Saturday, July 24, 2010

மைக்ரோவேவ்!

வருணும் அஞ்சலியும் கைகோர்த்தபடி நடந்தார்கள்.
" அஞ்சலி, இங்கு தான் நாங்கள் மைக்ரோவேவ் எடுத்தோம் ", என்றான் ஒரு வீட்டினை சுட்டிக்காட்டியபடி.

" அடப்பாவி! திருட்டுத் தொழிலும் நடந்திச்சா?", இது அஞ்சலி.

வருண் பதில் சொல்லாமல் சிரித்தபடி நடந்தான்.

" இதோ இங்கே தான் சோஃபா எடுத்தான் என் நண்பன் விஷ்வா ", என்றான் இன்னொரு வீட்டைக் காட்டி.

வருணின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

பள்ளி இறுதி ஆண்டில் மிகவும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தான். வடமெரிக்காவின் மிகச்சிறந்த பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. நிறைய பணம் செலவாகும் என்று தெரிந்தாலும் அவனுடைய கனவினை சிதைக்க விரும்பாமல் அந்த கல்லூரிக்கே செல்ல முடிவு செய்தான்.
படிப்பதற்கு லோனுக்கு விண்ணப்பம் அனுப்பினான். வந்த பணம் படிப்பிற்கும், தங்குமிடத்திற்கும் கொடுக்கவே சரியாக இருந்தது. வீட்டிலிருந்து கல்லூரிக்கு தினமும் சென்று வர முடியாது. அதோடு எப்பவும் பனி விழும் பகுதி அது. எனவே நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சிறிய குடியிருப்பில் வாடகைக்கு தங்கிக் கொண்டான். வீட்டில் அப்பாவின் வருமானத்தில் நான்கு ஜீவன்கள் உயிர் வாழ வேண்டும். இவனும் முடிந்த போது பணத்தை சிக்கனமாக சேமித்து வைத்து, அம்மாவிடம் கொடுப்பான்.

தங்கியிருந்த குடியிருப்பில் ஒரு ஹால், கிச்சன் அவ்வளவே. நண்பர்கள் வசதிக்கேற்ப மெத்தைகள் (கட்டில் அல்ல ) வைத்திருந்தார்கள். குளிரினை சமாளிப்பது தான் பெரும் அவஸ்தையாக இருந்தது. பற்கள் தந்தியடிக்கும். ஜாக்கெட், தொப்பி, கையுறைகள் அணிந்து கொண்டாலும் குளிர் ஊடுருவிச் சென்று நடுங்கவைக்கும்.
ஒவ்வொரு நாளும் ஒருவர் சமையலைக் கவனிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

" டேய்! எங்க வருணை சமையலில் அடிக்க ஆளே கிடையாது ", என்று நண்பர்கள் புகழாரம் சூட்டுவார்கள்.
இப்படி ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒரு இளிச்சவாயன் திறமையான சமையல்காரன் என்ற பட்டத்துடன் இருப்பான்.

வருணும் முகம் சுழிக்காமல் முடிந்தவரை சமையல் செய்வான். பரீட்சை நேரங்களில் சமையல் செய்ய நேரம் வராது. முன்பே சமையல் செய்து வைத்துக் கொள்வார்கள். கல்லூரி முடிந்து வந்ததும் பசியில் உயிர் போகும். எல்லாவற்றையும் எடுத்து சுடவைத்து, சாப்பிட நேரம் எடுக்கும்.
ஒரு நாள் நண்பன் சிவா சொன்னான், " வருண், ஒரு மைக்ரோவேவ் இருந்தா நல்லா இருக்குமில்லை ."

" டேய், இது ஆசையில்லை பேராசை", என்று சிரித்தார்கள் மற்றவர்கள்.

கல்லூரியின் பக்கத்தில் வசதியானவர்கள் குடியிருக்கும் வீடுகள் இருந்தன. அந்த வீடுகளை கடந்தே கல்லூரிக்கு போய் வர வேண்டும். ஒரு நாள் வருண் கல்லூரியிலிருந்து வரும் போது ஒரு வீட்டின் முன் மைக்ரோவேவ் ஒன்று கிடந்ததைக் கண்டான். அடுத்த நாள் வரும் குப்பை லாரியில் அதைக் கொண்டு போய் விடுவார்கள். வருண் சுற்றும் முற்றும் பார்த்தான். மக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

பெரும்பாலும் மெத்தைகள், சோஃபாக்கள், பிற தளவாடங்கள் என்று எறிவதற்கு வைத்திருப்பார்கள். அந்த பொருட்கள் எல்லாமே வருணின் அறையில் இருப்பதை விட நல்ல தரமான பொருட்களாகவே தோன்றும். இருந்தாலும் ஏனோ ஒரு வித தயக்கத்தால் பார்த்தும் பார்க்காதது போல கடந்து சென்று விடுவான். ஆனால், இந்த நுண்ணலை அடுப்பை அவ்வாறு விட்டுச் செல்ல மனம் வரவில்லை.

