Friday, April 2, 2010

Mickey Mouse ( எலி )

இந்த எலியாரை நான் சங்கிலி தையல், க்ராஸ் ஸ்டிச், ஹெர்ரிங் போன் தையல்களால் நிரப்பினேன். எப்படி இருக்கின்றார் என் எலி?






Thursday, April 1, 2010

ஆயா

ஆயா- இது தான் அவனின் பெயர். உண்மையான பெயர் யாருக்குமே தெரியாது. ஏன் ஆயாக்கு கூடத் தெரியாது. இலங்கையின் கடலோரக் கிராமம் ஒன்றில் ஆயா வசித்து வந்தது. நெடிய உருவம். முன் வரிசைப் பற்கள் துருத்திக் கொண்டிருக்கும். கொஞ்சம் மனநிலை சரியில்லை. எங்கோ சூனியத்தை பார்த்தபடி நடக்கும். யாராவது திட்டினால் கையில் மண்ணெடுத்து ஏதோ மந்திரம் சொல்லி விட்டு, மண்ணை அவர்களின் மேலே விட்டெரியும். ஆயாக்கு தண்ணி என்றாலே பயம். மாசத்தில் ஒரு நாள் குளிப்பதே பெரிய அதிசயம்.

சினிமா என்றால் பைத்தியம். சரோஜாதேவி என்றால் உயிர். சரோசாதேவி, சரோசாதேவி என்று எப்போதும் அவரின் புகழைப் பாடும்.

ஆயாக்கு சொந்தம் என்று யாருமில்லை. குழந்தைகளற்ற ஒரு வயதான தம்பதிகளின் ( இராமசாமி தாத்தா, பொன்னுத்தாயி ஆச்சி) திண்ணையிலே தங்கியிருந்தது. அங்கேயே தூங்கி, பொன்னுதாயி ஆச்சி கொடுத்த உணவை சாப்பிட்டு உயிர்வாழ்ந்து கொண்டிருந்தது. யாருக்கும் பயப்படாத ஆயா பொன்னுத்தாயி ஆச்சியின் அன்புக்கு மட்டுமே கட்டுப்படும். அவர் என்ன சொன்னாலும் கேட்கும் ஆயா குளிக்க சொன்னால் மட்டும் வெறி வந்தது போல கத்தும். ஆச்சியும் பதிலுக்கு கத்துவார்.

ஆயாக்கு வாழ்வில் இருந்த ஒரே ஒரு இலட்சியம்.
ரஞ்சனி டீச்சரை கல்யாணம் பண்ண வேண்டும்.
இல்லாவிட்டால் சரோசாதேவியை மணம் புரிய வேண்டும்.

ரஞ்சனி டீச்சர்- ரவிவர்மாவின் ஓவியம் உயிர்த்தெழுந்து வந்தது போல ஒரு அற்புதமான அழகு. ரஞ்சனி டீச்சருக்கு ஆயாவின் ஒரு தலைக் காதல் தெரியாது. ஒரு நாள் கடையில் பூ, பழங்கள் வாங்கி கொண்டு டீச்சரின் வீட்டிற்கே போய் விட்டது ஆயா பெண் கேட்டு.
மிகவும் கோபம் கொண்ட டீச்சரின் அப்பா நையப்புடைத்து விட்டார். திண்ணையில் நோவுடன் படுத்திருந்த ஆயாவை பொன்னுத்தாயி ஆச்சி தன் பங்குக்கு காய்ச்சி எடுத்துவிட்டார்.

பொன்னுத்தாயி ஆச்சி: உன் முகரைக்கு அந்த பொண்ணு கேட்குதோ?. நீ மாசத்திலே ஒரு நாள் குளிப்பதே பெரும்பாடு. அப்படியே அந்த பொண்ணு உன்னைக் கட்டிக்கிட்டாலும் இந்த நாத்தத்தில் எப்படி குடும்பம் நடத்தும். பெரிய ஆள் போல பொண்ணு கேட்க போயிட்டார்...
என்று திட்டிவிட்டு திண்ணையில் கிடந்த ஓலைப் பெட்டியை தூக்கி மேலே கடாசிவிட்டுப் போய்விட்டார்.

