Monday, January 21, 2013

மீண்டும் சாம்பு


என்னை நினைவிருக்கா? நான் தான் சாம்பு என்கிற சாம்பசிவம். நான் பள்ளி போகத் தொடங்கியபிறகு பிஸியாகிவிட்டேன். இப்ப உங்கள் எல்லோருக்கும் பள்ளியில் நடந்த கதை ஒன்று சொல்லப் போகிறேன். இது ஒன்றும் பெரிய சாதனைக் கதை அல்ல என் வேதனைக் கதை. யாரிடமாவது என் பாரத்தை இறக்கி வைத்தால் நல்லது போல இருக்கு.
சரி இப்ப கதைக்கு வருவோம். என் ஆசிரியையின் பெயர் திருமதி. லீசா. நல்லவர் தான். குறையொன்றும் சொல்வதற்கில்லை. பள்ளிக்கு போகத் தொடங்கி ஒரு 3 நாட்கள் இருக்கும். எனக்கு ஒரு நாள் வயிறு  கொஞ்சம் சரியில்லை. வீட்டிலேயே அம்மாவிடம் சொன்னேன்.  நான் சொல்லி அவர் எப்ப கேட்டார். அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ கிளம்பு, என்று என்னை பள்ளியில் இறக்கிவிட்டார்.

முதல் நாள் சாப்பிட்ட நண்டுக் கறி தன் வேலையை காட்ட ஆரம்பித்து இருந்தது. பள்ளி போய் சிறிது நேரத்தில் ஏதோ ஒரு மணம் என் பக்கம் இருந்து வருவதாக கூறி மாணவர்கள் ஓட்டம் பிடித்தார்கள். எனக்கும் ஏதோ ஒரு உணர்வு ஆனால் என்னவென்று விளங்கவேயில்லை. லீசா வந்தார். என்ன சாம், ஆய் போய்ட்டியா?, என்றார். நான் பாத்ரூம் போகாமல் அப்படியே நின்ற நிலையில் என் வேலையை முடித்து இருந்ததை அப்ப தான் உணர்ந்தேன். லீசா பள்ளி நேர்ஸிடம் என்னை அனுப்பினார்.

சாம், உன்னிடம் மாற்று துணிகள் ஏதாவது உன் லாக்கரில் இருக்கா?, என்று கேட்டார் நேர்ஸ். நான் என்னத்தைக் கண்டேன். அவமானம் ஒரு பக்கம். போட்டிருந்த துணிகளை அவிழ்த்து எறிந்துவிட்டு வேறு புது துணி அணிய வேண்டும் என்ற எண்ணம் தவிர எதுவும் வரவேயில்லை. என் லாக்கரில் மாற்று துணிகள் எதுவும் இல்லை என்று லீசா நேர்ஸூக்கு தகவல் அனுப்பினார். நேர்ஸ் தன்னிடம் இருந்த மூட்டையினை பிரித்து ஏதோ ஒரு செட் ஆடைகள் எடுத்தது கலங்கிய கண்கள் ஊடாக மங்கலாகத் தெரிந்தது. அதன் பிறகு அவர் என் ஆடைகளை களைந்து சுத்தம் செய்தார். அவருக்கு நல்ல பொறுமை தான். என் அம்மாவாக இருந்தால் முதுகில் 2 போட்டிருப்பார்கள். என்னை சுத்தம் செய்து, எனக்கு வேறு ஆடைகள் அணியச் செய்தார். என் கைகளை சுத்தமாக கழுவச் செய்தார்.


அதன் பிறகு என் அம்மாவை தொலைபேசியில் அழைத்தார் நேர்ஸ்.
"ஹலோ சாம்புவின் அம்மாங்களா? எப்படி இருக்கிறீங்க?, என்று நலம் விசாரிப்புகளுக்கு பிறகு தொடர்ந்தார். உங்க மகன் இன்று பள்ளியில் ஆய் போய்ட்டார். அவருக்கு மாற்று துணிகள் கொடுத்து, அவரை சுத்தம் செய்து... ஒன்று சொல்ல மறந்துட்டேன் என்னிடம் ஆண் குழந்தைகள் அணிவதற்கு ஏற்ற உள்ளாடைகள் கை வசம் இல்லை. எனவே பெண்கள் அணியும்....."
என்னது பெண்கள் அணியும் உள்ளாடையா? என்ன கொடுமை இது? மெதுவாக என் காற்சட்டையினை கிளப்பி பார்த்தேன். என் தங்கையின் உள்ளாடை போல பூக்கள், சின்டரெல்லா படம் அச்சிடப்பட்டிருந்தது. என்ன அவமானம்!
ஜிம்மில் கீழே விழுந்து மூக்கு அடிபட்டு இரத்தம் ஒழுக வந்து நின்ற ஒரு பொடியன் அவன் வேதனையை மறந்து கெக்கே பிக்கே என்று சிரித்தான். இவனுக்கு இன்னும் வேணும், என்று மனதினுள் சபித்துக் கொண்டேன்.

