Friday, May 7, 2010

டொமார்

ஊரில் அவனை எல்லோரும் குமார் என்றழைக்க எனக்கு மட்டும் அவன் டொமார் ஆகிப் போனான். நான் அவனை ஏன் டொமார் என்று சொன்னேன் என்று யாரும் கேட்க வேண்டாம். குமார் என்பது டொமார் என்றானதோ அல்லது ஏதாவது ஒரு காரணத்திற்காக அல்லது காரணமில்லாமல் டொமார் டொமார் என்று கீழே விழுந்தெழும் காரணமோ தெரியாது..

நானும் அவனும் சம வயதுக்காரர்கள். எங்கள் இருவர் வீடும் ஒரே தெருவில். எப்போதும் மூக்கு ஒழுகத் திரியும் அவனைக் கண்டால் எனக்கு வெறுப்பாக இருக்கும். ஆனால் அவன் எப்போதும் ராதிகா ராதிகா என்று என் பின்னே அலைவான்.

ஐந்து வயதானதும் இருவரும் பள்ளியில் சேர்க்கப்பட்டோம். என் அப்பா என்னை பள்ளியில் விட்டு விட்டு போய் விட்டார். டொமாரும் நானும் ஒரே வகுப்பு. வகுப்பில் டொமாரைத் தவிர எல்லாமே புது முகங்கள்.

நான் பெண்கள் பக்கம் நின்று கதறி அழ, அவன் ஆண்கள் பக்கம் நின்று கதறி அழுதான். நான் நான்கு நாட்கள் அழுது விட்டு பிறகு ஓய்ந்து விட்டேன். ஆனால் டொமார் ஏழு நாட்கள் அழுது தீர்த்தான். அவன் மேலே எனக்கு ஒரு இரக்கம் உண்டானது அப்போது தான். அன்றிலிருந்து நானும் அவனும் நண்பர்களாகி விட்டோம். அவன் மூக்கு ஒழுகுவதை நான் பெரிதாக சட்டை செய்யவில்லை.

இரண்டு பேருக்கும் படிப்பில் வெறுப்பாக இருந்த காலம் அது. பட்டம் விடுவது, மாமரத்தில் ஏறுவது, சாக்லேட் கடதாசிகள் பொறுக்குவது என்று இருவருக்கும் பொதுவான விடயங்கள் இருந்தன. பள்ளி விட்டு வந்ததும் டொமார் என் வீட்டிற்கு வந்து விடுவான். அந்தி சாயும் நேரம் வரை எங்கள் விளையாட்டு ஓயாது. ஆறு மாதங்கள் என்னோடு படித்தவன் பிறகு வேறு பள்ளி போய் விட்டான்.

என் பெற்றோர் என்னை வெளியே எங்கும் சென்று விளையாட அனுமதிக்க மாட்டார்கள். எல்லா விளையாட்டுக்களும் எங்கள் வீட்டு முற்றத்திலேயே நடக்கும்.

ஒரு நாள் என் அம்மா என்னிடம் 2 ரூபாய்கள் கொடுத்தார். ராஜா மாமா கடையில் விற்கும் அல்வா என்றால் எனக்கு உயிர். ராஜா மாமா வீட்டிலே செய்து, கடையில் விற்பனை செய்வார்கள். மைதா மாவில் தாராளமாக நெய் ஊற்றி, முறுகலான சுவையுடன் இருக்கும். அதில நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, ஏலக்காய், வற்றல் எல்லாம் தாராளமாகவே போட்டிருப்பார்கள். பச்சை கலரில் அழகாக பாலித்தீன் கடதாசி சுற்றி பார்க்கவே சாப்பிடத் தோன்றும்.


அந்த நேரம் டொமார் வீட்டிற்கு வந்தான். நான் அவனிடம் காசைக் குடுத்து அல்வா வாங்கி வரும்படி சொன்னேன். போனவன் போனது தான் திரும்பி வரவேயில்லை. எனக்கு அவன் அல்வா குடுத்து விட்டான் என்று அந்தி சாயும் நேரம் விளங்கியது.

நீங்கள் எங்காவது டொமாரைப் பார்த்தால் எனக்குச் சொல்லுங்கள். எப்படி அடையாளம் காண்பதா? எப்போதும் மூக்கு ஒழுகும். அவன் காற்சட்டை ஒரு நாளும் இடுப்பில் நிற்காது. அடிக்கடி விழுந்தெழும் யாரையாவது பார்த்தீர்களானால் அவனே தான் டொமார். அப்படியும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒரு 2 ரூபாய்கள் கொடுத்து பாருங்கள். அப்ப விளங்கும்.

