Saturday, October 11, 2014

இனிய நினைவுகளா? கிருமிகளா?

   
 பல மாதங்களின் பின்னர் மீண்டும் வந்திருக்கிறேன். காரணம்.....நேரம் வரும்போது அல்லது சந்தர்ப்பம் கிடைக்கும் போது சொல்கிறேன். இனிமேல் முன்பு போல வர முடியுமா என்று தெரியவில்லை. முன்பு போல அதிரா, இமா, அஞ்சு, மகி, ஜெய்லானி போன்றவர்கள் பதிவுகள் எழுதுவதில்லையா? அல்லது என் ரீடரில் தான் எதுவும் பிரச்சினையா? என்னை முகபுத்தகத்தில் விசாரித்த ஏஞ்சலினுக்கு என் அன்புகள். என்னைக் காணாவிட்டால் இவரிடரிடமிருந்து மெஸேஜ் கட்டாயம் வரும்.
************************
                   என்னுடன் வேலை செய்யும் திருமதி. பார்பரா அவர்களின் கணவர் இறந்துவிட்டார். இவர் வேலையால் வீட்டுக்கு போனபோது அவர் உயிருடன் இல்லையாம். மாரடைப்பினால் இறந்துவிட்டார். பார்பரா கணவர் இறந்த தகவலை முகபுத்தகத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை அப்டேட் செய்திருந்தார், என்று வேறு ஒரு நண்பி சொன்னார். இதனால் பல உறவினர்கள் இவரைக் குடைந்து கேள்விகள் கேட்காமல், முகபுத்தகத்தினை படித்து எல்லா தகவல்களையும் அறிந்து கொண்டார்களாம்.


                   வேலை செய்பவர்கள் எல்லோரும் அவரின் உடலை பார்வையிட செல்வதாக சொன்னார்கள். நானும் அவர்களுடன் செல்ல முடிவெடுத்தேன். உள்ளுக்குள் கொஞ்சம் நடுக்கம். காரணம், நான் பிறந்தது முதல் இறப்பு வீட்டுக்கு சென்றதே இல்லை. நான்  சிறுமியாக இருந்தபோது என் மாமாவின் இறப்பு. அதுவே நான் சென்ற முதலும் கடைசியுமான சாவு வீடு. அதுவும் பெரும்பாலும் விளையாட்டில் கழிந்தது. இரவு வந்தபோது கொஞ்சம் கலக்கமாக இருந்தது. மாமாவை நடு வீட்டில் வைத்திருந்தார்கள். சுற்றிலும் உறவினர்கள். இரவு எல்லோரும் தூங்கிவிட நான் மட்டும் கண்களை இறுக மூடியபடி இருந்தது நினைவில் இருக்கு. அதன் பின்னர் என் வாழ்க்கை வெளிநாட்டில் கழிகின்றது. என் தாத்தா, அம்மாச்சி, மாமா இவர்களின் இறுதிப் பயணத்திற்கும் நான் ஊரில் இருக்கவில்லை.

இது நான் செல்லும் இரண்டாவது இறப்பு வீடு. இங்கு வீடு என்பது அவரின் சொந்த வீடு அல்ல. Funeral homes எனப்படும் வீடுகளில் உடலை வைத்திருப்பார்கள். அங்கிருந்து தான் அவரின் இறுதிப்பயணம் தொடங்கும்.

நான், என்னோடு வேலை செய்யும் நாடலி மற்றும் வேறு சிலரோடு, நாடலியின் காரில் போவதாக ஏற்பாடு. பெரும்பாலும் எல்லோரும் கறுப்பு உடைகளில் காணப்பட்டார்கள். ஒரு வரிசையில் காத்திருந்து, மெதுவாக உள்ளே சென்றோம். அங்கு ஒரு நோட்டில், பெயர், வீட்டு முகவரி எழுதி விட்டு, உள்ளே போனோம். வீடு முழுவதும் உறவினர்கள், நண்பர்கள். நகரக் கூட இடம் இருக்கவில்லை. பார்பரா வந்து எல்லோரையும் கட்டி அணைத்து வரவேற்றார். எங்காவது ஒரு மூளையில் இருந்து கதறி அழுது கொண்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டு போன எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கிருந்த எல்லோரும் இறந்தவரின் பெருமைகளை பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

 நான் பயப்பட்டது போல அவரின் உடலை நடு வீட்டில் வைத்திருக்கவில்லை. ஒரு ஓரமாக, விரும்பியவர்கள் மட்டும் சென்று பார்க்கலாம் என்பது போல ஏற்பாடு. என்னோடு வந்தவர்கள் யாரும் அந்தப்பக்கம் போகவில்லை.

அங்கு போய் வந்ததிலிருந்து  நான் அடிக்கடி இதே நினைவாக இருக்கிறேன். இவர்களின் முறை சரியா? இறந்தவர் கட்டிய வீடு- அதிலிருந்து அல்லவா அவரின் இறுதிப்பயணம் தொடங்க வேண்டும். இறந்தவரின் உடலில் தொற்றுக் கிருமிகள் இருக்கும் என்று காரணம் சொன்னாலும் என்னால் ஏனோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் தாத்தா, பாட்டி, மாமா எல்லோருடைய இறுதிப்பயணமும் எங்கள் ஊர் வீட்டிலிருந்து தான் நடைபெற்றது. எந்தவிதமான கிருமிகளையும் அவர்கள் விட்டுச் செல்லவில்லை.
இனிய நினைவுகளை மட்டும் தான் விட்டுச் சென்றார்கள். 


Friday, July 11, 2014

எம்ப்ராய்டரி வேலைகள்
தங்கப் பறவை: இந்த பறவை தங்க நூல் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த கோல்டன் கலர் நூல் வாங்கி பல மாதங்கள் ஆகிவிட்டது. மற்ற வகை நூல் போல் இல்லாமல் தைப்பதற்கு மிகவும் கஷ்டமான நூல். 
Vanathy's

தங்க நூல் போல் இல்லாமல் இழை போல் இருப்பதால் அடிக்கடி பல இழைகளாக பிரிந்துவிடும். இருந்தாலும் விடாமல் ஒரு டெக்னிக் கண்டு பிடித்து தைத்து முடித்துவிட்டேன். இதில் ஹங்கேரியன், சங்கிலித் தையல், க்ராஸ் ஸ்டிச், அடைப்புத் தையல் ஆகிய தையல்கள் பயன்படுத்தினேன்.

பூக்கள் சாதரண நூலிலும், கோல்டன் நூலிலும் கலந்து தைத்துள்ளேன்.


 அடுத்தது, வண்ணத்துப்பூச்சி, இதில் அந்த வட்ட அவுட் லைன்wheat/wheatear stitch பயன்டுத்தினேன். அடைப்புத் தையல், ஹங்கேரியன், சங்கிலித் தையல், சில மணிகள் கொண்டு உருவான வண்ணத்துப்பூச்சி.


சேவல்: இது பல முறை தைத்த டிசைன் என்றாலும் மிகவும் பிடித்த டிசைன். இந்த முறை பூக்களுக்கு மணிகள் வைத்தேன். 

கடைசியாக இருப்பது சங்கிலித் தையல் கொண்டு உருவான மேசை விரிப்பு. இது போன வருடம் தொடங்கினேன், இன்னும் முடிக்கவில்லை. இதில் சங்கிலித் தையல் மட்டும் பயன்படுத்தி உள்ளேன். ஷேடட் கலர் எனப்படும் 2 வகையான கலர்கள் கலந்த நூல் பயன்படுத்தி உள்ளேன்.

                                                       Monday, June 30, 2014

இன்றைய பலன்


இன்றைய ராசிபலன் 'மகிழ்ச்சி' என்றிருந்தது எனக்கு. இதைப் பார்த்த பின்னர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? அல்லது இன்று ஏதாவது மனதிற்கினிய சம்பவம் நடைபெறப் போகிறதா? தெரியவில்லை.
 நாள் பலன் பார்க்கும் பழக்கம் என் இளமைப் பிராயத்தில், அதாவது என் பதின்ம வயதில் ஏற்பட்டது. சும்மா விளையாட்டாக ஏற்பட்ட பழக்கம். நானும் என் சகோதரியும் பள்ளி செல்லும் முன்னர் ஏதோ ஒரு பத்திரிகையில் இன்றைய பலன் என்ற தலைப்பில், அந்தந்த ராசிக்கு என்ன பலன் என்று பார்க்க ஆரம்பித்தோம். குறிப்பாக தேர்வு எழுதும் முன்னர் அன்றைய பலன் என்ன என்று ஆர்வமாக பார்ப்போம்.

"அக்கா, இன்று உனக்கு தோல்வி என்று போட்டிருக்கிறார்கள். கோவிந்தா தான்", என்று தங்கை சொன்னதும் நானும் குழம்பி, என் அம்மா, அப்பாவையும் குழப்பி, என் பெற்றோர்களிடம் அர்ச்சனை வாங்கி பள்ளிக்கு சென்றேன். ஆனால், அதில் குறிப்பிட்டது போல தோல்வியை நான் சந்திக்கவில்லை.  காலையில் இப்படி நெகட்டிவான விடயங்களை பார்ப்பதால் என்ன பலன் என்று நினைத்துக் கொள்வேன். வெற்றி, ஜெயம் என்றிருந்தால் மகிழ்ச்சி கொள்வதும். அதே நேரம் பயம், பதட்டம், கவலை, தோல்வி போன்றவை காணப்பட்டால் கவலை கொள்வதும் என்றிருந்தமையால் நாங்கள் இருவரும் ஒரு முடிவெடுத்தோம். 

அது என்ன முடிவென்றால்-இரவு படுக்க போகும் முன்னர் அன்றைய பலன் என்னவென்று பார்ப்பது என்று. பெரும்பாலும் எந்த மாற்றமும் நடைபெற்றிருக்காது. எங்கள் லூசுத்தனத்தினை எண்ணி நாங்கள் சிரித்துக் கொள்வோம். இருந்தாலும் பலன் பார்ப்பது மட்டும் நிற்கவில்லை. சகோதரி அந்தப் பழக்கத்தில் இருந்து மீண்டு விட்டாலும் என்னால் முடியவில்லை. 
வார பலன், மாத பலன், வருட பலன் பார்ப்பதில் நம்பிக்கை இல்லை. ஏனோ அந்த ஒற்றைச் சொல்லில் இருந்த நாள் பலனில் தான் பெரும் ஈர்ப்பு. 

கிட்டத்தட்ட 15 வருடங்களாக பார்க்கிறேன் என்று வைத்துக் கொள்ளூங்கள். போன மாதம் கூட "மறதி" என்றிருந்தது. என் கணவரிடம் வியந்து போய் சொன்னேன். ஏனெனில் அன்று நான் பால் வாங்க மறந்தது உண்மை தான். அவர் என்னை முறைத்தைபடி சொன்னார், வயதானால் மறதி வருவது இயல்பு தான், என்று. எனக்கு  கோபம் வந்தது. காரணம் அவர் சொல்வது போல எனக்கொன்றும் வயதாகிவிடவில்லை. 

போன கிழமை எனக்கு குரு க்கிரமாக உலவுதாக போட்டிருந்தார்கள். எனக்கு அர்த்தம் விளங்கவில்லை. இருந்தாலும் சிரிப்பு வந்தது. குரு எதற்கு க்கிரமாக உலவ வேண்டும்?  என்ன சம்பவம் நடந்தாலும் குருவின் க்கிரம் தான் காரணம் என்று நினைத்தேன். 

