Monday, February 27, 2012

50 கிலோ தாஜ்மகால் இப்போ...

ஐந்து வருடங்களின் பின்னர் ஊருக்கு வந்த சந்தோஷம் மனைவி ருக்மணியின் முகத்தில் கொஞ்சம் கூட இருக்கவில்லை. எதையோ பறி கொடுத்தவள் போல இருந்தாள்.என் தங்கையின் திருமணத்திற்கு கிட்டத்தட்ட 400 பேராவது வந்திருந்தார்கள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று கோபம் வந்தது கணேஷுக்கு.

ஏன் ருக்கு, என்ன நடந்தது? ஏன் இப்படி சோகம்? என்றான் மனைவியிடம்.
அவள் பதில் சொல்ல முன்னர். கோபி சித்தப்பா வந்தார்.
கணேஷ், எப்படி இருக்கிறாய்? உன் மனைவி வரவில்லையா?, என்றார்.
கணேஷ் பக்கத்தில் இருந்த ருக்மணியைக் காட்டினான். கோபி சித்தப்பா ஏதோ உலக அதிசயத்தைக் கண்டவர் போல விழிகள் விரிய சில நிமிடங்கள் நின்ற பின்னர் கடந்து போனார்.
ருக்மணியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது.
கணேஷ், வாங்க ஊருக்கே திரும்ப போகலாம். வந்ததிலிருந்து எல்லோரும் என்னை வெறுப்பேத்திக் கொண்டு இருக்கிறார்கள். நான் என்ன செய்வேன். என் உடம்பு வாகு அப்படி. சும்மா பால் குடிச்சாலே 1 கிலோ ஏறுது. உங்க வீட்டு வாண்டிலிருந்து பெரிசு வரை எல்லோரும் என் உடம்பினை நக்கல் செய்கிறார்கள். இப்ப கூட பாருங்க உங்க சித்தப்பாக்கு என்னை அடையாளம் தெரியவில்லை, என்றாள் சிவந்த முகத்தோடு.

அப்படி இருக்காது ருக்கு. நீ முன்பு இருந்ததை விட இப்ப இன்னும் கூடுதலாக அழகா இருக்கிறாய் அல்லவா.... என்று தொடர்ந்த கணவனை எரித்து விடுவது போல பார்த்தாள்.

நீங்க இங்கேயே இருங்கள். நான் போகிறேன், என்று கிளம்பிய மனைவியை நிப்பாட்டுவதற்குள் பிராணன் போய்விட்டது கணேஷுக்கு.
அதன் பிறகு மனைவியை விட்டு எங்கேயும் நகராமல் அருகிலேயே நின்றான்.

திருமணம் ஆகிய போது ருக்மணியும் 50 கிலோ தாஜ்மகால் போல் தான் இருந்தாள். வெளிநாடு போன பின்னர் கிட்டத்தட்ட 25 கிலோ ஏறிவிட்டது உண்மைதான். எப்போதும் ருக்மணியின் அருகிலேயே இருந்தமையால் அவளின் எடை ஒரு பெரிய பிரச்சினையாக தெரியவில்லை. இப்படி எங்காவது கிளம்பி வந்தால்தான் விளங்குது. ஒரு சிலருக்கே ருக்மணியை அடையாளம் தெரிந்தது. பலருக்கு இவளை அடையாளம் தெரியவில்லை. வலிந்து புன்னகைத்தபோதும் விலகிச் சென்றார்கள். ஒரு கட்டத்தின் பின்னர் அழுகை மட்டுமே மிஞ்சியது.

ஏம்பா கணேஷ், உன் மனைவி உனக்கு சாப்பாடு தர்றாளா இல்லையா?, என்று இவனின் ஒன்றுவிட்ட பாட்டி கேட்டபோது, சுற்றும் முற்றும் பார்வையினை ஓடவிட்டாள் ருக்மணி. ஏதாவது கையில் அகப்படுமா என்பது போல பார்த்தாள்.
பாட்டியை அங்கிருந்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
கிழடு மட்டும் இன்னும் இங்கு ஒரு 1 செக்கன்ட் நின்றிருந்தால் மண்டையை பிளந்திருப்பேன், என்றாள் ருக்மணி.
மனைவியை சமாதானப்படுத்தி, வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வருவதற்குள் வாழ்க்கை வெறுத்துப் போனது.

