Thursday, March 25, 2010

சங்கீதம்

யாரோ வீணை மீட்டுவது போல இனிமையாக இருக்கு உங்கள் குழந்தையின் அழுகை- இது நான் பிறந்ததும் நேர்ஸ் அப்பாவிடம் சொன்னது.
என் அப்பாவும் அதில் அப்படியே மயங்கி எனக்கு வீணா என்று பெயர் வைத்து விட்டார்.

3 அண்ணன்களுக்குப் பிறகு பிறந்தபடியால் வீட்டில் நான் தான் சர்வாதிகாரி. நான் வைத்ததே சட்டம்.
அப்பாவும் தோளில் தூக்கி வைத்தபடியே வீட்டை வலம் வருவார்.

என் பெயர் என் அண்ணன்களுக்கு என்னை திட்டுவதற்கு மிகவும் வசதியாக இருந்தது.
கோபம் வந்தால், " ஏய், வீணாப் போனவளே" என்பார்கள். நான் அழுது புரண்டு அவர்களை ஒரு வழி பண்ணி விடுவேன்.

அப்பாவுக்கு சங்கீதம் என்றால் உயிர்.
எனக்கு 7 வயசானதும் என் அப்பா என்னை சங்கீதம் பழக அனுப்பினார்.
எனக்கு அப்படி ஒன்றும் பிரமாதமான குரல் வளம் இல்லை.
கட்டைக் குரலில் நான் பாடத்தொடங்கினால் என் அண்ணன்கள் வீட்டை விட்டு ஓடிவிடுவார்கள்.
நான் எதையும் கண்டு கொள்ளாமல் பாடியே கொலை செய்வேன்.
என் அப்பா, அம்மா இருவரும் அப்படியே உச்சி குளிர்ந்து போய் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

என் சங்கீத ஆசிரியை- கல்பனா.
மிகவும் உயரமாக இருந்தார். புருவங்களை மழித்து விட்டு, கோடு போட்டிருந்தார்.
எனக்கு அவரைக் கண்டாலே பயம்.
கிளாஸ் போய் ஒரு வாரத்திலே எனக்கு சங்கீதம் சுட்டுப் போட்டாலும் வராது என்று அப்பாவிடம் சொல்லி விட்டார்.

மிகவும் கோபமான அப்பா எனக்கு வீட்டிலே சங்கீதம் பழக ஒருவரை அழைத்து வந்தார்.
அவருக்கும் நான் தேறமாட்டேன் என்று தெரிந்தாலும் என்னோடு சேர்ந்து அவரும் கொடுத்த காசுக்கு வஞ்சகம் பண்ணாமல் கத்துவார்.

இப்படியே போன என் சங்கீத வகுப்பு என் 18 வயதில் தடைப்பட்டது. என் அழகில் மயங்கி என்னைப் பெண் கேட்டு மிகவும் வசதியான குடும்பத்திலிருந்து வந்தார்கள். மற்றவர்கள் போல பாடத் தெரியுமா என்று மாப்பிள்ளை கேட்கவில்லை. நான் பாடியிருந்தால் அப்பவே மாப்பிள்ளை சுவர் ஏறிக் குதித்து ஓடி இருப்பார் என்று என் அண்ணன்கள் வாய் ஓயாமல் சொல்வார்கள்.

இந்த கல்யாணத்தில் என் அண்ணன்களே மிகவும் மகிழ்ந்தார்கள். என் அப்பா ஏதோ பறி கொடுத்தவர் போல இருந்தார்.
நான் என் அப்பாவிடம் சொன்னேன்," ஏன் கவலைப்படுகிறீர்கள். பக்கத்து தெருவில் தானே இருக்கப்போகிறேன். அடிக்கடி வந்து உங்களுக்காக பாடி விட்டு போகிறேன்."

ஓகோ! அப்படி வேறு ஆசையா? இப்பவே அப்படி எண்ணம் இருந்தால் சொல்லு நாங்கள் வேறு எங்காவது வீடு மாறி போகிறோம் என்று கடைசி அண்ணன் கடுப்படித்தான்.

