & பேச்சு அப்படியே பதிந்து போனது.
நாலு வருஷத்துக்கு ஒரு முறை பிறந்த நாள் கொண்டாடினா போதும் இல்லை என்று எல்லோரும் சிரித்தார்கள்.

அடுத்த தம்பதிகள் அறிமுகபடலம் தொடங்கியது.
எங்க இரண்டு பேருக்கும் என் அம்மா, அப்பாவை ஆஸ்பத்திரிக்குள் விடாமல் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
ஓ! ஆஸ்பத்திரிக்குள் வராதே என்று சொல்ல முடியாது. வேண்டுமென்றால் நீ இருக்கும் ரூமுக்குள் வர விடாமல் தடுக்கலாம் என்றார் நேர்ஸ்.
நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது என் அம்மா என் குழந்தையை பார்க்கவே கூடாது என்று அந்தப் பெண்மணி மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார்.

உனக்கு என்ன செய்ய வேணும் என்று இப்பவே சொல்லிடு என்றார் நேர்ஸ் என்னைப் பார்த்து. எனக்கு என் அம்மா, அப்பா வர வேண்டும் என்றேன்.

நேர்ஸ் சிரித்துக் கொண்டார். என்ன உலகமடா இது! அவர்கள் வர வேண்டாம் என்கிறார்கள். நீ உன் பெற்றோர்கள் கட்டாயம் வரணும் என்கிறாய், அதோ அந்தப் பெண்மணிக்கு ஆஸ்பத்திரிக்குள் நுழைஞ்ச உடனை ஊசி போடணுமாம்.... என்னவோ போங்கப்பா என்று சிரித்துக் கொண்டார்.

ஆனால் நான் நினைத்தது போல அந்த வகுப்பில் குழந்தைக்கு டயப்பர் மாற்றுவதோ அல்லது பிறந்த குழந்தையை எப்படிக் கையாள்வது என்றோ சொல்லித் தரவில்லை. என் ஆ.காரரின் நித்திரை கெடுத்தது தான் மிச்சம் என்று நானே உணர்ந்து கொண்டேன்.
***********************
இப்ப தெரியுதா இவங்க யார் என்று? - என்றார் ஆ.காரர்.
ம்ம்ம்... உனக்கு மாசி 29 அன்றா குழந்தை பிறந்தது என்று ஆர்வமாக கேட்டேன். அவருக்கே பெரிய ஆச்சரியம். இதெல்லாம் எப்படி ஞாபகம் வைத்திருக்கிறாய் என்றார். இல்லை எனக்கு மார்ச் 1 அன்று பிறந்திச்சு என்றார்.

இப்ப என் கதைக்கு வருவோம். நான் பயந்தது போல ஆஸ்பத்திரியில் இருந்த நேர்ஸ் பயப்படவில்லை.
"ஹே! டாட் (dad ) , கமான்யா. டயப்பரை கட்டு, என்றார்.
என் ஆ.காரரும் ஒரு நொடியில் டயப்பர் விழா வண்ணம் மகனின் இடுப்பில் கட்டிய பிறகு ஒரு வெற்றிப் பார்வை பார்த்தார். இதெல்லாம் ஒரு பெரிய வேலையா என்று அவரின் பார்வை சொல்லியது.

இதெல்லாம் இயற்கையாக நம்மில் இருப்பது. இதுக்கு வகுப்புகள் எதுவும் தேவையில்லை என்று எங்கோ ஒரு மூலையில் பொறி தட்டியது.

Wednesday, September 7, 2011

எல்லோரும் நலமா?

எல்லோரும் நலமா? எங்கை தான் போய் தொலைஞ்சியோ தெரியலைன்னு முணு முணுப்பது கேட்குது!! சில, பல வேலைகள். அன்பாக மெயில் அனுப்பிக் கேட்டவர்களுக்கு பொறுப்பா பதில் அனுப்பினேன். மகள்  இந்த வருடம் கின்டர்கார்டன் போவதால் நிறைய வேலைகள். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய பொருட்கள் வாங்கியது, பல் மருத்துவர், பீடியாட்ரிஷன் என்று அலைந்து திரிந்து, நிரப்ப வேண்டிய படிவங்கள் நிரப்பி, போட வேண்டிய ஊசிகள் போட்டு.... மகள் ஸ்கூல் போகத் தொடங்கியதும் வீட்டில் ஒரு வெறுமை வந்து சூழ்ந்து கொண்டது. நிலநடுக்கம், புயல், தண்ணீர் பிரச்சினை, பவர் கட் என்று பல காரணங்களால் பள்ளி ஒரு வாரம் லேட்டாக ஆரம்பமானது. மகள்   ஆர்வமாக பள்ளி சென்று வர, நான் குழம்பி போய் கிடக்கிறேன்.  இன்று கின்டர்கார்டன்...  நாளை கண் மூடித் திறப்பதற்குள் கல்லூரி. மீண்டும் பிள்ளைகளின் மழலைப் பருவம் திரும்பி வராதா என்று ஏக்கமாக இருக்கிறது.


இப்ப கொஞ்ச நாட்களாக காலையில் எழுந்ததும் என்னுடைய தினபலன் என்னவென்று பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது. சும்மா பார்ப்பேன் பிறகு மறந்தும் விடுவேன். இந்தியாவில் இருந்த போது தோன்றிய பழக்கம். நானும் என் சகோதரியும் விளையாட்டாக பார்க்கத் தொடங்கினோம். தினபலனில் தோல்வி என்று போட்டிருந்தால், அக்கா! இன்று உனக்குத்  தோல்வியாமே. டெஸ்டுக்கு ஒழுங்கா படி என்று என் தங்கை கடுப்படிப்பது பொறுக்காமல் படுக்கைக்கு போகு முன்னர் பார்த்து விட்டு படுப்பேன். அப்பாடா! நாள் முடிஞ்சுது என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவேன்.
 நாளடைவில் அந்தப் பழக்கம் மறைந்து விட்டது. இப்ப கொஞ்ச நாட்களாக மீண்டும் ஒரு ஆர்வம்.   ஒரு நாள் எனக்கு " மறதி " என்று போட்டிருந்தார்கள்.


சூப்பர் மார்க்கெட் போய் வந்த பின்னர் காரில் மறதியாக பொருட்களை விட்டுட்டு  வீட்டுக்குள் வந்து விட்டேன்.  என்னவோ மறந்து போனேன் என்பது மட்டும் ஞாபகம் இருந்தது ஆனால் என்னவென்று ஞாபகம் இருக்கவில்லை. மதியம் சாப்பிடுக் கொண்டே இன்று  சூப்பர் மார்க்கெட் போய் பால் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுகிறேன். திடீரென ஒரு மின்னல்... அட! கடைக்குப் போய் வந்தாச்சு அல்லவா என்று சிரித்துக் கொள்கிறேன். அப்ப பால் எங்கே, என்று அடுத்து ஒரு கேள்வி தோன்ற குளிர்சாதனப் பெட்டியை திறந்தால் பால் அங்கில்லை. பால் மட்டும் அல்ல  ஜூஸ், பழங்கள் எல்லாமே மிஸ்ஸிங்.  காரில் பொருட்களை வைத்தது ஞாபகம் வர காரினை நோக்கி ஓடினேன்.  லேசான குளிர் வெதர் என்பதால் பொருட்கள் அப்படியே இருந்தன.

எனக்கு கிரகம், கோல்கள்,  நல்ல நேரம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும் தினபலனில் மறதி என்று போட்டிருந்ததை  போனா போகுது என்று ஒதுக்க முடியவில்லை.  தினபலனில் மறதி என்று போட்டிருந்ததால் மறதி வந்ததா அல்லது மகள் முதன் முதலாக பள்ளி போன டென்ஷனால் மறதி வந்ததா தெரியவில்லை.  எது எப்படியோ நாளை என்ன பலன் என்று படுக்கைக்கு போகு முன்பு தான் பார்க்க வேண்டும்.


************************************


அமெரிக்காவில் ஒருவர் தோசை சுட்டு விற்பனை செய்கிறார். நல்ல வரவேற்பு அவரின் தோசைக்கு. வட்ட வடிவமான தோசை, நடுவில் மசாலாக் கறி, சட்னி என்று அமர்களமான பிஸ்னஸ். காலை முதல் கடை முன்பு நல்ல கூட்டம். பெரிய தோசைக் கல்லில் லாவகமாக மாவை ஊற்றி, பரவி, எண்ணெய் ஊற்றி, மசாலாக்  கறி பரவி.... இதெல்லாம் ஒரு நியூஸ்? தோசை வட்டமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாதா என்று நீங்கள்  முணுப்பது காதில் விழுகிறது. தோசை சுடுபவர் ஒரு அமெரிக்கர்.

