Tuesday, July 13, 2010

மீண்டும் சாம்பு!

இன்று எனக்கு பிறந்தநாள். என் அப்பாவிற்கு பிறந்த நாள் கொண்டாடுவதில் விருப்பமே இல்லை. எனக்குப் பிடித்த விளையாட்டு சாமான்கள், உணவுப் பொருட்கள் வாங்கி கொடுப்பார். அம்மா கேக் செய்வார். நான் எனக்கு பிடித்த கலரில் ஐஸிங் போடுவேன். பிறகு எல்லோரும் கேக் சாப்பிடுவோம். அவ்வளவு தான் என் பிறந்தநாள் கொண்டாட்டம்.

இந்த வருடம் நான் ஸ்கூல் போகப்போகிறேன். ஒரே சந்தோஷமாக இருக்கு. அம்மா எனக்கு A, B, C மற்றும் 1,2, 3 என்று நிறைய சொல்லிக் கொடுத்தார்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் பிறகு நல்லாவே தேறி விட்டேன். அம்மா எப்ப பார்த்தாலும் படி படி என்று ஒரே தொண தொணப்பு.
" சாம்பு, ஆறுதலாக படிக்கலாம் வா ராசா ", என்று அப்பா என்னைத் தூக்கிக் கொள்வார்.
" அந்தக் காலத்தில் நான் 6 வயசில் தான் பள்ளிக்கே போனேன். இங்கு 4 வயதிலேயே பள்ளிக்கு அனுப்புறார்களே ", என்று என்னிடம் தனிமையில் புலம்பித் தீர்த்து விட்டார்.
எனக்கு இந்த 4 , 6 கணக்கெல்லாம் விளங்கவேயில்லை.

என்னை பள்ளியில் சேர்க்கும் நாளும் வந்தது. அம்மாவின் முகத்தில் கலகலப்பே இல்லை. ஏதோ பறி குடுத்தாப்போல இருந்தார்.

" சாம்பு, குட்டிப் பயலாகவே இருந்திருக்கலாமே. ஏன் இப்படி வளர்ந்தாய்? நீ பள்ளி போன பின் நான் எப்படி உன்னைப் பிரிந்து இருப்பேன் ", என்று அம்மா புலம்பிக் கொண்டே இருந்தார்.


( அம்மாவின் புலம்பலைக் கேட்ட பின்னர் எனக்கும் மூட் சரியில்லை. படத்தை பாருங்கள். உங்களுக்கே விளங்கும். )
எனக்கு என்ன பதில் சொல்வதென்றே விளங்கவில்லை. இதெல்லாம் என் கையிலா இருக்கு. நீங்களே சொல்லுங்கள்!? நான் படித்து வேலைக்குப் போனால் தானே நான் விரும்பும் விளையாட்டுப் பொருள்கள், சாப்பாடுகள், எல்லாவற்றிக்கும் மேலாக சாக்லேட் ஐஸ்கிரீம் எல்லாமே வாங்கலாம்.

எனக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு. காலை 8 மணிக்கே பள்ளிக்கு போய் விட்டோம். பெரிய ஹாலின் நடுவே நிறைய விளையாட்டுப் பொருட்கள் பரப்பி வைத்திருந்தார்கள். என்னைப் போல நிறையக் குழந்தைகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தார்கள். நானும் போய் சேர்ந்து கொண்டேன். அம்மாவும், அப்பாவும் நாற்காலிகளில் எங்களின் முறைக்காக காத்திருந்தார்கள்.

பல விதமான கலர்களில், வடிவங்களில் இருந்த பில்டிங் ப்ளாக்ஸை வைத்து பெரிய டவர் கட்டினேன். பக்கத்தில் ட்ரெயின் வைத்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு வாண்டு என் டவர் மீது ட்ரெயினால் மோதி உடைத்தான். எனக்கு அழுகை வந்தது. அம்மாவிடம் ஓடினேன். என் டவரை மோதி உடைத்த பொடியன் வாயினால் புர் புர்.... என்று சத்தம் எழுப்பியபடி குறுக்கும் நெடுக்குமா ஓடினான். ஹாலின் இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு ஓடினான். தரையில் விழுந்து புரண்டான்.

என் அம்மா அவனை மிரட்சியுடன் பார்த்தார்.
" சாம்பு, இந்தப் பொடியனுக்கு அருகில் போகாதே. இவன் ஒருத்தன் போதுமே. பாருங்கள் வாயிலிருந்து என்னமா எச்சில் ஸ்பிரே பண்ணுகிறான். இவன் அம்மா எங்கே? ", என்றபடி சுற்றும் முற்றும் பார்வையை ஓட விட்டார் அம்மா.

அப்பா எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அம்மாவின் தொண தொணப்பு தாங்காமல் நிமிர்ந்து அந்தப் பொடியனைப் பார்த்து விட்டு, மீண்டும் பேப்பரில் மூழ்கி விட்டார்.

