Wednesday, January 19, 2011

பழையன கழிதலும்


புத்தாண்டு இப்படி தான் இருக்க வேண்டும், இருக்கப் போறேன் என்று எதையும் ப்ளான் பண்ணி செய்வதில்லை. 2011 ல் நெடு நாட்களாக நினைத்த காரியம் நடைபெற வேண்டும்/நடை பெறும் என்றே நம்புகிறேன்.
2010 - சுமாரான ஆண்டாகவே இருந்தது. சில நேரங்களில் வாழ்க்கையே வெறுக்கும் அளவிற்கு போனாலும் ஓரளவிற்கு தாங்கி, வாழ்க்கை கரடு முரடான பாதையிலும் செல்லும் என்று மனதை தேற்றிக் கொண்டதுண்டு.

ஒவ்வொரு முறையும் வெயிட் குறைக்க வேண்டும் என்று நினைப்பதோடு நின்று விடாமல், அதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டது 2010 தான். அது 2011 ம் சாத்தியமாக வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஜனவரி - புதுவருடத்தில் சபதம் எடுத்தாச்சு இனிமே என்ன செய்வதுன்னு ஒரே யோசனை. அப்படியே ஜனவரி மாசம் முடியும் வரை நான் யோசிப்பதை நிறுத்தவே இல்லை.

மாசி மாசம் ஸ்நோ க்ளீன் பண்ணியதிலேயே நாட்கள் இறக்கை கட்டிப் பறந்தன. மலை போல குவிந்த பனியை கிளீன் பண்ணி கொட்டுவதற்கு இடமில்லாமல் அலைந்து திரிந்த மாசம். ஒரே ஒரு சந்தோஷம் பெரிசா என்னவோ சாதிச்சு கிழிசாப் போல ஸ்நோ க்ளீன் பண்ணுவது போல போட்டொ எல்லாம் பிடிச்சு வைச்சது தான்.

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பெரிசா எதுவுமே சாதிக்கவில்லை. நூல் நிலையத்திற்கு அடிக்கடி சென்று வந்தது, ப்ளாக் எழுத ஆரம்பித்தது.

ப்ளாக் எழுத ஆரம்பித்ததும் 2010 ல் தான். சும்மா பொழுது போக்காக கிறுக்க ஆரம்பித்தேன். தேவதை இதழில் வெளிவந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள்.

கிட்டத்தட்ட 5 வருடங்களின் பின்னர் என் தங்கை, அவரின் கணவரை போன வருடம் சந்தித்தேன். ஒரு வாரம் மிகவும் மகிழ்ச்சியாக போனது நாட்கள்.
மீண்டும் அந்த நாட்களுக்காக காத்திருக்கிறேன்.



ஆர்ட் competition ல் ( கணவரின் வேலையில் நடந்த ) என் மகனின் ( 6 வயது ) சித்திரம் பரிசு வென்றதும், பரிசுத் தொகையான $100 டாலர்களை சிறுவர்களுக்கான ஆஸ்பத்திரிக்கு நன்கொடையாக வழங்கியதும் மிகவும் பெருமையாக கருதும் விடயங்கள்.

சமீபத்தில் Barnes & Noble என்ற நூல் நிலையத்தில் என் மகன் தன் சித்திரம் பற்றி பேச ஒழுங்குகள் செய்தார் அவரின் வரைதல் ஆசிரியை. நானும் நிறைய நேரம் செலவு செய்து குட்டி ஸ்பீச் ஒன்று தயார் செய்தேன். ஆனால், கடைசி நேரம் இந்த பாழும் வின்டர்/பனி வந்து எல்லாவற்றையும் ரத்து செய்து விட்டார்கள். மீண்டும் வேறு ஒரு நாளில் நடைபெறும் என்று சொன்னது கொஞ்சம் ஆறுதலான விடயம்.


என் ரங்ஸ் போல வருடத்திற்கு 4, 5 தடவை திருந்தாமல் ஒரே தடவையில் திருந்தி விட வேண்டும் என்பதும் இன்னொரு உறுதி மொழி. இதைப் படிச்சுட்டு என் ரங்ஸ்க்கு கெட்ட பழக்க வழக்கங்கள் இருக்கோ என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். டி.வி பார்ப்பதை நிப்பாட்டணும், வேலைக்கு நேரத்தோடு போகணும் இப்படிப் பட்ட உறுதி மொழிகள் தான் என் ரங்ஸ் வருஷா வருஷம் எடுப்பது.

ஆசியா அக்கா அழைத்த தொடர்பதிவு. கொஞ்சம் லேட்டானாலும் லேட்டஸ்டா எழுதணும் என்று நினைச்சேன். ஆனால், பெரிசா எதுவுமே ஞாபகம் வந்து தொலையமாட்டேன் என்கிறது.

Sunday, January 16, 2011

vanathy's ( ஒரு ரெசிப்பி! )





வாங்கப்பா எல்லோரும் எப்படி பீன்ஸில் ஒரு ரெசிப்பி செய்வது என்று பார்க்கலாம்.


பீன்ஸ் - 1/4 கிலோ
வெங்காயம் - 1 ( பெரிய வெங்காயம் )
சின்ன வெங்காயம் - 3
மிளகாய் - 4
தேங்காய் துருவல் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சீரக தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
உப்பு ( மறக்க வேண்டாம் )
கறிவேப்பிலை
அரிசி - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு ( விரும்பினால் ) - 1/4 டீஸ்பூன்

செய்முறை
கடலைப்பருப்பினை மறக்காமல் தண்ணீரில் ஊறப் போடவும்.
பீன்ஸ் வெட்டுவது பற்றி நிறைய சொல்லியாச்சு. எனவே, நான் அது பற்றி நிறைய எழுதப் போவதில்லை. பீன்ஸ் மிகவும் மெல்லியதாக அரிந்து வைக்கவும்.

சட்டியை சூடாக்கி அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் வறுக்கவும்.
இதனுடன் இஞ்சி சேர்த்து மீண்டும் வறுக்கவும். பின்னர் அரிசியை சேர்க்கவும்.
துருவல் வறுபட்டதும் ( light brown ) அடுப்பை நிப்பாட்டி விட்டு, சின்ன வெங்காயம், சீரகம் சேர்க்கவும்.
மிக்ஸியில் இந்தக் கலவையை சிறுது தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும்.

அடி கனமான சட்டியில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், கடலைப்பருப்பு தாளிக்கவும். பிறகு வெங்காயம், க. வேப்பிலை சேர்க்கவும். ஓரளவு வதங்கியதும் பீன்ஸ், பச்சை மிளகாய், மஞ்சள், உப்பு சேர்க்கவும். மீதி 1/2 டேபிள்ஸ்பூன் தேங்காய் சேர்க்கவும். அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவையினை ஊற்றவும். அடிக்கடி கிளறி விடவும். பீன்ஸ் வேகாவிட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கவும். இறுதியில் சீரகத்தூள், 1/4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ( விரும்பினால் ) விட்டு இறக்கவும்.


இந்த ரெசிப்பி கண்டி பிடித்தது ஒரு அழகிய விபத்து (!) என்று சொல்லலாம். வேறு ஒரு ரெசிப்பிக்கு அரைத்த தேங்காய் துருவல் கலவை மீந்து போய் விட, அதை எறிய மனம் வராமல், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும் மனம் வராமல் பீன்ஸில் விட்டுக் கிளறினேன். சுவை நன்றாக இருந்தது. நான் எப்போது தேங்காய் பாவிப்பது குறைவு. நீங்கள் விரும்பினால் அளவை கூட்டிக் கொள்ளலாம்.