Saturday, March 27, 2010

சுஜாதா

சுஜாதா- என் மனம் கவர்ந்த பெண். 9ஆம் வகுப்பு மாணவி. பக்கத்து வீட்டில் வசிக்கிறாள். சுஜாதா மிகவும் அழகானவள். உயரமாக இருப்பாள். நல்ல சிவந்த நிறம். வசதியான குடும்பம் அவளுடையது. ஒரே பெண் என்பதால் மிகவும் செல்லம். யாரையுமே மதிக்க மாட்டாள். படிப்பில் சுமார்தான்.

நான் 10 ஆம் வகுப்பு படிக்கிறேன். என் குடும்பம் ஓரளவு வசதியானது. நான் மிகவும் கறுப்பாக இருப்பேன்.

எனக்கு சுஜாதாவில் காதல். காரணம் எல்லாம் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவளைப் பிடிக்கும். அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை. என்னை மட்டுமல்ல வேறு எந்த ஆணையும் ஏறேடுத்தும் பார்க்கமாட்டாள். என்னைக் கண்டால் ஏதோ கரப்பான், பல்லி போன்ற ஐந்துக்களை பார்ப்பது போல அலட்சியமாக பார்த்து விட்டு கடந்து போவாள். ஆனால் இதெல்லாம் என் மண்டையில் உறைக்கவே இல்லை.

காலையில் அவள் பள்ளி போகும் போது அவள் பின்னாலே போவது, அவள் உள்ளே சென்ற பின் நான் என் வகுப்பிற்கு செல்வது, மாலையில் அவள் சங்கீத வகுப்பிற்கு செல்லும் போது போய் வாசலில் காவல் இருப்பது என்று என் வாழ்விற்கே ஒரு புது அர்த்தம் வந்தது போல உணர்ந்தேன்.

ஒரு நாள் சுஜா(இனிமேல் சுஜா என்று செல்லமாக கூப்பிடுவோம்) ஏதோ விளம்பர படத்தில் நடிக்கின்றாளாம் என்பதே பள்ளி முழுவதும் பேச்சாக இருந்தது. என்ன விளம்பரம் என்று விபரம் தெரியவில்லை.
என் அப்பா ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியில் தவறாமல் நியூஸ் பார்ப்பார். அன்று நானும் எதேச்சையாக நியூஸ் பார்க்க அமர்ந்தேன். அப்போது சுஜாவின் விளம்பரம் வந்தது. ஏதோ ஒரு சோப்புக் கட்டியை காட்டி, இதை எல்லோரும் போட்டுக் குளித்து, சுத்தமாகுங்கள் என்று ஏதெதோ சொன்னாள். அவள் சொன்னது எதுவும் ஞாபகமில்லை. அவள் முகத்தை பார்க்க தினமும் நியூஸ் பார்க்கத் தொடங்கினேன்.

ஒரு நாள் அம்மாவும் விளம்பரம் பார்த்து விட்டு, எங்கேயோ இந்த பெண்ணை பார்த்து இருக்கிறேன். ஞாபகம் வரவில்லை என்றார்.உனக்குத் தெரியுமா ராசா...என்று என்னைப் பார்த்தார்.

நாம்: ம்ம்ம்.. பக்கத்து வீட்டு சுஜாதா(என்ன கொடுமை மருமகளைக் கூட தெரியவில்லை என்று மனதினுள் திட்டிக் கொண்டேன்).

இதில் எல்லாம் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்த அப்பாவிடம் அம்மா, " பக்கத்து வீட்டு ராகவன் மகள்" என்று விளக்கம் சொல்ல, அப்பா, "ஓ அப்படியா" என்று விட்டு நிறுத்திக் கொண்டார்.

அடுத்த நாள் சுஜாவின் பின்னே ஊரே அலைந்தது. மிகவும் திமிராக நடந்து வந்தவள் என்னைக் கணடதும் தோழிகளிடம், " இந்தா பார் அண்டங் காக்கை வருது" என்று சொல்ல, அவள் தோழிகள் எல்லோரும் சிரித்தார்கள்.

என் நிறத்தை குறை சொன்னதும் எனக்கு ஆத்திரம் வந்தது. இவளை பழி வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வீடு வந்தேன். ஒரு வழியும் புலப்படவில்லை. அப்போது தொலைக்காட்சியில் சுஜா தோன்றி, சோப்பைக் காட்டினாள். திடீரென்று என் மண்டையில் ஒரு ஐடியா தோன்றியது.

