Wednesday, August 4, 2010

100வது பதிவு

மக்களே! இது எனது 100வது பதிவு. எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் எல்லோருக்கும் என் நன்றிகள். இது சம்பந்தமாக பிறகு ஒரு பதிவு போடலாம் என்று நினைத்திருக்கிறேன்.
அன்புடன் வானதி.


மா இல்லாமல் சப்பாத்தி/பரோட்டா!
தங்கமணி மைதா மா அல்லது வேறு எந்த மா வகைகளும் பாவிக்காமல் சப்பாத்தி செய்ய சொல்லி எனக்கு உத்தரவிட்டுள்ளார். இதெல்லாம் ஆவுற காரியமா?
துன்பம் வந்தால் நான் உடனடியாக உதவி கேட்டு ஓடுவது நம்ம கூகிள் ஆண்டவர்.
இந்த முறையும் ஓடினேன். மா இல்லாமல் சப்பாத்தி... இப்படி டைப் பண்ணிட்டு காத்திருந்தேன்.
யூ மீன் சப்பாட்டி வித்தவுட் ஃப்ளார் - அப்படின்னு நம்ம ஜெய் மாதிரி என்னையே திரும்ப கேள்வி கேட்டபடி.
தெரிலைன்னா தெரியாதுன்னு சொல்ல வேண்டியது தானே. என்ன அப்படி ஒரு மானப்பிரச்சினை??!!
சரி நானே ஒரு ரெசிப்பி கண்டு பிடிக்கலாம். அதை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப் படுத்தலாம் என்று ஐடியா உருவானது.

தேவையான பொருட்கள்;
சோளம் ( மா இல்லை. முழுச் சோளம் ) - 10, 20 , 100 ( விரும்பிய அளவு )
சுத்தியல்/ மத்து - 1
தேவைப்படும் நேரம் - 2 நாட்கள்
நெய் - 1 கிலோ
உப்பு - விரும்பிய அளவு


இந்த ரெசிப்பியை தயார் செய்ய வீட்டில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் குறைந்தது 3 பேராவது வேணும்.
முதலில் சோளத்தை உதிர்த்துக் கொள்ளவும். இது கொஞ்சம் கஷ்டமான வேலை என்று தோன்றினால் அவித்த பிறகு உதிர்த்திக் கொள்ளலாம். பொறுமை அவசியம். உதிரியான சோளத்தை வாய் அகன்ற பாத்திரத்தில் ( அண்டா ) போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அவித்துக் கொள்ளவும்.

முன்பே சோளத்தை அவித்திருந்தால் இரண்டாவது முறை அவித்து தொலைத்து விடாதீர்கள். பின்னர் பதம் சரி வராது.
சோளம் நன்கு குழைய வெந்ததும், அண்டாவில் வைத்து மத்து, சுத்தியல் இப்படி ஏதாவது ஆயுதங்களால் நன்கு மசிக்கவும்.
கைகளினால் மசித்தால் இன்னும் சுவையாக இருக்கும். இந்த நேரங்களில் சின்ன வயதில் உங்கள் அல்வா/ சாக்லேட் திருடிய டொமாரை நினைத்தால் பர பரவென வேலை முடிந்து விடும். இதை பிசைவதற்கு வீட்டில் இருக்கும் விடலைகளை துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்.
இப்ப இந்த வேலைகள் எல்லாம் செய்து முடிக்க 1 1/2 நாளாவது ஓடியிருக்கும். உப்பு சேர்க்க மறக்க வேண்டாம். இதில் தேங்காய், பீட்ரூட், காரட் என்று சேர்த்து, ருசியை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
நான் சொல்லும் போதே செய்து பார்த்திட வேணும் போல கைகள் பரபரக்குமே. இருங்கள் இன்னும் இருக்கு.

இப்பதான் மிகவும் முக்கியமான தருணம்.
சப்பாத்திகளாக உருட்ட வேண்டும். இது கொஞ்சம் சிக்கலான வேலை. முதல் முயற்சியில் சரியாக வராது.
முயற்சி திருவினையாக்கும், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழிகள். அல்லது கஜினி முகமது இப்படி யாரையாவது ரோல் மாடலாக நினைத்துக் கொண்டே, சப்பாத்தியை ஏதாவது ஒரு ஷேப்பில் தட்டி, சூடான தோசைக் கல்லில் போட்டு, 1/4 கப் நெய் ஊத்தவும். நெய் ஊத்துவதில் கருமித்தனம் பண்ணக் கூடாது. திருப்பி விட்டு, மீண்டும் ஒரு 1/4 கப் நெய் விடவும்.

இந்த வேலைகள் எல்லாம் முடிந்ததும் காய் கறிகளை அழகா டெக்கரேட் பண்ணி, வீட்டில் யாராவது விழித்திருந்தால் அவர்களுக்கு குடுத்து சாப்பிடவும்.
இந்த ரெசிப்பியை செய்து போட்டு, கண்டிப்பா பின்னூட்டம் குடுக்கோணும். சரியா மக்கள்ஸ்...