என் நண்பி ஆசியா அக்கா எழுத அழைத்த தொடர்பதிவு. இப்பெல்லாம் நான் மிகவும் பிஸியோ பிஸி. வேலை, வீட்டு வேலையென்று பம்பரமாக சுழல்வதால் எழுத நேரம் கிடைப்பது குறைவு. ஆனால், ஆசியா அக்கா தேர்ந்தெடுத்த தலைப்பு மிகவும் வித்யாசமாக இருப்பதால் எழுதியே ஆகவேண்டும் என்று எழுதுகிறேன். சரி இப்ப என்னிடம் இருக்கும், என்னைவிட்டு பிரியாத பொருட்களைப் பார்ப்போம். நிறைய பொருட்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் இங்கே பட்டியல் இடமுடியாது அல்லவா. படிப்பவர்களுக்கும் இதென்னடா சோதனை என்று நினைச்சாலும்...நீங்க அப்படி நினைத்தாலும் பரவாயில்லை. வாங்கோ.. வந்து பார்த்துவிட்டு கட்டாயம் இரண்டு வார்த்தை சொல்லிட்டு போகவேண்டும்.
முதலாவது இருக்கும் கை கடிகாரம் என் கணவர் எனக்கு 1999 மாசி மாதம், 14ந் திகதி அன்பளிப்பாக கொடுத்தது. அதாவது திருமணத்திற்கு முன்பு. அதை நான் விட்டுப் பிரிவதில்லை. தங்க கலரில் அழகா மின்னும் எந்தப் பொருட்களுக்கும் எப்போதும் மதிப்பு அதிகம் தான் அல்லவா!
அடுத்து இருப்பது ஸ்கார்வ்ஸ். அதுவும் என் கணவர் கொடுத்தது தான். வருடம், திகதி எல்லாம் மேலே கைகடிகாரம் கொடுத்த அதே நாள், திகதி தான். ஒரு நாள் கூட அணிந்ததில்லை. அந்தக் கலர், டிசைன் மிகவும் பிடிக்கும்.
அடுத்து இருப்பது என் மகன். 3 வயதில் எடுத்த படம். இந்த படம் Hersheyஇல் அவர் வேலை செய்த போது எடுத்த படம். சீ! தூ! நீயெல்லாம் ஒரு அம்மாவா? என்று யாரும் காறித்துப்ப வேண்டாம். அவர் வேலைக்குப் போய் சம்பளமாக பெற்றது ஒரு பை நிறைய ஹேர்ஸி சாக்லேட்டுக்கள் தான். கோகோ பீன்ஸ் வறுத்து, அரைத்து, பட்டர் மிக்ஸ் செய்து, ஒரு மெஸினில் ஊற்றினால் என்று ஏதெதோ செய்யச் சொன்னார்கள் அங்கிருந்தவர்கள். வேலை தொடங்கும் முன்னர் அணிவிக்கப்பட்ட அடையாள அட்டை தான் இது. வேறு ஒரு மெஸின் வழியாக அலுமினிய பேப்பர் சுற்றப்பட்ட சாக்லேட்டுக்கள் வர அதை பொதியாக கட்டிக் கொடுத்தார்கள்.
அடுத்து இருப்பது பிரேஸ்லட். எனக்கு மிகவும் பிடிக்கும் கலரில். இப்பெல்லாம் தங்க நகைகளை விட இப்படி விலைகுறைவான அணிகலன்கள் தான் மிகவும் பிடிக்கும்.
அடுத்து இருப்பவை என் பிள்ளைகள் வரைந்த ஓவியங்கள். முயல் என் மகளின் கை வண்ணம். என் மகளுக்கு கை வேலைகளில் ஆர்வம் அதிகம். மீதிப்படங்கள் என் மகன் வரைந்தவை. இது வரை பிள்ளைகள் வரைந்தவை நூற்றுக் கணக்கில் இருக்கு. எதையும் குப்பையில் எறிந்ததில்லை. எல்லாவற்றையும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
சரி இவ்வளவு நேரமும் என்னிடம் இருந்த பொருட்களைப் பற்றிய சந்தோஷமான விஷயங்களைப் பார்த்தோம். இப்ப என்னிடம் இருக்கும் பொருள்... அதாவது கிட்டத்தட்ட 15 வருடங்களாக இருக்கும் ஒரு நறுமணக் குப்பி பற்றி சொல்லப் போகிறேன். இது என் உறவினர் பெண் அணியும் நறுமணப் பொருள். வாசனை சூப்பராக இருக்கும். அவர் இதை அணிந்து வந்தால் எனக்கு மிகவும் ஆசையாக இருக்கும். என் உறவினர் பெண் வந்தால் வீடு முழுவதும் இனிய நறுமணம் வீசும். அவர் என்னை ஒரு நாள் கடைக்கு கூட்டிச் சென்றார். கடையில் இந்த நறுமணக் குப்பியை வாங்கி என்னிடம் கொடுத்தார். நான் எங்காவது வெளியில் கிளம்பும் போது கொஞ்சமே கொஞ்சம் எடுத்து பூசிக் கொள்வேன். 2001இல் என் உறவினர் பெண் அகால மரணமாகிவிட்டார். 29 வயதில் மரணம். மிகவும் கவலையாக மனமுடைந்து போனேன். அதோடு இந்த வாசனை திரவியம் பூசுவதை நிறுத்திக் கொண்டேன். இந்தக் குப்பியை எறியவும் மனமில்லாமல் எங்கோ ஒரு மூலையில் வைத்துவிட்டேன். ஒரு நாள் அறையினுள் சென்றபோது இனிய மணம் வீசியது. கட்டிலில் என் மகள் இந்தக் குப்பியை எங்கேயோ கண்டுபிடித்து, மூடியினை திறந்து விளையாடிக் கொண்டிருந்தார். அவரிடம் நைஸாக பேச்சுக் கொடுத்தபடி மூடியினை மூடி கண்காணாத இடத்தில் வைத்தபின்னர் தான் நிம்மதியாக இருந்தது.
இவை தவிர என் அண்ணா, அப்பா, அம்மா, தங்கை, மாமா, மாமி கொடுத்த பொருட்கள் என்று என் லிஸ்டில் நிறைப் பொருட்கள் உள்ளன. என்னிடம் யார் எதை அன்பாக கொடுத்தாலும் அந்தப் பொருளை வருடக்கணக்கில் வைத்திருப்பேன்.
இந்த தொடர்பதிவை எழுத நான் அழைப்பது அஞ்சு, மகி, அதிரா, இமா, கிரி, ஸாதிகா அக்கா. நேரம் கிடைத்தால் எழுதுங்கள் எல்லோரும். எழுத நேரம் இல்லையென்றால் நான் கோபிக்க மாட்டேன்.