Sunday, October 20, 2013

இனிமேல் ஒட்டும் இல்லை உறவும் இல்லைகுளிர்சாதனப் பெட்டியின் மீது ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் என் அருமை மகளும், அதுவும் பின்னிப் பிணைந்து கிடந்தார்கள். கோபம் வந்தது.
" இதை யார் இங்கே ஒட்டினார்கள்? ", என்றாள் கோபத்துடன் சாந்தி. பதில் வரவில்லை. " சே! என்ன வாழ்க்கை, என்ன மகள்? யார் சொல்லும் கேட்பதில்லை. இந்த புகைப்படத்தினை தொடக் கூட அருவெறுப்பாக இருக்கே! ", என்று மனதினுள் முணு முணுத்தாள்.
கணவன் நந்து சிரித்துக் கொண்டே சமையல் அறையினுள் வந்தான்.
" சாந்தி டார்லிங், என்ன டென்ஷன்? ", என்றவன் சாந்தியின் முறைப்பினை பொருட்படுத்தாமல், அந்தப் புகைப்படத்தினை கைகளில் எடுத்துக் கொண்டான்.
" என் மகளைப் பார்! எவ்வளவு வீரமான பெண்ணாக இருக்கிறாள்.", என்றான் பெருமையுடன்.
" நீங்க இரண்டு பேரும் என்ன லூஸா? இன்று இரவு நான் எதுவும் சமைக்க போவதில்லை. இந்த சமையல் அறையில் ஒன்று நான் இருக்கணும் இல்லை இந்தப் புகைப்படம்... இல்லை இல்லை ", என்றவள் எரிச்சலுடன் பெட்ரூம் நோக்கிச் சென்றாள்.
அம்மாவிடம் போய் பசி என்று கேட்டால் முதுகில் சாத்திவிடுவாரோ என்ற பயத்தினால் தன் அறையினுள்ளே முடங்கி கிடந்தாள் நிலா.
நான் என்ன பெரிய கொலைக் குற்றமா செய்துவிட்டேன். ஏதோ ஒரு ஆர்வக் கோளாறில் நடந்துவிட்டது. ஏற்கனவே 18 தரம் மன்னிப்பு கேட்டாச்சு, என்று மனதினுள் நினைத்துக் கொண்டாள் நிலா. அப்பா எங்கேயோ வெளியில் கிளம்ப ஆயத்தம் செய்வதை அறிந்து கொண்டவள் ஓடிப்போய் காரினுள் ஏறிக் கொண்டாள். அப்பா ஆதரவாக அணைத்துக் கொண்டார்.
" நிலா, அம்மா இப்படி கோபப்படுவார் என்று நான் நினைக்கவில்லை", என்றார் அப்பா.
" நான் என்னத்தைக் கண்டேன் அப்பா. நீங்கள் ஏன் அந்தப் புகைப்படத்தினை குளிர்சாதனப் பெட்டியில் ஒட்டி, அவரின் டென்ஷனை அதிகமாக்கி... போங்கப்பா எல்லாம் உங்களால் வந்த பிரச்சினை", என்றாள் மகள் சினத்துடன்.
" நான் அங்கு ஒட்டவில்லை. உன் நண்பி லீசா தான் ஒட்டியிருப்பாள். சரி அதை விடு", என்றார் அப்பா.
" என்னத்தை விட அப்பா? லீசாவினால் தான் இந்த பிரச்சினை. அவள் காலையில் வந்தது, கார்னிவெல் போக வேண்டும் என்று அடம் பிடித்தது, அங்கு போய் சும்மா ரோலர் கோஸ்டரில் ஏறினோமா, இறங்கினோமா என்றிருக்காமல்... ", என்றவள் அந்த நிமிடத்திற்கே சென்றாள்.
புதிதாக முளைத்திருந்த பஞ்சு மிட்டாய் கடையில் பிங்க் கலரில் பஞ்சு மிட்டாய் வாங்கிவிட்டு நிமிர்ந்தவர்களின் கண்களில் அந்தக் காட்சி விழுந்தது. ஒரு வரிசை பாம்பு போல நெளிந்து வளைந்து ஓடியது. வரிசையின் ஆரம்பத்தில் உண்மையிலேயே ஒரு பாம்பு. மஞ்சள் நிறத்தில், நாக்கினை அடிக்கடி வெளியே நீட்டியபடி, இரண்டு கைகளால் கட்டிப் பிடிக்க முடியாத ஒரு ராட்சத உருவத்தில், பாம்பின் சொந்தக்காரன் கைகளில் தவழ்ந்து விளையாடியது. அதை அவன் வரிசையாக நின்ற சிறுவர்கள் மீது படர வி, அவர்கள் சிரித்தபடி போஸ் கொடுக்க, அதனை புகைப்படமாக க்ளிக் பண்ணி கையில் தந்தார்கள்.

நானும் பாம்பினை வைத்து படம் எடுக்கப் போகிறேன், என்று சொன்னபோது நிலாவின் அம்மா சாந்தியின் கண்களில் அனல் பறந்தது.
"நிலா, வா வீட்டுக்குப் போகலாம்.", என்றார். மகள் தன் சொல் கேளாமல் தோழியுடன் போய் வரிசையில் நின்று கொள்ள, அப்பாவும் சேர்ந்து கொண்டார்.
பாம்பினை இவளின் மேலே விட, அது மெதுவாக ஊர்ந்து, கழுத்தினை சுற்றி... நாக்கினை வேறு பழிப்பு காட்டுவது போல அடிக்கடி செய்தது பாம்பு, அப்படியே மகளுடன் பின்னிப் பிணைந்து, கால்களை சுற்றிக் கொள்ள, புகைப்படக்காரன் அதை ரசித்து க்ளிக் செய்ய... சாந்திக்கு குமட்டிக் கொண்டு வந்தது. அழுகையும் ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. கணவன் புகைப்படத்தினை வாங்கிக் கொண்டு தான் நகர்வேன் என்று அலம்பல் செய்ய, மகளை முறைத்தபடி, அழுகையை அடக்கியபடி நின்றாள் சாந்தி.
வீட்டுக்கு சென்ற பின்னர் அவளின் கோபம் பல மடங்கானது. மகளை குறைந்து 2 தரம் குளிக்க வைத்து, அவளின் பக்கம் போவதையே அறவே தவிர்த்தாள் சாந்தி.

" அப்பா, அம்மா ஏன் பாம்பு என்றால் இப்படி பயப்படுகிறார்கள்? ", என்றாள் நிலா.
" தெரியவில்லையே. நானும் இது வரை கேட்டதில்லையே", என்றார் யோசனையுடன்.
" ஏன் நாங்கள் அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து செல்ல கூடாது? ", என்றாள் மகள்.
" நல்ல யோசனை", என்று அப்பாவும் ஒத்துக் கொண்டார்.
படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருந்த சாந்திக்கு கண்களை மூடினால் அந்தப் பாம்பு பழிப்பு காட்டுவதே நினைவில் வந்தது.
மகளை நல்ல ஒரு மனநல மருத்துவரிடம் கூட்டிச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். கூடவே கணவனின் மூளையினையும் சோதித்து பார்க்க வேண்டும் என்று நினைத்தபடி தொலைபேசி புத்தகத்தில் மனநலமருத்துவர்களின் எண்களை தேட ஆரம்பித்தாள்.