Monday, June 27, 2011

சீனி சீனி

சேகரின் அம்மா நங்கென்று டீ கோப்பையை வைத்து விட்டுச் சென்றார்.
எனக்கு வேண்டாம் என்றான் சேகர்.
ஏன் துரைக்கு டீ வேண்டாம் என்றார் அப்பா.
சீனி இல்லாமல் யார் டீ குடிப்பார்கள், என்றான் சேகர்.
ராசா! இங்கே உயிர் வாழ்வதே பெரிய சவாலா இருக்கு. நீ சீனி இல்லை என்று இப்படி விரக்தி அடையலாமா? மனிதனின் உடலில் நாக்கு தான் எல்லாமே. நாக்கினை தாண்டி உணவு உள்ளே போனால் இனிப்பு, காரம், துவர்ப்பு என்று எதுவுமே தெரியாது....

ம்ம்..( தொடங்கினா நிப்பாட்டமாட்டார் அப்பா என்று நினைத்தபடி வெளியே எழுந்து போனான் சேகர் ).
சேகர், டீ குடிச்சுட்டு போ ராசா என்ற அம்மாவின் குரல் காதில் விழாதவன் போல வெளியே நடந்தான். சோம்பல் முறித்தபடி நடந்தான்.
அந்தப் பள்ளி வளாகத்தில் நிறையப் பேர் குழுமியிருந்தார்கள். இளைஞர்கள் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது. சேகரும் விடலைப் பருவத்தின் வாசலில் நின்றான். இராணுவம் முன்னேறி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. வீடு, வாசல், உறவினர்களை விட்டு, கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு எல்லோரும் ஓடினார்கள். இனிமேல் ஓட இடமோ, உடம்பில் வல்லமையோ இல்லை என்ற நிலைமைக்கு வந்த பின்னர் சிலர் பள்ளிகளில் தஞ்சம் புகுந்தனர். கூட்டமாக பள்ளிகளில் இருந்ததால் பாதுகாப்பாக உணர்ந்தார்கள்.

பள்ளியின் வகுப்பறைகளை ஆக்கிரமித்து இருந்தார்கள் மக்கள். வகுப்பறைகளில் பெஞ்ச், மேசைகள் மீது இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள் சிலர், சிலர் இன்னும் இடத்திற்காக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
இங்கே பாரு வெட்டிப் போடுவன். இது நான் முதலில் வந்து பிடிச்ச இடம். நீ வேணா அந்தப் பக்கம் போய் பையை வை என்று உறுமினான் ஒருவன்.
இல்லை. நான் இங்கனை தான் இருப்பேன். நீ என்ன செய்ய முடியுமோ செய் என்றான் இன்னொருவன்.
இருவரும் மூட்டை முடிச்சுகளை வைத்து விட்டு, எதிரும் புதிருமாக முறைத்தபடி அமர்ந்து கொண்டார்கள்.
நாசாம போங்க. ஆர்மி வந்து எல்லோரையும் சுடப் போறானுங்க. இதுங்க இடத்துக்கு அடித்துக் கொள்வதைப் பாரு என்று ஒரு கிழவி சாபம் விட்டார்.

சேகர் ஒரு கணம் நின்றான். உண்மை தான் இராணுவம் வந்தால் யார், யார் உயிரோடு இருப்பார்களோ தெரியாது. இதில் நான் வேறு சீனி, சீனி என்று பேயா அலைகிறேன் என்று எண்ணிக் கொண்டான்.

திரும்பி நடக்க எத்தனித்தவன் சீனி என்று யாரோ கூவும் சத்தம் கேட்டுத் தயங்கி நின்றான். ஒரு வேளை நிவாரணப் பொருட்களில் சீனியும் குடுக்கிறார்களோ என்று நினைத்தவன் சத்தம் வந்த பக்கம் விரைந்தான். அங்கே ஒரு வயசான பாட்டி நின்றார்.

" சீனி எங்கே குடுக்கிறாங்க? ", என்று கேட்டான்.
நான் என் மகன் சீனித்தம்பியை கூப்பிடுறேன், என்றார் பாட்டி.
நாசமாப் போ என்று மனதில் திட்டியபடி நடந்தான்.

