Tuesday, May 22, 2012

அம்மாவுக்கு ஒரு கடிதம்


அன்புள்ள அம்மா, நலமா?  உங்களுக்கென்ன நலமாகத் தான் இருப்பீர்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் தான்  அநாதைகள்  போல் ஆகிவிட்டோம். நீங்கள் இருந்தபோதும் நாங்கள் அநாதைகள் தான் என்பது வேறு விடயம். எப்போதும் எள்ளும், கொள்ளும் வெடிக்கும்  முகம். பக்கத்தில் வந்தால் முதுகில் சரமாரியாக அடி விழும் என்ற காரணத்தினால் ஒரு  நான்கடி தள்ளி நின்றே எல்லோரும் பேசப் பழகிக் கொண்டோம். தப்பித் தவறி யாராவது மாட்டிக் கொண்டால் அந்த நபர் கதி அவ்வளவு தான். இப்படி உங்கள் மீது பழியை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரு நாள் கூடத்தில் ஒரு அழகிய வெண்புறா வந்து நின்றது. இதைக் கண்ட என் பள்ளித் தோழி  ஸ்டெல்லா சொன்னாள், உனக்குத் தெரியுமா வெண்புறா வந்தால் வீட்டில் துர்மரணம் சம்பவிக்கும், என்றாள். நான் குழம்பி நின்றேன். யார் இறக்கப் போகிறார்கள். என்ன தான் கொடுமையான அம்மாவாக இருந்தாலும் நீ வீட்டில் இருப்பதே எனக்குப் பெரிய பலம். நீ இல்லாமல் ஒரு வாழ்க்கையினை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

சே! அப்படி இருக்காது என்று வெளிமனம் சொன்னாலும் உள்ளுக்குள்  பயமாக இருந்தது.
மற்ற அம்மாக்கள் போல விரும்பிய உணவுகள் செய்து கொடுத்ததில்லை. ஏதாவது சாப்பிட ஆசையாக இருந்தாலும் உன் பக்கத்தில் வந்து கேட்கும் தைரியம் யாருக்கும் வந்ததில்லை. கேட்டால் நையப் புடைத்து விடுவாய். என் தங்கை, தம்பிகள் இப்படி உன்னிடம் அடிக்கடி அடி வாங்கியது கண்டு மனம் பொறுக்காமல் நானே அவர்களுக்கு சமைத்துக் கொடுக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு வீட்டு நிர்வாகம் முழுக்க என் தலையில் சுமத்தி விட்டு நீ கட்டிலில் மட்டும் காலத்தைக் கழித்தாய்.

உனக்கு என்ன நோய் என்று எங்களுக்கு விளங்கவில்லை. அதை நீயும் எங்களுக்கு எடுத்துச் சொன்னதில்லை. ஒரு வேளை தவறு எங்கள் மீது தானோ? உன் தலையினை வருடி, உன் கைகளைப் பிடித்து ஆதரவாக, அம்மா, நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் வார்த்தைகளை தான் நீ எதிர்பார்த்தாயோ? அப்பாவிடம் கிடைக்காத அன்பு, காதல் எதையும் நீ எங்களிடமும் எதிர்பார்கவில்லையோ?
ஒரு நாள் பள்ளியால் வந்தபோது அப்பா வாசலில் நின்றார். அவரின் முகம் கலங்கி இருந்தது. எங்களை அணைக்க முயன்றார். அவரை விலக்கி உள்ளே ஓடினேன். அங்கே கூடத்தில் நீ. உயிரற்ற சடலமாக. ஆனால், உன் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி உணர்வு. அப்படி ஒரு சாந்தமான முகத்தினை நான் அதற்கு முன்னர் கண்டதில்லை. ஒரு பெரிய பொதியாக கட்டி உன்னை எடுத்துச் சென்றார்கள்.