சில வருடங்களின் முன்னர் இவருக்கு வாழ்க்கை மீது பிடிப்பு இல்லாமல் போய் விட்டதாம். சந்நியாசம் செல்ல முடிவு செய்தவர் இந்தியாவுக்கு பிளைட் ஏறினார். அங்கு ஏதோ ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து கொண்டாராம்.  அங்கிருந்த  " அம்மா " என்ற பெண்மணி இவருக்கு தோசை சுடுவது, அரைப்பது, கிழங்கு மசாலா, சட்னி வைப்பது என்று எல்லாமே சொல்லிக்  கொடுத்தாராம். வாழ்க்கை வெறுத்து இந்தியா  போனவர் மீண்டும் ஒரு புது மனிதராக  அமெரிக்கா வந்து, சொந்தமாக ஒரு தோசைக் கடை திறந்து அமோகமாக வாழ்வதாக சொன்னார்.  வாழ் நாள் வரைக்கும் அம்மாவை மறக்க மாட்டேன் என்று நெகிழ்ச்சியாக சொன்னார்.

Saturday, August 13, 2011

ஜன்னல் மாத்தலையா ( பாகம் 2 )

ஹலோ! உங்க வீட்டு ஜன்னல் மாத்தப் போறீங்களாமே ? என்றது குரல்.

நான் எப்ப சொன்னேன்?
எரிக் சொன்னாரே என்றது மீண்டும் போன் குரல்.

யாரு எரிக் ?- இது மீண்டும் நான். எதிர் முனையில் இருந்தவருக்கு கடுப்பு வந்திருக்க வேண்டும். சரி போனை எரிக் இடம் குடு, என்றார்.

ஓ! இந்த இளைஞன் பெயர் எரிக் என்று இப்ப விளங்கியது. அதோடு அவன் சேர்ட்லிருந்த பெயர் கொண்ட அடையாள அட்டை இப்பதான் என் கண்களுக்குப் பட்டது.

எரிக் தூரமாக போய் நின்று ஏதோ குசு குசுவென கதைத்து, சிரித்துக் கொண்டு நின்றான். சரியான சாவுக் கிராக்கி என்று திட்டியிருப்பார்களோ???

மீண்டும் என்னிடம் போன் கையளிக்கப்பட்டது. போனைத் தர முன்னர் எதிர் முனையில் என்ன கேட்டாலும் யெஸ் என்றே சொல்லு, நோ சொல்லாதே என்றான் எரிக். எழுந்த கோபத்தினை அடக்கிக் கொண்டே போனை வாங்கினேன்.

ஜன்னல் மாத்தப் போறியா- என்றது குரல்.
ம்ம்...

எப்ப மாத்துவதாக உத்தேசம்? மீண்டும் கேள்வி.
இப்பவே - இது நான்.

எதிர் முனையில் சிரிப்பொலி கேட்டது.
மேம், அதெல்லாம் உடனை ஆகிற காரியமா? எங்க கம்பெனி ஆள் ஒருத்தர் உங்க வீட்டுக்கு வரணும், அளவுகள் எடுக்கணும்....
கடவுளே! என்ன சோதனை என்று மனதினுள் நினைத்துக் கொண்டேன். அப்படியே எரிக் கன்னத்தில் ஒரு அறை விடலாமா என்று எண்ணம் ஏற்பட்டது.

மேம், உங்க வீட்டு ஜன்னல் மரத்தால் செய்யப்பட்டதா அல்லது அலுமினியமா?

தெரியலை. எங்கவூட்டுக் காரரை கேட்க வேண்டும் என்றேன்.

அலுமினியம் என்று சொல்லு என்றான் எரிக்.
மேலும் சில கேள்விகள், பதில்கள் சொன்ன பிறகு இந்த வாரக் கடைசியில் எங்க கம்பெனி ஆள் உங்க வீட்டுக்கு வருவார். நீங்க இரண்டு பேரும் வீட்டிலை இருக்கணும் ஓகேவா என்றது எதிர் முனை.
என்ன இரண்டு பேரையும் கட்டி வைச்சுட்டு கொள்ளை அடிக்கப் போறாங்களா என்று யோசனை ஓடியது.

போனை வைத்த பிறகு கோபம் வந்தது. ஏம்பா எரிக், இது நியாயமா? தர்மமா? நான் பாட்டுக்கு சிவனே என்று இருந்தேன். நீ என் நேரத்தையும் மண்ணாக்கியது பத்தாதா? இப்ப நாங்க இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ ஒரு கம்பெனி ஆளின் நேரத்தை மண்ணாக்கலாமா , என்று எகிறினேன்.

மேம், இதெல்லாம் அவங்களுக்கு சகஜமான விடயம். நீங்க பார்த்துட்டு பிடிக்கவில்லை, விலை அதிகம், உங்க பொருள் மட்டமா இருக்கு, அந்த ஆளின் மூஞ்சி சரியில்லை, பெரிய கொம்பன் மாதிரி பேசினான் இப்படி ஏதாவது சொல்லிடுங்க. கட்டாயம் ஜன்னல் மாத்த வேண்டிய அவசியம் இல்லை என்றபடி விடைபெற்றான்.

சொன்னது போல வார இறுதியில் அந்த நபர் வந்தே விட்டார்.
ஒரு பெரிய டிரங்குப் பெட்டி சகிதம் வந்தார்.
அந்த டிரங்குப் பெட்டியில் ஒரு கண்ணாடி, சுத்தியல், பன்சன் சுடர் அடுப்பு போன்ற ஒரு அடுப்பு, இன்னும் எதேதோ பொருட்கள்.
எங்க கண்ணாடி போல நீங்க எங்கேயும் கண்ணாடி பார்க்க முடியாது. சுத்தியல், கல்லு இரண்டையும் கண்ணாடி மீது விட்டெறிந்தார். அது உடையவே இல்லை. நாற்காலியை தூக்கி வீசினார் அப்பவும் கண்ணாடி அசையவேயில்லை. சுடர் அடுப்பினால் சூடாக்கினார், கண்ணாடி அப்படியே இருந்தது.
மேம், நீங்கக் கண்ணாடியில் என்னத்தை தூக்கி வீசினாலும் இது உடையவே உடையாது என்றார்.

ஆண்டவா! நாங்கள் என்ன ஜேம்ஸ்பான்ட் படம் சூட்டிங்கா எடுக்கிறோம்? மற்ற வீடுகள் போல எங்கள் வீட்டிலும் சண்டை, சச்சரவுகள் வருவதுண்டு அதுக்காக நான் என் ஆ.காரரையோ அல்லது அவர் என்னையோ தூக்கி ஜன்னலை நோக்கி வீசுவது இல்லையே.

என் மகனுக்கு ஒரே கொண்டாட்டம்.
அம்மா, திஸ் ஹைய் இஸ் சோ கூல் ( This guy is so cool ) என்றார்.

என் ஆ.காரர் ஒரு ஜன்னல், கண்ணாடி டோர் இரண்டையும் அந்த நபருக்கு காட்டி, இரண்டுக்கும் எவ்வளவு செலவாகும் என்றார்.
அந்த நபர் சொன்ன விலையைக் கேட்டதும் மயக்கம் வராகுறைதான்.
கணவர் காட்டிய கதவின் வழியாக வின்டர் நேரங்களில் குளிர் காற்று உள்ளே கசிவதுண்டு. அந்த ஆள் சொன்ன விலையை கேட்டதும் என் ஆ.காரரின் பதில்,
Let the cold air come in.


முற்றும்


Tuesday, August 9, 2011

ஜன்னல் மாத்தலையா?


பிள்ளைகளை கூட்டிக் கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்த போது, எக்ஸ்கியூஸ் மீ என்ற குரல். குரல் வந்த திசையில் ஒடிசலாக ஒரு இளைஞன். டை, சேர்ட் என்று அமர்க்களமாக நின்றான். மிஞ்சிப் போனால் 17 வயதிருக்கும். கையில் ஃபைல் வைத்திருந்தான். நான் பெரும்பாலும் இந்த மாதிரி ஆசாமிகளை தவிர்த்து விடுவேன். வீட்டினுள் இருந்திருந்தால் தப்பித்திருக்கலாம். ஆனால் இங்கே தப்ப முடியவில்லை. எதையாவது தலையில் கட்டிய பின்னர் தான் நகருவார்கள். இல்லாவிட்டால் பேசியே கொலை செய்வார்கள்.


ஹா....ய் என்று இழுத்தேன். இப்ப அவசரமாக பிள்ளைகளின் பள்ளியில் புரோகிராமிற்கு செல்ல வேண்டும். பிறகு பார்க்கலாம் என்றேன்.
கண்டிப்பா பிறகு மீட் பண்ணலாம் என்றான்.
என் நெஞ்சினுள் பாதி தண்ணீர் ஏற்கனவே காலியாகியிருந்தது. நான் சும்மா பேச்சுக்கு சொல்லி தவிர்க்க பார்த்தா பொடியன் விபரமாகவே இருக்கிறானே என்று நினைத்தேன்.

