கறிவேப்பிலை - இந்த இலைக்கு இருக்கும் மதிப்பு இப்பதான் விளங்குது. ஊரில் இருந்த போது பெரிய மரம் போல செழித்து வளர்ந்திருந்தது கறிவேப்பிலை. ஒரு ஊருக்கே சமையல் செய்யலாம் போல அவ்வளவு கிளைகள், கிளைகள் முழுவதும் இலைகள். நல்ல நறுமணத்துடன் இருந்தது. பக்கத்து வீடுகளிலிருந்து கறிவேப்பிலை பறித்து செல்வார்கள்.
திருச்சியில் இருந்த போது கறிவேப்பிலை செடி இருக்கவில்லை. கடைகளில் இலவசமாக கொடுப்பதே ஒரு வாரம் வரை இருக்கும். ஒரு ரூபாய் குடுத்தால் ஒரு திருமண சமையலே செய்துவிடலாம் போல நிறைய அள்ளித் தருவார் கோபால் மாமா.
அப்படியே கனடாக்கு ஷிப்ட் ஆனபோதும் கறிவேப்பிலை தமிழ் கடைகளில் கிடைத்தது. அமெரிக்கா வந்த பின்னர் தான் கறிவேப்பிலைக்கும், எனக்கும் ஒரு பிரிக்க முடியாத பந்தம் இருப்பது விளங்கியது. ஆரம்பத்தில் கறிவேப்பிலை இல்லாமல் சமையல் செய்து வந்தேன். பின்னர் இந்தியன் கடையில் கிடைத்தது. ஆனால், தாராளமா போட முடிவதில்லை.
ஒரு முறை கனடா போன போது, என் கஸினிடம் சொன்னேன் என் கஷ்டத்தை. அவர் சொன்னார், ஏன் இங்கே இருந்து ஒரு செடி கொண்டு போக வேண்டியது தானே என்றார். கனடா, அமெரிக்கா எல்லையில் இருக்கும் கஸ்டம்ஸ், இமிகிரேஷன் அதிகாரிகள் உயிருள்ள மனிதர் தவிர வேறு எதையும் நாட்டினுள் வரவே அனுமதிக்கமாட்டார்கள்.
இதெல்லாம் என் கஸினுக்கு தெரிந்து சொன்னாரா? இல்லையா என்று நான் ஆராய்ச்சி செய்யும் முன்னர் அவர் என் ஆ.காரரிடம் கதை அளக்க ஆரம்பித்து விட்டார்.
மச்சான், இனிமே உங்களுக்கு தொல்லை விட்டது, ஒரு கறிவேப்பிலை செடியை வாங்கி குடுங்கோ. எல்லை தாண்டி அந்தப் பக்கம் வந்தா கூட்டிட்டு போக வேண்டியது. இல்லை என்றால் தொல்லை விட்டது என்று இருங்கோ" என்றார்.
பார்ட்டிக்கு வந்த எல்லோருக்கும் நான் தான் பெரிய காமடி பீஸ் ஆகிப் போனேன்.
இந்தியன் கடைகளில் கறிவேப்பிலை என்பது ஒரு பகல் கொள்ளை போலவே இருந்தது. பேருக்கு 4 நெட்டு வைச்சு, அதை கொள்ளை விலைக்கு விற்பார்கள். இப்படியே போய்க் கொண்டிருந்த நேரத்தில் கொரியன் சூப்பர் மார்க்கெட்டில் கறிவேப்பிலை விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். குடுத்த காசுக்கு தாராளமாவே இருந்தது. என் பிரச்சினை தீர்ந்து விட்டது என்று நினைத்தேன். ஆனால், சில மாதங்களின் பின்னர் கறிவேப்பிலை அறவே இல்லாமல் போய்விட்டது.
சரி திரும்ப இந்தியன் கடைக்கு போவோம் என்று நினைத்து அங்கே போனேன். அங்கே 1 நெட்டு கறிவேப்பிலை, அதில் 10- 18 இலைகள் தான் காணப்பட்டன. விலை 2 டாலர்கள்.
அடப்பாவி! இப்படியா கொள்ளை அடிக்கிறது என்று கறுவியபடி. இது என்ன விலை ( யாராவது தவறா விலை ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலும் என்ற நினைப்பில் ) என்று கேட்டேன்.
கடைகாரனுக்கு ஏற்கெனவே கடு கடு முகம். இன்னும் கடுமையாக முகத்துடன், " அதில் விலை போட்டிருக்கு நல்லா பார், என்றார்.
எடுத்த இடத்தில் அதை வைத்த பின்னர் வெளியே வந்தேன். கடைகாரனின் மனைவி ஹைபிரிட் காரில் வந்து இறங்கி உள்ளே போனார்.
இப்பெல்லாம் நான் கறிவேப்பிலை இல்லாமல் சமையல் செய்ய பழகிவிட்டேன். பெரிசா வித்யாசம் எதுவும் தெரியவில்லை.