எங்கள் முறை வந்தது. டீச்சர் மிகவும் பொறுமையாக சிரித்த முகத்துடன் பேசினார். நம்பர் 10 ஐக் காட்டி இது என்ன என்றார்? நான் டென் என்றேன். வெரிகுட் என்று பாராட்டினார் ஆசிரியை. பிறகு அம்மா, அப்பாவிடம் நிறைய ஏதோ பேசினார்.
" நீங்கள் வீட்டிற்கு போகலாம். பள்ளியிலிருந்து கடிதம் வரும் ", என்றார்.

அம்மாவின் முகத்தில் ஒரே பெருமை.

" அடடா! என் பிள்ளை 10 என்று சொல்லி டீச்சர் வாயை அடைச்சிட்டான் " , என்றார் அம்மா.

" ஏதோ நாசாவில் இன்டர்வியூ வைச்சு வேலை குடுத்தாப் போல ..", என்று அப்பா அலுத்துக் கொண்டார். அப்பாவின் முகத்திலும் பெருமை வெளிப்படையாகத் தெரிந்தது.
அங்கிருந்து ஐஸ்கிரீம் கடைக்குப் போனோம்.

எனக்கு மிகவும் பிடித்தமான சாக்லேட் ஐஸ்கிரீம் வாங்கித் தந்தார் அப்பா. பெரிய ஐஸ்கிரீம் கோனின் மீது சாக்லேட் கலவை பூசி, மேலே நட்ஸ் தூவி அலங்கரித்து இருந்தார்கள். வாங்கிய கொஞ்ச நேரத்தில் ஐஸ்கிரீம் எல்லாம் உருகி வழிந்தோடி நான் போட்டிருந்த ட்ரஸ் எல்லாமே நாசமாகி விட்டது.

இனிமேல் அம்மாவின் அர்ச்சனை ஆரம்பமாகி... நான் சொல்லி முடிப்பதற்குள் அம்மா ஆரம்பித்து விட்டார். என் ட்ரெஸ் எல்லாமே நச நசவென உடம்போடு ஒட்டி அருவருப்பாக இருக்கு. மீண்டும் சந்திப்போம். வரட்டா!

Monday, July 12, 2010

உன்னைத் தேடி...

தேவனுக்கு அதிகாலை 5 மணிக்கே விழிப்பு வந்து விட்டது. எழுந்து மனைவி நர்மதாவை பார்த்தான். அவள் அசந்து தூங்கிக் கொண்டு இருந்தாள். கல்யாணமாகி 3 வருடங்கள் ஆகிவிட்டது . மின்சாரம் இல்லாமையால் புழுக்கமாக இருந்தது. இலங்கையில் மனிதர் உயிர் வாழ்வதே பெரிய சவால். இதில் மின்சாரம் இல்லை என்று யாருமே கவலைப்படுவது இல்லை. இன்று இருப்பவன் நாளை உயிரோடு இருந்தால் அதுவே பெரிய அதிசயம்.

தேவன் மீண்டும் அந்த கனவை நினைத்துப் பார்த்தான். கடைசி 2 வாரங்களாக அவன் நிம்மதியை குலைத்துக் கொண்டிருக்கிறது. நர்மதாவிடம் சொல்லாமல் மௌனம் காத்தான்.

கனவில் அவனும் நர்மதாவும் புகையிரத வண்டிக்காக காத்துக் கொண்டு நிற்கிறார்கள். வேகமாக வந்த வண்டியில் நர்மதா மட்டும் ஏறிக் கொள்கிறாள். இவன் கால்கள் இடறி கீழே விழுந்து விட்டான். எழுந்து பார்த்தால் அங்கு மனிதன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் குகை போன்று இருண்ட இடத்தில் நிற்கிறான். புகையிரத வண்டியில் நர்மதா இவனுக்கு கை காட்டுவது மட்டுமே மங்கலாக தெரிந்தது. இவன் நிற்கும் இடத்தில் புகை சூழ்ந்து கொள்கிறது. எங்கும் மரண ஓலங்கள் கேட்டன. ஆனால் யாரையும் தெரியாமல் எங்கும் புகைமண்டலமாக இருந்தது.

தூரத்தில் எங்கோ நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. புரண்டு படுத்தான். தூக்கம் வரவேயில்லை. எழுந்து முற்றத்தில் போய் நின்று கொண்டான். இவனுடைய செல்ல நாய் டைகர் வந்து காலைக் கவ்வியது. தலையை தடவிக் கொடுத்தான். இருட்டில் அதன் கண்கள் மின்னியதை ரசித்தான். இவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள டைகர் மடியில் படுத்துக் கொண்டது.

விடிந்த பிறகு எழுந்து வந்த நர்மதா கணவருக்கு தேநீர் கொடுத்தாள். இவன் கனவைப் பற்றி வாய் திறக்காமல் மௌனமாக இருந்தான். நர்மதா கொல்லைப் பக்கம் போனாள். அங்கு வரிசையாக கட்டியிருந்த மாடுகளை வாஞ்சையுடன் தடவி கொடுத்தாள். தண்ணீர், வைக்கோல் எடுத்துப் போட்டாள். பால் கறப்பதற்கு நேரமாகி விட்டது. ஆனால் இன்னும் மணியம் தாத்தா வரவில்லை. இல்லாவிட்டால் அம்மாவை கேட்க வேண்டும் என்றெண்ணி நடையினை எட்டிப் போட்டாள்.