ஒரு சம்பவம் சொல்கிறேன், பனி, உறைபனி என்று காலையில் ஒரே பிரச்சினை அன்று. காலையில் வேலைக்கு செல்ல வேண்டும். காரில் ஏறினால் 10 நிமிடங்களில் வேலைக்கு போய்விடலாம். ஆனால், அன்று உறைபனி காரணமாக ட்ராஃபிக். ரோடு முழுவதும் உறைபனி. அப்ப தான் எனக்கு அந்த லூசுத்தனமான ஐடியா ஏற்பட்டது. வலது புறம் ஒரு குட்டி ரோடு. அந்த தெருவில் புகுந்தால் வேலைக்கு நேரத்தோடு போய்விடலாம் என்று கணித்தேன். காரினை திருப்பிய பின்னர் கார் வழுக்கி கொண்டெ சென்றது. ப்ரேக்-ஐ அழுத்துகிறேன், அழுத்துகிறேன், அழுத்துகிறேன்....றேன்... என்ன புண்ணியம் கார் நிற்கவில்லை. அந்த தெருவின் முடிவில் இடது புறம் திரும்ப வேண்டும், ஸ்டியரிங்கை ஒடித்து, இடது புறம் திருப்புகிறேன், எதிரில் ஒரு கார், நான் வேகமாக ஒலி எழுப்பியை அழுத்தினேன், அழுத்தினேன்... அந்த நபர் ஜன்னலை திறந்து கெட்ட வார்த்தையில் திட்டிய பின்னர், கெட்ட சைகை காட்டினான். லூசுப் பயலே, கெட்ட வார்த்தை சொன்ன உன் வாயும், கையும் இப்ப கோவிந்தா ஆகப் போகிறது என்று நினைத்தபடி காரினை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடினேன். ரோட்டில் கொட்டப்பட்டிருந்த உப்பினால் என் கார் ஒரு நிலைக்கு வந்தது. நடுக்கம் மட்டும் குறையவில்லை. குருவின் க்கிரம் தான் காரணம் என்று நினைத்துக் கொண்டேன். 
அப்ப தான் என் தொலைபேசி ஒலித்தது. என் கணவர்  அதே உறைபனியில் வழுக்கிச் சென்று, எதிரில் வந்த காரின் மீது மோதி... அப்ப அவருக்கும் குரு க்கிரமாக உலவுகிறாரோ.....இதனை நான் யாரிடமும் சொல்லவில்லை. சொன்னாலும் லூஸா நீ என்று சிரிப்பார்கள். ஒரே குழப்பமாக இருக்கு. மெதுவாக அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட ஆரம்பித்திருக்கிறேன். இன்று "உறுதி" என்று போட்டிருக்கிறார்கள். கட்டாயம் உறுதியுடன் இருந்து,  மீண்டு விடுவேன்.Sunday, June 15, 2014

ரேவனும் ட்விங்கியும்


வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோஷங்கள்... அதாவது சின்ன சின்ன சந்தோஷங்கள் என்பதன் அளவு கோல் என்ன? சிலருக்கு ஒரு சுற்றுலா சென்று வந்தால் அது ஒரு சின்ன சந்தோஷம். சிலருக்கோ அது ஒரு பொருட்டாக இருக்காது. நினைத்தவுடன் கிளம்பி போகும் அளவுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிலருக்கு ஒரு குண்டூசி வாங்கினால் கூட பெரிய சாதனையாக இருக்கும். எனவே சந்தோஷம் என்பது அவரவர் மனதில் தான் உள்ளது. நேற்று வரை எனக்கும் ட்விங்கி என்ற இனிப்பு பண்டம் ஒரு  பெரிய பொருட்டாக தோன்றவில்லை. காசு கொடுத்தால் வாங்கி சாப்பிடலாம் என்ற அளவில் இருந்தது. ஆனால், நான் பணி செய்யும் இடத்தில் குட்டிப்பெண் ரேவனுக்கு அது ஒரு எட்டாக்கனி. 

ரேவன் - ஐந்து வயதான, அழகான குட்டிப் பெண். ஏறத்தாழ பள்ளி ஆண்டு நிறைவுறும் நேரம் வகுப்பில் புதிதாக இணைந்து கொண்டாள். அவள் பெற்றோர் பற்றி பெரிதாக எந்த விபரங்களூம் எனக்கு ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. அவளும், அவள் தம்பியும் வேறு ஒருவர் பாரமரிப்பில் இருப்பதாக அறிந்தேன். அவளின் பெற்றோருக்கு என்ன ஆச்சு, என்ற விபரம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு எழவில்லை. வெளிநாடுகளில் Foster homes எனப்படும் குடும்பங்கள் நிறைய இருக்கிறார்கள். சிலர் பராமரிக்கும் குழந்தைகளை தத்தெடுப்பதும் உண்டு. சில குழந்தைகள் அடிக்கடி ஒரு குடும்பத்தில் இருந்து வேறு குடும்பம், பின்னர் வேறு குடும்பம் என்று சென்று கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் அன்பிற்காக மிகவும் ஏங்குவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளில் ஒன்று தான் ரேவன். நீலக் கண்கள், தங்க நிறத்தில் மினுங்கும் தலை முடி,  பார்த்தவுடன் ஒட்டிக் கொள்ளும் அழகிய சிரிப்பு என்று என் மனதில் மெதுவாக இடம் பிடித்தாள் ரேவன்.
பள்ளியில் ஒரு நாள்  கேக் walk எனப்படும் ஒரு விளையாட்டு. அதில் வென்றவர்கள் பிஸ்கட் அல்லது ட்விங்கி எனப்படும் ஸ்நாக், இதில் ஒன்றினை சாப்பிடலாம். கண்டிப்பாக ஒருவருக்கு ஒரு தின்பண்டம் தான். ரேவன் ட்விங்கி எடுத்துக் கொண்டாள். அதனை மிகவும் ரசித்து சாப்பிட்டு முடித்தவள் மிச்சம் இருந்த ட்விங்கிகளை ஏக்கமாக பார்த்துக் கொண்டே இருந்தாள்.

மேலதிகமாக ஒரு ட்விங்கி எடுத்தால் காட்டிக் கொடுக்க நிறைய எட்டப்பன்கள் இருக்கும் உலகம் என்பது ரேவனுக்கு தெரிந்திருந்தது. மெதுவாக என்னிடம் வந்தாள்.
"ஹாய்", என்றாள்.
" ஹலோ ரேவன்", இது நான்.
" நான் ஃபாஸ்டர் ஹோமில் இருக்கிறேன். உனக்குத் தெரியுமா?", என்றாள் ரேவன்.
"ம்ம்ம்ம்.. கேள்விப்பட்டேன்", என்றேன் அவள் முகத்தருகே குனிந்து.
" இது என் ஐந்தாவது ஹோம். வாரத்தில் ஒரு நாள் என் அன்னையை பார்ப்பேன்", என்றாள்.
எனக்கு மனம் கனத்துப் போனது. அவளின் அம்மா  ரேவனை அடித்து துன்புறுத்துவதால் தான் இவள் ஃபாஸ்டர் ஹோமில் இருப்பதை பின்னர் அறிந்து கொண்டேன்.
" ரேவன், உனக்கு இந்த ஸ்கூல் பிடிச்சிருக்கா?", என்றேன் பேச்சினை மாற்றும் விதமாக.
"ம்ம்.. இந்த ஸ்கூல் பிறகு அந்த ட்விங்கி எல்லாமே பிடிச்சிருக்கு", என்றாள்.
என்னது ட்விங்கியா?
"ப்ளீஸ் எனக்கு ஒரு ட்விங்கி தருவாயா?", என்று கெஞ்ச ஆரம்பித்தாள் ரேவன்.

என் இயலாமையை எண்ணி வருத்தப்பட்டேன். இவள் ஒருத்திக்கு எப்படி நான்  ட்விங்கி மேலதிகமாக ஒன்று தர முடியும். சுற்றிலும் மாணவர்கள் இருந்தார்கள். சிலர் ட்விங்கி மீதும், வேறு சிலர் பிஸ்கட் மீதும் வைத்த கண்கள் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
ரேவனின் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன்.
என் இயலாமையை எண்ணி நொந்து கொண்டேன். அவள் கண்களை பார்க்கும் தைரியம் இல்லாமல் வேறு எங்கோ பார்த்தபடி,  ஒருவருக்கு ஒரு தின்பண்டம் தான், என்று மெல்லிய குரலில் சொன்னேன். அதன் பிறகு அவள் பேசவில்லை. என் பக்கத்தில் இருந்து நகரவும் இல்லை. நான் எப்படியாவது அவளுக்கு ஒரு ட்விங்கியாவது தந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் இருந்தாளா, என்றும்  புலப்படவில்லை. 
அன்றிரவு எனக்கு தூக்கம் வரவில்லை. கண்களை மூடினால் ரேவனும், ட்விங்கியும் தான் தெரிந்தார்கள். மறுநாள் கூட வேலை செய்யும் ஆசிரியையிடம் சொன்னேன்.
முதல் பிரச்சினை, ரேவனுக்கு மட்டும் ட்விங்கி கொடுத்து மற்றவர்களுக்கு எப்படி கொடுக்காமல் விடுவது, என்றார் ஆசிரியை. அதுவும் சரிதான். எது எப்படியோ நான் கட்டாயம் ரேவனுக்கு ட்விங்கி கொடுத்தே ஆக வேண்டும். அதே நேரம் வளர்ப்பு பெற்றோரின் மனமும் கஸ்டப்படக்கூடாது. நாங்கள் என்ன ட்விங்கி வாங்க கூட வசதி, வக்கில்லாத குடும்பமா?, என்று அவர்கள் நினைத்தால். 
*******
நான் பெட்டியில் இருந்த ட்விங்கிகளை ஒரு ஷாப்பிங் பையில் போட்டுக் கொண்டேன். யாருக்கும் பையில் என்ன இருக்கு என்று தெரிய வாய்ப்பில்லை அல்லவா? 
ரேவனின் வளர்ப்பு தாயார் வந்ததும் ரேவன் துள்ளிக் குதித்து ஓடிவந்தாள். 
அவளிடம் அந்தப் பையினை நீட்டினேன். புதிராகப் பார்த்தாள்.
" ரேவன் டார்லிங், உள்ளே என்ன இருக்கு என்று பார்", என்றேன்.
அவள் கண்கள் ஆச்சர்யத்தினால் விரிந்தது.
" ரேவன், அன்று கேக் walk  விளையாடினோம் அல்லவா? அன்று மீந்து போன ட்விங்கிகள் தான் இவை", என்றேன். 
" அன்று எதுவும் மிஞ்ச...", என்று அவள் முடிக்கும் முன்னர் நான் முந்திக் கொண்டேன். எவ்வளவு கவனமாக அவதானித்திருக்கிறாள். மெதுவாக கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டேன். கண்களை சிமிட்டி விட்டு நகர்ந்தாள். அந்த கண் சிமிட்டலின் அர்த்தம் என்ன? எனக்கு எல்லாம் தெரியும் என்கிறாளா?