Thursday, May 6, 2010

சந்தியா

முன் பகுதி படிக்க இங்கே செல்லுங்கள்...
சந்தியா 1
சந்தியா 2
இந்தச் சம்பவம் நடந்து 2 வாரங்களின் பின் தேவகி ஒரு நாள் சந்தியாவை கடை வீதியில் பார்த்ததாக கூறினாள். தேவகியும் சந்தியாவும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனர் . எங்கள் வீட்டிற்கு 2, 3 தடவைகள் வந்து போனாள். வரும்போதெல்லாம் கைகளை மறைக்கும்படி ஆடை அணிந்தே வந்தாள்.


அன்று ஞாயிற்றுக் கிழமை. சந்தியாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவள் அழுவது தெளிவாக கேட்டது. தேவகியை உடனே வருமாறு சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள். நாங்கள் அவள் சொன்ன விலாசத்திற்குப் போனோம். முன்பு அவள் தோழியின் வீடு என்று சொன்ன அதே வீடு தான்.

நாங்கள் குழப்பத்துடன் உள்ளே போனோம். உள்ளே சந்தியா அழுது கொண்டிருந்தாள். பக்கத்தில் இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகள் சந்தியாவின் கைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவள் கைகளைப் பார்த்து நாங்கள் அதிர்ந்து போனோம். கைகள் முழுவதும் காயங்கள், தழும்புகள். அவள் எப்போதும் கைகளை மூடி ஆடை அணிவதன் காரணம் புரிந்தது.

உள்ளே இருந்து ஒரு தடியனை போலீஸ் அதிகாரிகள் கைகளில் விலங்கிட்டு தள்ளிக் கொண்டு போனார்கள். அவன் தான் சந்தியாவின் கணவனாம். இவளைக் கொடுமைப் படுத்துவதே அவன் முழு நேரத் தொழில் போல் இருந்தது. சந்தியாவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மனசு கனத்துப் போய் இருந்தது. அவளின் கலங்கிய கண்கள் என் மனதை என்னவோ செய்தது.

சந்தியாவின் பெற்றோர்கள் போரினால் இறந்து போய் விட்டார்கள். அவளுக்கு ஆதரவு என்று சொல்ல தேவகியை விட்டால் யாரும் இல்லை. தேவகி அடிக்கடி சந்தியாவை போய் பார்த்து விட்டு வந்தாள். நான் போகவில்லை. ஏனோ ஒரு வித தயக்கம். தேவகியிடம் சந்தியாவைப் பற்றி அடிக்கடி விசாரித்துக் கொண்டேன்.

இச்சம்பவம் நடந்து 2 மாதங்களின் பின்னர் நான் சந்தியாவை பார்க்கப் போனேன். அவள் முகம் தெளிவாக இருந்தது. கணவரிடம் இருந்து வந்த விவாகரத்து நோட்டீஸை காட்டினாள். நான் அவளின் கைகளை ஆதரவுடன் பிடித்துக் கொண்டேன். இனி காலமெல்லாம் நான் துணையாக இருப்பேன் என்று சொன்னேன். முதன் முறையாக சந்தியாவின் முகத்தில் சிரிப்பை பார்த்தேன். இனி காலமெல்லாம் அவள் சிரிப்பை நான் ரசிக்கப் போகிறேன்.

முற்றும்.

Wednesday, May 5, 2010

பூக்கள்

என் கதைகளை படித்து நொந்து போயிருக்கும் கண்களுக்கு குளிர்ச்சியாக இந்த பூக்கள்.

சந்தியா

முன் பகுதி படிக்க இங்கே செல்லுங்கள்...
சந்தியா


என் தங்கை அந்தப் பெண்ணிடம் ஏதோ கேட்டாள். 10 நிமிடங்களின் பின் இருவரும் காரை நோக்கி வந்தார்கள்.

" இவங்களுக்கு இந்த அட்ரஸ் போக வேண்டுமாம். கணவருக்காக இவ்வளவு நேரமும் காத்திருந்தார்களாம். இது இவங்க தோழியின் விலாசம். " என்றாள் தேவகி.

" ம்ம்... ஏறிக் கொள்ளுங்கள் " ( நல்ல கணவன் தான் என்று மனதிற்குள் திட்டினேன் ). என் தங்கை தந்த விலாசத்தைப் பார்த்தேன்.

காரில் ஏறிய பிறகு அவளின் முகத்தைப் பார்த்தேன். அழகாக இருந்தாள். நெற்றியில் குங்குமப் பொட்டு, தாலி எல்லாமே இருந்தது. ஆனால் முகம் தெளிவில்லாமல் குழம்பி போய் இருந்தது. இவ்வளவு நேரம் நின்ற சோர்வாக கூட இருக்கலாம். என் தங்கையின் வயது தான் இருக்கும். வெதருக்கு ஏற்ற ஆடை அணியாமல் கைகளை மூடி டி. சர்ட் போட்டிருந்தாள். அதற்கு மேல் பார்ப்பது பாவம் என்று பார்வையை திருப்பிக் கொண்டேன்.