அடுத்த நாள் சுஜா விளம்பரத்தில் பாவித்த சோப், ஒரு சொறி நாய், ஒரு வாளி தண்ணீர் எல்லாம் கொண்டு நண்பர்கள் புடைசூழ போனேன். அவள் சங்கீத வகுப்பிலிருந்து வந்து கொண்டிருந்தாள். நடுரோட்டில் நான் சொறி நாய்க்கு சோப்பு போட, இன்னொருவன் தண்ணீர் ஊற்ற, இன்னொரு நண்பன் சுஜா விளம்பரத்தில் சொன்ன அதே வசனத்தை சொல்ல, கோபம் கொண்ட சுஜா அழுது கொண்டே ஓடி விட்டாள். எனக்குள் ஒரு அற்ப சந்தோஷம் பழி வாங்கி விட்டதை எண்ணி.

இந்த சம்பவத்தின் பிறகு சுஜா கொஞ்சம் அடங்கி விட்டாள்.ஒரு வாரத்திற்கு மேல் நானும் அவளைக் கண்டு கொள்ளாமல் இருந்தேன். ஆனால் நீண்ட நாட்கள் என்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் தவித்துவிட்டேன்.
எப்படியாவது என் விருப்பத்தை அவளிடம் சொல்லிவிடத் துடித்தேன்.
அன்று என் பாட்டியின் நினைவு நாள். உறவினர்கள், அப்பாவின் நண்பர்கள் என்று வீடே நிறைந்து இருந்தது. நான் பள்ளி போகவில்லை. அன்று எப்படியாவது சுஜாவிடம் என் மனதை திறந்து கொட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

பள்ளி விடும் நேரம் அப்பாவிடம் ஏதோ சாக்குச் சொல்லி சுஜாவைப் பார்க்க ஓடினேன். தூரத்தில் அவள் வருவது தெரிந்தது. கிட்ட வரும் வரை காத்திருந்தேன். என் நண்பர்களும் சிலர் நின்று வேடிக்கை பார்த்தார்கள். அவள் அருகில் வந்ததும் அவளை நெருங்கினேன். திடீரென்று என் நண்பர்கள், " டேய் ஓடுடா... உன் மாமியார் விளக்குமாறு கொன்டு வருகின்றா..." என்று கத்தினார்கள். நான் திரும்பி பார்க்க சுஜாவின் அம்மா என் முதுகின் பின்னால் விளக்குமாறு தூக்கிக் கொண்டு ஆவேசமாக வந்து கொண்டிருந்தார். சில நொடிகள் திகைத்த நான் பின்னர் என் வீட்டை நோக்கி ஓடினேன்.

அப்பா அவரின் நண்பர்களை வழியனுப்ப வாசலுக்கு வரவும் நான் ஓடிப் போய் அவரின் முதுகின் பின்னால் ஒழிந்து கொண்டேன்.
ஆவேசமாக வந்த சுஜாவின் அம்மா விளக்குமாற்றை கீழே எறிந்து விட்டு, என் அப்பாவை ஏக வசனத்தில் திட்டி விட்டுப் போய் விட்டார்.
மிகவும் கோபம் கொண்ட என் அப்பா கீழே கிடந்த விளக்குமாற்றை எடுத்து என்னை விளாசித்தள்ளி விட்டார்.அப்பாவின் நண்பர்கள் தான் என்னைக் காப்பாற்றினார்கள்.

இந்த சம்பவத்தின் பிறகு நான் சுஜா இருக்கும் திசையை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அன்று வழக்கம் போல அப்பா நியூஸ் பார்க்க, சுஜா விளம்பரத்தில் தோன்றி சிரித்தாள். நான் பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வேறு அறையை நோக்கி நடந்தேன்.

4 comments:

  1. ஒரே கொழப்பமா இருக்கு.. நீங்க நேரடியா சொல்ற மாதிரி நடை இருக்கு ஆனா பொண்ண பத்தின விஷயமா இருக்கு.. இப்ப யாரு பொண்ணு? நீங்களா கதை நாயகியா

    ReplyDelete
  2. அண்ணாமலையான், இதிலென்ன குழப்பம். இதில் நான் என்ற காரக்டர் "ஆண்".
    //என்னை மட்டுமல்ல வேறு எந்த ஆணையும் ஏறேடுத்தும் பார்க்கமாட்டாள்//
    இந்த வரியே போதுமே நான் என்பதன் விளக்கத்தை அங்கு சுருக்கமாக விளங்கப்படுத்தி இருக்கின்றேன்.

    ReplyDelete
  3. யீரோவுக்கு ஒரு பேரு வச்சிருந்தா இம்புட்டு கொயப்பம் வந்திருக்குமா வானதி?? யீரோ அடி வாங்கினதப் படிச்சதும் சிரிப்பு தாங்க முடியல :))

    ReplyDelete
  4. சந்தனா, நன்றி.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!