( இது ஒரு உண்மைக் கதை. இதில் வரும் ரேவன், ட்விங்கி(!) எல்லாமே உண்மைக் கதாபாத்திரங்களே! )

Saturday, June 14, 2014

அம்மாவின் புருஷன்


தூரத்தில் எங்கோ குண்டுகள் விழும் சத்தம் கேட்டது.
அந்தக் குண்டுகளில் ஒன்று என் தலையில்...இல்லை இல்லை என் அம்மாவின் புருஷன் தலையில் விழுந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ராகவி நினைத்துக் கொண்டாள்.
அம்மாவின் புருஷன் என்கிற நபர் அம்மாவின் இரண்டாவது கணவர். ராகவியின் அப்பா இறந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது. அவர் குண்டு துளைத்து இறந்த பிறகு நிற்கதியாக நின்ற குடும்பத்தை காப்பாற்ற அம்மா மிகவும் கஷ்டப்பட்டார். அம்மாவின் வருமானம் பத்தவில்லை. அதோடு இடைக்கிடை இடம்பெயர வேண்டிய கட்டாயம். எல்லாவற்றையும் அள்ளிக் கட்டிக் கொண்டு கிளம்ப வேண்டி இருக்கும். ஒரு மாதம் அல்லது 2 மாதங்கள் கழித்து மீண்டும் வீட்டிற்கு வந்தாலும் எதுவும் நிரந்தரமாக இருக்கவில்லை. அம்மாவின் தோசை வியாபாரமும் படுத்துக் கொண்டது. அம்மா மளிகைப் பொருட்கள் வாடிக்கையாக வாங்கும் கடையின் உரிமையாளர் தான் சந்திரன். அந்த சந்திரன் தான் பின்னர் அம்மாவின் புருஷன் ஆனான்.
ராகவிக்கு அவனை எப்போதும் பிடிப்பதில்லை. ஏதோ ஒரு வகையான, வெளியே சொல்லக் கூடாத  அல்லது சொல்ல முடியாத  உறவாகிப் போனது. இரவு வந்தாலே பயந்து நடுங்க தொடங்கினாள் ராகவி. அப்பா மகள் என்ற உறவு இல்லாமல் போனது. இவன் என் அம்மாவுக்கு புருஷனா அல்லது... ராகவியின் பிறகு இரண்டு தங்கைகள். இவளை விட அழகாக இருப்பார்கள்.
அரசாங்கத்தின் பழி வாங்கும் மின்சார நிறுத்தம் அவனுக்கு சாதகமாகிப் போனது. யாரிடம் முறையிட, என்ன சொல்லி முறையிட என்று எதுவும் விளங்கவில்லை ராகவிக்கு. கொல்லைப் புறம் போய் அங்கிருந்த பெரிய மரத்தின் குச்சிகளை ஒடித்து அதை ஒரு மூளையில் சேர்த்து தன் ஆத்திரத்தினை அந்த மரத்தின் மீதும், அதன் கிளைகள் மீதும் காட்ட ஆரம்பித்தாள். மரம் நோஞ்சானாகி ஒரு நாள் பட்டுப் போய்விட்டது. இந்த மரம் போல நானும் மரித்து விட்டால்... நேற்று இருந்த மரம் இன்றில்லை. அதே போல நானும் நாளையே இறந்துவிட்டால். இல்லவே இல்லை. கூடாது. அந்த மிருகம் என் தங்கைகளை தின்ன ஆரம்பித்துவிடும்.
இவளின் கெஞ்சல்கள் இறைவன் காதில் விழுந்ததோ தெரியவில்லை ஆனால், இலங்கை விமான ஓட்டியின் காதில் விழுந்திருக்க வேண்டும். அம்மாவின் புருஷன் கடைக்கு பொருள் வாங்கச் சென்ற போது விமானத்தில் இருந்து விழுந்த குண்டினால் இவனின் இரண்டு கால்களும் போய்...அதன் பிறகு ஒரு ஆறு மாதங்கள் அவன் தொந்தரவு அறவே நின்று போனது. அவன் செத்து விடுவானா? அல்லது பிழைப்பானா என்று எல்லோரும் காத்திருக்க அவன் பிழைத்து வந்தே விட்டான்.

அதன் பிறகு அவன் ஊன்று கோல் உதவியால் நடை பழகி, இயல்பு வாழ்க்கைக்கு  திரும்ப பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், வேலைக்கு போகாமல் வீட்டிலே இருக்க ஆரம்பித்தான். முன்பு பகலில்  தொல்லை இல்லாமல் இருந்தது. இப்ப பகலிலும் தொல்லை. அம்மா கடையை கவனிக்க சென்றுவிட, ராகவிக்கு தங்கைகள், அம்மாவின் புருஷனை கவனிக்கும் பொறுப்பு. அவன் கிட்ட வந்தால் அவனின் ஊன்று கோலினை இடறி அவனைத் தடுமாற வைத்தாள். அவன் இன்னும் மூர்க்கமாகிப் போனான்.


மாசத்தில் ஒரு நாள் டவுனில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று வருவான் சந்திரன்.  யார் துணையும் இல்லாமல்  தனியாளாகவே செல்வான். அதுவும் ஒரு வகையில் நன்மைக்கே என்று  ராகவி நினைத்துக் கொள்வாள். பின் வரும் நாட்களில் இந்த ஆஸ்பத்திரி விடயமே அவனுக்கு எமனாக மாறும் என்று சந்திரன் கனவிலும் நினைத்திருக்க மாட்டான்.
அன்று வழக்கம் போல விடிந்தது. அம்மா கடைக்கு செல்ல ஆயத்தம் ஆனார்கள். அம்மாவின் புருஷன் அன்று ஆஸ்பத்திரிக்கு செல்லும் நாள். ஏனோ தெரியவில்லை சோம்பிக் கிடந்தான். அம்மா அவனின் வழிச் செலவுக்கு காசு கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். கடை கூப்பிடும் தொலைவில் இல்லை. கிட்டத்தட்ட  10 மைல்கள் தொலைவில் இருந்தது.
அம்மா சென்ற பின்னர் ராகவி சமையல் செய்ய ஆரம்பித்தாள்.

அம்மாவின் புருஷன் ஏனோ சுரத்து இல்லாமல் இருந்தான். எழுந்து ராகவியின் அருகில் வந்தவன்  குண்டு வீச்சு விமானங்களின் இரைச்சல் சத்தம் கேட்டதும் கொஞ்சம் தயங்கி நின்றான். என்ன செய்வது என்று யோசனை செய்தான்? ராகவியின் அருகில் தவழ்ந்து வரும் போது ஊன்று கோலினை மறந்துவிட்ட தன் மடத் தனத்தினை எண்ணி நொந்து கொண்டான். இப்ப என்ன ஆச்சு? என் ஊன்று கோலினை எடுத்தால் பிரச்சினை முடிந்தது, என்று எண்ணியவாறே கட்டிலின் பக்கம் வேகமாக தவழ ஆரம்பித்தான். அங்கு ஊன்று கோல்களைக் காணவில்லை.
*******
ராகவி தன் இரு தங்கைகளை அழைத்துக் கொண்டு வேகமாக ஓடினாள். வழியில் அம்மாவின் கடை.
"ராகவி, அப்பா எங்கே?", என்றாள் அம்மா.
"ம்ம்ம்ம்... இன்று அவர் ஆஸ்பத்திரி செல்லும் நாள் மறந்துவிட்டதா?", என்றாள்.
வரும் போது அவனின் ஊன்று கோல்களை பலங்கொண்ட மட்டும் பனை மரத்தில் அடித்து நொறுக்கி, அவை உடையாமல் போக அருகில் இருந்த பாழும் கிணத்தில் மறக்காமல் கல்லைக் கட்டி எறிந்துவிட்டுத் தான் வந்தாள். அவள் இருந்த வீட்டுப் பக்கம் குண்டு வீச்சு விமானங்கள் ஆக்ரோசமாக குண்டுகள் வீசிக் கொண்டிருந்தன. சில நிமிடங்கள் நின்று பார்த்தவள் தன் தங்கைகளை அணைத்த வண்ணம் வேகமாக எதிர் திசையில் ஓட ஆரம்பித்தாள்.

Saturday, May 17, 2014

என் சோக கதையை கேளு


ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல ஒரு பிரச்சினை என்று வந்துவிட்டால் இரண்டு பக்க நியாயத்தையும் கேட்பது தான் நியாயம் அல்லவா?
என்னை இப்படி மரண அடி அடித்தது அந்தம்மாவுக்கு சரியாக இருந்தாலும் என் தரப்பு கதையினையும் உங்களுக்கு கட்டாயம் சொல்கிறேன். என் பெயர்.... ம்...எனக்கு யார் பெயர் வைச்சா? என் குலத்தினை ராட்டில் ஸ்நேக் என்பார்கள். அதாவது என் வாலில் சின்ன குழந்தைகள் கைகளில் இருக்கும் கிலு கிலுப்பான் போல சத்தம் எழுவதால் அந்தப் பெயர். எங்கள் இனம் வடமெரிக்காவில் பல காலமாக வாழ்ந்து வருகிறோம். பெரும்பாலும் நாங்கள் உண்டு, எங்கள் வேலை உண்டு என்று இருந்துவிடுவோம். யாராவது அருகில் வந்தால் ஸ்ஸ்ஸ்ஸ்..என்று சத்தம் மட்டும் எழுப்புவோம். மற்றும்படி அந்த நபரை தீண்ட, கொலை செய்ய கனவிலும் நினைப்பதில்லை.
நான், என் குடும்பம் இருப்பது ஒரு பார்க்கில். அதாவது எங்களுக்கு சொந்தமான இடம். அதில் கொஞ்ச இடத்தில் மரங்களை வெட்டி, அதில்  பிள்ளைகள் விளையாட்டு மைதானம் அமைத்து இருந்தார்கள். இது தவிர ஒரு பாதை. பைக் பாத் என்பார்கள். இந்த பைக்கில்/சைக்கிளில் போகும் ஆசாமிகளால் எந்த ஆபத்தும் வந்ததில்லை. ஆனால், பாருங்கள் இந்த குட்டிப்பட்டாளம் தான் எங்களுக்கு எமன்.

நான் பெரும்பாலும் எலி, பெருச்சாளி, முயல் இப்படி அகப்பட்டதை தின்றுவிட்டு படுத்துவிடுவேன். ஒரு நாள் ஒரு பெருச்சாளியை விரட்டிக் கொண்டு விளையாட்டு மைதானத்துக்கு போய் விட்டேன். எனக்கு இரை கிடைக்கவில்லை. அந்த நேரம் ஒரு குடும்பம்.. அதாவது ஆண், பெண், மூன்று பிள்ளைகள் வந்தார்கள். நான் தரையோடு தரையாக ஒன்றிக் கொண்டேன். அவர்கள் என்னைக் கவனிக்கவில்லை. நான் ஒளிந்திருந்த பக்கம் ஒரு குட்டி வர, நான் டென்ஷன் ஆனேன். என்கிலுகிலுப்பான் மூலம் ஒளி எழுப்பினேன். அந்தக் குட்டி இன்னும் கிட்ட வர, என் கோபம் தலைக்கேறியது. அப்ப தான் 'படார்" என்று ஒரு அடி என் தலையில் விழுந்தது. திரும்பி பார்த்தால் அந்தம்மா ஒரு தடியோடு நிற்கிறார். எனக்கு தலையினை தூக்க கூட முடியவில்லை. வாலில் இருந்து வரும் சத்தம் மட்டும் நிற்கவில்லை. அந்தம்மாவின் கோபம் இன்னும் அதிகமானது.
" உனக்கு என்ன திமிர்?", என்றார்.
"ஞே ஞே ...", இது நான்.
" இங்கே இருந்து ஓடிப் போயிரு", அந்தம்மா.
அசையவே முடியவில்லை. எங்கே ஓடிப் போறது. இந்த வால் சனியன் வேறு அனிச்சையாக ஆடி, சத்தம் எழுப்பி அந்தம்மாவின் கோபத்தினை அதிகரித்தது. வாலினை என் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து தோற்றுப் போனேன்.


