கடலைப்பருப்பு - 1/2 கப். தண்ணீரில் குறைந்தது 3 மணி நேரங்கள் ஊற வைக்கவும். இதை அடி கனமான சட்டியில் போட்டு, மூழ்கும்படி நீர் விட்டு, வெங்காயம் ( 1 டேபிள் ஸ்பூன் ), பச்சை மிளகாய் ( 4, அல்லது விரும்பிய அளவு ), பூண்டு ( 5 பல் ), உப்பு சேர்த்து நன்கு வேக விடவும். நன்கு வெந்ததும் மஞ்சள் தூள் சேர்க்கவும். தண்ணீர் வற்றியதும் பால் ( விரும்பினால் தேங்காய்ப் பால் ) விடவும். கரண்டியால் சிறிது மசித்து விடவும். பால் ஓரளவுக்கு வற்றியது ( நன்கு வற்ற விட வேண்டாம் ) இஞ்சி ஒரு துண்டு பொடியாக அரிந்து போடவும். 2 நிமிடங்களின் பின்னர் வெந்தயம், பெருஞ்சீரகம் பொடி, சிறிதளவு நெய் சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இறுதியில் தாளித்து ( வெங்காயம், கறிவேப்பிலை ( நிசமா கறிவேப்பிலை தான் ), காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம் ) போடவும். சுவையான கடலைப் பருப்பு கறி தயார். இது சப்பாத்தி, சோறு, புட்டு, இடியப்பத்திற்கு ஏற்ற பக்க உணவாகும்.
நான் எப்போதும் Evaporated பால் தான் பாவிப்பேன். விரும்பியவர்கள் தேங்காய்ப் பால் சேர்க்கலாம்.
இது என் அம்மாவின் ரெசிப்பி. ஊரில் அம்மன் கோயில் திருவிழா சமயங்களில் 15 நாட்களுக்கு மாமிசம், மீன் வீட்டில் சமைக்க மாட்டோம். கடலைப்பருப்பு கறி, வெந்தயக் குழம்பு, அப்பளம், வடகம், சொதி, பால் பழம் என்று ஒரே அமர்க்களமாக இருக்கும். 15 நாட்களும் கோயிலுக்கு போய்ட்டு வந்து ஒரு வெட்டு வெட்டுவோம்.
*****************************************
2. அமெரிக்காவின் அலாஸ்கா கடற்பகுதியில் ஒரு விநோதமான கடல் வாழ் உயிரினத்தினை மீனவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்களாம். குறைந்தது 20 அடி நீளம், பெரிய கண்கள், குதிரை போன்ற கழுத்துடன் காணப்பட்டதாம். அதை வீடியோவில் பதிவு செய்திருந்தார்கள். ஆனால் வழக்கம் போலவே வீடியோ தெளிவாக இல்லாமல் பழைய கால த்ரில்லர் படங்களில் ( கறுப்பு வெள்ளை ) வரும் உருவம் போலவே மங்கலாகத் தான் தெரிந்தது. இந்த நூற்றாண்டில் செல் போன் கமராக்களில் கூட அழகா, தெளிவா படங்கள் வரும் போது இவர்களுக்கு எங்கிருந்து இந்தக் காமரா கிடைச்சதோ தெரியவில்லை.
இந்த மாதிரி நியூஸ்களில் கீழே வரும் வாசகர்கள் கருத்துக்கள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். பல கமன்ட்கள் சிரிப்பை வரவழைத்தன. அதில் சில
வாசகர் 1 : இதை விட பயங்கரமான மிருகங்களை wal mart aisle களில் பார்த்திருக்கிறேன்.
வாசகர் 2 : பெரிய கண்கள், குதிரை போன்ற நீண்ட கழுத்து.... என் மாமியாராக இருக்கலாம் ( It sounds like my mother in-law ).