நர்மதாவின் அம்மாவும் அதே தெருவில் தான் குடியிருந்தார். ஒரே தம்பி. படித்துக் கொண்டிருக்கிறான். அம்மா வந்து பால் கறந்து கொடுத்து விட்டு போனார். பாலை வாங்கும் போது கை இடறி பால் கீழே கொட்டியது.

தொட்டதற்கெல்லாம் சகுனம் பார்க்கும் அம்மா எதோ முணு முணுத்தது நர்மதாவின் காதில் தெளிவாக விழுந்தது. இவளுக்கும் உள்ளூர பதட்டம் இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் புன்னகை செய்தாள். இரண்டு, மூன்று தினங்களாகவே இவளின் மனதில் என்னவென்று சொல்ல முடியாமல் ஒரு வித பதட்டம்.

தாயை அனுப்பி விட்டு, பாலினை பாட்டில்களில் நிரப்பினாள். பக்கத்து வீடுகளுக்கு இவளே கொண்டு போய் கொடுத்து விட்டு வந்தாள். தேவன் மாடுகளை குளிப்பாட்டுவதில் பிஸியாக இருந்தான். நர்மதா பக்கத்தில் இருக்கும் ஆரம்ப பாடசாலையில் ஆசிரியையாக பணி புரிகிறாள். தேவனுக்கு பெரிதாக வேலை இல்லை. வருமானம் போதாமல் இருக்கவே மாடுகள் வளர்க்க ஆரம்பித்தார்கள். ஓரளவு லாபம் வந்தது. நர்மதாவின் நினைவுகள் பின்னோக்கி சென்றன.


கல்யாணமான புதிதில் தேவன் நிறைய கடைகள் வைத்திருந்தான். பணம் தாரளமாகவே இருந்தது. நர்மதா வேலைக்கு போக வேண்டிய அவசியமே இருக்கவில்லை. வீட்டில் ஏவலுக்கு ஆட்கள், போய் வர கார் என்று சகலவிதமான சௌகரியங்களும் நிறைந்திருந்தன.

தேவன் நர்மதாவை உள்ளங்கைகளில் வைத்து தாங்குவான். பல வருடங்கள் நர்மதாவின் மீது ஒரு தலைக்காதல் தேவனுக்கு. நர்மதாவின் அப்பா கணடிப்பானவர். தேவன் போய் பெண் கேட்டதும் உடனே சம்மதம் சொல்லிவிடவில்லை நர்மதாவின் தந்தை. இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் காயம் பட்டு, இறக்கும் தருவாயில் இருந்தபோது இவர்களின் திருமணத்தை நடத்தி வைக்க சம்மதம் தெரிவித்தார். திருமணம் மிகவும் எளிமையாகவே நடைபெற்றது. திருமணம் முடிந்து அடுத்த மாதமே நர்மதாவின் அப்பா காலமானார். மிகவும் உடைந்து போயிருந்த நர்மதாவின் குடும்பத்தை தேவன் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

அரசாங்கம் விதித்த பொருளாதார தடைகளினால் தேவனின் கடைகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டி வந்தது. இருந்த காசும் கரைந்து வாழ்க்கை நடத்துவதே பெரும் போராட்டம் ஆகிப்போனது.

நர்மதா வேலைக்குப் போயே தீருவேன் என்று கிளம்பிய போது தேவனுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. ஆனால், செலவுகள் கழுத்தை இறுக்கிய போது வேறு வழியும் புலப்படவில்லை. தேவன் கிடைத்த வேலைகளை செய்யப் பழகிக் கொண்டான்.

பிள்ளையார் கோயில் மணியோசை நர்மதாவை இந்த உலகத்திற்கு மீண்டும் கொண்டு வந்தது. பள்ளிக்கு நேரமாகி விட்டதை அறிந்து அவசரமாக சமையல் அறையினுள் நுழைந்தாள். தேவன் ஏற்கனவே சமையல் வேலைகள் பார்க்க ஆரம்பித்து இருந்தான். இவளைக் கண்டதும் கனிவாக புன்னகைத்தான்.

" பள்ளிக்கு நேரமாகி விட்டது. நான் இன்று சமையலை கவனிக்கிறேன் ", என்றான் தேவன்.


நர்மதா பள்ளி சென்றாள். அங்கு போய் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது யாரோ சொன்னார்கள் இராணுவம் இவளின் கணவரைக் கைது செய்து விட்டதாக. பதட்டமாக இருந்தது. வீட்டிற்கு ஓடினாள் . அங்கு இவளின் அம்மா அழுது கொண்டிருந்தார்கள். இவளுக்கும் அழுவதை தவிர வேறு ஒரு வழியும் புலப்படவில்லை.

தொடரும்....