தபால்நிலையத்தில் கூட்டம் இருக்கவில்லை. இவனுக்கு முன்னால் ஒரு பெண்மணி மட்டுமே. இவனின் முறை வந்தது. கவுண்டரில் போய் பெட்டியை வைத்தான். அங்கிருந்த வயதான வெள்ளைக்காரப் பெண்மணி இவனைப் பார்த்து ஸ்நேகமாக புன்முறுவல் செய்தார். பெட்டியில் ஆடைகளை அடுக்கினான். அப்பாவுக்கு 2 செட் உடைகள், அம்மாவுக்கு 3 புடவைகள் என்று லிஸ்ட் சரி பார்த்து அடுக்கினான்.
ஊருக்கு பார்சல் அனுப்ப போறீங்களா? எந்த நாடு என்று, கேட்டபடி நவீனை நோக்கினார் அந்தப் பெண்மணி.
ம்ம்... அப்பா, அம்மாவுக்கு பார்சல் அனுப்புறேன். நாடு கனடா.
ஓ! கனடா தானா. எந்த மாநிலத்தில் இருக்கிறார்கள்?, என்றார் மீண்டும். இந்த ஃபார்மில் நீங்கள் எழுத வேண்டிய விடயங்கள் இருக்கு.., என்று தொடர்ந்தவர். ஏதோ தோன்றியவராக அட்ரஸ் சொல்லுங்க என்றார்.
அனுப்புநர் பெயரில் தன் பெயர், வீட்டு விலாசல் சொன்னான் நவீன்.
பெறுநர் விலாசமும் கிட்டத்தட்ட அதே போல இருந்தது. ஆனால், கதவு இலக்கம் மட்டும் வேறாக இருந்தது.
" என்னப்பா இது உன் அப்பா நீ இருக்கும் அதே அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கிறார். நீ எதற்காக பார்சல் அனுபுறாய். நேரே கொண்டு போய் கொடுத்தா என்ன குறைஞ்சா போய் விடுவாய்", என்று கடிந்து கொண்டார் அந்தப் பெண்மணி.
" இல்லை.... ", என்று ஏதோ மழுப்பினான். இந்தப் பாட்டியிடம் வசமா மாட்டிக் கொண்டேன் என்று நினைத்துக் கொண்டான் நவீன்.
" அப்பாவுடன் சண்டையா? சரி எது எப்படியோ இந்தப் பார்சலை கொண்டு போய் அவரிடம் குடு. சந்தோஷப்படுவார் ", என்றார்.
நவீன் இருப்பது அடுக்கு மாடி குடியிருப்பின் இரண்டாவது தளம். அப்பா, அம்மா குடியிருப்பது மூன்றாவது தளம். சின்ன ஒரு மனஸ்தாபத்தில் அப்பாவுடன் கோபம் நவீனுக்கு. இப்ப இந்தப் பாட்டியிடம் மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டியிருப்பதை நினைச்ச போது எரிச்சலாக இருந்தது. அப்பாவுக்கு இன்னும் 2 நாளில் பிறந்தநாள்.
பார்சலை எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினான். வேலையால் வீட்டுக்கு போய் சிறிது நேரத்தின் பிறகு பார்சலை எடுத்துக் கொண்டான். மூன்றாவது தளம் நோக்கி நடந்தான். மனைவியை துணைக்கு கூப்பிட நினைத்தவன் பிறகு ஏதோ நினைத்தவனாக தனியாக கிளம்பினான். மூன்றாவது தளத்தை அடைந்தவன் கதவை தட்ட நினைத்து தயங்கி நின்றான். வாசலில் பார்சலை வைத்தவன் கதவில் ஓங்கித் தட்டிவிட்டு ஓடிப் போய் மறைவாக நின்று கொண்டான். அம்மா வந்தால் போய் பேசலாம், ஆனால் அப்பா வந்தால் திரும்பி போய் விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். வெளியே வந்தது நவீனின் அப்பாவே தான். சுற்றும் முற்றும் பார்த்தவர் பார்சலை எடுத்துக் கொண்டார். உள்ளே போய் கதவை தாழிட்டுக் கொண்டார். நவீன் திரும்பி நடந்தான்.
அன்று வேலையால் வந்தவன் வாசலில் வாசலில் ஒரு பார்சல் இருப்பதைக் கண்டான். இவன் அப்பாவுக்கு கொடுத்த அதே பார்சல். பெறுநர், அனுப்புநர் விலாசம் மட்டும் அடித்து மாற்றப்பட்டிருந்தது. இவனுக்கு வந்த கோபத்தில் பார்சலை அங்கிருந்த குப்பை வீசும் அறையில் கொண்டு போய் எறிந்த பின்னர் வீட்டினுள் சென்றான்.
ஏனுங்க! உங்க அண்ணனின் குழந்தைக்கு பிறந்த நாள். வாங்க போகலாம், என்றாள் சுபா. நவீனின் மனைவி.
வேண்டா வெறுப்பாக பிறந்தநாளுக்குப் போனான். இதெல்லாம் தண்டச் செலவு என்ற கொள்கை உடையவன் நவீன்.
பிறந்த நாள் விழாவில் அப்பாவை பார்க்க வேண்டும், அவருடன் பேச வேண்டும் என்பதாலும் போக விரும்பவில்லை.
அண்ணனின் வீட்டினுள் சென்ற போது அப்பா தான் முதலில் கண்களில் பட்டார். இவன் குடுத்த அதே ஆடைகள் அணிந்திருந்தார். இவனைப் பார்த்ததும் லேசாக புன்னகை செய்தார் அப்பா. அம்மாவைப் பார்த்தான் அவரும் இவன் குடுத்த சேலை கட்டியிருந்தார். அப்ப அந்தப் பார்சலில் என்ன இருந்திருக்கும்? கடவுளே! அதைக் குப்பையில் எறிந்து விட்டேனே நான் என்ன பிறவியோ என்ற யோசனையில் நின்றவன்.
" ஐயோ! அப்பா.... குப்பை... என்று கத்தியபடி வெளியே நோக்கி ஓடினான். கூட்டம் விளங்காமல் பார்த்தது. நவீன் இரண்டு, மூன்று படிகளாக தாவி இறங்கியபடி குப்பை வீசும் அறையினை நோக்கி ஓடினான்.