Friday, July 29, 2011

யாமினி எங்கே போனாள்?

புது இடம். புது பள்ளி. டென்ஷனாக இருந்தது நிம்மி எனப்படும் நிர்மலாக்கு. வகுப்பறையில் கொண்டு போய் விடப்பட்டாள். அறிமுக படலம் முடிந்த பின்னர் ஆசிரியை பாடம் நடத்த ஆயத்தமாகினார். இவள் போய் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள். பாடத்தில் மனம் லயிக்கவே இல்லை. பாட நேரம் முடிந்து ஆசிரியை போனதும் சுற்றும் முற்றும் பார்வையினை ஓட விட்டாள். பக்கத்தில் காட்டான் போல ஒரு மாணவி. இவளுக்கு பயமாக இருந்தது.
" என்னலே பார்க்கிறே? ", என்றாள் அந்த மாணவி.
இல்லை... என்று எச்சில் விழுங்கியபடி வேறு எங்காவது இடம் கிடைக்குமா என்று பார்வையினை ஓடவிட்டாள்.

" உன் பெயர் என்ன?", என்று அதட்டினாள் அந்தப் பெண்.

" நிம்மி", என்றாள் இவள்.

" என் நாய் பெயர் ஜிம்மி. உன் பெயர் நிம்மி. நல்ல ரைமிங்கா இருகில்ல ", என்று விட்டு பெருங்குரலில் சிரித்தாள்.

அன்று தொடங்கிய பயம் அதன் பிறகு இன்னும் அதிகமாகியதே தவிர குறையவில்லை நிம்மிக்கு.

பருந்தினைக் கண்ட கோழிக்குஞ்சு போல ஒதுங்கியே இருந்து கொண்டாள். அந்த மாணவியின் பெயர் யாமினி என்று அறிந்து கொண்டாள்.
யாமினி எல்லோருக்கும் ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தாள். வயசுக்கு மீறிய உடல், குரல், நடை எல்லாமே மற்றவர்களையும் ஒதுங்கி போகும் படி செய்தது.

3 அடி நீள பெஞ்ச், கீழே புத்தகங்கள் வைப்பதற்கு வசதியாக ஒரு இழுப்பறை.
போன முதல் நாளே யாமினி 3 அடி பெஞ்சின் நடு மையமாக ஒரு கோடு போட்டு விட்டாள்.
" இதப் பாருலே இந்தக் கோட்டுக்கு அந்தப் பக்கம் உன்னுது. இந்தப் பக்கம் என்னுது. மீறி இந்தப் பக்கம் கை வந்திச்சு பிச்சுப் போடுவேன்", என்றாள்.

வேறு எங்கும் இடம் கிடைக்காத காரணத்தினால் நிர்மலா தலையாட்டி விட்டு ஒதுங்கிக் கொண்டாள்.

யாமினிக்கு படிப்பு ஏறவே இல்லை. அப்பாவின் தொல்லையாலோ அல்லது இவளை வீட்டில் வைச்சு சமாளிப்பது கஷ்டம் என்பதாலோ பள்ளிக்கு அனுப்பினார்கள்.

ஒரு நாள் யாமியை காணவில்லை. அவள் யாருடனோ ஓடிவிட்டதாக சொன்னார்கள்.
பள்ளிக்கு அவளின் அப்பா ஒரு பெரும் படையுடன் வந்து விட்டார். ஒரு சிலர் அதிபருடன் நின்று வாக்கு வாதம் செய்ய, மறு பிரிவினர் வகுப்பறைக்கு வந்தனர்.

" யாமினியின் இடம் எது ?" , என்றான் ஒருவன்.
யாரோ கையை காட்ட, விர்ரென்று அம்பு போல பறந்து வந்தான். நிம்மிக்கு நடுக்கம் பிடித்துக் கொண்டது. வந்தவன் பெஞ்ச் இழுப்பறையினை திறந்தான். உள்ளே கிடந்த பொருட்களை தாறுமாறாக தூக்கி வீசினான்.
யாமினியின் அப்பா விழிகளை உருட்டியவாறு உறுமிக் கொண்டே நின்றார். இவரை விட யாமினியே பரவாயில்லை போல தோன்றியது நிம்மிக்கு.

