Wednesday, January 26, 2011

ஆச்சரியங்கள்!


உறவினர் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து அட்டை அட்டை அனுப்ப தபால் நிலையம் போயிருந்தேன். சரியாக 9 மணிக்கு தான் திறப்பார்கள். போய் லைனில் காத்திருக்க வேண்டும். அங்கு ஒரு அறிவிப்பு சுவரில் ஒட்டியிருந்தார்கள். அதில் தபாலில், பார்சலில் என்ன பொருட்கள் அனுப்ப கூடாது என்று ஒரு லிஸ்ட். பட்டாசு, எரிபொருள், பாட்டரிகள், பசை, தெர்மாமீட்டர், நெயில்பாலிஷ்.... இப்படியே லிஸ்ட் நீள்கிறது. இருக்கட்டுமே இப்ப அதுக்கு என்ன என்கிறீங்களா? இதை மீறி நான் அனுப்புவேன் என்று அனுப்பினால் தண்டனையும் இருக்காம். குறைந்தது 250 டாலர்களில் ஆரம்பித்து 100 000 ( ஒரு இலட்சம் ) டாலர்கள் வரை அபராதம். நீங்கள் 10 பொருட்கள் அனுப்பினால் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக அபராதம் கட்ட வேண்டும். நான் இப்ப 10 நெயில்பாலிஷ் என் சகோதரிக்கு ( சும்மா ஒரு பேச்சுக்கு ) அனுப்பினால் $250 * 10 .... 2500 டாலர்கள் குறைந்தது அபராதம் கட்ட வேண்டும். இதற்கு நான் டிக்கெட் வாங்கி நேரே போய் என் சகோதரிக்கு 10 பாட்டில்கள் வாங்கி குடுத்திட்டு, மீதி பணத்தினை சேமித்து வைக்கலாம். இப்படியா தண்டனை குடுப்பது என்று வயித்தெரிச்சலில் நிற்கவும் தபால் நிலைய ஷட்டரை திறக்கவும் சரியாக இருந்தது.
பிறந்தநாள் அட்டை 3 டாலர்கள், முத்திரை 1 டாலர் ஒட்டி அனுப்ப ஆயத்தமாக இருந்தது. அங்கு வேலை செய்த பெண்மணி கேட்டார், " ஓவர் நைட் அனுப்ப போறியா? அதற்கு நீ $30 டாலர்கள் கொடு. இரண்டு நாளில் போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு போய்விடும் என்றார்."
" இல்லை வேண்டாம். ( அம்பூட்டு காசு செலவு செய்ய நான் என்ன லூஸா? ) ", மெதுவா போய் சேரட்டும். ", என்று விட்டு நகர்ந்தேன். நல்லா அடிக்கிறாங்க கொள்ளை.

**************************
நாங்கள் காட்டு மிராண்டிகள் ஆனது எப்படி?

ஊரில் பள்ளியில் வரலாற்றுப்பாடம் எப்போதும் மதிய இடைவெளியின் பின்னர் தான் இருக்கும். தூக்கம் சொக்கும். ஆசிரியை வயதானவர். யாரையாவது படிக்க சொல்லிட்டு, அவரும் தூங்கி விழுவார். நாங்களும் அவரோடு சேர்ந்து தூங்குவோம். புத்தகத்தை படிப்பவர் மட்டும் பாவமாக நின்று படிப்பார். ஒரு நாள் எங்கள் ஆசிரியை திடீரென்று விழித்துப் பார்த்திருப்பார் போல கோபத்துடன் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

" அமெரிக்காவின் பூர்வ குடிகளின் தலைவன் பெயர் என்ன ? " , என்றார்.
முதல் நாள் படித்த பாடம். ஏதோ அரையும் குறையுமாக ஞாபகம் வந்து தொலைத்தது.

யாரோ ஒரு மாணவி சரியான பதிலான " தேக்கும்சே " என்று சொல்ல, மீதி தூக்கத்தில் இருந்து விழித்தவர்கள் ஙே என்று முழித்து, " பேக்கும்சே " என்று பறைய, ஆசிரியை கோபத்துடன், " இந்தக் காட்டு மிராண்டிகள் எல்லாம் சேர்ந்து ஒரு சரித்திரம் அமைக்கப் போகுதுங்க", என்று சீரியஸாக சொல்ல.....

