Tuesday, August 24, 2010

என்ன வாழ்க்கை?

தியாகு எதிர்பார்க்கவே இல்லை இப்படி நடக்கும் என்று. தியாகுவின் மனைவி கலா அவனையும், 5 வயது மகனையும் தனியே தவிக்க விட்டுட்டு போய் விட்டார். உடனே இறந்து போய் விட்டார் என்று கற்பனை செய்ய வேண்டாம். கலா அவரின் அம்மா வீட்டிற்கு போய் விட்டார். தியாகுவுடன் குடும்பம் நடத்துவதும், காட்டில் போய் சிங்கம், புலியுடன் இருப்பது ஒன்று என்று சொல்லிவிட்டு போய் விட்டாள்.
தியாகு தொட்டதற்கெல்லாம் ஏதாவது குறை சொல்வான். சமையல் செய்தால் உப்பு, புளி, காரம் போதவில்லை என்பான். வீட்டினை சுத்தம் செய்தால் ஏதாவது புகார் வாசிப்பான்.
கலா வேலைக்கும் போய், குழந்தையை கவனித்து, இவனின் புகார்களுக்கும் விடை சொல்லி, முடியாமல் பெட்டி படுக்கைகளுடன் போய் விட்டாள்.
நீ போனால் என்ன? என் வாழ்க்கை அஸ்தமித்து விடாது என்று வீர வசனங்கள் பேசினான். எல்லாம் சில மணி நேரங்கள் தான். அதாவது மகன் பசிக்குது என்று சொல்லும் வரை தான்.

இருடா செல்லம். ஏதாவது இருக்கான்னு பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு, சட்டி, பானை, குளிர்சாதனப்பெட்டி என்று எல்லா இடங்களும் தேடிக் களைத்தது தான் மிச்சம். ஒன்றுமே அகப்படவில்லை. மகனையும் கூட்டிக் கொண்டு கடைக்கு ஓடினான். சாப்பிட்டு முடிந்ததும், மகனுக்கு கதைகள் சொல்லி தூங்க வைத்து, வேலைகள் முடித்த போது மணி இரவு 11:30 என்று காட்டியது. மிகவும் அசதியாக இருந்தது.

அடுத்த நாள் காலையில் எழுந்து, மகனையும் பள்ளிக்கு ரெடி பண்ணி, சாப்பாடு குடுத்து.... தியாகு களைத்துப் போய் விட்டான். மகனை பள்ளியில் இறக்கி விட்டு, இவன் வேலைக்கு போய் சேர 9:30 ஆயிற்று. மீண்டும் மாலை 3 மணிக்கு மகனை பள்ளியிலிருந்து கூட்டி வந்தான். மகனை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாதபடியால் தன்னுடன் வேலைக்கு கூட்டிச் சென்று மாலை 6 மணி வரை தன்னுடனே வைத்திருந்தான்.
இதெல்லாம் உனக்கு தேவையா என்று உள்மனம் கடுப்படித்தாலும் இவனால் கலாவிடம் சென்று கெஞ்சி நிற்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

இவனின் அண்டை வீட்டில் வசிக்கும் வயதான பெண்ணிடம் மகனை பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டான். அவரும் சரி என்று சம்மதம் சொன்னார். ஆனால், அவரால் தியாகுவின் மகனை சமாளிக்கவே முடியவில்லை.
பிள்ளையா இது?... என்று ஏதேதோ முணுமுணுத்தபடி தியாகுவிடம், " வேறு ஆளைப் பாருப்பா. இன்று பள்ளியிலிருந்து வந்ததிலிருந்து உன் மகன் பண்ணிய சேட்டைகள் ஒன்றா. இரண்டா??..." என்று விட்டு ஒடிப் போய் கதவை தாழ் போட்டுக் கொண்டார்.


" ஏன் செல்லம் என்ன செய்தாய் அந்த பாட்டியை? " , என்று மெல்ல பேச்சுக் கொடுத்தான்.

" ஓ! அதுவா. இன்று பள்ளியில் ஒரு போன் நம்பர் சொல்லிக் குடுத்தாங்கப்பா. அந்த நம்பரை டயல் பண்ணி தருமாறு அந்த பாட்டியிடன் கேட்டேன். அவங்க ஏன்பா டென்ஷன் ஆவுறாங்க???", என்றான் மகன்.

