Abraham Lincoln Comes Home
சில வாரங்களின் முன்பு நூலகத்தில் சில புத்தகங்கள் பிள்ளைகளுக்காக எடுத்தேன். அதில் ஒன்று தான் ஆபிரகாம் லிங்கன் வீட்டுக்கு வருகிறார் என்ற புத்தகம். என் மகனுக்கு ஆபிரகாம் லிங்கனை மிகவும் பிடிக்கும். புத்தகத்தை கண்ட உடனே படிக்க ஆரம்பித்து விட்டார். முதலில் எனக்கு அந்தப் புத்தகத்தின் மீது பெரிய ஈர்ப்பு ஏற்படவில்லை. படங்கள் அழகா இருந்தமையால் புரட்ட ஆரம்பித்தேன்.
ஒரு பொடியன், அவன் தந்தை இருவரும் குதிரை வண்டியில் போகிறார்கள். கும்மிருட்டு. வண்டியில் கொழுவப்பட்டிருந்த லாந்தர் மட்டுமே ஒரே ஒரு வெளிச்சம். வானம் எங்கே தொடங்குகிறது நிலம் எங்கே முடிகிறது என்று தெரியாத இருள். அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனை பார்க்க சென்று கொண்டிருந்தனர் இருவரும். சிறுவனுக்கு லிங்கனை மிகவும் பிடிக்கும். அவரோடு பேச விருப்பம்.
சிறிது நேரத்தில் புகையிரத நிலையத்தினை அடைகிறார்கள். அங்கே வேறு பல மக்களும் காத்திருக்கிறார்கள். தூரத்தில் வயல் வெளிகளுக்கு மத்தியில் புகையிரத வண்டி வருவது தெரிகிறது. கூடியிருந்த மக்கள் நெருப்பு மூட்டி, தீப்பந்தங்கள் ஏந்தியபடி காத்திருக்கின்றார்கள். புகையிரத வண்டி அருகில் வருகிறது. தீயின் ஜுவாலையினால் அந்த இடம் ஜொலிக்கிறது.
லிங்கன் கடைசி பெட்டிக்கு முன்னாடி இருக்கும் பெட்டியில் வருவதாக ஊரார் பேசிக் கொண்டார்கள். புகையிரத வண்டியின் முன்பு ஜனாதிபதியின் படம் மாட்டியிருந்தார்கள். பொடியன் ஆவலாக காத்திருந்தான். புகையிரத வண்டி சில நொடிகள் நின்று, கடந்து செல்கிறது. பொடியனின் அப்பாவின் கன்னங்களில் கண்ணீரினை முதன் முறையாக காண்கிறான். ஆபிரகாம் லிங்கனின் உடல் அடங்கிய பேழையினை சுமந்து சென்ற அந்த வண்டி பல ஊர்கள் வழியாக சென்று இறுதியில் அவரின் சொந்த ஊருக்கு சென்றடைகிறது.
கதை தொடங்கும் போது அந்தச் சிறுவன் ஆபிரகாம் லிங்கனை சந்திக்க போவது போல தொடங்கி இறுதியில் அவரின் இறுதி ஊர்வலம் என்று முடித்திருந்தார்கள். படித்து முடித்த பின்னர் கொஞ்ச நேரம் கவலையாக இருந்தது.
என் மகன் படித்து முடித்த பின்னர் ஒரு பேப்பர் எடுத்து லிங்கனை வரைய ஆரம்பித்து விட்டார். வரைந்து முடித்த பின்னர் என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. முறையான வரைதல் பயிற்சி இல்லாமல் என் மகன் வரைந்த ஓவியம் இது தான்.
என் மகனை ( 7 வயது ) திரும்ப வரைய வைத்து, வீடியோ எடுத்து, YouTube இல் போட்டேன். முதல் முறை வரைந்த படத்திற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும் இரண்டுமே அழகு தான்.