கொஞ்ச நேரம் காத்திருந்தான். ஆனால், குளிரினால் விறைத்துப் போய் விடுவான் போலிருந்தது. அறைக்குப் போய் மற்ற நண்பர்களுக்கு தகவல் சொன்னான்.

" டேய் வருண், என்னடா சொல்ற? மைக்ரோவேவை பார்த்துட்டு சும்மா வந்தியா. பாவி. எந்த வீடுடா?? சொல்லு நான் இப்பவே போய் ...", இது சிவா.

" வீடு நம்பர் ஞாபகம் இல்லை. வாசலில் ரெட் கலரில் தபால் பெட்டி வைத்திருப்பார்களே அந்த வீடுடா. ", என்றான்.

" ஓ! அந்த சப்பை பிகர் ஒண்ணு இருக்குமே அந்த வீடா? ", என்று அடையாளம் கேட்டான் ஜீவா.

" தெரியலை", என்றான் வருண்.

" நீ வேஸ்டுடா. சரி நட. போய் பார்த்து வரலாம். ", என்று சொன்ன நண்பர்களை பின் தொடர்ந்தான் வருண்.


இருட்டும் வரை அங்கேயே சுற்றிக் கொண்டு நின்றார்கள். ஓரளவு இருட்டியதும் ஒடிப்போய் மைக்ரோவேவினை தூக்கிக் கொண்டார்கள். அறையில் கொண்டு போய் வைக்கும் வரை ஒரே டென்ஷன். யாராவது பார்த்திருப்பார்கள் என்பதை விட இந்தப் பொருள் வேலை செய்யுமா என்பதே டென்ஷனின் முதல் காரணம். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல சிறப்பாகவே வேலை செய்தது.
அக்கம் பக்கம் இருந்த இவர்களின் தோழர்கள் வந்து பார்த்து விட்டு சென்றார்கள்.

" உங்களுக்கென்னடா நல்லா வசதியா இருக்கிறீங்க. ", என்று காது படவே பேசினார்கள்.

மைக்ரோவேவ் வந்த பிறகு சமையல், தேநீர், சுடுதண்ணீர் வைப்பது என்று எல்லாமே இலகுவாக செய்ய முடிந்தது.
கல்லூரிப் படிப்பு முடியும் நேரம் இந்த மைக்ரோவேவினை ஓசியில் வாங்க பெரும் போட்டி நிலவியது. வருணுக்கு கொடுக்கவே விருப்பம் இல்லை. இறுதியில் சீட்டுக் குலுக்கி ஒரு நபரை தேர்ந்தெடுத்தான். அந்த நபர் மைக்ரோவேவினை கொண்டு சென்றபின்னர் அந்த இடமே வெறிச்சோடிப் போய்க் கிடந்தது போல தோன்றியது வருணுக்கு.

படித்து முடித்ததும் வேலை கிடைத்தது. நினைத்தால் ஒன்றுக்கு இரண்டாக மைக்ரோவேவ் வாங்குமளவிற்கு வசதி இருந்தாலும் அந்த பழைய மைக்ரோவேவ் போல வராது என்று எண்ணிக் கொண்டான்.

வருண் அஞ்சலியை திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு படித்த கல்லூரியினை சுற்றி காட்டினான்.
" இது தான் நான் குடியிருந்த இடம்", என்றான் ஒரு அடுக்குமாடி குடியிருப்பினை சுட்டியபடி.

" ஓ! அப்படியா ", என்றாள் அஞ்சலி.

அப்போது தட தடவென சில மாணவர்கள் இவர்களைக் கடந்து ஓடினார்கள்.

" வேகமா போகணும். அவனுங்க மைக்ரோவேவினை எடுப்பதற்கு முன்பு நாங்க முந்திடணும் ", என்றபடி மாணவர்கள் ஓடினார்கள்.
வருணும் ஏதோஒரு ஆர்வக் கோளாரினால் பின்னாடியே ஓடினான்.
ஒரு பிரிவினர் மைக்ரோவேவினை எடுத்துக் கொள்ள, மற்றப் பிரிவினர் மைக்ரோவேவ் கிடைக்காத சோகத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.


வருண் அவர்களின் அருகில் போனான்.

" தம்பிகளா! மைக்ரோவேவ் தானே வேணும்? வாருங்கள் நான் வாங்கித் தருகிறேன் ", என்று சொன்னவனை புரியாமல் பார்த்தபடி தயங்கி நின்றார்கள்.
" இல்லை.வேண்டாம் ", என்றார்கள்.
இவன் அவர்களின் ஒருவனின் கையில் பணத்தை திணித்து விட்டு, விடு விடுவென திரும்பி பாராமல் நடந்தான்.

