Saturday, April 10, 2010

வெண்டிக்காய் தீயல்


தேவையான பொருட்கள்:

வெண்டிக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
மிளகாய் - 6
புளி - எலுமிச்சை அளவு
உப்பு

புளியை தண்ணீரில் ஊறவைக்கவும்.
வெண்டிக்காயை சுத்தம் செய்து வெட்டி வைக்கவும்.
சட்டியில் வெண்டிக்காய், நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய வெங்காயம், துண்டாக நறுக்கிய மிளகாய், புளித்தண்ணீர், உப்பு சேர்க்கவும்.


சட்டியை அடுப்பில் வைத்து, சிம்மரில் வைத்து, மூடிவிடவும். வெண்டிக்காய் வெந்ததும் இறக்கவும்.

குழம்பு வகைகள், ரைஸ் உடன் சாப்பிட ஏற்ற சைட் டிஷ்.

இன்னும் சில ரெசிப்பிகள்
இடியப்பம்
மரவள்ளிக் கிழங்கு பிரட்டல்

Thursday, April 8, 2010

சிவகாமி

ஏதோ பரபரவென சத்தம். யாரோ நடந்து போவது போல சத்தம் கேட்டது. அதிகாலை 4 மணி இருக்கும். நிலா ஒளியில் அந்த உருவம் தெரிகிறது. நான் பயத்துடன் கண்களை மூடிக் கொண்டாலும் இடையிடையே திறந்து பார்க்கிறேன். அந்த உருவத்தின் கையில் பளபளவென ஏதோ மின்னுகிறது. கத்தியாக இருக்குமோ?. பயம் சூழ்ந்து கொள்கிறது. மீண்டும் நித்திரை தழுவிக் கொள்கிறது. கத்துவதற்கு நா எழவில்லை.


என்னைப் பற்றி: என் பெயர் சிவராமன். வயது 14.
இடம்:போரினால் இடம்பெயர்ந்து போகும் போது வழியில் இருக்கும் என் அப்பாவின் நண்பர் வீட்டு திண்ணை. எதுவுமே நிலையற்ற வாழ்க்கை வாழ்ந்த தருணங்கள். அடுத்த நாள் இன்னும் பல மைல்கள் நடக்க வேண்டும்.

காலை 6 மணிக்கு விழிப்பு வந்துவிட்டது. அந்த உருவம் யாராக இருக்கும் என்று ஒரே யோசனை. திரும்பி பார்க்கிறேன். அந்த உருவம் அங்கேயே இருக்கின்றது. அவரின் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. இரவு நிலா ஒளியில் பளபளத்தது இந்த கண்ணாடி தான்.

அப்பாவின் நண்பரின் மனைவி சொன்னார், " அந்த பெண் பெயர் சிவகாமி. யாருமற்ற அனாதை. சில மாதங்களின் முன்பு எங்களுக்கு அறிமுகமானார். காலையில் 4 மணிக்கு எழுந்து குளித்து, கண்ணாடியோடு அமர்ந்தால் காலை 10 மணியளவில் தான் அவரின் அலங்காரம் முடியும். காலையில் போனால் இரவு படுக்கும் நேரம் தான் வீடு வருவார். பைத்தியமா? இல்லையா? என்று சொல்ல முடியவில்லை. பாட்டெல்லாம் சுருதி பிசகாமல் அழகாக பாடும். மிகவும் கோபம் வந்தால் மூர்க்கத்தனமாக திட்டும்."


நான் அவரைக் கவனிக்க தொடங்கினேன். பவுடர், ரோஸ் பவுடர், பொட்டு இப்படி ஏகப்பட்ட அழகு சாதன பொருட்கள் அவரின் பெட்டியில் இருந்தன. மேக்கப் போடுவதும் பின்னர் அதை ஒரு ஈரமான துணி வைத்து அழிப்பதும் என்று மாறி மாறி செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த வாண்டுகள் அவரின் பெட்டியை குடைந்த போது அவர் கோபம் கொள்ளவில்லை. ஏதோ ஒரு பாட்டு பாடிய படியே மேக்கப் வேலை மும்முரமாக நடந்தது.

10 மணியளவில் அவரின் அலங்காரம் ஒரு முடிவுக்கு வந்தது. ஏதோ மாவினுள் புரண்டு எழுந்தது போல முகமெல்லாம் ஒரே பவுடர் பூச்சு. கன்னத்தில் மையமாக ரோஸ் பவுடர், உதட்டு சாயம் , நெற்றியில் பொட்டு சகிதமாக கிளம்பினார். அலங்கார பொருட்களை எல்லாம் ஒரு பையில் போட்டு தோளில் மாட்டிக் கொண்டார். விறுவிறுவென செம்பருத்தி செடியை நோக்கி போனவர் ஒரு பூவை பறித்து தலையில் சூடிக் கொண்டார்.