ஊருக்கு போனதும் இவளை ஒரு ஜிம்மில் சேர்த்து விட்ட பிறகு தான் மறுவேலை என்று நினைத்துக் கொண்டான்.
கணேஷ், நீங்களும் என்னை வெறுக்கிறீங்க இல்லையா?, என்றாள் ருக்கு. இப்பவே உங்களுக்கு வேறு ஒரு பெண் பார்க்கச் சொல்லுங்க. நான் எங்கையாவது போய்த் தொலைகிறேன், என்று தொடர்ந்தாள் ருக்கு.
ருக்கு, ஊருக்கு போனதும் உன்னை ஜிம்மில் சேர்த்து விடுகிறேன். இப்ப அழ வேண்டாம் என்றவனை இடைமறித்தாள்.
அப்ப நீங்களும் ஒத்துக் கொள்கிறீங்களா நான் குண்டு என்பதை. நான் இப்பவே எங்காவாது தொலைந்து போகிறேன், என்றாள்.

கடவுளே! என்று மனதினுள் நினைத்துக் கொண்டான்.

அந்த நேரம் கணேஷின் தங்கை சுவர்ணா வந்தாள், அண்ணி, உங்களை பெரும்பாலும் யாருக்கும் அடையாளமே.... என்று முடிக்கும் முன்னர் கணேஷ் அவளை அங்கிருந்து விரட்டி விட்டான். இருக்கிற பிரச்சினை பத்தாது என்று இவள் வேறு எதுக்கு என்று ஆத்திரம் வந்தது.
சுவர்ணா வசனத்தை முடிக்காவிட்டாலும் ருக்கு இறுதி வார்த்தையினை அவளே போட்டு நிரப்பிக் கொண்டாள். அழுகை இன்னும் கூடியது.


இந்த சம்பவத்தின் பிறகு ருக்குவிடம் பழைய கலகலப்பு காணாமல் போனது. ஏதோ கடமைக்கு இருப்பவள் போல இருந்தாள்.
ஊருக்கு போகும் நாளும் வந்தது. இவர்களை வழியனுப்ப ஒரு பெரிய கூட்டமே வந்திருந்தது.
எல்லோரிடம் விடைபெற்று காரில் ஏறி அமர்ந்த பின்னர் ருக்மணியின் பெரியப்பா, பெரியம்மா இருவரும் ஒரு பெரிய பொதியுடன் வந்தார்கள்.
எங்க ருக்குக்கு வழியில் பசிக்குமே அதுக்கு தான் இந்த தின்பண்டங்கள் எல்லாம் வீட்டில் செய்து கொண்டு வந்தோம் என்றார்கள்.
பையினுள் முறுக்கு, சீனிப்பணியாரம், அதிரசம் இப்படி ஏகப்பட்ட தின்பண்டங்களை கண்டதும் ருக்குவின் முகத்தில் ஒரு மின்னல்.

பையினை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டாள். ஊர் போய் சேரும் வரை அவளின் வாய் ஓயப்போவதில்லை.

பையினை தூக்கி எறிய வேண்டும் போல ஆத்திரம் வந்தது கணேஷுக்கு. அடக்கிக் கொண்டான்.

இவ்வளவு நாட்களா.. இல்லையில்லை வருடங்களா இவளின் எடை பற்றி நான் கவலைப்பட்டதில்லை. இப்ப யாரோ சொன்னதும் எனக்கும் அது ஒரு பெரிய பிரச்சினையாக மாறி, விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கூடவே இருந்து குடும்பம் நடத்திய நான் அல்லவா மனைவியின் நலனில் அக்கறை காட்டி இருக்க வேண்டும். இப்ப யாரோ சொன்னார்கள் என்பதுக்காக நான் அவளை வெறுப்பது நியாயம் இல்லை. ஊருக்கு போனதும் இருவருமே ஜிம்மில் இணைந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஒரு சிறுமி போல பொதியினை அணைத்துக் கொண்டே தூங்கி விழுந்த மனைவியை பார்த்து மனதினுள் சிரித்துக் கொண்டான்.


( குறிப்பு: 50 கிலோ தாஜ்மகாலாக இருந்து 80 கிலோவாக மாறிய அனைவருக்கும் இந்தக் கதை சமர்ப்பணம். )