நாட்டிற்கு வந்த புதிதில் எனக்கு ஒரு பங்களாதேஷ் தோழி ஒருவர் இருந்தார். கம்யூட்டர் சம்பந்தமான கோர்ஸ் படிக்கும் போது அறிமுகமானவர். கம்யூட்டர் வகுப்பில் தரும் வீட்டுப்பாடங்கள், அஸைன்மென்ட்ஸ் ஏதாவது முடிப்பதற்காக கம்யூட்டர் லேப் போவோம். வேலைகள் முடிய சில நேரங்களில் மதியத்திற்கு மேல் ஆகிவிடும்.
பசியை ஆற்றிக் கொள்ள பக்கத்தில் இருக்கும் துரித உணவகத்திற்கு போவோம். நான் பெரும்பாலும் முட்டை சான்ட்விச்சுடன் சாப்பாட்டினை முடித்துக் கொள்வேன். என் தோழி ஆற அமர இருந்து நன்றாக வெளுத்துக் கட்டுவார். என் தோழி ஒரு சாப்பாட்டு பிரியை. அவளின் அண்ணனோடு தங்கியிருந்தாள். அவள் அண்ணா இவளை எங்கேயும் பெரிதாக கூட்டிச் செல்ல மாட்டார்.
ஒரு நாள் எங்களுடன் இன்னொரு மாணவியும் வந்தார். நீங்கள் யாராவது அந்த தாய்லாந்து நாட்டு உணவகத்தில் சாப்பிட்டு இருக்கின்றீர்களா?" என்று கேட்டார் கூட வந்த மாணவி.
" இல்லை. ஏன் நீ சாப்பிட்டு இருக்கிறாயா? " இது பங்களாதேஷ் தோழி.
"ம்ம்ம்... ", என்று பதில் வந்தது.
" நல்லா இருக்குமா? ", என்று மீண்டும் கேள்வி.
" நல்லா இல்லை சூப்பரா இருக்கும்.
இவர்கள் இருவரும் பேசிக் கொள்வது எங்கள் கல்லூரியின் அருகில் இருக்கும் தாய்லாந்து நாட்டு உணவகம் பற்றியே. அழகான கட்டிடம், தளவாடங்கள், அந்த நாட்டு பாரம்பரிய உடை அணிந்த அழகிய பெண்கள் என்று மிகவும் கண்களைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் இருக்கும் அந்த உணவகம். நாங்கள் தினமும் அதனை கடந்து போகும் போது என் பங்களாதேஷ் தோழி பெருமூச்சு விட்டுக் கொள்வார்.
" இங்கே ஒரு நாளாச்சும் சாப்பிடணும்", என்று ஆசையை அடிக்கடி வெளிப்படுத்துவார்.
இங்கெல்லாம் சாப்பிட நமக்கு கட்டுபடியாகாது என்று சொல்லி அவள் ஆசைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பேன்.
" நாங்கள் இருவரும் அங்கே போய் சாப்பிடத் தான் போறோம். இது நடக்கும் " , என்று சவால் விட்டாள் தோழி.
துரித உணவகத்தில், கூட வந்த தோழி தொடர்ந்தார்.
" அந்த உணவகத்தில் சிக்கனில் ஒரு டிஷ் செய்வார்கள் அது மிகவும் சுவையாக இருக்கும். தேங்காய் பாலில் சிக்கன் துண்டுகள் மிதக்க, அளவான மசாலாக்கள் தூவி....", என்று வர்ணனை தொடர்ந்தது.
" நிசமாவே அவ்வளவு டேஸ்டா இருக்குமா? ", என்றாள் என் பங்களாதேஷ் தோழி. கையில் வைத்திருந்த சிக்கன் சான்ட்விச்சை வெறுப்புடன் கீழே வைத்தாள். இதெல்லா ஒரு சாப்பாடா என்று பார்வை பார்த்தாள்.
இந்த சிக்கன் ரெசிப்பி மட்டுமல்ல எல்லாமே மிகவும் சுவையாக இருக்கும் என்று முடித்துக் கொண்டார்.
அன்றிலிருந்து ஆரம்பமானது என் தோழியின் நச்சரிப்பு. கட்டாயம் போயே ஆக வேண்டும் என்று ஒத்தைக் காலில் நின்றாள். நான் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி கழன்று கொள்வேன். ஆனால், அவள் விடுவதாக இல்லை.
ஒரு நாள் என் கைகளைப் பிடித்து இழுக்காத குறையாக இழுத்துச் சென்றாள். உள்ளே போன பின்னர் என் கைப்பையை குடைந்து 3 டாலர்கள் தான் இருக்கு என்று சொன்னேன்.
" இதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை. என்னிடம் பணம் இருக்கு நான் குடுக்கிறேன் ", என்றார் தோழி.
வரவேற்பு பெண்மணி குடிக்க தண்ணீரை கப்களில் ஊற்றி விட்டு நகர்ந்தார். தண்ணீரில் ஐஸ் கட்டிகள் மிதந்து கொண்டிருந்தன.