" நீ அந்த குடும்பத்தின் ஏஜன்ட்டா?", என்றார் அந்தம்மா.
எந்தக் குடும்பம்? எனக்கு எதுவும் விளங்கவில்லை. இப்போதைக்கு செத்த பாம்பு போல கிடப்பது தான் விவேகம் என்று முடிவுக்கு வந்தேன். செத்த பாம்பினை அடிக்க அந்தம்மா என்ன லூஸா? அந்தம்மா ஒரு பத்தடி தள்ளி நின்றது மங்கலாகத் தெரிந்தது.. அப்ப தான் அந்தம்மா சொன்னார்கள், அவர் இந்தியாவில் இருந்த போது அவர் அப்பா ஒரு நாக பாம்பினை அடித்துக் கொன்றுவிட்டார்களாம். பக்கத்து வீட்டில் சொன்னார்களாம், உங்க குடும்பமே நாக தோஷத்திற்கு உள்ளாகியுள்ளது ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும், என்று. என் அப்பா செய்யவில்லை. அதனால் தான் அந்த தோஷம் அமெரிக்கா வந்தும் கழியவில்லை என்று.
அட! பதர்களா,  அது தான் ஏஜன்ட் என்று சொன்னார்களா?. இப்ப என் நினைவு மங்கத் தொடங்கியது. என் கணவர், பிள்ளைகள் நினைவில் வந்து போனார்கள். என் மகள் மாசமாக இருக்கிறாள். அவளின் பிள்ளையை பார்க்காமல் என் கட்டை வேகாது. அந்தம்மா இப்ப வீர வசனம் பேசி முடிந்து காரில் ஏறி போனது மங்கலாக தெரிந்தது.
நீங்கள் என் தரப்பு கதையினை கேட்டு விட்டீர்கள் அல்லவா? இப்ப யார் பக்கம் நியாயம் என்று.. இருங்கள் நீங்கள் உங்கள் மனிதர்களை தான் ஆதரிப்பீர்கள். இது கூட  தெரியாத வெங்காயமாக இருக்கிறேன்.  ஏதோ சத்தம் கேட்கிறது. சிறுவர்கள் இந்தப் பக்கம் வருகிறார்கள் போல. நான் போய் ஒளிந்து கொள்கிறேன்.

Sunday, May 11, 2014

என் அம்மா


அன்னையர் தினம். இந்த தினத்தில் என் அம்மாவை பற்றி கட்டாயம் எழுதியே ஆக வேண்டும் என்று நினைத்தேன். என் அம்மா மிகவும் மன உறுதி மிக்கவர். மன உறுதி என்றால் மலையே பெயர்ந்து வந்தாலும் கவலைப்படமாட்டார். என்ன மலை தானே, என்று சொல்வார். மலை மீது ஏறிச் செல்லும் மன தைரியம் மிக்கவர். இரண்டு சம்பவங்கள் இங்கே கட்டாயம் சொல்கிறேன்.

1984, ஜூலை மாதம், இலங்கையில் நடைபெற்ற கலவரத்தில், 24 மணி நேரத்தில் எங்கள் உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். அதாவது மாற்றுத்துணி கூட இருக்கவில்லை. என் அம்மா அழுது புலம்பவில்லை. போன பொருட்கள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அக்கம் பக்கம் கொடுத்த துணிகள், சாப்பாடுகள் தான் எங்கள் உயிர்காத்தன. அதன் பிறகு யாழ்பாணம் சென்றோம். என் தந்தை எதிர்பாராத விதமாக அரசாங்க வேலையை விடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

அம்மா அப்பாவிடம் சொன்னார், நீங்கள் வேலையை விட்டு விட்டேன் என்று ஒரு நாளும் கவலைப்படத் தேவையில்லை. கடவுள் கொடுத்த கைகள், கால்கள் இருக்கின்றன. நாங்கள் இருவரும் எங்கள் தோட்டத்தில் கஷ்டப்படுவோம். வரும் வருமானத்தில் குடும்பம் நடத்த பழகுவோம். ஆடம்பரம், படாடோபம் எதுவும் வேண்டாம், என்று சொன்னவர் ஆடுகள், மாடுகள், கோழி, காய்கறி தோட்டம், தென்னை, மா, வாழை, கீரை என்று தோட்டம் அமைத்து, இரவும் பகலும் பாடுபட்டார்கள். தோட்டத்தில் வரும் வருமானத்தில் சிக்கனமாக செலவு செய்வார். பட்டுப் புடவை, நகை என்று ஒரு நாளும் வாங்கியதில்லை.


எங்களுக்கும் தேவையான உணவுகள் செய்து கொடுப்பார்கள். ஆனால், உடை விடயத்தில் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தான் எடுத்து கொடுப்பார்கள். பெரும்பாலும் அம்மாவே துணி எடுத்து தைத்துவிடுவார்கள். மற்ற மாணவிகள் போல ஸ்டைலாக அணிய வேண்டும் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை. ஏதோ கிடைத்ததை உடுத்தப் பழகிக் கொண்டோம்.
1987ல் மீண்டும் பிரச்சினைகள். வட்டமிட்ட குண்டு வீச்சு விமானங்களால் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை. ஆடுகள், மாடுகள் எல்லாவற்றினையும் கட்டிப் போட்டால் அவை இறந்து விடும் என்பதால் கட்டுக்களை அவிழ்த்து விட்டோம். எங்கள் வீட்டில் தொடர்ச்சியாக விழுந்த 4 குண்டுகளால் சில இறந்து போயின. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து வீடு திரும்பிய போது ஒரு சுடுகாடு போல காட்சி தந்தது. எங்கும் குண்டு துளைத்த அடையாளங்கள். என் அம்மாவின் முகத்தினை பார்க்கிறேன். எந்த விதமான மாற்றமும் இல்லை.

என் அம்மா சொன்னார்கள், எங்கள் வீட்டினை மட்டும் இவர்களால் அழிக்க முடிந்தது. எங்களை, எங்கள் மன உறுதியினை இவர்களால் அழிக்க முடியாது. நாங்கள்  மீண்டு வருவோம், என்றார். எனக்கு அப்போது விளங்கவில்லை. எப்படி மீளப் போகிறோம். மீளவே முடியாத அடி அல்லவா?. காய்கறி தோட்டம் எல்லாமே நாசமாகி இருந்தது. ஆடுகள், மாடுகள் எல்லாமே இறந்து போய்விட்டன அல்லது காணாமல் போய்விட்டன.
ஒரு நாள் நாங்கள் எங்கள் உறவினர் வீட்டுக்கு போகும் வழியில், ஒரு மாடு எங்களை உற்றுப் பார்த்த வண்ணம் நின்றது. பின்னர் பெருங்குரலில் அம்மா, அம்மா என்று கத்தியவாறு எங்களை நோக்கி ஓடி வந்தது. கூடவே ஒரு கன்றும். அது நாங்கள் வளர்த்த கமலம் என்ற பசு. அதன் கண்களில் இருந்து கண்ணீர் சொறிகின்றது. என் அம்மா அழுகிறார். அதனை கட்டிப் பிடித்து ஆரத் தழுவுகிறார். இரண்டு தடவை வீடு, உடமைகள் இழந்த போது கலங்காதவர் இப்ப பாசமாக வளர்த்த பசுவைக் கண்டதும் கண்ணீர் விட்டு தேம்பி அழுதார். எனக்கு எதுவும் விளங்கவில்லை. அதன் பிறகு அந்த பசுவும், கன்றும் அம்மாவை ஒட்டியபடியே  நடந்து வீடு வந்து சேர்ந்தார்கள். வரும் வழி நெடுகவும் அம்மா பசு, கன்று பற்றியே பெருமை பேசிய வண்ணம் வந்தார். ஊர் பூராவும் சொல்லிவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். அவ்வளவு மகிழ்ச்சி அவர்கள் முகத்தில். மீண்டும் அந்த பசு மூலம் கொஞ்சம் வாழ்க்கை சுமாராக போனது. எங்கள் மன உறுதியை இவர்களால் அழிக்க முடியாது என்று சொன்னதன் அர்த்தம் இது தானோ?

அதன் பிறகு இந்தியா, கனடா என்று இடம்பெயர்ந்து விட்டாலும் என் அம்மாவின் மன உறுதி இன்னும் கொஞ்சம் கூட குறையாமல் இருக்கிறது. அறுபது வயதிலும் உடற்பயிற்சிகள் செய்வார் என் அம்மா. ஒரு நாளும் மனம் உடைந்து போய் இருந்ததில்லை. அந்த மன உறுதியில் பாதியாவது எனக்கு இருந்தால் இமய மலையினையே தாவி குதித்து விடுவேன். என் அம்மாவைப் பற்றி என் பிள்ளைகளுக்கு அடிக்கடி சொல்வேன். அவர்களாவது என் அம்மா போல் வளரட்டும் என்பது என் ஆசை.


Saturday, May 3, 2014

சாம்புவின் செல்லம்


சாம்புக்கு டென்ஷனாக இருந்தது. அட எனக்கு அப்படி என்ன டென்ஷன் என்று நீங்கள் நக்கலாக/சீரியஸாக நினைக்கலாம். கோயிலில் என் காதின் பக்கத்தில் இரைந்து கொண்டிருந்த லவுட் ஸ்பீக்கர், மேடையில் ஆடிய பெண்கள், நாடகம், பட்டிமன்றம், இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் எல்லோரும் அரட்டை அடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க, எனக்கு எரிச்சல் வந்தது. ஒன்றில் கை தட்டுங்கள் அல்லது மவுனமாக இருந்து தொலையுங்கள். உங்களுக்காக ஒரு கூட்டமே மேடையில் நின்று உயிரைக் கொடுத்து கத்திக் கொண்டிருக்க என்ன ஒரு அடாவடித்தனம் செய்கிறீர்கள்.
என் செல்லம் வீட்டில் என்னத்தை தின்னுச்சோ தெரியவில்லை. அம்மாவிடம் ஏற்கனவே 13 தரம் வீட்டுக்கு போகலாமா என்று கேட்டு, அவரின் முறைப்பினை பொருட்படுத்தாமல் மீண்டும் இரண்டு தரம் கேட்டு திட்டு வாங்கி, கதிரையில் முடங்கி கொண்டேன். ஏதோ பாட்டு கச்சேரி இருக்காம் அது முடியத் தான் வீட்டுக்கு போவது என்று அம்மா கண்டிப்பாக சொல்லிவிட்டார்கள். இன்னொரு முறை கேட்டால் அம்மா கச்சேரியை ஆரம்பித்து விடுவார்கள் என்று பேசாமல் இருந்தேன். தங்கையை மெதுவாக கிள்ளிவிட்டேன். தங்கை பெருங்குரலில் அழ ஆரம்பிக்க, இப்ப கூட்டத்தில் எங்கோ தலைமறைவாக இருந்த என் அப்பா ஓடி வந்து தங்கையை தூக்கிக் கொண்டார். அப்பா வெளியே செல்ல நானும் அவருடன் இணைந்து கொண்டேன்.

வெளியே வந்த பிறகு என்னால் நிம்மதியாக யோசிக்க முடிந்தது. என் செல்லம் இப்ப என்ன செய்யும் வீட்டில். சாப்பிட்டிருக்குமா? அல்லது தப்பி ஓடி இருக்குமா? சே சே தப்பி ஓடாமல் ஒரு பெட்டியில் வைத்து மூடி, ஒரு பிளாஷ்டிக் பெட்டியை கவிழ்த்து வைத்துவிட்டுத் தானே வந்தேன். வரும் முன்னர் பென் & ஜெரிஸ் ஐஸ்கிரீம் ஒரு சட்டியில் வைத்து விட்டுத் தானே வந்தேன். அதை சாப்பிட்டுருக்குமா? அல்லது அதில் விழுந்து உயிரை விட்டிருக்குமா தெரியவில்லை.
"அப்பா, வீட்டுக்கு போகலாமா", என்றேன்.
"சாம்பு, அம்மா வந்ததும் போகலாம் சரியா?", என்றார்.
காரினுள் போய் அமர்ந்து கொண்டோம்.
சூரிய ஒளி கண்களை கூச எழுந்து அமர்ந்து கொண்டேன். எப்ப கோயிலில் இருந்து வந்தோம், எப்படி கட்டிலில் படுத்தேன்...இருங்கள் என் செல்லம்.. கட்டிலுக்கு கீழே குனிந்து பார்த்தேன். தெளிவான பிளாஷ்டிக் மூடி வழியாக பார்க்க முடிந்தது. என் செல்லம் ஐஸ்கிரீமை சீண்டக் கூட இல்லை. ஒரு ஓரமாக படுத்துக் கிடந்தது. ஒரு வேளை இறந்து விட்டதோ?  விரலால் மெதுவாக தடவிக் கொடுத்தேன்.


