Friday, December 30, 2011

இலவசம், இலவசம் ஓடிவாங்கோ

ஒரு பொருள் வாங்கும் போது இன்னொரு பொருள் இலவசமாக கிடைத்தால் பெரும்பாலனவர்களுக்கு சந்தோஷமே. எண்ணெய், லோஷன் பாட்டில்களில் 20% அதிகம் என்றோ அல்லது கடுகு, பெருஞ்சீரகம் 30% அதிகமாக அடைக்கப்பட்டுள்ளது என்று பொதிகளில் அச்சிடப்பட்டிருந்தால் உடனே வாங்கி வந்துவிடுவோம். சமீபத்தில் என் கணவர் ரெடிமேட் ஊத்தப்பம் மா வாங்கி வந்தார். எனக்கு ரெடிமேட் பொடி வகைகள், மா, இட்லி, தோசை மா வகைகள் எப்போதும் பிடிப்பதில்லை. இந்த ஊத்தப்ப மா பார்த்ததும் கடுப்பு வந்தது. கூடவே சாம்பார் பொடி இலவசம் என்று இருந்தது. என் ஆ.காரரிடம் இதை எதுக்கு வாங்கினீங்க என்று கேட்டேன். ஒரு நாளைக்கு சாப்பாடு செய்கிற வேலை மிச்சம் என்றார். ஒரு கல்லில் ரண்டு மாங்காய் அடிச்சிட்டேனே என்று ஒரே பெருமை வேறு. சாம்பார் பொடியும், ஊத்தப்பம் மிக்ஸூம் இரண்டு மாங்காய்களாம்.
பழி வாங்க நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்துக் கொண்டேன். அன்று இரவே ஊத்தப்பம் செய்வது என்று முடிவு செய்தேன். பொதியில் சொல்லப்பட்ட முறையின்படி மாவை மிக்ஸ் செய்ய, பொதியினைத் திறந்தால் ஏதோ ஒரு வகையான மணம். வேறு சாப்பாடுகளும் இதை நம்பி ஆயத்தமாக இல்லாத காரணத்தினால் இதையே கல்லில் ஊற்றினேன். என் கணவர் வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்தார்.

ஆனால் பாருங்கள் ஒரு விதமான புகாரும் இல்லை. இரண்டு மாங்காயில் ஒரு மாங்காய் பழுது என்று அவரின் முகத்தைப் பார்க்க விளங்கியது. சாம்பார் பொடியும் ஷெல்ஃபில் அப்படியே தூங்குது. மாங்காய் அல்ல கல்லுத் தான் திரும்ப வந்திருக்கு.

ஊரில் இடம் பெயர்ந்து சென்று ஒரு பள்ளியில் இருந்த போது சாப்பாடு வாங்க காசு இருக்கவில்லை. பெரும் பசி எல்லோருக்கும். ஒரு வகுப்பறைக் கதவில் பெரிய பூட்டுத் தொங்கியது. யாரோ சொன்னார்கள் அந்த அறையில் சாப்பாட்டுப் பொருட்கள் இருப்பதாக. சிலர் அதை திறக்க விடமாட்டோம் என்று வாசலில் காவல் இருந்து களைத்துப் போய் போன பிறகு, வேறு சிலர் கதவினை உடைக்க மக்கள் உள்ளே புகுந்து சாப்பாட்டுப் பொருள்களை எடுத்தார்கள். ஒரு பக்கம் நிறைய நோட்டுக்கள், பென்சில், பேனாக்கள் இருந்தன. கதவினை உடைத்தவர்கள் சொன்னார்கள், தயவு செய்து சாப்பாட்டுப் பொருள்களை மட்டும் எடுங்கள். வேறு எதையும் தொட வேண்டாம். சரி என்று தலையாட்டிய மக்கள் பேனா, பென்சில், நோட்டு என்று எதையும் விட்டு வைக்கவில்லை. என் பிள்ளைக்கு பொழுது போக வேண்டாமா? அவனும் எவ்வளவு நேரம் தான் விட்டத்தையே வெறிப்பது என்று ஒரு அப்பா சொன்னார். இலவசம் என்பதுக்காக எதுக்கு எமக்கு வேண்டாத பொருட்களை எடுக்க வேண்டும். அடுத்த நாள் நோட்டில் கிழிக்கப்பட்ட பேப்பர்கள் கப்பல், ராக்கெட், குப்பைகளாக மாறி இருந்தன.