என் பள்ளியில் இந்த வேலை செய்தா அதிக மதிப்பெண்கள் தருவார்கள். காலையிலிருந்து அலைகிறேன் ஒரு பயலும் கதவையே திறக்க மாட்டேன் என்கிறான்.

( நானும் வீட்டுக்குள் இருந்திருந்தா அப்படித் தான் நடந்திருக்கும் என்று நினைத்தபடி) எல்லோரும் வேலைக்கு போயிருப்பார்கள் என்று சமாதானம் சொன்னேன்.

நீ எப்போ திரும்பி வருவாய், என்றான் இளைஞன்.
ம்ம்ம்.. தெரியவில்லை. சில வேளைகளில் 8 மணிக்கு வந்துவிடுவேன். சில வேளைகளில் 11 மணி கூட ஆகலாம்.. என்று சமாளித்தேன்.
அந்த இளைஞனை எப்படியாவது விரட்டி விடுவதில் குறியாக இருந்தேன்.
வரட்டா. மீண்டும் பார்க்கலாம் என்றபடி பக்கத்து வீட்டை நோக்கி ஓடினான்.
நானும் அப்பாடா விட்டது தொல்லை என்று ஓட்டம் எடுத்தேன்.

பள்ளியில் இந்த இளைஞன் பற்றி சுத்தமாக மறந்தே போய்விட்டது. கிட்டத்தட்ட 8.30 அளவில் திரும்பி வந்த போது, எங்கள் வீட்டுப் படியில் குத்த வைச்சது போல இருந்தான். திரும்பி ஓடலாமா என்று யோசிப்பதற்குள் என்னைப் பார்த்துவிட்டான்.
நான் ( நீ இன்னும் போகலையா? ) மீண்டும் ஹாய் என்றேன்.
இளைஞன் ( நீ இப்ப தான் வர்றியா என்று மனதினுள் நினைத்திருப்பான் போல. கை கடிகாரத்தை பார்த்தபடி வந்தான் ) ஃபைலை விரித்தான்.
கலவரமாகிய நான். இருப்பா! எங்க வூட்டுக்காரர் வரட்டும். அவர் தான் இந்த மாதிரி விடயங்களில் சூரப்புலி என்றேன்.
இல்லை மேம். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. இப்ப முடிஞ்சுடும் ஜெஸ்ட் 10 மினிட்ஸ் தான் என்றான்.
அவன் பாவி சொன்னதை நானும் நம்பினேன். உங்க வீட்டு ஜன்னல் எல்லாம் பழசு போல இருக்கே மாத்தவில்லையா, என்று தொடங்கினான்.

இல்லை. பிறகு பார்க்கலாம். பிள்ளைகளுக்கு இரவு சாப்பாடு குடுக்கணும் வரட்டா என்று நழுவப்பார்த்தேன்.

இரு வரேன் என்றபடி செல் போனில் நம்பரை குத்த தொடங்கினான். நான் அவனின் அம்மாவோடு பேசப் போகிறான் போல இருக்கு என்று நினைத்தபடி ஓரமாக நின்றேன்.

சில நொடிகள் பேசியவன் என்னிடம் போனை தந்தான். நீயும் கட்டாயம் பேச வேண்டும் என்று என் பக்கம் தந்தான்.

யாரு உங்க அம்மாவா? என்னத்தை பேசுறது என்று விரக்தியாக சொன்னேன். வழக்கமாக 7 மணி அளவில் வரும் ஆ.காரர் இவ்வளவு நேரமாகியும் வராத எரிச்சல் ஒரு புறம். மறுபுறம் இந்த ஆசாமி தொல்லை.

எங்க அம்மா இல்லை. இது வேறு ஒரு நபர் என்றான்.

தொடரும்.

Wednesday, August 3, 2011

முத்தான மூன்று

ரமணி அழைத்த தொடர் பதிவு ஒரு வழியா எழுதியாச்சு.

1)
நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்
?

1. தொலைக்காட்சியில் Seinfeld நகைச்சுவை நாடகம் பார்ப்பது. கொஞ்ச நேரம் கவலைகள் எல்லாம் மறந்து போகும்.
2. காரில் போகும் போது பாட்டுக் கேட்பது.
3. இயற்கை, குழந்தைகள்... எல்லாமே பிடிக்கும்.

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
1. காரில் போகும் போது நியூஸ் தான் கேட்பேன் என்று அடம் பிடிக்கும் கணவர் ( காலையில் எழும்பி, இரவு படுக்கபோகும் வரை நியூஸ் தான் எப்போதும் கேட்பார் என் ஆ.காரர். இருந்தாலும் காரிலும் இவரின் தொல்லை தாங்க முடிவதில்லை. )
2. பாம்புகள் மற்றும் ஊர்வன இனங்கள் எல்லாமே.
3. அழுது வடியும் நிகழ்ச்சிகள்.

3) பயப்படும் மூன்று விஷயங்கள்
1. எதிர்காலம் பற்றிய பயம்.
2. முகத்துக்கு முன்பு ஒன்று சொல்லி, பின்னர் முதுகில் குத்துபவர்கள்.
3. இரவு, கடலில் பயணம் இரண்டுமே பயம். மூன்றாவதும் இருக்கு சொல்ல மறந்துட்டேன் - விமானத்தில் பயணம்.

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
1. சினிமா நடிகர், நடிகைகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் குடுக்கிறோம் என்பது விளங்காத புதிர்.

சூப்பர் மார்க்கெட்டில் எனக்கு முன்பாக நின்ற பெண்மணி ஏதோ உச்சுக் கொட்டிக் கொண்டு நின்றார்.
என்ன ஆச்சு? - இது நான்.
ஓ! அதுவா. ஜெனிபர் லோபேஸூம், மார்க் ஆன்டனியும் பிரியப் போறார்களாம், என்றார்.

கடவுளே! உலகத்தில் கவலைப்பட வேறு விடயங்களே இல்லையா. ஜெனிபர் லோபேஸ் கணவருடன் இருந்தா என்ன? போனா என்ன? இதில்லைன்னா இன்னொன்று.

2. ஒவ்வொரு நாளும் காலையில் டீ குடிக்காவிட்டால் ஏன் பைத்தியம் பிடிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

3. அரசியல் வியாதிகளுக்கு எவ்வளவு சுரண்டினாலும் ஏன் திருப்தி வருவதில்லை.5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
மேசையில் இருக்கும் 3 பொருள்கள். இல்லாத மூன்று பொருள்கள் என்று கேட்டிருந்தா சொல்லியிருப்பேன்.
என் ஆ.காரரின் மெயில்கள், பேனைகள், லொட்டு, லொசுக்கு.... இப்படியே இந்த லிஸ்ட் நீளும்.
மேசையில் ஆசைக்கு வைச்சு சாப்பிட முடியாது. ஒரு நாளைக்கு விபத்து போல ரசம் எதையாவது ஊத்தணும் என்று ப்ளான் பண்ணி இருக்கிறேன்.

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
1. சிரிக்க வைக்கும் மூன்று நபர்களா? திரும்பிய பக்கம் எல்லாம் நகைச்சுவையாவே இருக்கு எனக்கு. வீட்டில் என் மகன். தமிழ் வகுப்பு போக வேண்டும் என்று வகுப்பில் சேர்த்தோம். காரில் எப்போதும் தமிழ் பாட்டுக்கள் மட்டுமே ஒலிக்கும். ஒரு நாள் என்னிடம் கேட்டார், அம்மா! பொய்ங்கி என்றால் என்ன?
தெரியலை செல்லம். என்ன ஸ்பெல்லிங்?
ம்ம்ம்ம்ம்ம்.... பி ஒ .... என்றார்.
எந்த புத்தகத்தில் இருந்துச்சு இந்த வார்த்தை - இது நான்.
காரில் ரேடியோவில் பாடிய பாட்டு, என்றார்.
அடுத்த முறை கூர்ந்து கவனித்த போது விளங்கியது பொய்ங்கி அல்ல பொங்கி என்று பாடல் வரியின் ஒரு வார்த்தை.
பொய்ங்கி என்றால் என்னம்மா? என்று கேள்வி மீண்டும்.
அதுவா! பால் நன்கு கொதித்து மேலே வருவதை பொங்கி என்று சொல்வார்கள் தமிழில்.
அப்படியா! என்று நிறுத்திக் கொண்டார்.
இப்பெல்லாம் பால் பொங்கினால், அம்மா பால் பொய்ங்கி, பொய்ங்கி என்று வந்து சொல்வார்.