அடுத்த நாள் எங்காவது நிவாரணப் பொருட்கள் குடுக்கிறார்களா என்று அறியும் ஆர்வத்தில் சைக்கிளில் கிளம்பினான்.
பள்ளியை விட்டு வெளியே வந்தவன் ஒரு பெரிய கடையின் முன்பு வந்து நின்றான்.
அங்கே ஒரு வயதானவர் சில மூட்டைகளை தானமாக கொடுத்துக் கொண்டு நின்றார்.
பள்ளியில் கொண்டு போய்க் குடுங்கள். குழந்தைகளுக்கு உணவு இல்லை என்று கேட்கும் போது நெஞ்சு பதறுது என்றார் வயதானவர்.
அந்தக் கடை வயதானவரின் கடையா? அல்லது அவரின் சொந்தப் பணத்தில் வாங்கிய மூட்டைகளா என்று சேகருக்கு விளங்கவில்லை. இவனும் போய் ஒரு மூட்டையை பெற்றுக் கொண்டான்.
தம்பி! அதில் சீனி இருக்கு. கவனமா கொண்டு போய் சேர்... என்றார் முதியவர்.
சேகருக்கு காண்பது கனவா? நனவா? என்று விளங்கவில்லை. ஒரு கிலோ சீனி கிடைச்சாலே போதும் என்று நினைச்சவனுக்கு ஒரு மூட்டை கிடைச்சதும் மகிழ்ச்சி பிடிபடவில்லை.

மூட்டையை சைக்கிளில் வைத்து மெதுவாகத் தள்ளினான். மூட்டை கனமாக இருந்தது. மணலில் கால்கள் புதைந்தன. உதவிக்கு யாரையும் அழைக்க மனம் இல்லை. அப்படியே மூட்டையை சுருட்டிக் கொள்ள நினைத்தான் சேகர். நாலு மாதங்களுக்காவது சீனி வாங்க வேண்டிய தேவை வராது என்று கணக்குப் பார்த்தான். பள்ளி வளாகத்தினை அடைந்தான். சிறுவர் பட்டாளம் வந்து சூழ்ந்து கொண்டது.
" அண்ணா! இந்த மூட்டையில் என்ன இருக்கு?", என்றான் ஒரு பொடியன்.
சேகர் மூட்டையை பார்த்தான். அதில் ஆங்காங்கே கொத்தமல்லி விதைகள் ஒட்டி இருந்தன.
" தம்பிகளா! கொத்தமல்லி விதை இருக்கு வேணுமா?", என்றான்.
ஏமாற்றத்துடன் திரும்பி ஓடினார்கள் சிறுவர்கள்.
சேகருக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது. இவர்கள் நம்பி விட்டார்கள். வரிசையாக இருக்கும் வகுப்பறைகளை தாண்டினால் அதோ அங்கே சுவரில் ஏதோ கெட்ட வார்த்தைகள் எழுதி இருக்கும் வகுப்பறை தான் இவனின் உறவினர்கள் இருக்கும் அறை.

வழியில் கேட்டவர்களுக்கெல்லாம் கொத்தமல்லி என்று சொல்லிக் கொண்டே நடந்தான்.
இவ்வளவு கொத்தமல்லியை வைச்சு என்னதான் செய்யப் போறே என்று ஒரு பாட்டி கேட்டார்.
குழம்பு வைக்கப் போறேன் என்றபடி விரைந்தான். இன்னும் இரண்டு வகுப்பறைகள் தான் கடக்க வேண்டும்.

அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. வேகமாக இரண்டு பேர் இவனை நோக்கி வந்தார்கள்.
மூட்டையில் என்ன இருக்கு தம்பி என்றான் இருவரில் ஒருவன்.
கொத்த.... என்று எச்சில் கூட்டி விழுங்கினான்.
நாங்கள் பார்க்கலாமா என்றார்கள்.
ஒட்டியிருந்த கொத்தமல்லி விதைகளைக் அவர்களுக்குக் காட்டினான்.
இல்லைத் தம்பி. திறந்து பார்க்கலாமா? என்றார்கள்.
தாராளமா என்று சொல்லி விட்டு ஒதுங்கி நின்று கொண்டான்.
மூட்டையைத் திறந்தவர்கள் " சீனி " என்று கூவியதும் ஒரு கூட்டமே கூடி விட்டது.
திறந்த வெளி மைதானத்துக்கு எல்லோரையும் வரும்படி அழைத்தார்கள். இவனும் போனான். மூட்டை உரிமையாளர் தான் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே சீனி குடுப்பார்கள் என்று எண்ணிக் கொண்டான்.

ஆனால், இவனை யாரும் கண்டு கொள்ளவில்லை. போய் வரிசையில் நில்லுங்கள் என்று யாரோ ஒரு நெளிந்த செம்பினை இவன் கையில் திணித்தார்கள். வரிசை பாம்பு போல நெளிந்து, நெளிந்து பள்ளி வளாகத்தினையும் தாண்டி எங்கேயோ போனது. இவன் விரக்தியுடன் செம்பினை வீசியெறிந்து விட்டு நடந்தான்.

ஹை! செம்பு என்று கூவியபடி யாரோ ஒரு பொடியன் செம்பினை எடுத்துக் கொண்டு, வரிசையை நோக்கி ஓடினான்.