நாங்கள் காட்டு மிராண்டிகள் ஆன வரலாறு இது தான்.
*********************

அமெரிக்காவில் பேரழிவு நடக்கலாம் என்ற பயத்தில் சிலர் இருக்கிறார்கள். குறிப்பாக அணுகுண்டு, ரேடியோ கதிர் வீச்சு அபாயம் இப்படி பல அழிவுகள் ஏற்படலாம் என்ற பயத்தில் சில மக்கள் இருக்கிறார்கள். எப்பவும் பயத்தில் சாவதை விட வேறு எதையாவது செய்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சிலர் செயலில் இறங்கியும் விட்டார்கள். யூட்டா என்ற இடத்தில் ஒரு தம்பதியினர் அண்டர் கிரவுன்ட் பங்கர் கட்டி, அதில் போய் பதுங்கிக் கொள்ளப் போகிறார்களாம். அதைக் கட்டி முடிக்க பல இலட்சக் கணக்கான பணம் செலவு செய்தார்களாம். அதில் சமையல் அறை, பாத்ரூம், தண்ணீர் வசதி, காற்று போய், வர வழிகள் , படுக்கைகள். இதைக் கட்டி முடிக்க 2.5 இலட்சம் டாலர்கள் முடிந்ததாம். இருக்கிறவள் அள்ளி முடிகிறாள் வேறு என்னத்தை சொல்வது.


*******


உறவினர் ஒருவர் சொன்ன தகவல். கோழி வளர்க்கும் இடங்களில் தினமும் பல கோழிகளை கொல்வார்களாம். இந்தக் கோழிகளை மொத்தமாக வாங்கி கொலை செய்ய ஒருவர் இருக்கிறாராம். இவை மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றவை அல்ல. ஆனால், இந்த மொத்தமாக வாங்கும் ஆசாமி செம கில்லாடி. அவர் இது நாட்டுக் கோழி இறைச்சி என்று சொல்லி நல்ல இலாபம் பார்த்து வருபவர். இலவசமாக வாங்கி நல்ல இலாபம் வரும் தொழில். இந்தக் கோழிகளை கொல்வதற்கு மிகவும் கல்வி அறிவு குறைந்த, வருமானத்திற்கு வழி இல்லாத ஆட்கள் வருவார்களாம். சில நேரங்களில் தமிழர், சில நேரங்களில் சைனீஷ் மக்கள் வருவார்களாம். ஆனால், இந்த செயல் சட்டத்திற்கு புறம்பானது என்பதால் அரசாங்க அதிகாரிகள் ரெய்ட் வருவதுண்டாம். அவர்கள் வரும் அறிகுறிகள் தெரிந்தால் அந்த இடமே காலியாகி விடும்.
அந்த அதிகாரிகளில் ஒருவரான தமிழ் நபர் சொன்னது , " தமிழர்களில் ஒருவரைப் பிடித்தால் போதும் அவன் எல்லாத்தையும் உளறிக் கொட்டிடுவான். மற்றவர்களைப் போட்டுக் குடுத்திடுவான். ஆனால், இந்த சைனீஷ் இருக்கிறார்களே அவர்கள் வாயே திறக்க மாட்டார்கள். "
நம்மைப் பற்றி நமக்கு தெரியாதா?
Tuesday, January 25, 2011

தேடப்படும் நபர்கள்

அமெரிக்கா வந்த புதிதில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நாட்கள். அப்போது வீட்டில் கேபிள் இல்லை. அப்பார்ட்மென்டில் இலவசமாக 10 சானல்கள் இருந்த ஞாபகம். கனடாவில் சுற்றம், நட்பு புடைசூழ இருந்துவிட்டு இங்கே வந்தபோது ஒரே வெறுமையாக இருந்த நாட்கள். சனிக்கிழமை இரவு சும்மா தொலைக்காட்சியை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஏதோ ஒரு நிகழ்ச்சி, அதில் ஒருவர் ஓட, போலீஸ் விரட்டும் காட்சி. மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. ஒவ்வொரு சனியும் அந்த நிகழ்ச்சி பார்க்காவிட்டால் தலை வெடித்து விடும் போல உணர்வு உண்டானது. அந்த நிகழ்ச்சியின் பெயர் The America's 10 Most Wanted என்று சில நாட்கள் சென்ற பின்னர் தான் தெரிந்து கொண்டேன்.

போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு ஓடும் கிரிமினல்களை மீண்டும் பிடிக்க உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி. அதில் அந்த நபரின் அடையாளங்கள், பச்சை குத்திய செய்திகள், கடைசியாக காணாமல் போனபோது எப்படி இருந்தான், இப்ப விக் அணிந்தோ அல்லது மொட்டைத் தலையுடன் திரிந்தால் இப்படி இருப்பான் என்று காட்டுவார்கள். கண்டு பிடித்து போலீஸில் ஒப்படைப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு இருக்கும். ஆனால், எச்சரிக்கை அந்த நபரிடம் துப்பாக்கி இருக்கலாம் என்றும் கூடுதல் தகவல் வழங்கப்படும். அப்படிக் கண்டு பிடித்தால் தூரமா நின்று போலீசுக்கு போன் பண்ணுங்கள் மேலதிக தகவலும் வழங்கப்படும்.