இதன் பிறகு நான் சிவகாமியை மறந்தே போனேன். ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு அருகில் பாட்டு சத்தம் கேட்க எட்டிப் பார்த்தேன். சிவகாமி ரோட்டில் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் ஒரு சிறு புன்னகை. பிறகு எழுந்து போய் விட்டார். அடிக்கடி எங்கள் வீட்டுப் பக்கம் அவரின் பாடல் கேட்கும். காசு கொடுத்தால் வாங்குவார். நன்றி சொல்ல ஒரு பாடல், போய் வருகிறேன் என்று சொல்ல ஒரு பாடல் என்று எப்போதும் பாடல்கள் தான் அவரின் மூச்சாக இருந்தது.


அடிக்கடி சிவகாமி என் ஏரியாவில் வலம் வந்தார். மேக்கப் கலைந்தால் ரோட்டோரத்தில் இருந்து மேக்கப் போடுவார். வீடு வீடாகப் போய் பாடுவார். சிலர் உணவு, காசு என்று கொடுப்பார்கள்.
ஒரு நாள் நான் பள்ளி முடிந்து வீடு வரும் போது இராணுவத்தினரால் வழி மறிக்கப்பட்டேன். ஒரு குறிப்பிட்ட வயதினரை கைது செய்து, நாற்சந்தியில் நடுவெய்யிலில் மண்டை காய வைப்பார்கள். தண்ணீரோ, சாப்பாடோ கிடைக்காது. அந்தி சாயும் நேரம் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இந்நாள் வரை எப்படியோ தப்பித்த நான் அன்று மாட்டிக் கொண்டேன். பயமாக இருந்தது.

அப்போது தூரத்தில் பாடல் சத்தம் கேட்டது. எல்லோரும் திரும்பி பார்த்தார்கள். அங்கே சிவகாமி பாடிக் கொண்டே வந்தார். என்னைக் கண்டதும் வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.

எனக்குள் ஏதோ ஒரு நிம்மதி. " என்ன ராசா, இவனுங்கள் உன்னை பிடித்து போட்டாங்களா?" என்றார் சிவகாமி. ஏற்கனவே பயந்து போயிருந்த நான் மெதுவாக சிரித்து வைத்தேன்.
எங்களுக்கு காவலுக்கு நின்ற இராணுவத்தினர் கண்டும் காணாதது போல நின்று கொண்டார்கள். வந்து கொஞ்ச நேரம் ஓய்வெடுத்த சிவகாமி பாடத்தொடங்கினார். அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலை கொஞ்சம் கலகலப்பானது.


சிவகாமிக்கு அங்கு நின்ற இராணுவத்தின் மீது திடீர் காதல் வந்தது. கொஞ்ச நேரம் வெட்கப்பட்டவர் பிறகு பெருங்குரலில் பாடத்தொடங்கினார். கையில் போட்டிருந்த செப்பு மோதிரத்தை காட்டியபடி, " கணையாழி இங்கே மணவாளன் அங்கே காணாமல் நானும் ....." என்று காதல் வழிந்தோட பாடினார்.

இது வரை உயிர் பயத்தில் இருந்த எல்லோரும் சிரிக்க, கடுப்பான அந்த இராணுவ வீரன் சிவகாமியை முறைத்துப் பார்த்தான். "கண்ணும் கண்ணும் கலந்து இன்பம் கொண்டாடுதே....." என்று அதற்கும் ஒரு பாடலை எடுத்து விட்டார். இப்படியே போனால் என்ன ஆவது என்று யோசனையில் இருந்த இராணுவவீரன் சிவகாமியை அங்கிருந்து போகும்படி சைகை காட்டினான். இவர் போகாமல் இருக்கவே கிட்ட வந்து போ போ என விரட்டினான்.



போனால் போகட்டும் போடா...... என்று பாடியபடியே அங்கிருந்த ஒரு தெருவழியாக போய் மறைந்து விட்டார். ஆனால் எங்கேயும் போகாமல் திரும்ப சுற்றி வந்து மீண்டும் பழைய இடத்திலே அமர்ந்து கொண்டார்.


அந்தி சாயும் நேரம் எல்லோரையும் விடுதலை செய்தார்கள். சிவகாமியை தேடினேன். காணவில்லை. எங்கோ மாயாமாக விட்டாரோ ?. அங்கு நின்ற யாருக்கும் அவரைப் பற்றி அக்கறை இருந்ததாக தெரியவில்லை. மரண பயத்தில் இருந்தவர்களுக்கு சிவகாமியைப் பற்றி நினைக்க நேரமேது ?.

