Wednesday, May 18, 2011

என் நிலமா? உன் நிலமா?

தோட்டம் வைத்து, அதில் விதம் விதமாக காய்கறிகள் வைக்க வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை. முன்பு குடியிருந்த இடம் கார்டின் ஸ்டைல் அடுக்கு மாடிக் குடியிருப்பு. அப்பார்ட்மென்ட் போல 10, 20 தளங்கள் கட்டாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக வீடுகள் கட்டியிருந்தார்கள். அதிகப்படியாக 3 தளங்கள் தான் இருக்கும் இந்த வகை வீடுகளில். நாங்கள் குடியிருந்தது 2 வது தளம். கீழ் தளத்தில் ஒரு அமெரிக்க பெண்மணி, அவரின் குட்டி மகள். அவரின் வீடு நிலத்தோடு ஒட்டி இருந்தமையால் தோட்டம் போடுவதற்கு இடம் இருந்தது. மண் பரவி, உரம் போட்டு, தக்காளி செடிகள் நட்டார். கோடை காலம் வர அவரின் தக்காளியில் காய்கள் வரத் தொடங்கிவிட்டன. நல்ல பச்சை நிறத்தில், அழகாக இருந்தன. நான் எங்கள் வீட்டு பல்கனியில் நின்று தினமும் தக்காளிகளை எண்ணுவதுண்டு.

ஒரு நாள் வேலையால் வந்தவர் யாரையோ கெட்ட வார்த்தைகளில் திட்டத் தொடங்கிவிட்டார். அந்தப் பெண்மணியின் முகத்தில் எப்போதும் ஒரு கடுமை இருக்கும். மெதுவாக எட்டிப் பார்த்தேன். என்னைக் கண்டவர் இன்னும் சத்தமாக திட்டினார். எனக்கு ஒரே குழப்பம். மறுநாளும் இதே கூத்து தான். அவர் திட்டும்போது கூர்ந்து கவனித்ததில், அவரின் தக்காளிப் பழங்களை யாரோ திருடி விட்டார்கள் என்பது விளங்கியது. நான் தான் திருடி என்று எண்ணித் திட்டினார் போலத் தோன்றியது. எனக்கு தக்காளி மீது பெரிய ஈர்ப்பு இல்லை. அதோடு அதை களவாக எடுத்து சாப்பிடும் அளவிற்கு தரம் தாழ்ந்து போய் விடவில்லை.

இப்படியே தொடர்ந்த அவரின் பாட்டு ஒரு நாள் முடிவுக்கு வந்தது. அன்று வழக்கத்திற்கு மாறாக வெற்றிச் சிரிப்பொலி கேட்டது. திருடனை நோக்கி வசை பாடிக் கொண்டே இருந்தார். எனக்கு ஒரே ஆர்வம். என்னடா திருடன் சைடில் இருந்து ஒரு ரியாக்ஸனையும் காணோமே என்று நினைத்தபடி மெதுவாக எட்டிப் பார்த்தேன். அங்கே மூன்று மான்கள் அப்பாவியாக நின்று கொண்டிருந்தன. இவரின் திட்டுக்களை சட்டையே செய்யாமல் மெதுவாக நடை போட்டார்கள் மூவரும். இவர் கையில் கிடைத்த கம்பினால் வீசியெறிய ஓடி மறைந்தார்கள்.
என் நிலத்தில் நான் செடி வளர்க்க எவ்வளவு கஷ்டப் படுறேன். இதுங்களுக்கு கொழுப்பை பாரேன் என்று திட்டு விழுந்தது. திருடனை பிடித்த வெற்றிப் பெருமிதம் முகத்தில். மறுநாள் அவர் வேலைக்குப் போய் விட மான்கள் மீண்டும் வந்து மேய்ந்து விட்டுச் சென்றன.

தற்போது நாங்கள் இருக்கும் வீட்டில் தோட்டம் வைக்க வேண்டும் என்ற ஆசை எட்டாக் கனியாகவே இருக்கு. ஸ்ட்ராபெர்ரி செடியை நட்டு, பழங்கள் வந்த பின்னர் சில பழங்கள் மாயமாக மறைந்து போயின. சில பழங்களில் ஏதோ மிருகங்கள் கடித்த அடையாளம். காப்ஸிகம் செடியும் வேரோடு மாயமாகிப் போனது. ஒரு நாள் முயல்கள் துள்ளிக் குதித்து ஓடின.ஸ்ட்ராபெர்ரி திருடர்கள் அவர்கள் தான். எரிச்சல் வரவில்லை. எங்கள் இடம், நிலம் என்ற கோபம் வரவில்லை. சில ஆண்டுகளின் முன்பு இது அவர்கள் குடியிருந்த இடமாக இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் அழித்து, வீடு கட்டிய பின்னர் உரிமை கொண்டாடுவது சரியில்லை.

*****************************


கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
ஒரு அமெரிக்கர், ஜப்பானிய நாட்டில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். திடீரென அவருக்கு ஏதோ ஒரு ஜோக் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவரின் மொழிபெயர்ப்பாளரிடம் அனுமதி கேட்ட பின்னர், ஜோக் சொல்ல ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் செலவு செய்து ஜோக் சொன்னார். பிறகு மொழிபெயர்ப்பாளரிடம் சைகை செய்தார். மொழிபெயர்ப்பாளர் கூட்டத்தை பார்த்து ஏதோ சொல்ல கூட்டத்தினர் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அமெரிக்கருக்கு ஒரே குழப்பம். என்னடா! நான் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் செலவு செய்தேன். ஆனால், இவர் 1 நொடியில் மொழிபெயர்த்து விட்டார். மெதுவா அவரிடம் விசாரித்தார்.

அவர் சொன்னார், அது வேறு ஒன்றும் இல்லை. இந்தக் கணவான் ஒரு ஜோக் சொன்னார் எல்லோரும் கொஞ்சம் சிரிங்க என்று சொன்னேன். அதான் எல்லோரும் சிரிக்கிறாங்க என்று பதில் சொன்னாராம்.