( இந்த நபரும் அந்த லிஸ்டில் இருப்பவர் தான். எங்கையாச்சும் கண்டால் எனக்கு விபரம் சொல்லுங்க. பணத்தை பங்கு போட்டுக் கொள்ளலாம். )

சரி! நம்ம தான் வெட்டியா இருக்கிறோமே எங்கையாவது யாரையாச்சும் கண்டால் போலீஸுக்கு தகவல் சொல்லி சன்மானத்தை வாங்கிக் கொள்ளலாமே என்று நினைத்து, நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தேன்.

எஸ்கேப் ஆகிய கிரிமினல் போல ஒத்த முகசாயல் உடைய நபரை வைத்து, ஒரு குட்டி ட்ராமா போல நடித்துக் காட்டுவார்கள். இப்படி 10 பேருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். பெரும்பாலும் தென் அமெரிக்காவில் போய் ஒளிந்து கொள்வார்கள். சிலர் அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலமாக ஓடித் திரிவார்களாம். இந்த மாநிலம் மாநிலமாக ஓடித் திரியும் ஒரு நபராவது என் கண்களில் மாட்டா மாட்டானா என்று நப்பாசையுடன் நினைத்துக் கொள்வேன்.

ஆனால், இதில் ஒரு பிரச்சினை. எனக்கு பெரும்பாலும் புதிதாக அறிமுகம் ஆனவர்களின் முகங்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஒரு முறை புது அப்பார்ட்மென்ட் குடி போக கணவரின் வேலை நண்பர்கள் வந்து உதவி செய்தார்கள். இதில் ஒருவர் அமெரிக்கர். நல்ல ப்ரென்ட்லியான நபர். 2 மாசம் கழித்து கணவரின் அலுவலகம் போனபோது சிலர் வந்து ஹாய் சொன்னார்கள். ஒரு மொட்டை ஆசாமி மிகவும் உரிமையாக கதைக்க, நான் முழிக்க, அவர் கொஞ்ச நேரத்தில் போய் விட்டார். கணவர் சொன்னார் இவர் தான் எங்களுக்கு உதவி செய்த நபர். பெயரைச் சொன்ன பிறகு ஞாபகம் வந்தது. இவரை யார் திருப்பதிக்கு வேண்டுதல் வைத்து, மொட்டை அடிக்க சொன்னது என்று மனதில் நினைத்தபடி அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு வந்தேன்.

அப்படியே அந்த கிரிமினல்கள் வந்து என் முன்னாடி நின்றாலோ , அல்லது வழி கேட்டாலோ அல்லது ஒரு டாலர் கடன் கேட்டாலோ எனக்கு அவன் முகம் ஞாபகம் வந்து தொலையப் போவதில்லை. அதோடு நான் அந்த நிகழ்ச்சியிலேயே மிகவும் ஒன்றிப் போய், அதைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டு இருந்த படியால் என் கணவர் மிகவும் பயந்து போய் அந்த நிகழ்ச்சி பார்க்க விடாமல் தடை செய்து விட்டார்.
Monday, January 24, 2011

சில ஆச்சரியங்கள்

எனக்கொரு ஸ்நேகிதி ஸ்நேகிதி அவளை மாதிரி.....
நான், எனக்கொரு தோழி. அவர் எதித்ரியா நாட்டைச் சேர்ந்தவர். மிகவும் அப்பாவி ( என்னைப் போல. ஒகே நோ டென்ஷன் ). ஒரு நாள் ஈமெயில் ஐடி பற்றி பேச்சு வந்தது. அப்படின்னா என்னப்பா என்று அப்பாவியா கேட்டார். நானும் விளக்கம் சொன்னேன். எனக்கு ஒன்று வேணும் என்று கேட்டாள். சரி வாப்பா, நான் ஹெல்ப் பண்றேன் என்று சொல்லி, அவருக்கு யூஸர் நேம், கடவுச் சொல் ( இது அவரை டைப் பண்ணச் சொல்லிட்டு, நான் வேறு பக்கம் பராக்குப் பார்த்தேன்.) எல்லாம் என்டர் செய்தேன். கடவுச் சொல்லினை நான் கேட்காமலே எனக்குச் சொன்னார். ஒவ்வொரு எழுத்தாக சொல்லி வேறு காட்டினார். யாராவது மெயில் ஐடி கேட்டா கடவுச் சொல் மட்டும் கொடுத்து தொலைக்காதே என்று பல தடவை சொன்னேன். சரி என்று தலையாட்டி விட்டுப் போனார்.
வேறு ஒரு நாள் வகுப்பில் பிஸியாக பாடம் நடந்து கொண்டிருந்த போது, என்னைக் கூப்பிட்டு மெதுவான குரலில் சொன்னார், " என் நண்பன் இன்று என் மெயில் ஐடி கேட்டான். நான் குடுத்தேன். கடவுச் சொல்லையும் குடுத்தேன்...." இதன் பிறகு எனக்கு வேறு எதுவுமே காதில் விழவில்லை. உடனடியாக அவரைக் கூட்டிச் சென்று புது கடவுச் சொல் மாற்றி அமைக்கச் சொன்னேன். இப்படி கூட அப்பாவியா என்று எனக்கு இன்னும் பிரமிப்பு அகலவேயில்லை.