இந்தியாவில் இருந்த போது, ஒரு முறை குரோசரி கடையில் ஒரு பெண்மணி ஒரு பொருளை வாங்கிய பின்னர் நகராமல் அங்கேயே நின்றார்.
என்னம்மா வேணும், என்றார் கடைகாரர்.
ஏதோ ஃப்ரீன்னு போட்டிருக்கு. அதை குடுத்தா என்ன குறைஞ்சா போடுயிவாய், என்றார் பெண்மணி.
அது கொலஸ்ட்ரால் ஃப்ரீன்னு போட்டிருக்கு. போய் வேலையைப் பாரும்மா, என்று கடைக்காரன் பதில் சொல்ல, பெண்மணியின் முகம் வாடிப் போய்விட்டது.

ஒரு வெள்ளைக்கார ஆன்டிக்கும் அங்கிளுக்கும் 25வது மணநாள். இன்று என் மனைவிக்கு ஏதாவது பரிசுப் பொருள் வாங்கி குடுத்துட்டுத் தான் மறுவேலை என்று கணவர் கிளம்பினார். அவர் ஏதோ வைரத்தால் மனைவியை இழைக்கப் போகிறார் என்று பார்த்தால் மனிதர் குப்பைத் தொட்டியை தேடிச் செல்கிறார். குப்பைக்குள் இறங்கி ஒரு வாடிய ரோஜாப் பூச்செண்டினை எடுக்கிறார். வேறு குப்பையில் ஒரு தேநீர் கேட்டிலும் எடுத்துக் கொள்கிறார். 1.68 டாலருக்கு இனிப்பு மிட்டாய், ஒரு மனித மண்டை ஓட்டு பொம்மை வாங்கிக் கொள்கிறார். இரவு மனைவியை சாப்பிட வெளியே அழைத்துச் செல்கிறார். மனைவி ஒரு கண்டிஷனோடு செல்கிறார். சரி அப்படியே ஆகட்டும் என்கிறார்கணவர். சாப்பிட்ட பின்னர் மனைவியின் கண்களை மூடச் சொல்கிறார். ஒரு பெரிய சாக்குப் பையினை காரிலிருந்து எடுத்து வந்து, ரோஜா செண்டினை வெளியே எடுத்து மனைவிக்கு கொடுக்க மனைவியின் முகத்தில் எரிச்சல். என்ன செத்துப் போன பூவை தருகிறாயே? என்கிறார். பின்னர் கேட்டில், மிட்டாய்கள், பொம்மை எல்லாவற்றினையும் கொடுத்த பின்னர் பக்கத்து மேசையினை நோக்கி ஓடுகிறார். அங்கே மிஞ்சிப் போன உணவுகளை சேகரித்துக் கொண்டிருக்கிறார்.

நீ வரும் போதே இந்த வேலை செய்யமாட்டேன் என்று சொன்னபடியால் தான் உன்னுடன் வந்தேன். இப்ப இப்படி செய்கிறாயே, என்றபடி மனைவி எழுந்து வெளியே போகிறார்.

அட! பதறே என்பது போலப் பார்க்கிறார்கள் அங்கிருந்த மக்கள். இவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மேசைக்கு மேசை ஓடி, ஓடி உணவுகளை சேகரிக்கிறார். இது மனநோயாக இருக்குமோ என்பது என் கருத்து.
இது அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி. உலக மகா கஞ்சன்கள் என்று வேறு சிலரைக் காட்டினார்கள்.

எங்கள் இடத்தில் இருக்கும் மிருக காட்சி சாலையில் கோடை காலம் குறிப்பிட்ட நாட்களுக்கு அனுமதி இலவசம். இதற்காக மக்கள் கூட்டம் அலை மோதும். என் பக்கத்து வீட்டுப் பெண்மணி காலையில் எழுந்து போகப் போவதாக சொன்னார். நீயும் போறியா, என்று என்னைக் கேட்டார்.
காசு கொடுத்து இல்லை காசு கொடுக்காமலும் பாம்பினை பார்க்க நான் ரெடி இல்லை என்று சொன்னேன்.
ஃப்ரீ தானே போய் பார்க்க வேண்டியது என்றார்.
மிருக காட்சி சாலைகளில் சிங்கம், புலி, கரடி இப்படி மிருகங்கள் தப்பி ஓடுவது போல பாம்பும் ஓடி, மறைந்து நின்று, நான் போக வெளியே வந்தால்...

இல்லை நான் வரவில்லை. நீ போய் நல்லா எஞ்சாய் பண்ணு என்று கழன்று கொண்டேன்.
எதுக்கு எல்லாம் இலவசம் என்று ஒரு வரை முறையே இல்லாமல் போய்விட்டது.