என் தோழி அந்த பெண்ணை மீண்டும் கூப்பிட்டு வேறு தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். ஐஸ்கட்டிகள் என் தோழிக்கு பிடிக்காதாம். நான் மூன்று டாலர்களுக்கு இதுவே அதிகம் என்று நினைத்து, விதியை நொந்து கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தின் பின்னர் என் தோழி கைப்பையை குடைந்து கொண்டிருந்தார். தன்னிடம் 7 டாலர்கள் தான் இருக்கு என்று மெதுவான குரலில் சொன்னார்.
மொத்தம் 10 டாலர்களே இருந்தன. என் தோழியின் அலப்பறை மட்டும் குறையவேயில்லை.
மெனுவைப் பார்த்து, கோக்கனட் சிக்கன் டிஷ்ஸைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி ஏதோ ஒரு நூடுல்ஸ் டிஷ் கொண்டு வரச் சொன்னார் என் தோழி.
சிக்கன் டிஷ் விலை அதிகம். குறைந்தது 14 டாலர்கள் வேணும். எங்களிடமிருந்த பணத்திற்கு இது மட்டுமே சாப்பிட முடிந்தது.
ரெஸ்டாரன்ட் பெண்ணும் என் தோழியை ஓடி ஒடிக் கவனித்தார். இவர் கேட்ட நேரம் தண்ணீர், ஏதாவது சாஸ் வகையறாக்கள் என்று கொடுத்துக் கொண்டே இருந்தார்.
இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலை உனக்கு என்று கேட்ட என்னை அடக்கினார்.
சாப்பிட்டு முடிந்த பிறகு பில் கொண்டு வந்தார்கள். மொத்தம் 10 டாலர்கள் என்று கணக்கு காட்டியது. நான் என்னிடம் இருந்த மூன்று டாலர்களை மேசையில் வைக்க, என் தோழி அவரின் 7 டாலர்களை வைத்தார். டிப்ஸ் குடுப்பதற்கு பணம் இருக்கவில்லை. என் தோழி அந்தப் பெண்ணை ஓட ஓட விரட்டி வேலை வாங்கிய பாவத்திற்கு குறைந்தது 2 டாலர்களாவது குடுக்க வேண்டும் என்று என் மனசாட்சி சொல்லியது.
நான் மீண்டும் கைப்பையை குடைய, தோழி அவரின் கைப்பையை குடைந்து 25 பைசாக்கள் எடுத்து மேசையில் வைத்தார். எங்களை எரித்து விடுவது போல பார்த்தார் தாய்லாந்துப் பெண்.
25 பைசாவை எடுக்காமலே மேசை மீது போட்டு விட்டு நகர்ந்து விட்டார் அந்தப் பெண்மணி. எனக்கு அவமானமாக இருந்தது. ஆனால், என் தோழி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மீண்டும் அந்தப் பைசாவை எடுத்து பையில் போட்டுக் கொண்டார்.
இந்த சம்பவத்தின் பிறகு நான் அந்த உணவகம் வழியாக போவதைக் குறைத்துக் கொண்டேன். மாற்று வழியால் போய் வந்தேன்.
என் தோழி மீண்டும் அவரின் அண்ணன், அக்கா குடும்பத்தோடு அந்த உணவகம் போய் சாப்பிட்டதாக சொன்னார். இந்த முறை சிக்கன் டிஷ் சாப்பிட்டதாக சொன்னவர் மேலும் தொடரும் முன்பு எவ்வளவு டிப்ஸ் குடுத்தோம் என்று நினைக்கிறாய் என்று புன்னகையுடன் என்னைப் பார்த்தார்.
" என்ன 50 பைசா குடுத்திருப்பாயா?", என்று சீண்டினேன்.
இல்லை கிட்டத்தட்ட 100 டாலர்களுக்கு பில் வந்திச்சு. அதில் 20% டிப்ஸ் என் அண்ணா கணக்குப் பார்த்துக் குடுத்தார் என்று சொல்லி சிரித்தார்.
" அதே பெண்ணுக்குத் தான் இந்தப் பணத்தை குடுத்தியா?", என்று கேட்டேன்.
இல்லை. அவரைக் காணவில்லை. வேறு ஒரு பெண்தான் எங்களுக்கு அன்று சாப்பாடு பரிமாறினார் என்று விட்டு, ஓடிப் போய் பஸ்ஸில் ஏறிக் கொண்டார் என் நண்பி.
நான் உணவகத்தைக் கடந்து போகும் போது யாரோ உற்றுப் பார்ப்பது போல ஒரு உணர்வு. திரும்பி பார்த்தேன். அங்கே அந்தப் பெண் நின்று கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் ஆட்கள் வந்து போகும் இடம். என்னை ஞாபகம் இருக்கப்போவதில்லை என்று என்னை நானே சமாதானம் செய்தபடி நடையினை எட்டிப் போட்டேன்.