*********

என் மகனை என் உறவினர் ஒருவர் போட்டோ பிடிக்க காமராவினைத் தூக்கினார். சிறிது நேரத்தில் இந்த காமரா சரியில்லை, படமே தெரிய மாட்டேன் என்கிறது, என்று அவர் முணுமுணுத்தது காதில் விழுந்தது. நான் இந்த டெக்னிக்கல் விஷயத்தில் எல்லாம் வீக் என்றபடியால் பேசாமல் இருந்தேன். ஆனால், 3 வயசான என் மகன் அவங்க அப்பா போல ரொம்ப ஷார்ப். " மாமா, லென்ஸ் கவரை கழட்டிட்டு பாருங்க நல்ல தெளிவா தெரியும்" , என்று சொல்ல நான் அசந்து போனேன். அடச் சே! இப்படி அடிப்படை அறிவு கூட இல்லைன்னா எப்படின்னு நானும் கொஞ்சம் டெக்னிக்கல் விடயங்களை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். ஈன்ற பொழுதினிலும்...


***********
என் கணவரும் கத்தரிக்காயும் என்ற தலைப்பில் உங்களிடம் பேசினேன். ஆனால், நீங்கள் ஒரு தீர்வும் சொல்லவில்லை. சரி! அதை விடுங்க. இப்ப என் மகனும் கத்தரிக்காய் பிரியராக மாறிவிட்டார் என்பது தான் லேட்டஸ்ட் நியூஸ். கத்தரிக்காய் குழம்பும், சப்பாத்தியும் என்றால் ஒரு பிடி பிடிப்பார். சில நேரம் பள்ளிக்கு போகும் முன்பு, " அம்மா, இன்று கத்தரிக்காய் குழம்பு வைங்க " என்று உத்தரவு போட்டு விட்டு செல்கிறார் நாட்டாமை. இப்ப எங்க வீட்டில் எவ்வளவு கத்தரிக்காய்கள் இருந்தாலும் எனக்கு வெறுப்போ அல்லது ஆத்திரமோ வருவதில்லை.


********

என் மகளுக்கு இப்ப தான் நாலு வயசு. ஆனால், எல்லாவற்றையும் உற்று நோக்குவதில், அதை அப்படியே காப்பி பண்ணுவதில் கெட்டிக்காரி. நான் இன்று பாயாசம் செய்யப் போகிறேன் என்று சொன்னால் போதும், ஜவ்வரிசி, சேமியா, ஏலக்காய், முந்திரி வற்றல், சீனி என்று தேவையான எல்லா பொருட்களையும் கிச்சன் கவுண்டரில் எடுத்து வைத்து விடுவார். இன்னும் கொஞ்ச நாட்களில் பாயாசம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பாயாசம் மட்டும் அல்ல பொங்கல் அல்லது வேறு சமையலுக்கும் தேவையான பொருட்கள் எடுத்துக் கொடுப்பதில் சமர்த்து.

*********


என் கணவருடன் முன்பு வேலை பார்த்த ஒரு சைனீஸ் பெரியவர் நிறையப் படித்தவர். இவர் இன்று வேறு ஒரு கம்பெனியில் பெரிய பதவியில் இருக்கிறார். என் கணவருக்கு சமீபத்தில் ஒரு மெயில் அனுப்பி இருந்தார். அவர் நன்றாக பாடுவாராம். அதை Youtube இல் யாரோ அப்லோட் செய்திருந்தார்கள் ( அந்தக் கொடுமையை அவரைத் தவிர யாரும் செய்திருக்க மாட்டார்கள் ) . கேட்கவே சகிக்கவில்லை. ஆனால், ஏதோ ஒரு நம்பிக்கையில் அவர் பாட, சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். என் கணவரும் நல்லா இருக்கு, இன்னும் நிறையப் பாடுங்கள் என்று மெயில் அனுப்பியது தான் இன்னும் கொடுமை.