Friday, February 11, 2011

தேடல்கள் தொடரும்

எலேய்! இதெல்லாம் தேவையாடா? என்றான் சிவா.
இருடா என்னதான் நடக்குது என்று பார்க்கலாம் - இது ரகு.
அடேய்! அது வேறு ஒரு மண்ணும் இல்லை. நீயும் நானும் கொண்டு வந்த $5 டாலர் சாக்லேட்டை பிரிச்சு பார்த்து..... என்று தொடர்ந்தவனை கேள்விக் குறியுடன் பார்த்தான் ரகு.
இந்தப் பழக்கம் எல்லாம் எப்படா வந்திச்சு இவனுங்களுக்கு? ஊரில் யார் என்ன பொருளை கிஃப்ட்டா குடுத்தாலும், அது எவ்வளவு மட்டமாக இருந்தாலும் வாங்கி வைச்சுட்டு, உள்ளுக்குள்ளே புழுங்கி சாவமே அது மாதிரின்னு நினைச்சுட்டு வந்தேனே என்று புலம்பிய நண்பனை பார்த்தான் சிவா.

அதெல்லாம் ஊரிலை தான் அப்படி நடக்கும். இங்கே ஆன் தி ஸ்பாட்டில் உடனே தண்டனை குடுத்திடுவாங்க.
வெள்ளைக்காரனிடமிருந்து எல்லாமே காப்பி பண்ணுகிறோம். இதையும் பண்ணலைன்னா அவங்க குறை நினைச்சாலும் அதான் இந்தப் பழக்கம். நீ என்ன கொண்டு வந்தாய் என்று விழா முடிஞ்சதும் பகிரங்கமா அறிவிப்பாங்க - என்றான் சிவா.

அதோ பாருடா பென்ஸ் வாயெல்லாம் பல்லா நிற்கிறான்.
ம்ம்.. அவனுக்கென்னடா தூக்க முடியாமல் எதையோ தூக்கிட்டு வந்தான்.

சிவாவும் ரகுவும் வெளிநாட்டுக்கு புதிதாக வந்து, ஏதோ ஒரு கல்லூரியில், என்னவோ ஒரு துறையில் சேர்ந்து கல்வி கற்கும் நண்பர்கள். பணம் எப்போதும் பற்றாக்குறை. அடிக்கடி கோயில் போய், குறிப்பாக சாப்பாட்டினையும் மிச்ச நேரத்தில் பக்தியினையும் கவனித்துக் கொண்டார்கள். அங்கே தான் கிறிஷ் எனப்படும் கிருஷ்ணகுமாரை மீட் பண்ணினார்கள். கிறிஷ் அவரின் விலையுயர்ந்த செல் போனை தவற விட, இவர்கள் அதைக் கண்டெடுத்து பொறுப்பாக அவரிடம் கொடுக்க, பூத்தது நட்பு.

என் மகனின் பிறந்தநாள் விழாவிற்க்கு நீங்கள் இருவரும் கட்டாயம் வர வேண்டும் என்று ஒரு நாள் கிறிஸ் அன்புக்கட்டளையிட்டார். சிவாவுக்கு அங்கு போக பெரிதாக விருப்பம் இல்லை. ஆனால், ரகுதான் கட்டாயம் போயே ஆக வேண்டும் என்று அடம் பிடித்து, நண்பனின் காரை இரவல் வாங்கி வந்து இறங்கினார்கள்.

டேய்! எங்காவது மேடான இடத்தில் காரை நிப்பாட்டு. இல்லாவிட்டால் கார் ஸ்டார்ட் ஆகாது என்றான் சிவா. அட்ரஸ் சரியா தான் கேட்டு வந்தியா. வசதியான ஆளுங்க இருக்கும் இடம் போல இருக்கே என்று மீண்டும் தொடர்ந்தான்.

ஐயோ! உன்னோடு பெரும் தொல்லையா இருக்கே. இது தான் அட்ரஸ் என்று சரியான விலாசத்தினைக் காட்டினான். மீண்டும் சரி பார்த்தபடி காரிலிருந்து இறங்கினார்கள்.

இவர்களை உரசினாப் போல ஒரு பென்ஸ் கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒருவன் இறங்கினான்.

இவர்களை மேலும் கீழும் பார்த்தவன். என்ன தம்பிங்களா அட்ரஸ் மாறி வந்திட்டீகளா என்பது போல பார்த்தான்.

கிறிஸ் அண்ணாச்சி எங்களுக்கும் நண்பன் தான் என்பது போல பதிலுக்கு இவர்கள் ஒரு பார்வை பார்த்தார்கள். பென்ஸ் காரினை திறந்து ஒரு பெரிய பார்சலை வெளியே கஷ்டப்பட்டு எடுத்தான்.

பிறந்தநாள் விழாவில் மனம் ஒட்டவில்லை இருவருக்கும்.

சாப்பிட்டு முடிந்ததும் கிளம்பிய இருவரையும் இன்னும் கொஞ்ச நேரம் இருந்து போகும்படி சொன்னார் கிறிஸ்.

வரப் போகும் ஆபத்து விளங்காமல் இருவரும் ஹாலில் போய் அமர்ந்து கொண்டார்கள்.
பிறந்தநாள் பொடியனின் முன்பு கிஃப்ட் பெட்டிகளை கொண்டு வந்து அடுக்கினார்கள்.
அவன் ஒவ்வொரு பெட்டியாக பிரித்தான். சில கிப்ஃட்களைப் பார்த்ததும் வேண்டா வெறுப்பாக தூக்கி அந்தப் பக்கம் வீசினான்.
பெட்டியில், அதனைக் கொண்டு வந்தவர்கள் தங்கள் பெயர்களை எழுதியிருந்தார்கள். அவர்களுக்கு உடனே நன்றி சொல்லப்பட்டது. சில பொதிகளில் பெயர்கள் இருக்கவில்லை. ஆனால், உரியவர்கள் கைகளை உயர்த்தியோ அல்லது பற்களைக் காட்டியோ தங்கள் இருப்பை உறுதி செய்து கொண்டார்கள்.
இவர்கள் இருவரும் இருக்கையில் நெளிந்தார்கள். இஷ்ட தெய்வத்தினை வேண்டிக் கொண்டார்கள். கடவுள் இவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை போலும். இவர்கள் இருவரும் கொண்டு வந்த 5 டாலர்கள் சாக்லேட் பொதி பொடியனின் கையில் அகப்பட்டது. பொதியினை பிரித்தவன் கண்களில் அப்படி ஒரு ஆனந்தம். உடனே சாப்பிடத் தொடங்கிவிட்டான்.

யாருப்பா இந்த சாக்லேட்டினை கொண்டு வந்தது என்று யாரோ கூட்டத்தில் குரல் எழுப்பினார்கள். பென்ஸ் பெருங்குரலில் சிரித்தான்.
இவர்கள் இருவரும் கூட்டத்தோடு கூட்டமாக அந்த ஆள் யாருப்பா என்று சவுன்ட் விட்டார்கள்.
இருவரும் தெருவில் இறங்கி நடக்க ஆரபித்தார்கள். உள்ளே தேடல் தொடர்ந்து கொண்டிருந்தது.