" டேய்! ஏதோ லூஸா இருக்கும் போல. எங்களுக்கு மைக்ரோவேவ் வாங்க பணம் குடுக்கிறார்... ", மாணவர்களின் குரல்கள் காற்றில் தேய்ந்து மறைந்து காணாமல் போயின.
வருண் எதுவுமே காதில் விழாதவன் போல போய் காரில் ஏறிக் கொண்டான்.

மனம் நிறைவாக இருந்தது போல் தோன்றியது.

Tuesday, July 20, 2010

விருது!

ஆனந்தி எனக்கு குடுத்த விருது.


மிக்க நன்றி, ஆனந்தி.


மைதா மா - 1 1/2 கப்
சீனி - 1 கப்
பேக்கிங் பௌடர் - 3/4 டேபிள்ஸ்பூன்
பட்டர் - 113 கிராம் ( 4 oz )
முட்டை - 2
பால் - 1/2 கப்
வனிலா - 1/2 டீஸ்பூன்

அவனை 350 F க்கு முற்சூடு செய்யவும்.
கப் கேக் ட்ரேயின் உள்ளே பேப்பர் கப்களை போட்டு வைக்கவும்.

மா, சீனி, பேக்கிங் பவுடர் மூன்றையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கவும்.
பின்னர் பட்டரை சிறிய துண்டுகளாக வெட்டி சேர்க்கவும்.
மாக்கலவை நன்கு படும்படி மீண்டும் அடிக்கவும்.
முட்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும். நன்கு அடிக்கவும்.
இப்போது பாலினை சிறிது சிறிதாக ஊற்றி அடிக்கவும்.
வனிலா எசன்ஸ் சேர்க்கவும்.



மாவினை கரண்டியால் கப் கேக் ட்ரேயின் 2/3 பாகம் அளவிற்கு நிரப்பவும்.



முற்சூடு செய்த அவனில் 25 - 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.

குறிப்பு:
இதில் நான் பாவித்தது சால்டட் பட்டர்.
கேக்கின் மேல் ஐஸிங் போட்டு அலங்கரிக்கலாம்.
முட்டை, பட்டர் இரண்டும் ரூம் டெம்பரேட்சரில் ( room temperature )இருக்க வேண்டும்.
டயட்டில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு எதைப்பற்றியும் கவலைப்படாமல் சாப்பிடுங்கள்.
இந்த ரெசிப்பி நான் தொலைக்காட்சியில் பார்த்து கற்றுக் கொண்டது. இதை செய்து காட்டியவர் Ms. Ina Garten . குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதும் சுலபம்.

Sunday, July 18, 2010

தங்ககூண்டு!

லீசா, ஆன், ஜெனிபர், லீனா நால்வரும் இணைபிரியாத தோழிகள். ஜெனிபர் சிங்கிள் மதருக்கு ( கணவனால் கைவிடப்பட்ட பெண் ) ஒரே பெண். இவரைத் தவிர மற்ற மூவரும் மிகவும் வசதி படைத்தவர்கள். லீசாவின் தந்தை மனநல மருத்துவர், ஆனின் தந்தை ஒரு மிகப் பெரிய கம்பெனியின் தலமைப் பதவியில் இருப்பவர்.
இவர்கள் மூவரும் குடியிருப்பது வசதியானவர்கள் மட்டுமே குடியிருக்கும் பகுதி. பல மில்லியன் டாலர் விலையுள்ள வீடுகள் இவர்களுடையது. வாழ்வில் எல்லாவிதமான வசதிகளும் நிறையவே இருந்தன.

*******

கன்வீனியன்ட் ஸ்டோரில் முகமூடி அணிந்த ஒருவர் நள்ளிரவில் நுழைகிறார். அங்கு கல்லாவில் நின்றவரின் முகத்திற்கு நேராக துப்பாக்கி காட்டப்படுகிறது. கல்லாவில் நின்றவர் நடுங்கியபடியே இருந்த பணத்தை எல்லாம் எடுத்து முகமூடி அணிந்திருப்பவரிடம் கொடுக்கிறார். இது போல வேறு கடைகளில் பணம் கொள்ளையடிக்கப்பட்டன.
போலீஸார் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறிவிட்டார்கள். குறைந்தது 3,4 நபர்களாவது இச் செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது பொலீஸாரின் கருத்து. கடையில் பொருத்தப்பட்ட காமராவில் முகமூடி அணிந்திருந்தவரின் குரல் தெளிவாக பதிந்திருந்தது.