" என் பெயர் சந்தியா " என்றாள்.
நான் மெதுவாகப் புன்னகை செய்து விட்டு, அவள் சொன்ன விலாசத்திற்கு காரை ஓட்டினேன்.

அவள் சொன்ன வீட்டின் முன்பு காரை நிப்பாட்டினேன். வீடே இருளில் மூழ்கி இருந்தது. அங்கு யாரும் இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. சந்தியா நன்றி சொல்லி விட்டு போய் விட்டாள்.

திரும்பி வரும் போது " இந்தப் பெண்ணிடம் ஏதோ மர்மம் இருக்கு " என்றாள் தேவகி. நான் எதுவுமே சொல்லாமல் காரை ஓட்டினேன்.

தொடரும்.

Monday, May 3, 2010

கல்யாணமாம் கல்யாணம்...

என் கணவரின் நண்பருக்கு திருமணம். என் கணவரின் நண்பர் பெயர் அலெக்ஸ் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் போக வேண்டுமா என்று இதோடு குத்துமதிப்பாக 15 தடவை என்னை நானே கேட்டுக் கொண்டேன். நான் போகத் தயங்குவதன் காரணம் என்ன என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் போக விருப்பம் இல்லை. என் கணவர் கண்டிப்பாக சொல்லி விட்டார் எல்லோரும் திருமணத்திற்கு போகிறோம் என்று. இங்கு எல்லோரும் என்பது என் 1 வயது மகனையும் சேர்த்து.

எனக்கு முதலில் பிரச்சினை உண்டானது ஆடை விடயத்தில். இது அமெரிக்கன் வெடிங். தகதகவென மின்னும் பட்டுப் புடவை சரி வராது. சல்வார்கமீஸ் தான் சரி வரும் என்று முடிவு செய்தேன். கண்ணாடி பதித்த சல்வார், ஒரு வளையல், ஒற்றைக்கல் வைத்த நெக்லஸ் இவ்வளவு தான் என் மேக்கப்.
தேவாலயத்தில் திருமணம் முடிந்து, எங்கோ ஒரு ஹாலில் வரவேற்பு வைத்திருந்தார்கள். அதை ஹால் என்று சொல்வதே பாவம். நிமிர்ந்தால் மேலே தலை இடித்து விடும் போல இருந்தது.

சாப்பாடு... அதைப் பற்றி நினைக்கவே கொடுமையாக இருக்கு. சான்ட்விச் தான் சாப்பாடு. அட நீங்கள் நினைப்பதே தான்... இரண்டு பன் எடுத்து நடுவில் சிக்கன், இலைதழை, பிக்கிள் வைத்து அதை பலம் கொண்ட மட்டும் இறுக்கமாக பிடித்து சாப்பிட வேண்டும். நிறைய ஆட்கள் கூடி இருக்கிற இடத்தில் இந்த சிக்கன் சான்ட்விச் மானத்தை வாங்கி விடும். சிக்கன் ஒடி விடும் அல்லது ஏதாவது ஒரு பொருள் நழுவிக் கீழே விழுந்துவிடும். அதை ஒரு அசட்டுச் சிரிப்புடன் சமாளிக்க வேண்டும். சில நேரங்களில் இந்த சான்ட்விச் பிரெட் மேல் அண்ணத்தில் ஒட்டி உயிரை வாங்கி விடும். வாயில் விரலை வைத்து துழாவி எடுக்கவும் முடியாது.

இந்த பொருட்களை எல்லாம் எடுப்பதற்கு வரிசை நின்று, வெற்றிகரமாக பொருட்களை சேகரித்து வந்து அமர்ந்து கொண்டேன். மகன் சிக்கன் மட்டுமே வேண்டும் என்று அடம் பிடிக்க, சிக்கனை எடுப்பதற்குள் அது நழுவி கீழே எங்கோ விழுந்து விட்டது.

மீண்டும் வரிசையில் நின்று... நினைக்கவே கடுப்பாக வந்தது. இத்தனைக்கும் அலெக்ஸ் ஒன்றும் வறுமையில் வாடுபவர் அல்ல. நல்ல வசதியான குடும்பம் அவருடையது.