அசைவு தெரிந்தது. என் செல்லம் கடந்த திங்கள்கிழமை தான் என் செல்லப் பிராணியாக மாறினான். இல்லை இல்லை மாற்றப்பட்டான். அதாவது வேறு வழி இல்லாமல் என் செல்லப்பிராணியாக இருக்கிறான்.
புத்தகத்தில் குறிப்பிட்டது போல திங்கள் கிழமை ஒரு ஆப்பிள், செவ்வாய் கிழமை இரண்டு ப்ளம்...இவை எதையும் அவன் சீண்டவே இல்லை. பட்டினி கிடக்கிறான். எனவே புதன்கிழமை அவனுக்கு ஐஸ்கிரீம் கொடுத்தேன். அதையும் திரும்பி கூட பார்க்கவில்லை. ஒரு வேளை சீஸ் கேக், கப் கேக் சாப்பிடுமா தெரியவில்லை. அம்மாவிடம் கப் கேக் கேட்டால் என்ன என்று நினைத்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். பிறகு என் செல்லப் பிராணியை தூக்கி எறிந்து விடுவார்கள். அம்மா, அப்பா இருவருக்கும் என் செல்லப் பிராணி வளர்ப்பு பற்றித் தெரியாது. உங்களுக்கு மட்டும் தான் சொல்கிறேன்.
ஒரு வேளை கூகிளில் ஏதாவது பதில் கிடைக்குமா? அட! என் செல்லப் பிராணி தோட்டத்தில் தானாக அலைந்து திரிந்து இலை, தழை இப்படி ஏதாவது சாப்பிடுமாம். அவை கட்டாயமாக தோட்டத்தில் தான் இருக்க வேண்டுமாம். அப்ப தான் அது ஒரு நாள் அழகிய வண்னத்துபூச்சியாக மாறுமாம். என் செல்லத்தை மெதுவாக கையில் எடுத்துக் கொண்டேன். பச்சைக் கலரில் பட்டுப் போல இருந்தது. மெதுவாக தோட்டத்தில் கொண்டு போய் விட்டேன். திரும்பி கூட பாராமல் போய்விட்டது. அப்ப புத்தகத்தில் இருந்த தகவல்கள் பொய்யா?  The very Hungry Caterpillar என்ற புத்தகத்தில் இருந்த தகவல்கள் உண்மையில்லையா?. ஒரு இலையில் ஒரு முட்டை. அதில் இருந்து வந்த காட்டர்பில்லர். அதற்கு அகோரப் பசி. திங்கள்- ஒரு ஆப்பிள், செவ்வாய் 2 ப்ளம்ஸ்.... வெள்ளி 5 ஆரஞ்சு, சனிக் கிழமை அதன் மெனு பெரிசு. கப் கேக், சீஸ் கேக், செரி பை, சீஸ்.... இப்படி ஏகப்பட்டதை நொறுக்கிவிட்டு வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டு, ஞாயிற்றுக் கிழமை ஒரு பெரிய இலையை சாப்பிட்டு, தன்னைச் சுற்றி ஒரு கூட்டினை உருவாக்கி, அதில் 2 கிழமைகள் இருந்து ஒரு அழகிய வண்ணத்துப்பூச்சியாக வெளிவருகிறது. இது தான் லீசா சொன்ன கதை. அது Fiction என்று என் ஆசிரியை லீசா சொன்னதன் அர்த்தம் இப்ப எனக்கு உறைத்தது.  தினமும் என் செல்லத்தை தேடுகிறேன். காணவில்லை. அழகிய மலரில் ஒரு வண்ணத்துப்பூச்சி அமர்ந்து தேன் குடித்துவிட்டு பறந்தது. அது தான் என் செல்லமாக இருக்கும். அதை விரட்டிக் கொண்டு ஓடினேன். அது கைகளில் அகப்படாமல் ஓடி மறைந்தது.
இப்ப வெள்ளை, மஞ்சள், ப்ரவுன், இப்படி பல வர்ண நிறங்களில், பல திசைகளிலும் இருந்து வந்த வண்ணம் இருந்தன. இதில் எது என் செல்லம் என்று தெரியாமல் குழம்பி நின்றேன். ஒரு வேளை ஒரு பெயர் சூட்டியிருந்தால் கூப்பிட்டதும் வந்து நிற்குமோ?
Saturday, April 12, 2014

எனக்கில்லையா?எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட மலர்செண்டுகள் என்னைப் பார்த்து கேலியாக சிரித்தது போல இருந்தது. எனக்கு மட்டும் ஏன் மலர்கொத்து கொடுக்கப்படவில்லை. ஒரு வேளை அதற்கான தகுதி எனக்கில்லையோ? இல்லாவிட்டால் நான் அவர்களின் நண்பர்கள் குழுவில் இல்லையோ?  சரி. இப்ப என்ன ஆச்சு? இந்த வாடிப் போகும் மலருக்காக நான் என் வேலையைக் கூட கவனிக்காமல் ஆளாய் பறக்கிறேன். இனிமேல் கவலைப்பட போவதில்லை. 
என்ன இருந்தாலும் லீசா அப்படி செய்தது சரியில்லை. நான் எங்கு போனாலும் இவர்களுக்கும் சேர்த்து அன்பளிப்பு பொருட்கள் வாங்கி, அதை அவர்களுக்கு கொடுக்கும் போது அவர்களின் முகங்களில் ஏற்படும் சந்தோஷத்தினைக் கண்டு உவகை கொண்டு... ஒரு வேளை நான் தான் இவர்களை நண்பிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேனோ? என்ன இந்த மலர்செண்டு ஒரு ஐந்து டாலர்கள் இருக்குமோ? இன்று வீட்டுக்கு போகும் முன்னர் சூப்பர் மார்க்கெட் போய் நான்கு மலர்செண்டுகள் வாங்கினால் தான் என் கோபம் அடங்கும் போலிருந்தது. வாங்குவது மட்டும் அல்ல. ஒரு கொத்து மலரினை இங்கே கொண்டு வந்து, ஒரு ஜாடியில் தண்ணீர் நிரப்பி, அந்த மலர்செண்டினை அதில் வைக்காவிட்டால் என் பெயர் நிலா அல்ல. 
" நிலா, என்ன யோசனை?", என்றபடி வந்த நாடலி  முகத்தினை பார்க்க பிடிக்காமல் வேறு பக்கம் பார்வையினை திருப்பிக் கொண்டேன்.
" என்னவோ போ நிலா. இன்று நான் இருந்த பக்கம் கூட நீ வரவில்லை. நேரம் கிடைத்தால் வா. எனக்கு ஒரு முக்கியமான பேப்பர் நீ காப்பி பண்ணி தர வேண்டும்", என்று விட்டு என் பதிலுக்கு காத்திருக்காமல் சென்ற நாடலி மீது கோபம் வந்தது.
ம்ம்ம்ம்... போ..போ.. நான் வரப் போவதில்லை. குளமான என் கண்களை மெதுவாக துடைத்துக் கொண்டேன்.
ஒரு முக்கிய விடயமாக நிக்கோல் அறைக்கு செல்ல நேர்ந்தது. அங்கு லீசா அன்பளிப்பாக கொடுத்த மலர்செண்டு  தண்ணீர் ஜாடியில் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருந்தது. " நிலா, ஃப்ளவர்ஸ் சூப்பரா இருக்கில்லை?. இது லீசா எங்கள் மூவருக்கும் ஆளுக்கு ஒன்றாக வாங்கி வந்திருந்தா. ஜாக்கி  அறையில் ஒன்று, நாடலி அறையில் ஒன்று.. வாவ்! எவ்வளவு அழகு பார்", என்ற நிக்கோலை எரித்துவிடுவது போல பார்த்தேன்.
" எங்கள் ஊரில் செத்தவர்களுக்கு தான் மலர் கொண்டு போய் சாத்துவார்கள்", என்று கடுப்புடன் நினைத்துக் கொண்டே, வாய் வரை வந்த வார்த்தைகளை முழுங்கி கொண்டேன்.
" நிலா, என்னாச்சு? ", என்றாள் நிக்கோல். 
" ஒன்றும் இல்லை", என்றபடி விரைவாக நகர்ந்தேன். நல்லவேளை வார்த்தைகளை அவசரப்பட்டு கொட்டவில்லை. இனிமேல் வாயே திறக்கப்போவதில்லை. அன்று செய்ய வேண்டிய வேலைகளில் பிஸியாக இருந்தாலும், அந்த மலர்ச்செண்டு மட்டுமே மனம் முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது.
நான் இப்படி இருக்க காரணம் மலர்செண்டா அல்லது அவர்கள் நண்பிகள் குழுவில் நான் இல்லை என்கிற காரணமா? அவர்கள் எல்லோரும் அமெரிக்கர்கள். நான் ஆசியாவில், சபிக்கப்பட்ட இலங்கையில் பிறந்து, என் இருபதுகளின் நடுப்பகுதி வரை சொந்த நாடு, வீடு இல்லாமல் சுற்றித் திரிந்து, கடைசியில் என் கணவரை மணந்து, குடியுரிமை பெற்று, என் மகள் பள்ளி போகத் தொடங்கியதும், நானும் வாலண்டியராக வேலை பார்த்து, என் சுறுசுறுப்பினை பார்த்து பள்ளியிலேயே வேலை கொடுத்தார்கள். லீசாவை கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் தெரியும். ஆரம்பத்தில் இருந்தே  கூடப் பிறக்காத சகோதரி போல எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வோம். 

இனிமேல் லீசா என் சகோதரி இல்லை. சகோதரி என்ன? நண்பி லிஸ்டில் கூட அவரில்லை.  டீச்சர்ஸ் லவுஞ்சில் போய் அமர்ந்து கொண்டேன். என் செல் போனை எடுத்து, என் கணவரின் எண்களை அழுத்தினேன்.
" நிலா", என்று என்னவரின் குரல் கேட்டதும், அழுகை கரை புரண்டு ஓடியது.
" லீசா எனக்கு மலர்ச்செண்டு கொடுக்கவில்லை. நான் அதற்கு கூட தகுதி அற்றவளா?", என்று கூறிய என்னை இடைமறித்தார்.
" வெயிட். வெயிட். லீசா மலர்ச்செண்டு கொடுக்கவில்லை. இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா?. இன்று வேலையால் வரும்போது நான் வாங்கிவருகிறேன். சரியா?", என்று போனை வைத்துவிட்டார் கணவர்.
அழுகையுடன் மேசையில் தலை கவிழ்ந்தேன். 
" நிலா, இன்று முழுக்க உன்னை பார்க்க முடியவில்லையே? என்னாச்சு? ", என்றபடி என் அருகில் வந்த லீசாவை கண்டதும் கண்ணீரை துடைக்க  விரைந்தேன்.
" ஏன் உன் முகம் இப்படி சிவந்து போய் இருக்கு. இரு நான் போய் மருந்து கொண்டு வருகிறேன். நீண்ட நாட்களாக இருமல் வந்து நீ கஷ்டப்படுவது தெரியும்", என்றபடி காணாமல் போன லீசா ஐந்து நிமிடங்களின் பின்னர் மீண்டும் வந்தார். 
" இன்று என் கணவர் எனக்கு மலர்ச்செண்டு வாங்கி வருகிறேன் என்று சொன்னார்", என்றேன் ஆற்றாமையுடன். 
" அப்படியா. நல்லது. அப்ப உனக்கு இன்று இரண்டு மலர்ச்செண்டுகள் பரிசாக கிடைத்துள்ளது. நானும் உனக்கு ஒன்று வாங்கி வைத்திருக்கிறேன். காலையில் பிஸியாக இருந்தமையால் உன்னிடம் சொல்ல  முடியவில்லை. மீட்டிங் அது இதென்று இழுத்தடித்து விட்டார்கள்... என்று சொன்ன லீசாவை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுத என்னை விளங்காமல் பார்த்துக் கொண்டே நின்றார் லீசா.