சில மாதங்கள் கடந்த பின்னர் காவல் துறைக்கு ஒரு முக்கியமான துப்பு கிடைக்கிறது. அந்த கொள்ளையர்கள் லீசா, ஆன், ஜெனிபர், லீனா என்பதே அந்த தகவல். காவல்துறை விசாரணையை தொடங்கியது. இதில் லீனா தவிர மற்றவர்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டார்கள். கொள்ளைக்கு காரணம் பணத்தேவை.

வசதியாக இருந்தாலும் பணப்பற்றாக்குறை நிலவியது இந்த டீன் ஏஜ் பெண்களுக்கு. லீசா தான் இந்த கூட்டத்திற்கு தலைவி. அவரின் யோசனையின் படியே மற்றவர்களும் செயல்பட்டனர். லீசா முகமூடி அணிந்து கொள்ள, இவர்கள் கொள்ளை அடித்த பிறகு தப்பிச் செல்ல கார் ஓட்டியர் லீனா.

இவர்களின் சார்பில் வாதாட வக்கீல்கள். எதிர்தரப்பில் வாதாட ஒரு வக்கீல். எதிர் தரப்பு வக்கீல் மிகவும் திறமையாக வாதாடினார்.

மில்லியன் டாலர்கள் சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்தாலும் யாராலும் சட்டத்தை விலை கொடுத்து வாங்க முடியவில்லை.


கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தில் தாரளமாக செலவு செய்தனர். பார்ட்டிகளுக்குப் போய் மது வகைகள் உட்கொண்டு விட்டு, மப்பில் இவர்கள் நண்பர்களிடம் உளறிக் கொட்டினார்கள். நண்பர்கள் காவல் துறைக்கு தகவல் சொல்லிவிட்டார்கள்.

குற்றத்தை ஒப்புக் கொள்ளாத லீனா தவிர மற்ற மூவருக்கும் ஜூரி எனப்படும் மக்களின் தீர்ப்பிற்காக காத்திருந்தார்கள். சில வழக்குகளில் இந்த ஜூரியின் தீர்ப்பே இறுதியானது. ஜூரியில் சாதரண பொதுமக்களில் 6 - 12 பேரை தேர்வு செய்வார்கள். இந்த 6- 12 பேரும் வழக்கு முடியும் வரை நீதிமன்றம் செல்வார்கள். விவாதங்கள், சாட்சிகள், தடயங்கள் என்று எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பார்கள். தடயங்கள், சாட்சிகள் எல்லாமே இவர்களை திருப்திப்படுத்த வேண்டும். ஒரு தனி மனிதனின் வாழ்வு இவர்களின் கையில் இருக்கும் போது இவர்கள் மிகவும் யோசித்தே தீர்ப்பு சொல்வார்கள். இறுதியில் இவர்கள் தங்களுக்குள் ஒன்று கூடிப் பேசி, தீர்ப்பை எழுத்து மூலம் நீதிபதிக்கு அளிப்பார்கள். இவர்களின் தீர்ப்பை மாற்றியமைப்பது அவ்வளவு சுலபம் அல்ல.


இவர்கள் குற்றவாளிகள் என்பதே ஜூரியின் தீர்ப்பு. லீனாவிற்கு 7 1/2 வருடங்களும். மற்ற மூவருக்கு தலா 7 வருடங்களும் சிறைத் தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நால்வரும் வாழ்க்கையில் இனிமேல் அழவே கண்ணீர் இருக்குமா என்று எண்ணுமளவிற்கு அழுது தீர்த்தார்கள்.

வசதியான பகுதியில் குடியிருந்தாலும் பொழுது போக்கிற்கு மால், தியேட்டர்கள் எவையுமே அங்கு இருக்கவில்லை. ஒரே ஒரு பொழுது போக்கு நண்பர்கள் சேர்ந்து பார்ட்டி வைப்பது. பெற்றோர்கள் பணம் பணம் என்று அதன் பின்னே ஓட, இவர்கள் வாழ்வில் அணைத்துக் கொள்ள யாரும் இல்லாமல் தீய வழியில் சென்று விட்டார்கள்.

கடைசியில் நீதிபதி, " நீங்கள் எவ்வளவு வசதியான வீட்டில் குடியிருக்கிறீர்கள் அல்லது உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கு என்பது இங்கு முக்கியமில்லை. நீங்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகளுக்கு மரண பயத்தை உண்டாக்கினீர்கள். " - என்று பஞ்ச் டயலாக்குடன் வழக்கினை முடித்தார்.

தங்க கூண்டு என்பதற்காக உள்ளே பூட்டிக் கொண்டு இருக்க முடியுமா?

( இது உண்மைச் சம்பவம். சில மாதங்களின் முன்பு தொலைக்காட்சியில் நான் பார்த்த நிகழ்ச்சி இது.
)