Monday, November 28, 2011

வீடு நிறையக் குழந்தைகள்

எங்களில் பெரும்பாலனவர்களுக்கு இரண்டு, மூன்று குழந்தைகள் வளர்ப்பதே பெரிய சவாலாக இருக்கு. ஆனால் சிலருக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது.

தொலைக்காட்சியில் வரும் சில நிகழ்ச்சிகளைப் பார்த்தால் எரிச்சல் மண்டிக் கொண்டு வரும். ஜான் & கேட் ப்ளஸ் 8. இவர்களுக்கு ஒரு பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள், இரண்டாவதில் 6 குழந்தைகள். அந்த அம்மா செய்யும் அலட்டகளைப் பார்த்தா ரத்தக் கண்ணீர் வராத குறை தான்.

ஒரு குழந்தையை வளர்க்கும் போது சுற்றுச் சூழல் எவ்வளவு மாசடைகிறது என்று விரிவாக காட்டினார்கள். அதாவது டயப்பர் செய்ய பயன்படும் மூலப் பொருட்களில் முக்கியமானது மரம். எவ்வளவு மரங்களை வெட்டி, டயப்பர் செய்து, டயப்பரை பயன்படுத்திய பின்னர் குப்பையில் எறியும் போது ஏற்படும் கேடுகள் இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு முறை கடைக்குச் சென்று குழந்தைகளுக்கு ஆடைகள் எடுக்க ஏற்படும் செலவுகளைப் பார்த்தா மலைப்பா இருக்கும்.

இந்த ஜான் & கேட் ஜோடி இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்கள். விளம்பரம் மூலம் நிறையப் பணம் வந்திருக்கும். படுக்கும் நேரம் தவிர்த்து மீதி நேரம் எப்போதும் வீடியோவும் கையுமாக ஆட்கள் வீட்டினுள் இருந்திருப்பார்களோ என்றே தோன்றுமளவுக்கு சாப்பிடுவது, சண்டை போடுவது என்று எல்லாமே காட்டுவார்கள். இறுதியில் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று சூப்பர் மார்க்கெட் நியூஸ் ஸ்டான்டில் செய்தி பார்த்தேன். இந்த நிகழ்ச்சியைப் பார்த்து கடுப்பான ஒரு ஆசாமி, துப்பாக்கியுடன் சென்று ஏதோ ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையத்தில் சிலரை கொன்று விட்டதாக சொன்னார்கள். இந்த ஆசாமி ஜான் & கேட் நிகழ்ச்சியை நிறுத்தும்படி நிறையத் தரம் சொன்னாராம். யாரும் காது கொடுத்துக் கேட்கவில்லையாம். அந்த ஆசாமியின் கூற்றுப்படி இந்த மாதிரி ஷோக்கள் அமெரிக்காவில் தடை செய்யப்பட வேண்டியவை.

இதே போல இன்னொரு நிகழ்ச்சி. 16 & counting ( அதாவது 16 பிள்ளைகள் ஆனால் இன்னும் பெற்று முடியவில்லை ). ஒரு முறை சானல் மாற்றிக் கொண்டு போகும் போது இந்த நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. அந்த அம்மா 16 குழந்தைகளைப் பெற்று, 16க்கும் J இல் ஆரம்பிக்குமாறு பெயர்களும் வைத்து, வயிற்றில் இன்னொன்று வளருவதாக சொன்னார். ஆண்டவன் கொடுக்கும் போது எப்படி வேண்டாம் என்று மறுப்பதாம், என்றார் அந்தப் பெண்மணி. ஆண்டவன் கொடுக்கிறார் என்று எல்லோரும் இப்படியே பெற்றுக் கொண்டிருந்தால் பூமி என்னாவது.

இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே பாவம் என்பது என் கருத்து. சமீபத்தில் அவருக்கு 19 வது குழந்தை பிறந்துவிட்டதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். இப்பவும் நிப்பாட்டுகிற ஐடியா எதுவும் அந்த அம்மாவுக்கு இல்லையாம்.

இவர்கள் பிரபலமாக யார் காரணம் என்று பார்த்தால் மக்கள் தான். இந்த மாதிரி நிகழ்ச்சிகளை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். அதனால் ஒளிபரப்பு நிலையங்களுக்கு விளம்பரங்கள் மூலம் நல்ல இலாபம் வருகிறது. நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு வேலையும் மிச்சம், பணமும் நன்றாக கொட்டும். நல்ல திறமையான நடிகர்களை இயக்கி நாடகங்கள் எடுப்பதானால் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால், இந்த மாதிரி ஷோக்களில் பெரிதாக மெனக்கெட ( கதை எழுதுவது, இயக்குவது, மேக்கப், ஆடைகள் ) தேவையில்லை. வீட்டில் இருக்கும் ஒரு வாண்டு எதையாவது உளறிக் கொட்டினாலும் மக்கள் பார்ப்பார்கள். இது மாதிரி நிகழ்ச்சிகள் எல்லாம் வளரும் நாடுகளில் இன்னும் வரவில்லை என்று நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவை பார்த்த பின்னர் யாருக்கும் ஐடியா வந்தாலும் வரலாம்.