2. ஒரு முறை என் கணவர் தொலைக்காட்சியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு சீரியல் ( serial- தொடர் கொலைகள் செய்பவன் )கொலைகாரன் பற்றிய செய்தி வந்தது. என் மகனின் முகத்தில் குழப்பம். சிறிது நேரத்தில் கேட்டார், அம்மா! ஏன் இந்த ஆள் சீரியலை ( cereal ) கொலை பண்ணினார். ஹையோ! எனக்கு இன்னும் சிரிச்சு முடியலை.

3. ரீடர்ஸ் டயஸ்டில் நிறைய நகைச்சுவைகள் வரும் அதில் ஒன்று,

ஒருவர் வேலைக்கு அப்ளை பண்ண விண்ணப்பம் நிரப்பிக் கொண்டிருந்தார். அதில் ஒரு கேள்வி,
நீங்கள் 1. திருமணம் ஆகாதவர் ( single ) 2. திருமணம் ஆனவர் ( married ) 3. விவாகரத்தானவர் ( Divorced )
அந்த நபரின் பதில், ஆமாங்கைய்யா! இந்த வரிசைப் பிரகாரம் தான் ( Yes Sir, in that order).

7)தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்றுகாரியங்கள்?
மூன்று காரியங்களா? ஒன்றே ஒன்று தான் செய்கிறேன். சரி வந்த பின்னர் சொல்கிறேன்.

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்றுகாரியங்கள்?

1. தையல், க்ராஃப்ட் வேலைகள் சம்பந்தமாக ஒரு கடை சொந்தமாக திறக்க வேண்டும்.
2. என் கதைகளை புத்தகமாக வெளியிட வேண்டும்.
3. என் பெற்றோர்கள், சகோதரி ஆகியோருக்கு பக்கத்தில் இருக்க வேண்டும். வருடத்தில் ஒரு தரம் சந்திப்பது என்பது மாசத்தில் ஒரு நாளாகவோ அல்லது வாரத்தில் ஒரு நாளாகவோ இருந்தால் நல்லது என்று அடிக்கடி நினைப்பேன். அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால், இப்படி ஒவ்வொரு கண்டத்தில் இருப்பது வெறுப்பாக இருக்கிறது. என் பிள்ளைகளுக்கு அவர்களின் கஸின்ஸ், மாமா, மாமி என்று பெரிதாக யாரையும் பார்க்கும் சந்தர்ப்பம் குறைவு. அப்படியே வருடத்தில் ஒரு தடவை பார்த்தாலும் அன்பு, பாசம் இருக்குமா என்று தெரியவில்லை.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
எந்த ஒரு வேலையாக இருந்தாலும் கடைசி வரை இருந்து பொறுமையாக செய்து முடிப்பேன். சமையல், க்ராஃப்ட், தையல் என்று எல்லாமே அடக்கம் இதில்.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
1. மரணம்
2. விபத்துக்கள் பற்றிய செய்திகள்
3. நம்பிக்கைத் துரோகம்

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
1.சைனீஷ் உணவு ( பாம்பு எப்படி சமைப்பது என்று அல்ல !!) வகைகள்.
2. சங்கீதம், ஓவியம் கற்றுக் கொள்ள விருப்பம்.
3. ஐஸ் ஸ்கேட்டிங் கற்றுக் கொள்ள விருப்பம்.

12) பிடித்த மூன்று உணவு வகை?
பிடித்த மூன்று உணவுகளா? முப்பது கேட்டிருந்தா கூட சொல்லியிருப்பேனே.

என் அம்மா சமைச்சா எதுவும் பிடிக்கும்.
1. மீன் கறி
2. வெந்தயக் குழம்பு
3. தோசை

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
2. காக்கை சிறகினிலே நந்தலாலா

14) பிடித்த மூன்று படங்கள்?
1.சதிலீலாவதி
2. கன்னத்தில் முத்தமிட்டால்
3. தெனாலி


15) இது இல்லாமல் வாழ முடியாது என்றுசொல்லும்படியான மூன்று விஷயம்?

1. புத்தகங்கள்
2. கணிணி
3. உறக்கம் ( மதியம் படுக்கும்பழக்கம் இல்லை. இரவு உறக்கம் குறைந்தது 7 மணி நேரங்கள் அவசியம். )

Friday, July 29, 2011

யாமினி எங்கே போனாள்?

புது இடம். புது பள்ளி. டென்ஷனாக இருந்தது நிம்மி எனப்படும் நிர்மலாக்கு. வகுப்பறையில் கொண்டு போய் விடப்பட்டாள். அறிமுக படலம் முடிந்த பின்னர் ஆசிரியை பாடம் நடத்த ஆயத்தமாகினார். இவள் போய் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள். பாடத்தில் மனம் லயிக்கவே இல்லை. பாட நேரம் முடிந்து ஆசிரியை போனதும் சுற்றும் முற்றும் பார்வையினை ஓட விட்டாள். பக்கத்தில் காட்டான் போல ஒரு மாணவி. இவளுக்கு பயமாக இருந்தது.
" என்னலே பார்க்கிறே? ", என்றாள் அந்த மாணவி.
இல்லை... என்று எச்சில் விழுங்கியபடி வேறு எங்காவது இடம் கிடைக்குமா என்று பார்வையினை ஓடவிட்டாள்.

" உன் பெயர் என்ன?", என்று அதட்டினாள் அந்தப் பெண்.

" நிம்மி", என்றாள் இவள்.

" என் நாய் பெயர் ஜிம்மி. உன் பெயர் நிம்மி. நல்ல ரைமிங்கா இருகில்ல ", என்று விட்டு பெருங்குரலில் சிரித்தாள்.

அன்று தொடங்கிய பயம் அதன் பிறகு இன்னும் அதிகமாகியதே தவிர குறையவில்லை நிம்மிக்கு.

பருந்தினைக் கண்ட கோழிக்குஞ்சு போல ஒதுங்கியே இருந்து கொண்டாள். அந்த மாணவியின் பெயர் யாமினி என்று அறிந்து கொண்டாள்.
யாமினி எல்லோருக்கும் ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தாள். வயசுக்கு மீறிய உடல், குரல், நடை எல்லாமே மற்றவர்களையும் ஒதுங்கி போகும் படி செய்தது.

3 அடி நீள பெஞ்ச், கீழே புத்தகங்கள் வைப்பதற்கு வசதியாக ஒரு இழுப்பறை.
போன முதல் நாளே யாமினி 3 அடி பெஞ்சின் நடு மையமாக ஒரு கோடு போட்டு விட்டாள்.
" இதப் பாருலே இந்தக் கோட்டுக்கு அந்தப் பக்கம் உன்னுது. இந்தப் பக்கம் என்னுது. மீறி இந்தப் பக்கம் கை வந்திச்சு பிச்சுப் போடுவேன்", என்றாள்.

வேறு எங்கும் இடம் கிடைக்காத காரணத்தினால் நிர்மலா தலையாட்டி விட்டு ஒதுங்கிக் கொண்டாள்.

யாமினிக்கு படிப்பு ஏறவே இல்லை. அப்பாவின் தொல்லையாலோ அல்லது இவளை வீட்டில் வைச்சு சமாளிப்பது கஷ்டம் என்பதாலோ பள்ளிக்கு அனுப்பினார்கள்.

ஒரு நாள் யாமியை காணவில்லை. அவள் யாருடனோ ஓடிவிட்டதாக சொன்னார்கள்.
பள்ளிக்கு அவளின் அப்பா ஒரு பெரும் படையுடன் வந்து விட்டார். ஒரு சிலர் அதிபருடன் நின்று வாக்கு வாதம் செய்ய, மறு பிரிவினர் வகுப்பறைக்கு வந்தனர்.

" யாமினியின் இடம் எது ?" , என்றான் ஒருவன்.
யாரோ கையை காட்ட, விர்ரென்று அம்பு போல பறந்து வந்தான். நிம்மிக்கு நடுக்கம் பிடித்துக் கொண்டது. வந்தவன் பெஞ்ச் இழுப்பறையினை திறந்தான். உள்ளே கிடந்த பொருட்களை தாறுமாறாக தூக்கி வீசினான்.
யாமினியின் அப்பா விழிகளை உருட்டியவாறு உறுமிக் கொண்டே நின்றார். இவரை விட யாமினியே பரவாயில்லை போல தோன்றியது நிம்மிக்கு.

" நீதான் என் பெண்ணின் நண்பியா? ", என்றார் நிம்மியை நோக்கி.

"இல்லை. நானி....", என்றாள் அவளுக்கே கேட்காத குரலில்.

"எலேய்! உண்மையை சொல்லிப்போடு. இல்லை தொலைச்சுப் போடுவேன். ", என்று மிரட்டினார்.
அதிபரின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.
" பக்கத்தில் இருந்த உனக்கு தெரியாமல் அவள் ஓடியிருக்க மாட்டாள். எங்கே போனாள், யார் கூடப் போனாள்ன்னு சொல்லிடு ", என்று கூட்டமாக நின்று மிரட்டினார்கள்.

