இதில் வரும் கதை நாயகன் பெயர் தான் குறட்டைப் புலி. அவனுக்கு அவன் பெற்றோர் ஆசையாக வைத்த பெயர் குணசீலன். இவன் விடும் குறட்டையால் மனைவி வைத்த பெயர் " குறட்டைப் புலி ". மனைவி ரோகிணிக்கு இவனின் பட்டப்பெயர் சொல்லி அழைப்பது என்றால் கொள்ளை விருப்பம். அதுவும் மிகவும் கோபமாக இருக்கும் நேரத்தில் வரும் குறட்டைப் புலி என்ற பெயருக்கும், மகிழ்ச்சியாக இருக்கும் போது அழைப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை அறிய முடியும்.
ஐயா, குறட்டைப் புலியே, என்ன யோசனை என்று குரல் வந்ததும் விளங்கியது ஏதோ அர்ச்சனை நடக்கப்போகிறது என்பது.
என்ன சொல்லுங்க மேடம்?, என்றான் குணசீலன்.
ராத்திரி முழுக்க உங்க குறட்டையால் படுக்க முடியவில்லை. எழுந்து போய் டீ போடுங்க. நான் கொஞ்ச நேரம் படுக்கணும், என்று உத்தரவு வந்தது. இவன் புரண்டு படுத்தான்.
என் அப்பாவுக்கு கல்யாணம் பேசும் போதே கண்டிஷனா சொன்னேன் குறட்டை விடும் மாப்பிள்ளை வேண்டாம் என்று. அவர் கேட்டாத்தானே. இப்ப பாரு ஒவ்வொரு நாளும் நான் படும் பாடு, என்று தொடர்ந்த ரோகிணியை இடைமறித்தான் குணசீலன்.
மாப்பிளையை தூங்க வைச்சு, பக்கத்தில் இருந்து பார்த்திருக்க வேணும் என்று சொல்கிறாயா? என்றுவிட்டு பெருங்குரலில் சிரித்தான்.
இங்கை பாரு ரோகிணி, குறட்டை ஒரு வியாதி. குறைட்டை விடுபவர்கள் நிம்மதியாக படுப்பதில்லை. அவர்களுக்கு ஆயுளும் குறைவாம், என்று காரணங்கள் சொன்னான்.
இதையே எவ்வளவு நாட்களுக்குத் தான் சொல்வீங்க. second hand snoring
என்ற நோயால் நான் பாதிச்சுப் போய் இருக்கிறேன். இந்த மருத்துவ உலகம் இதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணவே மாட்டார்களா? என்றாள் ரோகிணி.
ம்ம்... கண்டு பிடிச்சு உன் பெயரையே வைக்கப் போறாங்களாம் என்று இடை மறித்தவனை முறைத்தபடி தொடர்ந்தாள். என் பாட்டிக்கு 95 வயசு. இப்பவும் குறட்டை விட்டுட்டு சந்தோஷமா இருக்கிறார்கள். ஆனால், எங்க தாத்தா பாருங்க 40 வருடத்துக்கு முன்னாடி போய் சேர்ந்துட்டார்.
ஓ! அப்படியா, என்றான் குணசீலன்.
என்ன நொப்படியா? எத்தனை முறை சொல்றது மருத்துவரிடம் போய் ஏதாவது தீர்வு கேட்கச் சொல்லி. நீங்க கேட்டாத் தானே, என்று அலுத்துக் கொண்டாள்.
தாயே! அது மட்டும் முடியவே முடியாது. போன வாரம் தொலைக் காட்சியில் ஒரு பொருள் காட்டினார்களே அதை வாங்கலாமா என்று யோசனை சொன்னான்.
போன மாசம் ஒரு பொருள் வாங்கினோமே அதுக்கு என்ன ஆச்சு?, என்று கேட்டாள் ரோகிணி.
ஓ! பந்து போல ஒரு பொருளை முதுகில் ஒரு பை தைச்சு, அதனுள் பந்தை வைச்சு படுக்கச் சொன்னாங்களே? அந்தப் பொருளா? , என்றான் குணா. எங்க வீட்டு டாமி போன வாரம் வைச்சு விளையாடிட்டு இருந்திச்சே என்றான்.
அதுக்கு 30 டாலர்கள் தண்டமாக அழுதோமே. அதை டாமிக்கு குடுத்துட்டு பேச்சைப் பாரு என்றாள்.
இன்னும் இரண்டு மாதத்தில் குழந்தை பிறக்கப் போகிறது. உங்களை வைச்சுட்டு நான் என்ன செய்யப் போறேனோ தெரியவில்லை என்று நொந்து கொண்டாள். என்னை மட்டும் இல்லை பிறக்க போகிற குழந்தையைக் கூட உங்கள் குறட்டை பாதிக்கத் தான் போகிறது என்றாள் ரோகிணி.
அந்த நாளும் வந்தது....
( தொடரும் )
பின்குறிப்பு: இந்தக் கதை இன்னும் முடியவில்லை. இது எங்களுக்குத் தெரியாதா என்று நீங்க முணு முணுப்பது விளங்குது. நான் கொஞ்சம் அவசர வேலையாகப் போவதால் கதையினை முடிக்க நேரம் இல்லை. எனவே நீங்க இந்தக் கதையின் முடிவு என்னவாக இருக்கும் என்று ஊகித்தால் பரிசெல்லாம் கொடுக்கமாட்டேன். ஆனால், கண்டிப்பாக பாராட்டு மழை உண்டு. குறட்டைப் புலி திருந்தினாரா? மருத்துவரைப் பார்க்கப் போனாரா? முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், குறட்டைப் புலியை கொல்லவோ அல்லது சித்ரவதை செய்வதாகவோ கண்டிப்பாக முடிவு இருக்கப்படாது. உங்கள் வீட்டில் கூட ஒரு குறட்டைப் புலி இருக்கலாம். அல்லது நீங்கள் கூட ஒரு குறட்டைப் புலியாக இருக்கலாம். உங்கள் கற்பனைக் குதிரையை கன்னாபின்னாவென்று ஓட விடுங்கள் பார்க்கலாம்.
******************************************************
இது நான் தைச்ச Honey Comb Smocking . கொஞ்சம் கடுப்பு பிடிச்ச வேலை தான். ஆனால், அழகோ! அழகு!!!!