என் வரவேற்பறையினை அலங்கரித்த மலர்களில் லீசாவின் அன்பளிப்பு தான் கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரிந்தது. என்ன இருந்தாலும் என் நண்பி இல்லை இல்லை என் சகோதரி கொடுத்த அன்பளிப்பு அல்லவா? அப்படித்தான் இருக்கும் இல்லையா!

Saturday, March 29, 2014

அவன் வள்ளி ஆனான்


நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது துறு துறுவென பார்த்துக் கொண்டிருந்த அம்மா பூனை, அதன் குட்டிகள் மீது கோபம் பொத்துக் கொண்டு வந்தது. எட்டி இரண்டு மிதி மிதிக்கலாம் என்று நினைத்தவன் என் மகள் மஞ்சுவை கண்டதும் கோபத்தினை அடக்கி கொண்டு, வேறு திசையில் பார்க்க ஆரம்பித்தேன். என் முகத்தினை வைத்தே நான் என்ன வகையான மனநிலையில் இருக்கிறேன் என்று கண்டுபிடிப்பதில் கெட்டிக்காரி மஞ்சு.
அருகே வந்து அமர்ந்தவள் மடியின் மீது அம்மா பூனை வந்து ஏறிக் கொள்ள, குட்டிகள் அவளின் பாவாடை நுனியை இழுத்து விளையாட, மஞ்சு பெருமையாக என்னைப் பார்த்தாள். கோபத்தினால் சிவந்த முகத்தினை இயல்பு நிலைக்கு கொண்டுவர மிகவும் போராடினேன்.
" அப்பா, வள்ளிக்கு கொஞ்சம் சாப்பாடு தாருங்கள்", என்றவள் என் பதிலை எதிர்பாராமல், தட்டின் ஓரத்தில் இருந்த ரொட்டி துண்டினை பூனைக்கு எடுத்து ஊட்டிவிட்டாள்.
வள்ளி இல்லை கொள்ளிவாய் வாய் பிசாசு, என்று மனதில் திட்டியபடியே, மேலோட்டமாக சிரித்து வைத்தேன். நான் சிரித்ததும்  குட்டி கொள்ளிவாய் பிசாசுகள் என் மடியின் மீது தாவி ஏறி, என் முகத்தின் மீது அவற்றின் ஈரமான மூக்கினை உரச, நான் கோபத்தினை அடக்கி கொண்டே சமையல் அறையினை நோக்கி சென்றேன்.

இந்த வீட்டில் நான் இருக்க வேண்டுமா அல்லது அந்த வள்ளி குடும்பம் இருக்க வேண்டுமா என்று நீயே முடிவு செய்து கொள், என்று கீச்சுக் குரலில் சொன்ன என்னை மனைவி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவளின் செய்கை உணர்த்தியது.

எனக்கு வளர்ப்பு பிராணிகள் மீது பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை. நாய், பூனை எல்லாமே காட்டில் சுதந்திரமாக திரிய வேண்டிய விலங்கினங்கள். அதை வீட்டில் அடைத்து வைத்து என்ன கொடுமை என்று அலுத்துக் கொள்வதுண்டு.
இந்த பூனை எங்கள் வீட்டுக்கு வந்தது ஒரு விபத்து. பக்கத்து வீட்டில் வளர்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்ததை விட எங்கள் வீட்டில்தான் அதிகமாக இருக்க ஆரம்பித்தது. சுவரில் இருக்கும் ஒரு ஓட்டை வழியாக வர ஆரம்பித்தது. அந்த ஓட்டையின் மீது செங்கல்லை வைத்து மூடினேன். நீ பாறாங்கல்லை வைத்தாலும் நான் வந்தே தீருவேன், என்று தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
சொந்த வீட்டில் கிடைத்த மீன் முற்கள், எலும்புத் துண்டுகள், பழைய சோறு இவற்றை விட எங்கள் வீட்டில் கிடைத்த பாலுக்கும், இறைச்சித் துண்டுகளுக்கும் அடிமையாகிப் போனது பூனை. கில்லி என்ற தனது சொந்தப் பெயர் நாளடைவில் மறந்து போனது. எங்கள் வீட்டில் வள்ளல் என்று நாமகரணம் சூட்டினாள் என் மகள். ஒரு நாள் வள்ளல்  வயிற்றை தள்ளிக் கொண்டு நின்ற போது தான் அது பெண் பூனை என்று விளங்கியது. என் முட்டாள் தனத்தினை நானே கடிந்து கொண்டேன். பூனை ஆணா, பெண்ணா என்று தெரியாமல் அதனை வீட்டில் ஏற்றுக் கொண்டது எங்கள் தவறு தான். மகள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. வள்ளல் என்பது வள்ளி என்று பெயருடன் வலம் வந்தது.


ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று குட்டிகள் என்று பிறக்க ஆரம்பித்தன. ஒவ்வொரு முறையும் பிரசவ நேரம் வள்ளி செய்யும் அழும்பு தாங்க முடியாது. ஸ்டோர் ரூமில் பிரசவம் ஆனதும் குட்டிகளை வாயில் கவ்வியபடி ஒவ்வொரு அறையாக ஓடித் திரியும். அந்தக் குட்டிகளை உறவினர்கள், நண்பர்கள் கால்களில் விழாத குறையாக கெஞ்சிக் கேட்டு, அவர்களுக்கு இலவசமாக கொடுத்து முடிப்பதற்குள் எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போய்விடும். வள்ளிக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து வைத்தால் என்னவென்று அடிக்கடி யோசிக்க ஆரம்பித்தேன்.
அதெல்லாம் அதிக செலவு ஆகும், என்று நண்பர்கள் சொன்னார்கள். அதை விட அதை எங்காவது கண் காணாத தூரத்தில் கொண்டு போய் விட்டு வா, என்றார்கள். அதற்கு மகள் ஒத்துக் கொள்ள வேண்டுமே. அவள் கல்லூரிக்கு  அடுத்த மாதம் செல்ல இருக்கிறாள். அதாவது அங்கேயே தங்கி படிக்க இருக்கிறாள். வீட்டிற்கு  மாசத்தில் இரண்டு நாட்கள் வந்து போவதாக ஏற்பாடு. அவள் போனதும் வள்ளிக்கு ஒரு வழி பண்ண வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். மனைவிக்கும் தெரியாமல் காரியத்தினை கச்சிதமாக நிறைவேற்ற வேண்டும். 

குறிப்பிட்ட நாளில் நண்பன் கோணிப் பையுடன் வந்துவிட்டான். அரும்பாடுபட்டு வள்ளி குடும்பத்தினரை பிடித்தாயிற்று. இரண்டு வருடங்களின் முன்பு வள்ளியை கோணிப்பையில் கொண்டு போய் சற்றே தொலைவான இடத்தில் விட்டு விட்டு நான் வீடு வந்து சேரும் முன்னர் வள்ளி வீடு வந்து சேர்ந்தது ஞாபகம் வந்தது. எனக்கே என் மீது எரிச்சல் உண்டானது. அதன் பிறகு அதன் மீது கொஞ்சம் இரக்கம் ஏற்பட்டது உண்மைதான். வள்ளி மீண்டும் கர்ப்பம் ஆனபோது என் இரக்கம், பச்சாதாபம் எல்லாம் காணாமல் போயிற்று.
*****************

"அப்பா, வள்ளிக்கு என்ன ஆயிற்று?", என்றாள் மகள்.
" அதை ஏன் கேட்கிறாய் செல்லம். ஒரு நாள் ரோட்டில் இறந்து கிடந்திச்சு. யாரோ ஒரு கடன்காரன் ஏதோ ஒரு வாகனத்தினை ஏற்றி கொலை செய்துவிட்டான்", என்றேன் பொய்யான சோகத்துடன்.
வள்ளி ப்ரேம் செய்யப்பட்ட போட்டாவில் என்னை முறைப்பது போல இருந்தது. அதன் பிறகு வள்ளி வரவேயில்லை. நான் அவள் எப்படியாவது வழி கண்டுபிடித்து வந்துவிடுவாள் என்று நம்பிக்கையுடன் நாட்களை நகர்த்தினேன். மகளின் சோகமான முகத்தினை பார்க்க சகிக்காமல், ஒரு கடுவன் பூனை வாங்கி, அதற்கு வள்ளி என்று பெயரிட்டு மகளிடம் கொடுத்தேன்.

Saturday, March 15, 2014

ஊதா கலர் ரிப்பன்


கலர் ப்ளைன்ட் எனப்படும் குறைபாடு (நிறக்குறைபாடு - சரியான தமிழா தெரியவில்லை.) எல்லோருக்கும் வருவதில்லை. ஆனால், வந்தவர் பாடு பெரும்பாடு தான். சிலருக்கு கலர் ப்ளைன்ட் குறைப்பாடு இல்லாவிட்டாலும் கலருகளை வேறுபடுத்தி சொல்வதில் பிரச்சினை உள்ளது.
உதாரணத்திற்கு, என் ஆ.காரர். போன கிழமை அவரிடம் ஊதா கலரில் ஒரு பொருள் வாங்கி வரும்படி சொன்னேன். வந்தார் பிங்க் கலர் பொருளுடன். வந்தவர் அது ஊதா கலர் என்று அடம்பிடிக்க, நான் எவ்வளவோ சொல்லியும் அவர் நம்பவில்லை. அதன் பிறகு என் மகள் அவருக்கு ஊதா கலர் பொருட்களை காட்டி, அப்பா, இது தான் ஊதா கலர் என்று சொல்ல...நான் அவருக்கு, ஊதா கலர் ரிப்பன், என்று சிவகார்த்திகேயன் பாட்டில் வரும் ஹீரோயின் ரிப்பனை காட்டியபோதும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை. சரி எப்படியோ போங்கள் என்று விட்டாச்சு.
இந்த ஊதாக் கலர் மட்டும் பிரச்சினை அல்ல. அவருக்கு  orange , மஞ்சள் கலர் இவற்றிலும் பெரிய போராட்டம் தான். தான் பிடிச்ச மஞ்சள் முசலை வேறு கலர் முசல் என்று சாதிப்பார்.


மஞ்சளும், ஆரஞ்சும் கிட்டத்தட்ட ஒரே கலர் என்று கொண்டாலும்,  ஊதா கலரில் என்ன பிரச்சினை என்று விளங்கவில்லை! ட்ரைவிங் செய்யும் போது பச்சை விளக்கும், சிவப்பு விளக்கும் சரியாக தெரிகிறதே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு, திருப்திப்பட்டு கொண்டு வாழ்க்கை போகிறது.
அந்த நிறங்களில் பிரச்சினை என்றால் நான் தான் அவரை வேலைக்கு கூட்டிப் போய், கூட்டி வர வேண்டும்.

