Wednesday, June 22, 2011

கயல்விழி என்னை மன்னித்து விடு

மதுமிதா கடிகாரத்தை பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி என்று காட்டியது. கணவனை இன்னும் காணவில்லை. எங்கே போயிருப்பான் வசந்த் என்று நினைத்துக் கொண்டாள். கனடாவின் ஏதோ ஒரு முக்கியமான இடத்தில் இருக்கு துரித உணவகத்தில் இரவு 2 மணி வரை வேலை. அது எந்த இடம் என்பது மதுமிதாக்கு தெளிவாக தெரியவில்லை. வசந்தும் அவளுக்கு சொன்னதில்லை. வெளிநாடு வந்து கிட்டத்தட்ட 11 மாதங்கள் ஓடி விட்டன. இவளை ஏதோ ஒரு ஜந்து போல கூட அவன் மதிப்பதில்லை. கட்டிய பாவத்திற்கு ஒரு வேளை சாப்பாடு மட்டுமே கிடைத்தது. வீட்டு வாடகை, ஊரில் அவன் அம்மாக்கு பணம் அனுப்பியது போக பெரிதாக பணம் மிஞ்சுவதில்லை. அவன் துரித உணவகத்தில் வேண்டிய அளவு சாப்பிட்டுட்டு வீடு வருவான். இவளிடம் என்ன சாப்பிட்டாய் என்று நாசூக்காக கூட விசாரிக்க மாட்டான். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் போக போக பழகிவிட்டது.

இவளின் திருமணம் நடந்ததே ஒரு அதிசயம். இவளின் தந்தைக்கு ரோஷம் நிறைய இருந்தது ஆனால் பணம் இருக்கவில்லை. இவளின் காதல் விடயம் அப்பாவிற்கு தெரிய வந்ததும் கோபமாகி கத்தி, கூப்பாடு போட்டார். கல்லூரியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்த போது காதலும் வந்து தொலைத்து விட்டது. கோயிலில் பூசாரியாக இருந்த அப்பாவிற்கு காதல் விடயம் தெரிய வந்ததும் எகிறினார். இவளின் படிப்பிற்கு தடை போட்டார். இவரின் தூரத்து உறவினர் வலிய வந்து பெண் கேட்டார்கள். மாப்பிள்ளை கனடாவில் பெரிய உத்தியோகம் என்றார்கள். இவளை எப்படியாவது தள்ளி விட்டால் போதும் என்ற நோக்கத்தில் இருந்தவர் தீர விசாரிக்காமல் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்தார்.

மாப்பிள்ளை வந்து இறங்கினார். பார்த்த உடனே விளங்கியது அவர் ஒன்றும் பெரிய கெட்டிக்காரன் இல்லை என்பது. பேஸ்து அடிச்சவர் போல பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தார். மதுமிதாக்கு அழுகை வந்தது. காதலனும் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்திவிட்டு வேறு ஊருக்கு போய்விட்டான். அதோடு இவளை வைத்து காப்பாற்ற அவனிடம் பணமோ அல்லது வேலையோ இருக்கவில்லை. தலையெழுத்து என்று மனதை கல்லாக்கி கொண்டாள்.

வெளிநாடு வந்த நாட்களில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலிருந்தது. வீட்டில் மீன், இறைச்சி, முட்டை என்று எல்லாமே வெளுத்துக் கட்டினான் வசந்த். அப்பாவை நினைக்கவே ஆத்திரமாக வந்தது மதுமிதாக்கு. வசந்த் சாப்பிடும்போது புகைப்படம் எடுத்து அப்பாவுக்கு அனுப்பி வைத்தாள். உங்கள் மருமகனின் யோக்கியதை இப்ப விளங்குதா என்று கடிதமும் வைத்து அனுப்பினாள். அப்பா எழுதிய கடிதத்தை படிக்காமலே குப்பையில் போட்டாள். வசந்த் குடிகாரன் மட்டுமல்ல போதைப் பழக்கமும் இருந்தது நாளடைவில் தெரிய வந்தது. ஏதோ ஒரு வெண்மை நிற பொடியினை உறிஞ்சியோ அல்லது ஊசி மூலம் போதை ஏற்றிக் கொள்வான்.

அதிகாலை 4 மணி அளவில் கதவு திறக்கு சத்தம் கேட்டது. வசந்த் உள்ளே வருவது தெரிந்தது. அவன் மட்டுமல்ல கூடவே 4 பேர் வாசலில் நின்றார்கள். மதுமிதா அறையினுள் போய் பூட்டிக் கொண்டாள். வந்தவன் சிறிது நேரம் இருந்து விட்டு, மீண்டும் வெளியே கிளம்பிவிட்டான். அவன் வெளியே கிளம்பிய பின்னர் தான் அவனிடம் பணம் கேட்க வேண்டும் என்று ஞாபகம் வர வெளியே ஓடினாள். அதற்குள் அவன் வெகுதூரம் போயிருந்தான். நாளைக்கு சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று யோசனையில் திரும்பி நடந்தாள். அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் நீளமான வராந்தாவில் நடந்து, இடது பக்கம் திரும்பியவள் யார் மீதோ இடிபட்டு கீழே விழுந்தாள்.

பயத்துடன் அந்த ஆளை நோக்கினாள்........

தொடரும்