இவள் சொன்ன சமாதானங்கள், காரணங்கள் எதுவுமே எடுபடவில்லை.
நாளைக்கு மீண்டும் வருவோம். உண்மையை சொல்லிடு என்று மிரட்டி விட்டு போய் விட்டார்கள்.
நிம்மிக்கு பயத்தில் காய்ச்சல் வந்து விட்டது. ஒரு வாரம் பள்ளிக்கு போக முடியாதபடி காய்ச்சல் வாட்டி எடுத்தது.
மீண்டும் பள்ளிக்கு சென்றபோது இவளின் பெஞ்ச் இழுப்பறையினையும் யாரோ சோதனை போட்டிருந்தது தெரிந்தது.
யாமினி அலை கொஞ்சம் ஓய்ந்து போயிருந்தது.
கீழே விழுந்த பேனாவை எடுக்க குனிந்த போது நான்காக மடிக்கப் பட்ட காகிதம் கண்களில் பட்டது. பேப்பர் கசங்கி இருந்தமையால் யாரும் அதை சட்டை செய்யவில்லை போலத் தோன்றியது நிம்மிக்கு.
காகிதத்தினை பிரித்தாள். அது யாமினி அவளின் அப்பாவிற்கு எழுதிய மடல்.

அன்பின் அப்பா, இப்படி எழுதவே வெறுப்பாக வருகின்றது. அன்பிற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். ஒரு நாள் கூட உங்கள் முகத்தில் புன்சிரிப்பை நான் கண்டதில்லை. எ
ப்போது பார்த்தாலும் அடி தடி, ஆள் அம்பு என்று உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? நான் யாருடனோ ஓடிப்போய் விட்டதாக ஊர் பேசும். அப்படியே பேசட்டும். நான் கன்னியாஸ்திரி ஆகப் போகிறேன். எதிர்காலத்தில் நீங்கள் திருந்தி நல்ல மனிதராக இருந்தால் சந்திக்கலாம்.

யாமினி.

நிம்மிக்கு யாமினி மீது இரக்கம் உண்டானது.
கடிதத்தினை மடித்து, பையில் வைத்துக் கொண்டாள். கடிதத்தினை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது நிம்மிக்கு. பள்ளியில், யாமினி வீட்டில் கொடுத்தால் இவளை சந்தேகமாக பார்ப்பார்கள்.
யாமினியின் அப்பாவை நினைக்கவே கலக்கமாக இருந்தது.
பள்ளி விட்டதும் வேகமாக வீடு நோக்கி நடந்தாள். வீட்டில் போய் கடிதத்தினை கிழித்துப் போட்டு விட எண்ணினாள்.
வழியில் காளி கோயிலை கடக்கும் போது அந்த யோசனை தோன்றியது.
பேப்பரை சுருட்டி, நூலில் கட்டி, அங்கிருந்த மரக்கிளையில் தொங்க விட்டாள். நூற்றுக்கணக்கான சுருட்டப்பட்ட காகிதங்களோடு யாமினியின் கடிதமும் சேர்ந்து கொண்டது. யாமினி கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்று காளியிடம் வேண்டி கொண்டாள். திரும்பி பாராமல் வீட்டினை நோக்கி வேகமாக ஓடத் தொடங்கினாள்.

Saturday, July 23, 2011

கடலைப் பருப்பு ( பால் ) கறி
கடலைப்பருப்பு - 1/2 கப். தண்ணீரில் குறைந்தது 3 மணி நேரங்கள் ஊற வைக்கவும். இதை அடி கனமான சட்டியில் போட்டு, மூழ்கும்படி நீர் விட்டு, வெங்காயம் ( 1 டேபிள் ஸ்பூன் ), பச்சை மிளகாய் ( 4, அல்லது விரும்பிய அளவு ), பூண்டு ( 5 பல் ), உப்பு சேர்த்து நன்கு வேக விடவும். நன்கு வெந்ததும் மஞ்சள் தூள் சேர்க்கவும். தண்ணீர் வற்றியதும் பால் ( விரும்பினால் தேங்காய்ப் பால் ) விடவும். கரண்டியால் சிறிது மசித்து விடவும். பால் ஓரளவுக்கு வற்றியது ( நன்கு வற்ற விட வேண்டாம் ) இஞ்சி ஒரு துண்டு பொடியாக அரிந்து போடவும். 2 நிமிடங்களின் பின்னர் வெந்தயம், பெருஞ்சீரகம் பொடி, சிறிதளவு நெய் சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இறுதியில் தாளித்து ( வெங்காயம், கறிவேப்பிலை ( நிசமா கறிவேப்பிலை தான் ), காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம் ) போடவும். சுவையான கடலைப் பருப்பு கறி தயார். இது சப்பாத்தி, சோறு, புட்டு, இடியப்பத்திற்கு ஏற்ற பக்க உணவாகும்.

நான் எப்போதும் Evaporated பால் தான் பாவிப்பேன். விரும்பியவர்கள் தேங்காய்ப் பால் சேர்க்கலாம்.
இது என் அம்மாவின் ரெசிப்பி. ஊரில் அம்மன் கோயில் திருவிழா சமயங்களில் 15 நாட்களுக்கு மாமிசம், மீன் வீட்டில் சமைக்க மாட்டோம். கடலைப்பருப்பு கறி, வெந்தயக் குழம்பு, அப்பளம், வடகம், சொதி, பால் பழம் என்று ஒரே அமர்க்களமாக இருக்கும். 15 நாட்களும் கோயிலுக்கு போய்ட்டு வந்து ஒரு வெட்டு வெட்டுவோம்.
*****************************************
2. அமெரிக்காவின் அலாஸ்கா கடற்பகுதியில் ஒரு விநோதமான கடல் வாழ் உயிரினத்தினை மீனவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்களாம். குறைந்தது 20 அடி நீளம், பெரிய கண்கள், குதிரை போன்ற கழுத்துடன் காணப்பட்டதாம். அதை வீடியோவில் பதிவு செய்திருந்தார்கள். ஆனால் வழக்கம் போலவே வீடியோ தெளிவாக இல்லாமல் பழைய கால த்ரில்லர் படங்களில் ( கறுப்பு வெள்ளை ) வரும் உருவம் போலவே மங்கலாகத் தான் தெரிந்தது. இந்த நூற்றாண்டில் செல் போன் கமராக்களில் கூட அழகா, தெளிவா படங்கள் வரும் போது இவர்களுக்கு எங்கிருந்து இந்தக் காமரா கிடைச்சதோ தெரியவில்லை.

இந்த மாதிரி நியூஸ்களில் கீழே வரும் வாசகர்கள் கருத்துக்கள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். பல கமன்ட்கள் சிரிப்பை வரவழைத்தன. அதில் சில

வாசகர் 1 : இதை விட பயங்கரமான மிருகங்களை wal mart aisle களில் பார்த்திருக்கிறேன்.
வாசகர் 2 : பெரிய கண்கள், குதிரை போன்ற நீண்ட கழுத்து.... என் மாமியாராக இருக்கலாம் ( It sounds like my mother in-law ).

Monday, July 18, 2011

ஆங்! இது தான் ஸ்டைலாம்

( Image : Google. Thanks )

ஆங்! இது தான் ஸ்டைலாம்

கனடாவில் நிறைய துணிக் கடைகள் இந்த முறை கண்டேன். கடைகள் அங்கு தான் முன்பும் இருந்தன. நான் இந்த முறை தான் உள்ளே போனேன். கண்ணாடி வளையல்கள், புடவைகள், சல்வார் கமீஸ், சிறுவர், சிறுமிகளுக்கான ஆடைகள். புடவைகள் எல்லாம் மினு மினுங்கும் லேட்டஸ்ட் வகைகள். உறவினர் புடவைக்கு ப்ளவுஸ் தைக்கச் சென்றார். அங்கே வேலை செய்த பெண் சொன்னார், இப்பெல்லாம் குட்டியூண்டு ப்ளவுஸ் கைகள் தான் ஸ்டைலாம். அதோடு புடவை எவ்வளவு மினு மினுங்குதோ அவ்வளவு டிமான்டாம். ஒரு முறை திருமணம் போன்ற விழாக்களுக்கு உடுத்திய ஆடைகளை மீண்டும் அணிய மாட்டார்கள் என்றும் சொன்னார். திருமணம் போன்ற விஷேசங்களுக்கு குறைந்தது 500 டாலர்களாவது செலவு செய்தால் தான் பெண்களுக்கு நிம்மதியாக இருக்குமாம். இப்படி ஏகப்பட்ட நியூஸ்கள் அவரின் மூலம் அறிந்து கொண்டேன்.
ஷோ கேஸில் இருந்த கண்ணாடி வளையல்கள் புது விதமாக இருந்தன. முத்துக்கள் தொங்கியபடி பல விதமான நிறங்களில் வளையல்கள். கடைப் பெண்மணி வளையல்களை வெளியே எடுத்தார். முத்துக்கள் சரமாக கோர்க்கப்பட்டிருந்தன. அதோடு இரண்டு வளையல்களையும் இணைத்து பாலம் போல முடிச்சுப் போட்டிருந்தார்கள். எப்படி அணிவது ஒரே குழப்பமாக இருந்தது. முதலில் முத்துக்கள் கோர்க்கப்பட்ட ஒரு வளையலை அணிந்து, பிறகு ப்ளையின் கண்ணாடி வளையல்கள் குறைஞ்சது 15 அணிந்து, இறுதியாக மற்றைய முத்துக் கோர்க்கப்பட்ட வளையலை அணிய வேண்டுமாம். சிலர் முழங்கை வரை இருக்குமாறு அணிவார்களாம். அடேங்கப்பா! இதெல்லாம் அணிய எவ்வளவு பொறுமை வேண்டும் என்று வியந்து தான் போனேன்.
இதெல்லாம் எங்களுக்கு எப்பவோ தெரியும் நீ என்ன பட்டிக்காட்டிலா இருக்கிறாய் என்று யாரும் நினைத்தாலும் காரியமில்லை. இந்த லேட்டஸ்ட், ஃபாஷான்( Fashion ) என்று வகை வகையாக உடைகள், வலையல்கள், சல்வார்கள் என்று புது ட்ரென்ட் கொண்டு வருபவர்கள் யார்???