மிகவும் நொந்து போன ஆயா முன்பைவிட இன்னும் வெறித்தனமாக டீச்சரின் பின்னே அலைந்தது. டீச்சர் பூனைப் படை( அவரின் அம்மா) பாதுகாப்புடன் ஸ்கூல் போய் வந்தார். ஆயா போய் பள்ளி வாசலிலே தவம் கிடக்கும். ஆயாவின் கிறுக்கு எல்லை மீறி போவதைக் கண்டு பயந்து, டீச்சருக்கு மாப்பிள்ளை பார்த்து, நிச்சயம் செய்து விட்டார்கள். கலியாணம் நல்ல சிறப்பாகவே நடந்தது.

கல்யாண வீட்டிற்கு போய் வந்த பொன்னுத்தாயி ஆச்சி ஆயாக்கு கல்யாண சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தார். ஆயா வெறுப்புடன் சாப்பாட்டை பார்த்து விட்டு, அங்கு நின்ற சொறி நாய்க்கு சாப்பாட்டைக் கொட்டியது.

டீச்சர் திருமணம் முடிந்ததும் ஒரு மாசத்தில் வேறு ஊர் போய் விட்டார்.

ஆயா சாப்பிடாமல், யாருடனும் பேசாமல் மவுனம் காத்தது. இதில் 2 மாசம் குளிக்காமல் வேறு இருந்தது. நாத்தம் தாங்கமுடியாத ஆச்சி 3 பேரை துணைக்கு அழைத்துக் கொண்டு வந்து, ஆயாக்கு குளிப்பாட்டச் செய்தார்.


டீச்சர் போன சோகம், குளிப்பாட்டிய சோகம் என்று நொந்து போன ஆயா தலைமறைவாகி விட்டது. ஆச்சியும் தேடிக் களைத்து விட்டார்.

ஒரு நாள் ஆயா கடற்கரையில் நிக்குது என்று தகவல் வந்தது. ஆச்சி பக்கத்து வீட்டு பழனி மாமாவையும் துணைக்கு கூட்டிக் கொண்டு போனார். அங்கு ஆயா மீனவர்களுடன் வாக்குவாதம் பண்ணிக் கொண்டு நின்றது.

ஆச்சி போனதும் அவர்கள், " உன் பிள்ளையா?? இவனுக்கு இந்தியா போக வேண்டுமாம். அங்கே போய் சரோசாதேவியைக் கல்யாணம் பண்ண வேண்டுமாம். தினமும் வந்து எங்கள் உயிரை எடுக்கிறான். படகு அவ்வளது தூரமெல்லாம் போகாது என்று சொன்னாலும் கேட்கிறானில்லை. கூட்டிக் கொண்டு போய் நல்ல புத்திமதி சொல்லு." என்றார்கள்.

ஆச்சி வா என்று சொன்னதும் ஆயா வீட்டிற்கு சமர்த்தாக வந்தது. திண்ணையில் இருந்து ஆச்சி கொடுத்த உணவை சாப்பிட்டது.

அடிக்கடி கடற்கரைக்கு போய் மீனவர்களின் உயிரை எடுப்பதை விடவில்லை. காலை மாலை என்று இருவேளையும் போய் வரும். மீனவர்களுக்கும் ஆயா நன்கு அறிமுகமாகி விட்டது.

இவன் தொல்லை பொறுக்க முடியாமல் ஒருவர் இவனுக்கு, "நான் இந்தியா போய் சரோசாதேவியைக் கூட்டிக் கொண்டு வருகிறேன். அது வரை நீ இந்த படத்தை வைத்திரு." என்று கூறி பேப்பரில் வந்த சரோஜாதேவியின் படத்தை வெட்டிக் கொடுத்தார்.
அந்த படத்தை திண்ணையில் ஒட்டி வைத்திருப்பது, வெளியே எங்காவது போகையில் கையில் வைத்திருப்பது என்று ஆயாக்கு பொழுது போய் விடும்.

இப்பெல்லாம் ஆயா சரோஜாதேவியைப் பற்றி கதைப்பது குறைந்து விட்டது. அவரின் படத்தை பார்த்து திருப்தி அடைந்து விட்டதா?. அல்லது அந்த நபர் சொன்ன வாக்கை காப்பாற்றுவார் என்று நம்பிக்கையில் வாழ்கின்றதா என்பது புரியாத புதிர்.

Sunday, March 28, 2010

ஐரிஸ் ஃபோல்டிங்- பறவை



ஐரிஸ் ஃபோல்டிங் முறையில் பறவை. பறவையின் வாலுக்கு ரோஸ் இதழ்களை வைத்து அலங்கரித்தேன். மேலும் விளக்கத்திற்கு கீழே இருக்கும் லிங்க் பாருங்கள்.
Iris Folding