ஒரு வழியாக கல்யாண விருந்து சாப்பாடு முடிந்தது. எல்லோருக்கும் பொழுது போக வேண்டுமே! சில பெண்கள் என்னை வந்து மொய்துக் கொண்டார்கள். மூன்று பிரிவாகப் பிரிந்து, ஒரு பிரிவினர் என் உடையை தொட்டுப் பார்த்தார்கள். மற்ற பிரிவினர் நகைகளையும், இறுதி பிரிவினர் என் தோலையும் ஆராய்ச்சி செய்தனர். இறுதிப் பிரிவினருக்கு என் தோல் எப்படி இந்த நிறத்தில் இருக்கு என்பதே பெரிய ஆச்சரியமாக இருந்தது. " சூரிய குளியல் எடுப்பியா ? " என்றார் ஒரு பெண். அவர்களிடமிருந்து தப்பித்து வருவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது.

சாப்பிட்ட சாப்பாட்டிற்கும் சேர்த்து மொய் எழுதிவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். மூன்று மாதங்கள் கழித்து அலெக்ஸிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு ஹனிமூன் போய் வந்த படங்கள் மற்றும் அனுபவங்கள் என்று நிறைய ஏதோ கிறுக்கி இருந்தார்.

ஊரில் நாங்கள் மிருககாட்சி சாலைக்கு சுற்றுலா போய் வந்த பின்னர் ஆசிரியை எங்களை 250 சொற்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதச் சொல்வாரே அது போல இருந்தது இவரின் கடிதம். ஏனோ அந்த கடிதத்தை பார்த்த போது கல்யாண சாப்பாடே நினைவில் வந்தது. அந்த கடிதத்தை நான்காக, எட்டாக, பதினாறாக கிழித்து குப்பையில் போட்டேன். என் கணவர் அந்த கடிதத்தை இன்னும் படிக்கவில்லை. அவர் இன்னும் அக் கடிதத்தை தேடிக் கொண்டிருக்கிறார். ம்ம்ம்...நல்லா தேடட்டும்.

சந்தியா

அன்று சனிக்கிழமை. வெளியே ஊர் சுற்றி விட்டு மாலை 4 மணி போல வீடு வந்தேன். என் தங்கை தேவகி என்னைக் கூப்பிட்டாள்.

" அண்ணா, இங்கே வந்து பாரேன் " என்றாள்.
" என்ன சொல் ? " என்றேன்.
" அங்கே பாருங்கள் அந்தப் பெண்ணை " என்று தூரத்தில் யாரையோ ஜன்னல் வழியாக காட்டினாள்.
" உன்னையே எனக்கு அரைகுறையாகத் தான் தெரியுது. நீ தெருவைத் தாண்டி யாரையோ காட்டுகிறாயே. இரு வருகிறேன் " என்று சொல்லிவிட்டு கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டேன்.

என்னைப் பற்றி - என் பெயர் அருண். வயது 29. வசிப்பது- கனடா. எப்போதும் வேலையில் கம்யூட்டரைப் பார்த்து என் கண்களே பூத்து விட்டன. கண்ணாடி அணிந்தால் தான் தெளிவாகப் பார்க்க முடியும்.

ஜன்னல் வழியாகப் பார்த்தேன். தூரத்தில் ஒரு பெண் தெரிந்தாள்.
" ம்ம்...இப்ப அதற்கென்ன ? ஒரு பெண் நிற்கிறாள் " என்றேன் தேவகியிடம்.

" அந்தப் பெண் மதியம் 12 மணியிலிருந்து அந்த இடத்திலேயே நிற்கிறாள். குறைந்தது 4 மணி நேரங்களாக நிற்கிறாள் " என்றாள் தேவகி.
" நீ படிக்காமல் 12 மணியிலிருந்து அந்தப் பெண்ணையே வேடிக்கை பார்க்கிறாயா ? போய்ப் படி " என்று கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் என் தங்கையை விரட்டினேன்.

தேவகி என்னை முறைத்து விட்டு நகர்ந்தாள்.

நான் டி.வி பார்க்க அமர்ந்தேன். மாலை 5. 30 போல என் தங்கை அந்தப் பெண் அங்கேயே நிற்கிறார் என்று தகவல் சொன்னாள். ஜந்தரை மணி ஆறு மணியானது. ஆனால் அந்தப் பெண் எங்கும் நகரவேயில்லை.

என் தங்கை ஏதோ ஒரு முடிவுடன் புறப்பட்டாள். என்னையும் வா என்று கெஞ்ச நானும் வேறு வழி இல்லாமல் அரை மனதுடன் புறப்பட்டேன்.

கனடாவில் சம்மர் காலமாகையால் புழுக்கமாக இருந்தது. காரில் என் தங்கையையும் ஏற்றிக் கொண்டு போனேன்.

" நான் காரில் காத்திருக்கிறேன். நீ போய் என்னவென்று கேட்டு விட்டு வா " என்று தங்கையை அனுப்பினேன்.

தொடரும்....