உறவினர் பெண்ணுக்கு திருமணம். என்னிடம் 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த பட்டுப் புடவைகளுக்கு ( அன்பளிப்பாக கிடைத்தவை ) ப்ளவுஸ் துணி எடுக்க ( இருக்கும் ப்ளவுஸ் எல்லாமே இத்துப் போயிருச்சு ) வேணும் துணிகள் காட்ட முடியுமா என்று கேட்டேன். கடைப் பெண்மணி என்னையும், என் புடவைகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, வேண்டா வெறுப்பாக சில துணிகளை எடுத்து முன்னாடி போட்டார். நீயெல்லாம் சுத்த வேஸ்ட் என்று சொல்லாமல் சொல்கிறாரோ!!!


******************************
வேறு கல்யாணம்!
இந்த முறை விடுமுறையில் போன போது என் உறவினர்கள் சிலரை பார்க்க போயிருந்தேன். நாங்கள் போகும் போது ஒவ்வொரு முறையும் பார்க்க வருவார்கள். இந்த முறையாவது நாங்கள் போயே ஆக வேண்டும் என்று நினைத்துப் போனோம். இந்தியாவில் இருந்த போது பாம்புகள் நிறைய வலம் வந்தன. பாம்புகள் பற்றிய பேச்சு வந்தது.
நாங்கள் இருந்த வீட்டுப் பக்கம் கொஞ்சம் அல்ல நிறையவே திரியும் பாம்புகள். அதுவும் நாக பாம்புகள் அதிகம். வேப்ப மர நிழலினை அதிகம் விரும்பும் போல தெரிந்தன.
ஒரு முறை ஒரு பாம்பு எங்கள் வீட்டில் குடியிருக்கவும் ஆரம்பித்து விட்டது. குட்டி போடவோ அல்லது வேறு என்ன அவசரமோ தெரியவில்லை சுவரில் இருந்த பொந்தில் பதுங்கி இருந்தது.
அக்கம் பக்கம் போய் டெரர் குடுத்து விட்டு மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்து விடும். வாண்டுகள் அதிகம் நடமாடும் இடத்தில் பெற்றோர்கள் கவலையுடனே இருந்தார்கள். விரட்டிப் பார்த்தும் பயனில்லை.
கடுப்பான எங்கள் அயலார் எல்லோரும் ஒன்று கூடி பாம்பினை நையப்புடைத்து கொன்று விட்டார்கள். காலியாக இருந்த இடத்தில் அதை புதைத்தார்கள். எனக்கு கனவில், நினைவில் எல்லா நேரமும் பாம்பு தான். நீயா படத்தில் வரும் பாம்பு போல பழி வாங்கப் போகிறது என்று நினைச்சு உதறல் தான்.

சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு நாக பாம்பு. ஆனால், அது எங்கள் வீட்டிற்குள் வராமல் வெளியே சுற்றித் திரிந்தது. முன்பு பாம்பினை அடித்து புதைத்த இடத்தில் அடிக்கடி காணப்பட்டதாக அயலார்கள் கூறினார்கள்.

நாக பாம்புகள் ஜோடியாகவே இருக்கும் என்று சொல்வார்கள். அதன் துணையைப் புதைத்த இடத்தில் இதனைக் கண்டதும் பயந்து, இந்தப் பாம்பினையும் அடித்துக் கொன்று விட்டார்களாம்.
அடப்பாவமே! பிறகு என்ன நடந்தது? அதனை எங்கே புதைத்தார்கள் என்று நான் கேள்வி எழுப்பினேன்.
அதன் துணைக்கு பக்கத்திலேயே புதைத்து விட்டதாக அயலார்கள் சொன்னார்களாம்.
( சே! அந்தப் பாம்பு வேறு யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தா இப்படி அநியாயமா செத்திருக்காதே என்று புலம்பியபடியே வீடு வந்து சேர்ந்தேன். )
******************************

Wednesday, July 13, 2011

Fondant Icing


எங்கள் திருமண நாள் அன்று உறவினர் ஐஸிங் கேக் செய்து தந்தார்கள். எனக்கு மிகவும் பிடித்துக் கொண்டது. அதன் பிறகு கடைகளில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்த வகை ஐஸிங் கேக் ( செய்முறை அல்ல ) பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டேன். சமீபத்தில் யாரோ இந்த வகை ஐஸிங் கேக் பற்றி கேள்வி கேட்டிருந்தார்கள். அப்படி என்ன பெரிய வேலையா இருக்கப் போகிறது என்று ரெசிப்பி தேடினேன். யுடியூப்பில் வீடியோ போட்டிருந்தார்கள். மலையை குடைந்து எலி பிடிக்கும் வேலை போலத் தெரிந்தது. இங்கு நான் செய்த பெரிய தவறு என் மகளையும் மடியில் வைத்துக் கொண்டு வீடியோ பார்த்தது தான். நான் மறக்க நினைத்தாலும் மகள் செய்து தான் ஆக வேண்டும் என்று ஒரே பிடியாக நிற்க,கடைக்குப் போய் மார்ஸ்மலோஸ், வெயிடபிள் ஸோர்ட்னிங், பொடித்த சீனி வாங்கி, மார்ஸ்மலோஸ்யை மைக்ரோவேவில் 2 நிமிடங்கள் ( 30 செக்கன்ட்ஸூக்கு ஒரு முறை எடுத்துக் கிளறி ) உருக வைத்து, பொடித்த சீனி, ஸோர்ட்னிங் சேர்த்து.... கைகளில் நன்கு எண்ணெய் பூச வேண்டும். இது மட்டும் அல்ல. வேலை செய்யும் பலகையிலும் எண்ணெய் பூசிக் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் இந்தக் கலவை அடங்காத குதிரை போல சொன்ன பேச்சுக் கேட்காது. ஐஸிங் சுகரை நன்கு தூவி பிசைய வேண்டும்.

அம்மா! எனக்கு இந்த ஐஸிங் வேண்டாம் என்று மகள் நழுவிக் கொள்ள எனக்கு எரிச்சல் வந்தது. எடுத்துக் குப்பையில் எறியலாமா என்ற எண்ணத்தை அடக்கிக் கொண்டே கலவையுடன் போராடினேன். 10- 15 நிமிடங்களின் பின்னர் சப்பாத்தி மா போன்று பதத்திற்கு வந்தது. இப்போது ஐஸிங் சொன்ன பேச்சுக் கேட்டது. இழுத்த பக்கம் எல்லாம் வந்தது. ஸிப் லாக் பையில் போட்டு குளிரூட்டியில் வைத்தேன்.

சில மணி நேரங்களின் பின்னர் சப்பாத்தி போல உருட்டி, கேக் மேல் வைத்து அழுத்தி, மேலே சில ரோஜாப் பூக்களும் செய்து வைத்தேன். சும்மா சொல்லக் கூடாது சுவை நல்லாத் தான் இருந்தது. ஆனால், அடிக்கடி செய்து சாப்பிட முடியாது காரணம், அதிக கலோரி, அதிக வேலை.