கல்யாணம் முடிந்தது. என் கணவர் நல்லவர். அவரை அமர வைத்து கச்சேரி வைக்காத குறையாக பாடுவேன். திருமணமான புதிதில் கேட்டவர். பிறகு ஏதாவது சாக்கு சொல்லி நழுவப் பார்த்தார். காரில் போகும் போது ரேடியோவில் பாட்டு போட்டால் நானும் சேர்ந்து பாடுவேன். என் கணவர் காரில் பாட்டு கேட்பதை நிறுத்தினார்.

என் கொடுமை தாங்க முடியாத கணவர் சொல்வார்," ஒருவன் பிறந்து தான் எங்களை எல்லாம் இந்தக் கொடுமையிலிருந்து மீட்பான்."
அடுத்த வருடம் மகன் பிறந்தான். அவனையும் என் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க வைத்தேன். ஆரம்பத்தில் அழுதவன் பிறகு என் கொடுமைகளை சகித்துக் கொண்டு இருக்கப் பழகி விட்டான்.
"அவன் நடக்கத்தொடங்கியதும் என்னைத் தேட வேண்டாம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு ஓடப்போகிறான்", இது அண்ணனின் கூற்று.
.

என் மகனும் தவழ்ந்து, நடந்து, கதைக்கப் பழகினான். அப்பா, அம்மா இப்படி 3 ,4 வார்த்தைகள் சொல்வான்.
ஒரு நாள் நான் வழமை போல அவனைப் படுக்க வைக்க பாடினேன். கட்டிலிலிருந்து இறங்கியவன், " அம்மா ஸ்டாப்" என்று சொல்லி விட்டு வேறு அறையில் போய் படுத்துக் கொண்டான்.

மகன் என்னை பாட வேண்டாம் என்று சொன்னதை விட அவன் பேசிய ஆங்கில வார்த்தையே என்னை முதலில் புல்லரிக்க வைத்தது. பின் மெதுவாகவே அவன் என்னை பாட வேண்டாம் என்று சொன்னது நினைவில் வந்தது.

இப்போதும் நான் பாடுகிறேன்.... எங்கே என்கிறீர்களா? பாத்ரூமில் மட்டும், எனக்கு மட்டும் கேட்குமாறு பாடுகிறேன்.

6 comments:

 1. யாரோ வீணை மீட்டுவது போல இனிமையாக இருக்கு உங்கள் குழந்தையின் அழுகை- இது நான் பிறந்ததும் நேர்ஸ் அப்பாவிடம் சொன்னது.//// ஹக்...ஹக்..ஹா.... புல்லரிக்குது வாஆஆஆஆணி.... சூப்பராக எழுதியிருக்கிறீங்க....

  இதாவது பறவாயில்லை... என் சொந்தக் கதை சோகக் கதை கேளுங்கோ.... நான் பாட ஆரம்பித்தால் உடனடியாக என் கணவர் பக்ரவுண்ட் மியூசிக்(வாயால்தான்) போடத்தொடங்கிடுவார்.. பிறகெங்கே நான் பாடுவது... தினமும் பாடமுயற்சிப்பேன் தினமும் அவரும் கொஞ்சமும் சளைக்காமல் மியூசிக் போடுவார், அத்தோடு சிரித்து உருண்டு நான் பாடுவதை நிறுத்திவிடுவேன். இப்பத்தான் யோசிக்கிறேன், என் குரலின் கொடுமை பொறுக்கமுடியாமல், நேரே சொல்லவும் பயந்து:) அவராக எடுத்துக்கொண்ட முடிவாக இருக்குமோ இது??? இது என் உண்மைக்கதை வாணி.

  ReplyDelete
 2. அதிரா, உங்கள் வீட்டிலும் இந்த கொடுமை நடக்குமா? haha...... எனக்கும் சங்கீதம் என்றால் உயிர்.
  இந்த லிங்க் பாருங்கள்.

  http://www.youtube.com/watch?v=VrulmmMdajQ

  ReplyDelete
 3. நிங்க எல்லாம் இப்படி சொன்னா என்ன ஆகிறது.

  ம்.. உங்களுக்கு இங்கு ஒரு நல்ல அவார்ட் காத்திருக்கு பெற்று கொள்ளவும்.

  http://vijisvegkitchen.blogspot.com/2010/03/blog-post_26.html

  ReplyDelete
 4. pls collect ur award from my blog

  http://sashiga.blogspot.com/2010/03/blog-post_27.html

  ReplyDelete
 5. Mahi, Menaga, & Viji, Thanks.

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!