என் அம்மா என்ன சொன்னார்கள் என்று நான் கேட்கவில்லை. இன்று  வீடு போனதும்... வீடு போகவே நடுக்கமாக இருந்தது. என் அம்மாவுக்கு விளக்கம் சொல்ல என் நாக்குத் தள்ளி விடும். வேண்டாத தெய்வம் இல்லை. ஆனால், பாருங்கள் அன்று பள்ளி முடிந்து என்னை அழைக்க வந்தவர் என் அப்பா தான். அப்பா என்னிடம் எதுவும் கேட்கவில்லை. வீடு போனதும் அவரே என்னை குளிக்க வைத்து, வேறு ஆடைகள் மாற்றி, என் பழைய துணிகளை அலசி, என் உள்ளாடையை சிறிது நேரம் உற்று நோக்கினார், ஆனால் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை.
மாலை 5 மணி அளவில் அப்பா ஒரு பெட்டியினை எடுத்து, அதில் அவரின் துணிகளை அடுக்க ஆரம்பித்தார். அம்மா இன்னும் வேலையால் வரவில்லை.
" அப்பா, இனிமேல் இப்படி செய்யமாட்டேன். நீங்கள் அதுக்காக வீட்டை விட்டு போக வேண்டாம்", என்றேன்.
" இல்லடா செல்லம். அப்பா இன்று வேலை விடயமாக வெளியூர் போறேன். பள்ளியில் நடந்தது ஒரு விபத்து. அதைப் பற்றி நாங்கள் மறந்துவிடுவோம் சரியா?", என்றார் என்னை அணைத்தபடி.
நல்ல அப்பா தான். ஆனால், அம்மாவை நினைத்தால் குலை நடுக்கமாக இருந்தது. நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். என்ன என்கிறீர்களா? நானும் அப்பாவுடன் வெளிநாட்டுக்கு  போய்விட்டால் அம்மாவிடம் இருந்து தப்பிவிடலாம். நான் வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும்போது அம்மா அதைப் பற்றி மறந்து போயிருப்பார்கள்.
என் எண்ணத்தை செயலாக்க விரைந்தேன்.
"அப்பா,  நீங்கள் இந்தப் பையை விட கொஞ்சம் பெரிய பையாக எடுத்தால் நல்லது என்பது என் கருத்துப்பா", என்றேன்.
அப்பாவின் சிரிப்பு அடங்க சில நிமிடங்கள் ஆனது. நான் கடுப்புடன் நின்றேன்.
" பெரிய பை எதுக்கு சாம்பு?", என்றார் அப்பா.
" என் துணிகளையும் எடுத்து வைக்கிறேன். நானும் உங்களோடு வந்தே தீரூவேன்", என்றேன்.
அம்மா வரும் நேரம். அதற்குள் கிளம்பினால் நல்லது. ஆனால், அப்பா கணிணியில் பிஸியாகிவிட்டார். அடுத்தவர் வேதனை தெரிந்தால் தானே இவருக்கு என்று நினைத்தபடி, என் வசம் இருந்த சிறிய பையினுள் என் துணிகளை அடுக்கத் தொடங்கினேன். என் பையினை அப்பாவின் பையின் பக்கத்தில் வைத்துவிட்டு, சோஃபாவில் அமர்ந்து கொண்டேன். அப்பாவின் மீது ஒரு கண்ணும், டிவியில் ஒரு கண்ணும், அம்மா வருகிறார்களா என்று பதைபதைத்தபடி காத்திருந்தேன்.
காத்திருத்தல் சுகமானது என்று யாரோ ஒரு கவிஞர் பாடியிருக்கிறாராமே. என் விடயத்தில் மிகவும் கொடுமையாக இருந்தது.
" சாம்பு, எழுந்திரு. ஸ்கூல் போக வேணும்", என்ற குரலுக்கு எழும்பினேன்.
என் பை அங்கேயே இருந்தது. அப்பாவின் பையை காணவில்லை. அப்பா மீது கோபம் வந்தது.
என்ன அதிசயம்?! அம்மா என்னை எதுவும் கேட்கவில்லை. ஆனால், எனக்கு பள்ளிபோக தயக்கமாக இருந்தது.
அம்மாவிடம் மெதுவாக சொன்னேன்.
" சாம்பு, தவறு செய்வது மனித இயல்பு. அதுக்காக அதையே நினைத்து வருந்தி, அங்கேயே தேங்கி நின்றால்...", என்று அவரின் பிரசங்கத்தை ஆரம்பித்து இருந்தார்.
சரி. நான் பள்ளிக்கு போக நேரமாகிவிட்டது. நீங்களும் எல்லோரும் போய் வாருங்கள். மீண்டும் சந்திப்போம்.


( http://vanathys.blogspot.com/2010/06/blog-post_07.html
http://vanathys.blogspot.com/2010/07/blog-post_13.html )