" என்ன நம்பர் "- இது தியாகு.

" ஏதாச்சும் அவசரம் எனில் நம்பர் 911 டயல் செய்தால் உடனே வருவாங்களாம் ", என்றான் மகன்.
தியாகு பயந்தே போய் விட்டான். " இல்லை செல்லம்.அது வந்து உனக்கு ஏதாச்சும் உடம்பு சரியில்லை, எங்கையாச்சும் வலி இருந்தா அந்த நம்பரை டயல் பண்ணினால் போலீஸ் வரும். சும்மா டயல் பண்ணக் கூடாது சரியா? ."

" சரிப்பா ", என்றான் மகன்.
எதற்கும் கொஞ்சம் கவனமா இருக்கணும் என்று நினைத்துக் கொண்டான். கனடாவில் தொட்டதற்கெல்லாம் சட்டம் பேசுவார்கள். அதுவும் சின்னக் குழந்தைகளை அடித்தால் அவ்வளவு தான். நிறைய சிக்கல்கள் வரும்.

ஒரு வழியா வார இறுதி நாட்கள் வந்தது. தியாகுவின் மகன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்தான். இவன் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை.

கோபத்தில் மகனுக்கு மெதுவாக இரண்டு தட்டு தட்டினான். அவன் அழ ஆரம்பித்து விட்டான். தியாகு போய் படுத்துக் கொண்டான். எரிச்சலாக வந்தது. அப்படியே உறங்கிப் போனான்.
கதவில் யாரோ பட படவென தட்டும் சத்தத்தில் விழிப்பு வந்தது. யாராக இருக்கும், மகன் எங்கே இப்படி பலவாறாக எண்ணியபடியே படுக்கையில் எழாமல் இருந்தான்.

" நீங்கள் கதவினை திறக்காவிட்டால் கதவு உடைக்கப்படும் " , என்று ஆங்கிலத்தில் எச்சரிக்கை வரவே அடித்துப் பிடித்து ஓடிப்போய் கதவைத் திறந்தான்.
வெளியே போலீஸ் அதிகாரிகள் மூவர் நின்றார்கள்.

" இந்த வீட்டில் ஒரு குழந்தை போன் செய்து, கம்ளைன்ட் குடுத்திருக்கு. அதான் என்னவென்று விசாரணை செய்ய வந்தோம் ", என்றார்கள்.
இவனின் பதிலை எதிர்பாராமல் உள்ளே சென்றார்கள்.

பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த மகனிடம் கேள்விகள் கேட்டார்கள். அவன் முழிப்பதைக் கண்டு இவனிடம் குடைய ஆரம்பித்தார்கள். இவன் சொன்ன சமாதானங்கள் எதுவுமே எடுபடவில்லை. குழந்தைக்கு ஏதாவது காயங்கள் இருக்கா என்று செக் பண்ணினார்கள். இறுதியில் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் போலீஸ் இவனை சந்தேகப் பார்வை பார்த்தபடி சென்று விட்டார்கள்.

பிள்ளைக்கு ஏதாச்சும் விளையாட்டு பொருட்கள் வாங்கு குடு. தொலைபேசியெல்லாம் குடுத்து தொலைக்காதே என்று ஒரே அட்வைஸ் மழை வேறு.

மகன் அப்பாவி போல முகத்தினை வைத்துக் கொண்டு நின்றான்.

தியாகு கிளம்பி விட்டான். எங்கே என்கிறீர்களா? கலாவின் காலில் விழுந்தாவது அவளை வீட்டிற்கு கூட்டி வர. அப்படி முடியாத பட்சத்தில் மகனை அங்கு விட்டுட்டு வர வேண்டும் என்று தீர்மானத்துடன் புறப்பட்டு விட்டான்.

( கதை இவ்வளவு தான். இதற்கு மேலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கினை நுழைக்காமல் எல்லோரும் போய் ஏதாச்சும் பதிவுகள் போடுங்க, அல்லது சந்தேகங்கள் கேளுங்கள். சரியா?? )