Tuesday, July 12, 2011

கயல்விழி என்னை மன்னித்து விடு


அவர் பதறிப் போய் விட்டார். இவளின் கைகளை பிடித்து தூக்கி விட்டார். அடி ஒன்றும் படவில்லை தானே என்று அன்பாக விசாரித்தார். இல்லை... என்று சமாளித்து, எழுந்தாள்.
"நீ இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறாய் ?", என்றார் அந்த மனிதர்.
"இல்லை. என் கணவர் வேலைக்கு போகிறார். வழி அனுப்பி வைக்க வந்தேன்", என்று சிரிக்க முயன்றாள்.
" நீங்கள் யார்? இந்த நேரத்தில் என்ன...." , என்றபடி அவரின் கையிலிருந்த பேப்பர் கட்டுகளை பார்த்தாள்.
" ஓ! நான் தான் இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் பேப்பர் போடும் வேலை செய்பவன். இன்று கொஞ்சம் லேட்டாகி விட்டது. வரட்டா ", என்றார்.
"பேப்பர் போடும் வேலையா? நானும் செய்யலாமா?", என்றாள் மது.
" நீ செய்யப் போகிறாயா? கொஞ்சம் கஷ்டமான வேலை. அதிகாலை 2 மணிக்காவது எழும்ப வேண்டும். வீடு வீடாக போய் பேப்பர் போடணும்....", என்று தொடர்ந்தவரை இடைமறித்தாள்.
இவளின் உறுதியை பார்த்த பின்னர் அவர் சொன்னார், " விடிந்ததும் இந்த இடத்திற்கு வா. பிறகு பேசலாம்", என்றபடி விடை பெற்றார்.
மதுமிதாக்கு பேப்பர் போடும் வேலை கிடைத்து விட்டது. வசந்திடம் சொன்ன போது, எவ்வளவு சம்பளம் என்று கேட்டதோடு நிறுத்திக் கொண்டான்.
அதிகாலையில் எழுந்து, கடையில் போய் பேப்பர் கட்டுகளை பிரித்து, பைகளில் அடுக்கி, வீடு வீடாக போய் விநியோகம் செய்தாள். வெய்யில் காலம் என்றபடியால் பெரிதாக அலுப்பு தெரியவில்லை.

உடைந்து போன வாழ்க்கையினை ஒட்ட மனம் நினைக்கவில்லை. அப்படியே ஒட்டுப் போட்டாலும் எவ்வளவு நாட்களுக்கு கணவன் நல்லபடி இருப்பானோ தெரியவில்லை. எப்படியாவது ஊருக்கு போய் விட வேண்டும் என்பதே மதுவின் ஒரே குறிக்கோளாக இருந்தது. போய் என்ன செய்வது? வேறு வாழ்க்கை தொடங்குவதா? அல்லது இப்படியே இருந்து விடுவதா என்று இன்னும் தீர்மானம் செய்யவில்லை. இப்போதைய முதல் தேவை பணம். பணம் மட்டுமே.
தோளில் பத்திரிகைகள் அடங்கிய பையினை மாட்டியபடி விரைந்தாள் மது. அடி வயிற்றில் மெதுவாக ஏதோ ஒரு சங்கடம். இரண்டு வாரமாக இந்த சங்கடம் தொடர்கிறது. வாந்தி வருவது போல ஒரு உணர்வு. இன்று வேலை முடிந்த பின்னர் மருத்துவரிடம் போக வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
மது ஆறு வாரம் கர்ப்பம் என்று மருத்துவர் உறுதி செய்தார். கணவனிடம் சொன்னபோது அவனிடம் பெரிய மாற்றம் எதுவுமில்லை. இப்ப என்னிடம் இருக்கும் பணத்திற்கு இது தான் ஒரு குறைச்சல் என்று முணு முணுப்பு காதில் விழுந்தது.
ஊருக்கு எப்படியாவது இன்னும் 4 மாசத்திற்குள் போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். ஆனால், நினைத்தது போல் எதுவும் நடந்துவிடவில்லை. ஆரோக்கியமான உணவு, மருந்துகள் என்று சேமிப்பில் பெரும்பகுதி கரைந்து போனது.

வின்டர் தொடங்கிய பின்னர் தான் சிரமமாக இருந்தது. குளிருக்கு இதமாக அணிய போதிய ஆடைகள் இருக்கவில்லை மதுவிடம். சேமித்த பணத்தில் ஆடைகள் வாங்கிக் கொண்டாள். இருந்தாலும் குளிர் எலும்பு வரை ஊடுருவிச் சென்றது. கூட வேலை செய்யும் நபரின் அறிவுரையின்படி காலுக்கு கால் உறை மாட்டி, அதன் மேலே ஷாப்பிங் பையினை சுற்றி, அதன் பிறகு பூட்ஸ் அணிந்து கொண்டாள். குளிர் கால் வழியாக உடலுக்குள் ஏறுவது குறைந்து விட்டதைப் போல இருந்தாலும் கை விரல்கள் விறைத்துப் போவதை தடுக்க முடியவில்லை.
வயிறு லேசாக மேடிட்டு இருந்தது. பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வாள். அதற்கு கயல்விழி என்று பெயர் சூட்டி, கற்பனையில் அதனுடன் விளையாடுவாள். ஆறு மாதங்கள் குளிரை சமாளித்தால் பிறகு ஊர் போய் சேர பணம் சேர்ந்து விடும் என்று கணக்குப் பார்த்துக் கொண்டாள்.

ஒரு நாள் வசந்த் வேலையால் வந்ததும், " எங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்கும்", என்றாள் மது.
எப்படி அவ்வளாவு உறுதியா சொல்கிறாய்? எனக்கு ஆண் குழந்தை தான் வேண்டும் என்றான் முகத்தை கடு கடு என்று வைத்துக் கொண்டே.

இங்கே பாருங்கள் இன்று வேலையால் வரும் போது கடையில் ஒரு அழகான சட்டை இருந்தது வாங்கி வந்தேன் என்றவள் ஏதோ நினைத்தவளாக, மகளுக்கு கயல்விழி என்று பெயர் நல்லா இருக்கு இல்லையா? என்று வசந்தை நோக்கினாள்.

ஏதோ பெரிய ஜோக் கேட்டவன் போல சிரித்தான் வசந்த். கயல்விழியா? நீ முயல்விழி என்று வைச்சாலும் காரியமில்லை. பெயரைப் பாரு கயல்விழியாம். இந்த நாட்டில் இந்தப் பெயரை கூப்பிடுவதற்குள் அவனவனுக்கு தாவு தீர்ந்து விடும் என்றபடி எழுந்து போய் விட்டான்.

இவன் சொல்வதும் சரி தான். ஆனால்,இந்த நாட்டில் நாங்கள் இருக்கப் போவதில்லை என்ற உண்மை இவனுக்கு தெரிந்தால் தானே என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள் மது.
அன்று வழக்கத்திற்கு மாறாக குளிர் அதிகமாக இருந்தது. கட்டிலில் இருந்து எழும்பவே மனம் வரவில்லை. அதற்கு உடலும் ஒத்துழைக்க மறுத்தது. பனிப்புயல் அடிக்க சாத்தியக் கூறுகள் இருப்பதாக வானிலை அறிக்கை மையம் திரும்ப திரும்ப கதறியது. இன்றும் வேலைக்குப் போகாவிட்டால் ஒரு வாரம் சம்பளம் இல்லை. செலவுகள் தலைக்கு மேல் இருக்கே என்று நினைத்தபடி இருட்டில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
வழக்கமாக பத்திரிகைகள் போடும் ஏரியாவில் இடுப்பளவு உயரத்திற்கு பனி. நடக்க சிரமமாக இருந்தது. நடை பாதை மட்டும் பனி குறைவாக இருந்தது போல தோன்றியது. நடை பாதையில் கீழே பனி உறைந்து கிடப்பதை அறியாமல் கால்களை வைத்தாள். வேகமாக நடக்க எத்தனித்தவள் உறைந்து போயிருந்த பனியின் மீது சறுக்கி, எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் வழுக்கிக் கொண்டே போனாள். எழ முயன்று தோற்றாள். பத்திரிகைகள் நாலா புறமும் சிதறி விழுந்தன. இருள் மட்டும் துணைக்கு நின்றது. விழுந்த வேகத்தில் தலையில் அடிபட்டிருந்தது. பனி மீண்டும் ஆவேசமாக விழ ஆரம்பித்தது. வயிற்றினுள் துடிப்பு அடங்குவது போலத் தோன்றியது. கயல்விழி என்னை மன்னித்து விடு என்று கெஞ்சினாள். விழியோரம் நீர் கசிந்தது. ஊதல் காற்று பனியினை ஆவேசமாக இவளின் மீது வாரி இறைத்தது.

முற்றும்Monday, June 27, 2011

சீனி சீனி

சேகரின் அம்மா நங்கென்று டீ கோப்பையை வைத்து விட்டுச் சென்றார்.
எனக்கு வேண்டாம் என்றான் சேகர்.
ஏன் துரைக்கு டீ வேண்டாம் என்றார் அப்பா.
சீனி இல்லாமல் யார் டீ குடிப்பார்கள், என்றான் சேகர்.
ராசா! இங்கே உயிர் வாழ்வதே பெரிய சவாலா இருக்கு. நீ சீனி இல்லை என்று இப்படி விரக்தி அடையலாமா? மனிதனின் உடலில் நாக்கு தான் எல்லாமே. நாக்கினை தாண்டி உணவு உள்ளே போனால் இனிப்பு, காரம், துவர்ப்பு என்று எதுவுமே தெரியாது....