கலர் ப்ளைன்ட் பிரச்சினை இருப்பவர்களுக்கு கருப்பு, வெள்ளை இரண்டு கலர்கள், வேறு சில நிறங்கள், அல்லது சாதாரண கண்களுக்கு தெரிவது போல இல்லாமல் மங்கலாக தெரியும். பிறந்த குழந்தைகளுக்கு எல்லாப் பொருட்களும் கறுப்பு, வெள்ளையாக மட்டும் தெரியுமாம். பின்னர் பல வண்ணங்கள் தெரிய ஆரம்பிக்கும்.
இங்கு 5 வருடங்களுக்கு ஒரு முறை ட்ரைவிங் லைசென்ஸ் மாற்ற வேண்டும். அப்படி மாற்றும் போது அங்கு இருக்கும் கருவியில் கண்களை டெஸ்ட் செய்வார்கள்.

எனக்கு அந்தக் கருவியை கண்டால் எரிச்சல் வரும். அந்தக் கருவியில் நெற்றியை வைத்து அழுத்தி, அவர்கள் கேட்கு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
திரையில் எந்தப் பக்கம் பச்சை விளக்கு எரிகிறது?
எந்தப் பக்கம் ரைட் டேர்ன் சிக்னல் தெரிகிறது?
இடது பக்கம் ஒளிரும் கலர் என்ன?
இப்படி வரிசையாக கேள்விகள் கேட்பார்கள். ஒரே நேரத்தில் நெற்றியை அழுத்தி, அவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். நெற்றி கொஞ்சம் விலகி, கேள்விகளை மிஸ் பண்ணினால் டென்ஷன் வரும். அதன் பிறகு தான் புது ட்ரைவிங் லைசென்ஸ் கொடுப்பார்கள். ஏதும் பிரச்சினை என்றால் கண் மருத்துவரை பார்க்க சொல்லி அனுப்பிவிடுவார்கள்.

போன மாதம், ஒரு வார இதழில், கலர் ப்ளைன்ட் குறைபாடு இருக்கும் ஒருவரைப் பற்றி எழுதி இருந்தார்கள். இந்தக் குறைபாட்டினால் அவரின் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. அவர் ஒரு பெண்மணியை சந்திக்க வேண்டும். அந்தப் பெண்மணி அவரை முன்பு பார்த்ததில்லை, அவரிடம் அந்த பெண், நீங்கள் என்ன நிறத்தில் ஆடை அணிந்து இருக்கிறீர்கள் என்று கேட்க, அவர் சொல்கிறார் டார்க் நீலம், என்று. ஆனால், நேரில் சென்று அந்தக் கலர் ஆடையில் ஒருவரை தேடி அலுத்து, இறுதியில் மஞ்சளோ அல்லது வேறு நிறத்தில் ஆடை அணிந்த ஒருவர் தான் அந்த நபர் என்று அடையாளம் கண்டு கொள்கிறார். இதைப் படித்த பின்னர், அப்பாடா! என்று நிம்மதியாக இருந்தது எனக்கு. ஏன் எனில் என் ஆ.காரருக்கு இந்த பிரச்சினை எல்லாம் இல்லை. ஏதோ பாவம் ஊதா, மஞ்சள், ஆரஞ்ச் கலர்கள் மட்டும் தான் பிரச்சினையாக இருக்கு. ஒரு வேளை கின்டர்கார்டன் டீச்சர் தான் சரியாக சொல்லிக் கொடுக்கவில்லையோ?!

Sunday, February 16, 2014

குறட்டை


என் தூக்கம் தொலைந்துவிட்டது. காரணங்கள் என்ன? அப்படி ஒன்றும் பல காரணங்கள் இல்லை. ஒன்றே ஒன்று தான். குறட்டை. என்னது நீ குறட்டை விடுவியா, என்று புருவத்தை சுருக்க கூடாது. என் ஆ.காரர் தான் அதில் புலி. திருமணத்தின் முன்னர் என் அப்பா சும்மா ஊதூவார் பாருங்கள். டீசல் எஞ்சின் போல அப்படி ஒரு சத்தம். சில நேரங்களில் ஸ்டீம் எஞ்சின் போல சத்தமும் வரும். ஆனால், பாருங்கள் என் அம்மா ஒரு நாள் கூட புகார் சொன்னதில்லை. கல்லானாலும் கணவன், குறட்டை விட்டாலும் புருஷன் என்று வாழ்கிறார் அம்மா. 

என்னால் அப்படி இருக்க/படுக்க முடிவதில்லை. அவர் படுக்க செல்லும் முன்னர் அதாவது குறைந்தது 30 நிமிடங்களின் முன்பு நான் படுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நான் சோஃபாவுக்கு சிஃப்ட் ஆகிவிடுவேன்.
 நீங்கள் நினைப்பது போல உடனே எழுந்து சோஃபாவுக்கு போய்விடுவேன் என்று நினைத்தால் அது பெரும் தவறு. கையால் மெதுவாக தள்ளிவிட்டு பார்ப்பேன், குப்புற படுத்திருந்தால் எழுந்து நேராக படுக்க சொல்வேன்.. கடைசி ஆயுதமாக எழுந்து சோஃபாவுக்கு போய் விடுவேன் என்று சொன்னால் என் கணவர் மிரண்டு விடுவார். ஏதோ விவாகரத்து செய்துவிடுவேன் என்று சொன்னது போல மிரண்டு போய் பார்ப்பார். ஆனால், இதெல்லாம் சில நொடிகள் தான் திரும்ப குறட்டை ஒலி காதை பதம் பார்க்கும். 

எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. என் கணவருக்கு குறட்டை என்பது பரம்பரையில் வந்ததா அல்லது இடையில் வந்து ஒட்டிக் கொண்ட பழக்கமா, என்று விளங்கவில்லை. ஒரு நாள் அவரின் பெற்றோர் வீட்டுக்கு சென்ற போது என் சந்தேகம் தீர்ந்தது. இரவு என் மாமனார், மாமியார் அறையில் இருந்து ஒரே குறட்டைச் சத்தம். என் கணவர் இங்கிருந்து ஊத, பதிலுக்கு அவர்கள் அறையில் இருந்து யாரோ பதில் கொடுக்க, நான் பொறுத்தது போதும் பொங்கி எழு என்று தலையணையுடன் எழுந்து சோஃபா தேடிச் செல்ல, அங்கு என் மாமானாரும் தலையணையுடன் வர, குறட்டையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தான் இன்னொரு குறட்டையால் பாதிக்கப்பட்டவரின் வலி, வேதனை புரியும் என்பதால் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொன்ன பிறகு கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தது. மாமா எனக்கு சோஃபாவை விட்டுக் கொடுத்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டார். ஆனால் பாருங்கள் ஒலி காற்றில் பயணம் செய்யும் என்று எனக்கு விஞ்ஞானத்தில் படித்தது அப்போது தான் தெளிவாக விளங்கியது. 
ஏதோ ஒரு படத்தில் சிவாஜியும் பாலையாவும், நீ மாமா, நீ மாப்ளே என்று கச்சேரி செய்வார்களே அது போல இரவு முழுவதும் ஒரே குறட்டை கச்சேரி தான். 
விளம்பரங்களில் காட்டும் பந்து போன்ற பொருளை வாங்கி, அதனை அவரின் முதுகின் பின்னால் ஒரு உறையில்  அந்தப் பந்தினை வைத்தால்  குறட்டை குறையும் என்று நினைப்பேன். ஆனால், விளம்பரங்களில் வரும் ஆண்கள் போல என்னவர் மல்லாக்கா படுத்து மட்டும் குறட்டைவிடும் ஆள் அல்ல. நின்று கொண்டே குறட்டைவிடும் ஆள். இவருக்கு அதெல்லாம் சரியாக வராது. உடம்பு முழுக்க பந்து வைச்சாக் கூட கூலாக குறட்டை விடுவார். 
என் தோழி சொன்னார், நீச்சல் வீரர்கள் காதினுள் தண்ணீர் போகாமல் பயன்படுத்தும் இயர்ப்ளக் பயன்படுத்தினால் பலன் கிட்டும், என்று... இதெல்லாம் நடக்கிற காரியமா? திருடன் வந்தால் அல்லது பிள்ளைகள் எழுந்து அழுதால்....இப்பதைக்கு சோஃபா தான் ஒரே கதி. 

நீங்கள் இப்படி குறட்டை விடும் துணையோடு வாழ்க்கை நடத்தினால் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

Saturday, February 1, 2014

எம்ப்ராய்டரி

முதலாவது சின்ட்ரெல்லா. சங்கிலி தையல், ஹங்கேரியன் ப்ரெய்ட், அடைப்பு தையல் கொண்டு உருவான என் சின்ட்ரெல்லா. சின்ட்ரெல்லாவை சுற்றி இருக்கும் பூக்கள் சங்கிலித் தையல், அடைப்பு தையல் கொண்டு தைத்தேன்.அடுத்தது பறவை. இவரும் ஹங்கேரியன் ஸ்டிச், சங்கிலி தையல் கொண்டு தைத்தேன்.


அடுத்தது பூ கூடை கொண்டு செல்லும் குட்டிப் பெண். சங்கிலித் தையல், க்ராஸ் ஸ்டிச், அடைப்பு தையல், knot ஸ்டிச் கொண்டு தைத்தேன்.

அடுத்தது தேன் குடித்துவிட்டு பறந்து செல்லும் தேனீ. அடைப்புத் தையல், சங்கிலித் தையல் கொண்டு உருவான தேனீ.

Tuesday, January 21, 2014

டமால் டுமீல்


(Image: Google)
மனைவி சாந்தியுடன் பேச்சு வார்த்தை இல்லை. கடந்த ஒரு வாரமாக பாரா முகம் காட்டிவந்தான் சுந்தர். அவள் சமைப்பதை எடுத்து சாப்பிடுவது, வேலைக்குப் போய் வருவது, தொலைக்காட்சி பார்ப்பது இவை மட்டுமே அவன் அன்றாட நடவடிக்கைகள் என்று ஆகிப் போனது.
திருமணத்தின் போது எடுத்த உறுதி மொழி என்ன ஆனது என்று சுந்தருக்கு விளங்கவில்லை. உன் இன்பத்திலும், உன் துன்பத்திலும் பங்கு கொள்வேன் என்று அக்னி சாட்சியாக செய்த சத்தியத்தினை எப்படி மறந்தாள்.
ஏன் இப்படி சின்னப்பிள்ளைத் தனமாக இருக்கிறார் என்பது சாந்தியின் கூற்று. அந்த சின்னப்பிள்ளை தனத்தால் வந்த வினை தானே இவ்வளவும். எவ்வளவு அவமானம். வேலையில் எத்தனை பேருக்கு விளக்கம் சொல்லி, சொந்தக்காரர்கள் ஆறுதல் சொல்கிறேன் என்ற சாக்கில் நமுட்டுச் சிரிப்பு சிரித்தது அவரை மேலும் கோபம் கொள்ளச் செய்தது. எல்லா கோபமும் சாந்தியின் மீது திரும்பியது. இதற்காக சாந்தி பல முறை மன்னிப்பு கேட்டும் அவன் மன்னிக்க தயாராக இல்லை.