 இது வரை நான் வாழ்க்கையில் கண்டறியாத, கேட்டறியாத உறவினர்கள் எல்லோரும் வந்தார்கள். போலியான சோகத்துடன் அவர்கள். பொய்யான சோகத்துடன் அப்பா. இடையில் நாங்கள் நால்வரும் செய்வதறியாது நின்றோம். நான் ஒரு உறவினர் வீட்டிலும், தங்கை வேறு ஒருவர் பராமரிப்பிலும், தம்பிகள் அப்பாவோடு செல்வதாக அவர்களே முடிவு செய்தார்கள். நான் கண்டிப்பாக மறுத்துவிட்டேன். என் தங்கை, தம்பிகளை வளர்க்க நீங்கள் எல்லோரும் யார், என்று கேள்வி கேட்ட என்னை விநோதமாகப் பார்த்தார்கள்.
அப்படியே அம்மாவின் திமிர் இதுக்கும் வந்திருக்கு, என்று நொட்டை சொன்ன பிறகு அவர்கள் வழியில் போய் விட்டார்கள்.
அம்மாவின் திமிர் மட்டும் அல்ல. அவரின் மன உறுதியும் சேர்ந்தே வந்திருக்கு என்று மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு உடன் பிறப்புகளை கவனமாக வளர்த்து கரையேற்றினேன்.
உன் திமிர், மன உறுதி மட்டும் அல்ல. உன் நோயும் எனக்கு வந்திருக்கு. ஆம். உனக்கு வந்த அதே மனச்சிதைவு நோய் எனக்கும் வந்திருக்கு.
இப்ப விளங்குகின்றது நீ எதற்காக அப்படி இருந்தாய் என்பது. உலகமே என்னைச் சுற்றி வந்தாலும் எனக்கோ எதையோ பறி கொடுத்தால் போல ஒரு உணர்வு. அழகிய மகள் இருந்தாலும் ஏதோ ஒரு இனம் புரியாத வெறுப்பு எல்லோர் மீதும். இன்று  காலை வெய்யில் வீட்டினுள் வரக் கூட நான் அனுமதிக்கவில்லை.கதவு, ஜன்னல் திரைச்சேலை எல்லாம் மூடி விட்டு, இரூட்டில் இருக்கிறேன்.  இருட்டினையே அதிகம் விரும்புது மனது. நீயும் இப்படி இருட்டில் தானே இருந்தாய். 

காலையில் பள்ளிக்கு கிளம்பும் போது மகள் சொன்னாள், அம்மா, இன்று எனக்கு பிடிச்ச பைனாப்பிள் கேசரி செய்து வைப்பீர்களாம், என்று.  உனக்கு அது தான் ஒரு கேடு என்று நீங்கள் சொல்வது போல நினைத்தாலும் வார்த்தைகளை அடக்கிக் கொண்டே புன்னகை செய்தேன்.


தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் விளங்கும் என்பார்கள். நீ எவ்வளவு சிரமப்பட்டிருப்பாய் என்று விளங்குது. ஒரே ஒரு முறை மீண்டும் அந்த நொடி... நீ தற்கொலை செய்ய நினைத்த அந்த  நொடிக்கு போகும் சக்தி எனக்கு இருந்தால், இப்பவே உன்னை அங்கே வந்து மீண்டும் கூட்டி வருவேனே. உன்னிடம் அன்பாக பேசி, உனது நோயின் காரணத்தை கண்டறிந்து கொள்ள வேண்டும் என்று என் மனது துடிக்கிறது. இந்தக் கொடிய நோய் உனக்கு, எனக்கு, எனக்குப் பின்னர் என் மகளுக்கு.... நினைக்கவே நெஞ்சு பதறுகின்றதே. உன் முடிவு உனக்கு மட்டும் விடுதலை தேடிக் கொடுத்தது. உன்னைப் போல நான் மட்டும் விடுதலை பெற விரும்பவில்லை. எதிர்த்து நின்று இந்த நோயினை வெற்றி கொள்ளப் போகிறேன்.

இப்படிக்கு,
உன் அன்பு மகள் சௌம்யா.