Saturday, October 11, 2014

இனிய நினைவுகளா? கிருமிகளா?

   
 பல மாதங்களின் பின்னர் மீண்டும் வந்திருக்கிறேன். காரணம்.....நேரம் வரும்போது அல்லது சந்தர்ப்பம் கிடைக்கும் போது சொல்கிறேன். இனிமேல் முன்பு போல வர முடியுமா என்று தெரியவில்லை. முன்பு போல அதிரா, இமா, அஞ்சு, மகி, ஜெய்லானி போன்றவர்கள் பதிவுகள் எழுதுவதில்லையா? அல்லது என் ரீடரில் தான் எதுவும் பிரச்சினையா? என்னை முகபுத்தகத்தில் விசாரித்த ஏஞ்சலினுக்கு என் அன்புகள். என்னைக் காணாவிட்டால் இவரிடரிடமிருந்து மெஸேஜ் கட்டாயம் வரும்.
************************
                   என்னுடன் வேலை செய்யும் திருமதி. பார்பரா அவர்களின் கணவர் இறந்துவிட்டார். இவர் வேலையால் வீட்டுக்கு போனபோது அவர் உயிருடன் இல்லையாம். மாரடைப்பினால் இறந்துவிட்டார். பார்பரா கணவர் இறந்த தகவலை முகபுத்தகத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை அப்டேட் செய்திருந்தார், என்று வேறு ஒரு நண்பி சொன்னார். இதனால் பல உறவினர்கள் இவரைக் குடைந்து கேள்விகள் கேட்காமல், முகபுத்தகத்தினை படித்து எல்லா தகவல்களையும் அறிந்து கொண்டார்களாம்.


                   வேலை செய்பவர்கள் எல்லோரும் அவரின் உடலை பார்வையிட செல்வதாக சொன்னார்கள். நானும் அவர்களுடன் செல்ல முடிவெடுத்தேன். உள்ளுக்குள் கொஞ்சம் நடுக்கம். காரணம், நான் பிறந்தது முதல் இறப்பு வீட்டுக்கு சென்றதே இல்லை. நான்  சிறுமியாக இருந்தபோது என் மாமாவின் இறப்பு. அதுவே நான் சென்ற முதலும் கடைசியுமான சாவு வீடு. அதுவும் பெரும்பாலும் விளையாட்டில் கழிந்தது. இரவு வந்தபோது கொஞ்சம் கலக்கமாக இருந்தது. மாமாவை நடு வீட்டில் வைத்திருந்தார்கள். சுற்றிலும் உறவினர்கள். இரவு எல்லோரும் தூங்கிவிட நான் மட்டும் கண்களை இறுக மூடியபடி இருந்தது நினைவில் இருக்கு. அதன் பின்னர் என் வாழ்க்கை வெளிநாட்டில் கழிகின்றது. என் தாத்தா, அம்மாச்சி, மாமா இவர்களின் இறுதிப் பயணத்திற்கும் நான் ஊரில் இருக்கவில்லை.

இது நான் செல்லும் இரண்டாவது இறப்பு வீடு. இங்கு வீடு என்பது அவரின் சொந்த வீடு அல்ல. Funeral homes எனப்படும் வீடுகளில் உடலை வைத்திருப்பார்கள். அங்கிருந்து தான் அவரின் இறுதிப்பயணம் தொடங்கும்.

நான், என்னோடு வேலை செய்யும் நாடலி மற்றும் வேறு சிலரோடு, நாடலியின் காரில் போவதாக ஏற்பாடு. பெரும்பாலும் எல்லோரும் கறுப்பு உடைகளில் காணப்பட்டார்கள். ஒரு வரிசையில் காத்திருந்து, மெதுவாக உள்ளே சென்றோம். அங்கு ஒரு நோட்டில், பெயர், வீட்டு முகவரி எழுதி விட்டு, உள்ளே போனோம். வீடு முழுவதும் உறவினர்கள், நண்பர்கள். நகரக் கூட இடம் இருக்கவில்லை. பார்பரா வந்து எல்லோரையும் கட்டி அணைத்து வரவேற்றார். எங்காவது ஒரு மூளையில் இருந்து கதறி அழுது கொண்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டு போன எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கிருந்த எல்லோரும் இறந்தவரின் பெருமைகளை பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

 நான் பயப்பட்டது போல அவரின் உடலை நடு வீட்டில் வைத்திருக்கவில்லை. ஒரு ஓரமாக, விரும்பியவர்கள் மட்டும் சென்று பார்க்கலாம் என்பது போல ஏற்பாடு. என்னோடு வந்தவர்கள் யாரும் அந்தப்பக்கம் போகவில்லை.

அங்கு போய் வந்ததிலிருந்து  நான் அடிக்கடி இதே நினைவாக இருக்கிறேன். இவர்களின் முறை சரியா? இறந்தவர் கட்டிய வீடு- அதிலிருந்து அல்லவா அவரின் இறுதிப்பயணம் தொடங்க வேண்டும். இறந்தவரின் உடலில் தொற்றுக் கிருமிகள் இருக்கும் என்று காரணம் சொன்னாலும் என்னால் ஏனோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் தாத்தா, பாட்டி, மாமா எல்லோருடைய இறுதிப்பயணமும் எங்கள் ஊர் வீட்டிலிருந்து தான் நடைபெற்றது. எந்தவிதமான கிருமிகளையும் அவர்கள் விட்டுச் செல்லவில்லை.
இனிய நினைவுகளை மட்டும் தான் விட்டுச் சென்றார்கள்.