ம்ம்..( தொடங்கினா நிப்பாட்டமாட்டார் அப்பா என்று நினைத்தபடி வெளியே எழுந்து போனான் சேகர் ).
சேகர், டீ குடிச்சுட்டு போ ராசா என்ற அம்மாவின் குரல் காதில் விழாதவன் போல வெளியே நடந்தான். சோம்பல் முறித்தபடி நடந்தான்.
அந்தப் பள்ளி வளாகத்தில் நிறையப் பேர் குழுமியிருந்தார்கள். இளைஞர்கள் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது. சேகரும் விடலைப் பருவத்தின் வாசலில் நின்றான். இராணுவம் முன்னேறி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. வீடு, வாசல், உறவினர்களை விட்டு, கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு எல்லோரும் ஓடினார்கள். இனிமேல் ஓட இடமோ, உடம்பில் வல்லமையோ இல்லை என்ற நிலைமைக்கு வந்த பின்னர் சிலர் பள்ளிகளில் தஞ்சம் புகுந்தனர். கூட்டமாக பள்ளிகளில் இருந்ததால் பாதுகாப்பாக உணர்ந்தார்கள்.

பள்ளியின் வகுப்பறைகளை ஆக்கிரமித்து இருந்தார்கள் மக்கள். வகுப்பறைகளில் பெஞ்ச், மேசைகள் மீது இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள் சிலர், சிலர் இன்னும் இடத்திற்காக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
இங்கே பாரு வெட்டிப் போடுவன். இது நான் முதலில் வந்து பிடிச்ச இடம். நீ வேணா அந்தப் பக்கம் போய் பையை வை என்று உறுமினான் ஒருவன்.
இல்லை. நான் இங்கனை தான் இருப்பேன். நீ என்ன செய்ய முடியுமோ செய் என்றான் இன்னொருவன்.
இருவரும் மூட்டை முடிச்சுகளை வைத்து விட்டு, எதிரும் புதிருமாக முறைத்தபடி அமர்ந்து கொண்டார்கள்.
நாசாம போங்க. ஆர்மி வந்து எல்லோரையும் சுடப் போறானுங்க. இதுங்க இடத்துக்கு அடித்துக் கொள்வதைப் பாரு என்று ஒரு கிழவி சாபம் விட்டார்.

சேகர் ஒரு கணம் நின்றான். உண்மை தான் இராணுவம் வந்தால் யார், யார் உயிரோடு இருப்பார்களோ தெரியாது. இதில் நான் வேறு சீனி, சீனி என்று பேயா அலைகிறேன் என்று எண்ணிக் கொண்டான்.

திரும்பி நடக்க எத்தனித்தவன் சீனி என்று யாரோ கூவும் சத்தம் கேட்டுத் தயங்கி நின்றான். ஒரு வேளை நிவாரணப் பொருட்களில் சீனியும் குடுக்கிறார்களோ என்று நினைத்தவன் சத்தம் வந்த பக்கம் விரைந்தான். அங்கே ஒரு வயசான பாட்டி நின்றார்.

" சீனி எங்கே குடுக்கிறாங்க? ", என்று கேட்டான்.
நான் என் மகன் சீனித்தம்பியை கூப்பிடுறேன், என்றார் பாட்டி.
நாசமாப் போ என்று மனதில் திட்டியபடி நடந்தான்.

அடுத்த நாள் எங்காவது நிவாரணப் பொருட்கள் குடுக்கிறார்களா என்று அறியும் ஆர்வத்தில் சைக்கிளில் கிளம்பினான்.
பள்ளியை விட்டு வெளியே வந்தவன் ஒரு பெரிய கடையின் முன்பு வந்து நின்றான்.
அங்கே ஒரு வயதானவர் சில மூட்டைகளை தானமாக கொடுத்துக் கொண்டு நின்றார்.
பள்ளியில் கொண்டு போய்க் குடுங்கள். குழந்தைகளுக்கு உணவு இல்லை என்று கேட்கும் போது நெஞ்சு பதறுது என்றார் வயதானவர்.
அந்தக் கடை வயதானவரின் கடையா? அல்லது அவரின் சொந்தப் பணத்தில் வாங்கிய மூட்டைகளா என்று சேகருக்கு விளங்கவில்லை. இவனும் போய் ஒரு மூட்டையை பெற்றுக் கொண்டான்.
தம்பி! அதில் சீனி இருக்கு. கவனமா கொண்டு போய் சேர்... என்றார் முதியவர்.
சேகருக்கு காண்பது கனவா? நனவா? என்று விளங்கவில்லை. ஒரு கிலோ சீனி கிடைச்சாலே போதும் என்று நினைச்சவனுக்கு ஒரு மூட்டை கிடைச்சதும் மகிழ்ச்சி பிடிபடவில்லை.

மூட்டையை சைக்கிளில் வைத்து மெதுவாகத் தள்ளினான். மூட்டை கனமாக இருந்தது. மணலில் கால்கள் புதைந்தன. உதவிக்கு யாரையும் அழைக்க மனம் இல்லை. அப்படியே மூட்டையை சுருட்டிக் கொள்ள நினைத்தான் சேகர். நாலு மாதங்களுக்காவது சீனி வாங்க வேண்டிய தேவை வராது என்று கணக்குப் பார்த்தான். பள்ளி வளாகத்தினை அடைந்தான். சிறுவர் பட்டாளம் வந்து சூழ்ந்து கொண்டது.
" அண்ணா! இந்த மூட்டையில் என்ன இருக்கு?", என்றான் ஒரு பொடியன்.
சேகர் மூட்டையை பார்த்தான். அதில் ஆங்காங்கே கொத்தமல்லி விதைகள் ஒட்டி இருந்தன.
" தம்பிகளா! கொத்தமல்லி விதை இருக்கு வேணுமா?", என்றான்.
ஏமாற்றத்துடன் திரும்பி ஓடினார்கள் சிறுவர்கள்.
சேகருக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது. இவர்கள் நம்பி விட்டார்கள். வரிசையாக இருக்கும் வகுப்பறைகளை தாண்டினால் அதோ அங்கே சுவரில் ஏதோ கெட்ட வார்த்தைகள் எழுதி இருக்கும் வகுப்பறை தான் இவனின் உறவினர்கள் இருக்கும் அறை.

வழியில் கேட்டவர்களுக்கெல்லாம் கொத்தமல்லி என்று சொல்லிக் கொண்டே நடந்தான்.
இவ்வளவு கொத்தமல்லியை வைச்சு என்னதான் செய்யப் போறே என்று ஒரு பாட்டி கேட்டார்.
குழம்பு வைக்கப் போறேன் என்றபடி விரைந்தான். இன்னும் இரண்டு வகுப்பறைகள் தான் கடக்க வேண்டும்.

அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. வேகமாக இரண்டு பேர் இவனை நோக்கி வந்தார்கள்.
மூட்டையில் என்ன இருக்கு தம்பி என்றான் இருவரில் ஒருவன்.
கொத்த.... என்று எச்சில் கூட்டி விழுங்கினான்.
நாங்கள் பார்க்கலாமா என்றார்கள்.
ஒட்டியிருந்த கொத்தமல்லி விதைகளைக் அவர்களுக்குக் காட்டினான்.
இல்லைத் தம்பி. திறந்து பார்க்கலாமா? என்றார்கள்.
தாராளமா என்று சொல்லி விட்டு ஒதுங்கி நின்று கொண்டான்.
மூட்டையைத் திறந்தவர்கள் " சீனி " என்று கூவியதும் ஒரு கூட்டமே கூடி விட்டது.
திறந்த வெளி மைதானத்துக்கு எல்லோரையும் வரும்படி அழைத்தார்கள். இவனும் போனான். மூட்டை உரிமையாளர் தான் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே சீனி குடுப்பார்கள் என்று எண்ணிக் கொண்டான்.

ஆனால், இவனை யாரும் கண்டு கொள்ளவில்லை. போய் வரிசையில் நில்லுங்கள் என்று யாரோ ஒரு நெளிந்த செம்பினை இவன் கையில் திணித்தார்கள். வரிசை பாம்பு போல நெளிந்து, நெளிந்து பள்ளி வளாகத்தினையும் தாண்டி எங்கேயோ போனது. இவன் விரக்தியுடன் செம்பினை வீசியெறிந்து விட்டு நடந்தான்.

ஹை! செம்பு என்று கூவியபடி யாரோ ஒரு பொடியன் செம்பினை எடுத்துக் கொண்டு, வரிசையை நோக்கி ஓடினான்.