" நீதான் என் பெண்ணின் நண்பியா? ", என்றார் நிம்மியை நோக்கி.

"இல்லை. நானி....", என்றாள் அவளுக்கே கேட்காத குரலில்.

"எலேய்! உண்மையை சொல்லிப்போடு. இல்லை தொலைச்சுப் போடுவேன். ", என்று மிரட்டினார்.
அதிபரின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.
" பக்கத்தில் இருந்த உனக்கு தெரியாமல் அவள் ஓடியிருக்க மாட்டாள். எங்கே போனாள், யார் கூடப் போனாள்ன்னு சொல்லிடு ", என்று கூட்டமாக நின்று மிரட்டினார்கள்.

இவள் சொன்ன சமாதானங்கள், காரணங்கள் எதுவுமே எடுபடவில்லை.
நாளைக்கு மீண்டும் வருவோம். உண்மையை சொல்லிடு என்று மிரட்டி விட்டு போய் விட்டார்கள்.
நிம்மிக்கு பயத்தில் காய்ச்சல் வந்து விட்டது. ஒரு வாரம் பள்ளிக்கு போக முடியாதபடி காய்ச்சல் வாட்டி எடுத்தது.
மீண்டும் பள்ளிக்கு சென்றபோது இவளின் பெஞ்ச் இழுப்பறையினையும் யாரோ சோதனை போட்டிருந்தது தெரிந்தது.
யாமினி அலை கொஞ்சம் ஓய்ந்து போயிருந்தது.
கீழே விழுந்த பேனாவை எடுக்க குனிந்த போது நான்காக மடிக்கப் பட்ட காகிதம் கண்களில் பட்டது. பேப்பர் கசங்கி இருந்தமையால் யாரும் அதை சட்டை செய்யவில்லை போலத் தோன்றியது நிம்மிக்கு.
காகிதத்தினை பிரித்தாள். அது யாமினி அவளின் அப்பாவிற்கு எழுதிய மடல்.

அன்பின் அப்பா, இப்படி எழுதவே வெறுப்பாக வருகின்றது. அன்பிற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். ஒரு நாள் கூட உங்கள் முகத்தில் புன்சிரிப்பை நான் கண்டதில்லை. எ
ப்போது பார்த்தாலும் அடி தடி, ஆள் அம்பு என்று உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? நான் யாருடனோ ஓடிப்போய் விட்டதாக ஊர் பேசும். அப்படியே பேசட்டும். நான் கன்னியாஸ்திரி ஆகப் போகிறேன். எதிர்காலத்தில் நீங்கள் திருந்தி நல்ல மனிதராக இருந்தால் சந்திக்கலாம்.

யாமினி.

நிம்மிக்கு யாமினி மீது இரக்கம் உண்டானது.
கடிதத்தினை மடித்து, பையில் வைத்துக் கொண்டாள். கடிதத்தினை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது நிம்மிக்கு. பள்ளியில், யாமினி வீட்டில் கொடுத்தால் இவளை சந்தேகமாக பார்ப்பார்கள்.
யாமினியின் அப்பாவை நினைக்கவே கலக்கமாக இருந்தது.
பள்ளி விட்டதும் வேகமாக வீடு நோக்கி நடந்தாள். வீட்டில் போய் கடிதத்தினை கிழித்துப் போட்டு விட எண்ணினாள்.
வழியில் காளி கோயிலை கடக்கும் போது அந்த யோசனை தோன்றியது.
பேப்பரை சுருட்டி, நூலில் கட்டி, அங்கிருந்த மரக்கிளையில் தொங்க விட்டாள். நூற்றுக்கணக்கான சுருட்டப்பட்ட காகிதங்களோடு யாமினியின் கடிதமும் சேர்ந்து கொண்டது. யாமினி கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்று காளியிடம் வேண்டி கொண்டாள். திரும்பி பாராமல் வீட்டினை நோக்கி வேகமாக ஓடத் தொடங்கினாள்.