இந்த சம்பவத்தின் பிறகு சிவகாமியை நான் காணவேயில்லை. அப்பாவின் நண்பர் வீட்டிலும் அவர் வருவதில்லை என்று சொன்னார்கள். நான் வெளிநாடு வந்து பல வருடங்கள் ஆகி விட்டது, ஆனால் சிவகாமியின் பாடல், அவரின் பவுடர் அப்பிய முகம், செம்பருத்தி பூ , சுருதி பிசகாமல் பாடும் பாடல்கள் என்று எல்லாமே நேற்று நடந்தது போல நினைவில் இருக்கு.

இது வரை நான் எழுதிய கதைகள்.
ஆயா
சுஜாதா
சங்கீதம்
வேஷ்டி
Ms.Rose and me!
அவர்கள்......
முடி திருத்தகம்

Wednesday, April 7, 2010

வண்ணத்துப்பூச்சி





சங்கிலி தையல், ஹெர்ரிங் போன் தையல், அடைப்பு தையல்களால் உருவாகிய என் வண்ணத்துப் பூச்சி.









Tuesday, April 6, 2010

ஆரஞ்ச் கேக் ( Orange Cake )








தேவையான பொருட்கள்:


மைதா மா - 9 oz 
சீனி              - 9 oz
ஆரஞ்ச் யூஸ் - 1/4 கப்பிற்கு குறைவாக
ஆரஞ்ச் செஸ்ட் ( zest ) - 1 டேபிள் ஸ்பூன்
 முட்டை - 5
பட்டர் (salted) - 1 கப் ( 8 oz)
வனிலா - 11/2 டீஸ்பூன்
பேக்கிங் பௌடர் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 2 oz

முந்திரி வற்றல் - 2 oz

முட்டை, பட்டர் இரண்டும் ரூம் டெம்பரேச்சரில் ( room temperature) இருக்க வேண்டும். 

பருப்பு, வற்றல் இரண்டையும் சிறிது மைதா மாத்தூவி பிரட்டி வைத்துக் கொள்ளவும். ஆரஞ்ச் பழத்தை கழுவி,  ( வெள்ளைத் தோல் கசக்கும் தன்மை உடையது.)  மேலே இருக்கும் தோலை மட்டும் கவனமாக துருவிக்கொள்ளவும்  (this is called zest ) .


செய்முறை:

முட்டையின் வெள்ளைக்கரு தனியாக, மஞ்சள் கரு தனியாக பிரித்து வைக்கவும்.
வெள்ளை கருவை நன்கு நுரைக்கும் வரை அடிக்கவும்.
மா, பேக்கிங் பௌடர் இரண்டையும் 3 தரம்
சலித்து வைக்கவும்.
அவனை 365 டிகிரி க்கு முற்சூடு செய்யவும்.

அறை வெப்பநிலையில் இருக்கும்
பட்டர், சீனி இரண்டையும் நன்கு அடிக்கவும்.

பிறகு, முட்டை மஞ்சள் கருவை ஒவ்வொன்றாக சேர்த்து அடிக்கவும்.

அடித்து வைத்துள்ள முட்டை வெள்ளை கருவை சிறிது, சிறிதாக சேர்த்து அடிக்கவும்.
இப்போது , யூஸ்( orange juice) , zest சேர்க்கவும்.  மாவை சிறிது, சிறிதாக சேர்த்து, மரக் கரண்டியால் ஒரே பக்கமாக கலக்கவும். வனிலா  சேர்க்கவும்.


ட்ரேயில் ஊற்றி,  மேலே முந்திரி பருப்பு, வற்றல் தூவி விடவும்.
 30-40 நிமிடங்கள் பேக் செய்யவும். 


கேக் தயார்.


  


Monday, April 5, 2010

தேங்காய் சட்னி ( Coconut chutney )

தேவையான பொருட்கள்:
தேங்காய் பூ- 1 கப்
பொட்டுக் கடலை - 1/3 கப்
வெங்காயம் - பாதி
மிளகாய் - 8
இஞ்சி - 1 துண்டு
புளி - கொஞ்சம்
கறிவேப்பிலை - சிறிது
சின்ன சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு

தாளிக்க
வெங்காயம் -
கறிவேப்பிலை
கடுகு
சின்னசீரகம்

தாளித்து வைத்துக் கொள்ளவும்.

சட்டியில் 1/4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பச்சை மிளகாயை லேசாக வதக்கி எடுக்கவும்.
மிக்ஸியில் மிளகாய், பொட்டுக் கடலை, இஞ்சி போட்டு நன்கு அரைக்கவும்.
மிளகாய் கலவை நன்கு அரைபட்டதும், தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம், சின்னசீரகம் சேர்த்து அரைக்கவும்.
சட்னியை சட்டியில் கொட்டி புளி, உப்பு, தாளித்த கலவை கொட்டிக் கலக்கவும்.
தோசை, இட்லிக்கு ஏற்ற சட்னி.


குறிப்பு:
காரம் அதிகம் விரும்பாதவர்கள் மிளகாயின் அளவைக் குறைத்து செய்யலாம்.