வெடி, பட்டாசு என்றால் சுந்தருக்கு உயிர். ஊரில் பொங்கல், தீபாவளிக்கு புது துணிகள் அணியா விட்டாலும் பரவாயில்லை கட்டாயம் வெடி இருக்க வேண்டும். அணுகுண்டு, சீறுவானம், பொட்டு வெடி, சங்கு சக்கரம் என்று எல்லாமே வாங்கி, அதனை வெடிக்கும் போது ஏற்படும் சந்தோஷத்திற்கு ஈடு இணை இல்லை சுந்தருக்கு.
ஒரு முறை தகர டப்பாவில் வெடியை வைத்து, திரியை கொழுத்தி விட, அது சர்ரென்று பாய்ந்து மேலே வானம் நோக்கிப் போகாமல் பக்கத்து வீட்டினுள் போய் வெடிக்க, பக்கத்து வீட்டம்மா வந்து இவனை அறையாத குறையாக திட்டி விட்டு போன பின்னரும் இவன் சளைக்காமல் வெடி வெடித்தான்.
 அணுகுண்டு வெடி வெடிக்காமல் இருக்க, இவன் ஏன் அது வெடிக்கவில்லை என்று கைகளில் எடுக்க, இவன் எடுத்த நொடி அந்த வெடி பெருஞ் சத்தத்துடன் வெடித்தது. கைகளில் தோல் கழன்று இரவு முழுவதும் தூக்கம் தொலைந்தது.  ஆனால், அடுத்த நாளே அதெல்லாம் மறந்து வெடியுடன் கிளம்பிய அவனை அம்மா எரிச்சலுடன் பார்த்தார்கள்.


வெளிநாடு வந்த பின்னரும் வெடியைக் கண்டால் பொடியனாக மாறிவிடுவான். ஊர் போல நினைத்த நேரத்தில் வெடி கொளுத்த முடியாது. நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட வகை வெடிகள் மட்டுமே வாங்க முடியும். அவற்றையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க முடியும். என்ன ஒரு சிறு பிள்ளைத் தனமான சட்டம் என்று நினைத்துக் கொண்டான்.

நான் விரும்பும் வெடியை வாங்கி, நான் விரும்பும் இடத்தில், நான் விரும்பும் நேரத்தில் வெடிப்பேன் என்று நண்பர்களிடம் சவால் விட்டான்.
நீ மட்டும் அப்படி செய்தால் நாங்கள் உனக்கு 100 டாலர்கள் அன்பளிப்பாக கொடுப்போம், என்று நண்பர்கள் சொல்ல, துணிந்து செயலில் இறங்கினான் சுந்தர்.
 மனைவியின் அறிவுரை எடுபடவில்லை.
ஆள் அரவமற்ற இடம், குறிப்பாக சிறுவர்கள் இல்லாத இடம் பார்த்து தேர்வு செய்து, மாலை 7 மணி தான் சரியான நேரம் என்று நண்பர்களுக்கு தெரிவித்தான்.
குறிப்பிட்ட நாளில் சுந்தர்,  மனைவி, நண்பர்கள் புடை சூழ பார்க்கில் ஒன்று கூடினார்கள்.
நண்பர்கள், மனைவி ஆகியோர் பாதுகாப்பான தூரத்தில் மரங்களின் பின்னால் மறைந்து கொள்ள, இவன் கீழே தரையில் அமர்ந்து வெடியினை வரிசையாக அடுக்கி, திரியில் நெருப்பினை வைத்துக் கொண்டே வந்தவன் இரண்டு ஜோடி பூட்ஸ் கால்களைக் கண்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தான். இரண்டு காவல் துறை அதிகாரிகள், அவர்களின் துப்பாக்கிகள் இவனை நோக்கி இருக்க.
இவன் செய்வது அறியாது நிற்க. அவர்கள் இவனை தர தரவென இழுத்துப் போய் பாதுகாப்பான தூரத்தில் நிற்க வைத்து, வெடியின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
மனைவி, நண்பர்கள் என்று யாரையும் காணவில்லை.
அதன் பிறகு இவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று, ஏகப்பட்ட அறிவுரைகள் வழங்கி, கிட்டத்தட்ட 6 மணி நேரங்கள் அங்கேயே இருந்து அவஸ்தைப் பட்டு, வீடு வந்து சேர கிட்டத்தட்ட  அதிகாலை 3 மணி ஆகிவிட்டது.
வீட்டில் மனைவி, நண்பர்கள் காத்திருந்தார்கள். 
" சே! தூ நீங்கள் எல்லாம் ஒரு நண்பர்கள். நீயெல்லாம் ஒரு மனைவி", என்று காறித்துப்பினான். 
" அட்லீஸ்ட் எனக்கு போலீஸ் வருவதையாவது சொல்லியிருக்கலாமே அல்லது ஓடு என்றாவது ஒரு சிக்னல்..", என்றான்.
" டேய், நாங்களே போலீஸ் வந்ததை கவனிக்கவில்லை. உன் பக்கத்தில் அவர்கள் வந்த பிறகு தான் பார்த்தோம். தயவு செய்து மன்னிச்சு விடுடா. அதோடு நீ பந்தயத்தில் ஜெயிச்ச படியால் இந்தா 100 டாலர்கள்", என்று சொல்லி பணத்தினை மேசையில் வைத்துவிட்டு எஸ்கேப் ஆனார்கள்.
100 டாலர்களை எடுத்து தூள் தூளாக கிழித்து எறிந்தான். இப்ப கோபம் முழுவதும் மனைவியின் மீது திரும்பியது.
உங்களை கைது செய்தால் வழக்கறிஞ்சரை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதால் தான் நான் மறைவில் இருந்து வரவில்லை, என்றாள் மனைவி.

துன்பத்தில் கைவிட்ட நீயெல்லாம் ஒரு மனைவி, என்று கண்கள் சிவக்க கத்தியவன் அதன் பிறகு பேசுவதை நிறுத்திக் கொண்டான். 
கைகளில் டிவி ரிமோட்டை எடுத்தவன் ஒரு சானலிலும் நிப்பாட்டாமல் பொத்தானை அழுத்திக் கொண்டே இருந்தான். ஏதோ ஒரு சானலில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் அறிகுறியாக பல வண்னங்களில் வெடித்த வான வேடிக்கைகளைக் கண்டு தன்னை மறந்து பார்க்க ஆரம்பித்தான். Tuesday, January 7, 2014

வெள்ளைப் பூக்கள்


வெள்ளைப் பூக்கள் உலகம் முழுதும்....என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. உண்மையில் வெள்ளைப் பூக்கள் மலர்ந்துள்ளதா?, உலகம் முழுவதும் மக்கள் போர் இன்றி சமாதானமாக வாழ்கிறார்களா?, என்ற எண்ணம் உண்டானது. எங்கு பார்த்தாலும் சண்டை, நாடுகளுக்கு இடையே போர், உள்நாட்டுப் போர்கள், உலகில் ஒரு பக்கம் மக்கள் சாப்பிட சாப்பாடு இல்லாமல் வருந்த, மறுபக்கம் போர் என்ற பெயரில் கோடிக்கணக்கான பணம் செலவாகிறது. போர் என்ற வார்த்தையே உலகில் இல்லாமல் போக வேண்டும். இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டையில் சில ஆண்டுகள் வாழ்ந்தவள் என்ற முறையில் எனக்கும் சில அனுபவங்கள் உண்டு. சில ஆண்டுகள் வாழ்ந்த எனக்கே இன்னும் அந்த வடுக்கள் ஆறாது இருக்கும்போது அங்கேயே வாழ்ந்து வருபவர்களுக்கு... நினைத்துப் பார்க்கவே கலக்கமாக இருக்கின்றது. பெற்றோர்களை இழந்தவர்கள், உடல் உறுப்புகளை இழந்தவர்கள், கணவன் இல்லாமல், மனைவி இல்லாமல் வாழும் துணைகள், இப்படி பலர். இவர்களுக்கு எல்லாம் யார் கவுன்சிலிங் கொடுத்தார்கள். இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

       ஜூலை மாதம் 1983ம் ஆண்டு தான் என் முதல் அனுபவம், அதாவது அது போர் இல்லை என்றாலும், போருக்கான பல படிகளில் அந்த சம்பவமும் ஒரு படி என்று சொல்லலாம். கொழும்பில் என் அப்பா ஒரு அரசாங்க ஊழியர். கொழும்பு வாழ்க்கை எப்போதும் பரபரப்பான வாழ்க்கை. எனக்கு அப்போது 10 வயது  ஆகவில்லை. அந்த நாள் ஒரு சாதாரண நாள் ஆகவே பட்டது எனக்கு. வழக்கம் போல பள்ளிக்கு சென்றோம். பள்ளியில் அன்று வழக்கம் போலவே காலை வணக்க பாடல், மதிய இடைவேளை, அதன் பின்னர் எல்லோரும் கட்டாயம் வீடு சென்று சேருங்கள் என்று எச்சரிக்கையுடன் வீட்டுக்கு அனுப்பினார்கள். நானும், என் தோழிகளும் வழக்கம் போலவே ஜஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்க, அங்கு வந்த என் ஆசிரியை எல்லோரையும் கடிந்து கொண்டார். அதன் பிறகு பஸ் பிடித்து, நான் இருந்த குடியிருப்பினை அடைந்த போது ஒரு மயான அமைதி நிலவியது. வீட்டில் அம்மா, தங்கை, நான் சென்று சிறிது நேரம் கழித்து அப்பா, சகோதரர்கள் வந்து சேர்ந்தார்கள். மதியம் எல்லோரும் சாப்பிட, நான் மட்டும் கட்டிலில் இருந்து அப்படியே உறங்கிப் போனேன். 

நான் படுத்திருந்த கட்டிலில் ஒரு செங்கல் வந்து என் தலைமாட்டில் விழ, நான் அரைத் தூக்கத்தில் எழும்ப, எங்கும் ஒரே சத்தம், மீண்டும் கற்கள் விழுந்த வண்ணம் இருந்தன. நான் எழுந்து ஜன்னல் வழியாக பார்க்க நினைத்து, பின்னர் அந்த நினைப்பினை உதறி, என் தூக்கத்தினை உதறி, படி  வழியாக இறங்கி ஓட, மீண்டும் செங்கற்கள் வந்து விழுந்த வண்ணம் இருந்தன. வீட்டில் யாரும் இல்லை. என் உண்டியலை எடுக்க நினைத்து கைகளை நீட்டியவள் பின்னர் முடிவினை மாற்றிக் கொண்டு வெளியே ஓடி, பாத்ரூமினுள் ஒளிந்து கொண்டேன். கற்கள் விழும் சத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது. என் பெற்றோர்கள், உடன்பிறப்புக்கள் எங்கே என்ற எண்ணம் வர, உடனடியாக அவர்களைத் தேட வேண்டும் என்ற கவலை, பயம் சூழ்ந்து கொண்டது. பாத்ரூமில் இருந்து வெளியே வந்து வீதியில் நின்று கொண்டேன். அங்கு கிட்டத்தட்ட ஒரு 50 பேராவது கைகளில் கத்தி, கம்புகளுடன் ஆவேசமாக நின்று கொண்டிருந்தார்கள். சிலர் என்னைக் கடந்து, எங்கள் வீட்டினுள் சென்று, அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள், என் உண்டியல் சகிதம் வெளியே வர, வேறு சிலர் உள்ளே நுழைவதை காண முடிந்தது. இப்ப என் உண்டியல் பற்றிய கவலை எனக்கு. அதில் குறைந்தது 150 ரூபாய்கள் இருந்திருக்கலாம் அல்லது அதிகமாக இருக்கலாம். அந்த நபரிடம் போய் கேட்டால் கொடுப்பானா என்பது தெரியவில்லை. அந்த நபர் உண்டியலை கொண்டு சென்று தெரு முனையில் இருந்த வேறு ஒரு தமிழரின் வீட்டினுள் நுழையும் வரை என் கண்கள் அவனை பின் தொடர்ந்தன. அவன் மறைந்த பின்னர் என் பெற்றோர்கள் பற்றிய நினைப்பு மீண்டும். பசி, களைப்பு, பயம் எல்லாம் சூழ்ந்து கொண்டது. முதன் முறையாக மரண பயம் வந்தது.....