ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல ஒரு பிரச்சினை என்று வந்துவிட்டால் இரண்டு பக்க நியாயத்தையும் கேட்பது தான் நியாயம் அல்லவா?
என்னை இப்படி மரண அடி அடித்தது அந்தம்மாவுக்கு சரியாக இருந்தாலும் என் தரப்பு கதையினையும் உங்களுக்கு கட்டாயம் சொல்கிறேன். என் பெயர்.... ம்...எனக்கு யார் பெயர் வைச்சா? என் குலத்தினை ராட்டில் ஸ்நேக் என்பார்கள். அதாவது என் வாலில் சின்ன குழந்தைகள் கைகளில் இருக்கும் கிலு கிலுப்பான் போல சத்தம் எழுவதால் அந்தப் பெயர். எங்கள் இனம் வடமெரிக்காவில் பல காலமாக வாழ்ந்து வருகிறோம். பெரும்பாலும் நாங்கள் உண்டு, எங்கள் வேலை உண்டு என்று இருந்துவிடுவோம். யாராவது அருகில் வந்தால் ஸ்ஸ்ஸ்ஸ்..என்று சத்தம் மட்டும் எழுப்புவோம். மற்றும்படி அந்த நபரை தீண்ட, கொலை செய்ய கனவிலும் நினைப்பதில்லை.
நான், என் குடும்பம் இருப்பது ஒரு பார்க்கில். அதாவது எங்களுக்கு சொந்தமான இடம். அதில் கொஞ்ச இடத்தில் மரங்களை வெட்டி, அதில் பிள்ளைகள் விளையாட்டு மைதானம் அமைத்து இருந்தார்கள். இது தவிர ஒரு பாதை. பைக் பாத் என்பார்கள். இந்த பைக்கில்/சைக்கிளில் போகும் ஆசாமிகளால் எந்த ஆபத்தும் வந்ததில்லை. ஆனால், பாருங்கள் இந்த குட்டிப்பட்டாளம் தான் எங்களுக்கு எமன்.
நான் பெரும்பாலும் எலி, பெருச்சாளி, முயல் இப்படி அகப்பட்டதை தின்றுவிட்டு படுத்துவிடுவேன். ஒரு நாள் ஒரு பெருச்சாளியை விரட்டிக் கொண்டு விளையாட்டு மைதானத்துக்கு போய் விட்டேன். எனக்கு இரை கிடைக்கவில்லை. அந்த நேரம் ஒரு குடும்பம்.. அதாவது ஆண், பெண், மூன்று பிள்ளைகள் வந்தார்கள். நான் தரையோடு தரையாக ஒன்றிக் கொண்டேன். அவர்கள் என்னைக் கவனிக்கவில்லை. நான் ஒளிந்திருந்த பக்கம் ஒரு குட்டி வர, நான் டென்ஷன் ஆனேன். என்கிலுகிலுப்பான் மூலம் ஒளி எழுப்பினேன். அந்தக் குட்டி இன்னும் கிட்ட வர, என் கோபம் தலைக்கேறியது. அப்ப தான் 'படார்" என்று ஒரு அடி என் தலையில் விழுந்தது. திரும்பி பார்த்தால் அந்தம்மா ஒரு தடியோடு நிற்கிறார். எனக்கு தலையினை தூக்க கூட முடியவில்லை. வாலில் இருந்து வரும் சத்தம் மட்டும் நிற்கவில்லை. அந்தம்மாவின் கோபம் இன்னும் அதிகமானது.
" உனக்கு என்ன திமிர்?", என்றார்.
"ஞே ஞே ...", இது நான்.
" இங்கே இருந்து ஓடிப் போயிரு", அந்தம்மா.
அசையவே முடியவில்லை. எங்கே ஓடிப் போறது. இந்த வால் சனியன் வேறு அனிச்சையாக ஆடி, சத்தம் எழுப்பி அந்தம்மாவின் கோபத்தினை அதிகரித்தது. வாலினை என் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து தோற்றுப் போனேன்.
" நீ அந்த குடும்பத்தின் ஏஜன்ட்டா?", என்றார் அந்தம்மா.
எந்தக் குடும்பம்? எனக்கு எதுவும் விளங்கவில்லை. இப்போதைக்கு செத்த பாம்பு போல கிடப்பது தான் விவேகம் என்று முடிவுக்கு வந்தேன். செத்த பாம்பினை அடிக்க அந்தம்மா என்ன லூஸா? அந்தம்மா ஒரு பத்தடி தள்ளி நின்றது மங்கலாகத் தெரிந்தது.. அப்ப தான் அந்தம்மா சொன்னார்கள், அவர் இந்தியாவில் இருந்த போது அவர் அப்பா ஒரு நாக பாம்பினை அடித்துக் கொன்றுவிட்டார்களாம். பக்கத்து வீட்டில் சொன்னார்களாம், உங்க குடும்பமே நாக தோஷத்திற்கு உள்ளாகியுள்ளது ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும், என்று. என் அப்பா செய்யவில்லை. அதனால் தான் அந்த தோஷம் அமெரிக்கா வந்தும் கழியவில்லை என்று.
அட! பதர்களா, அது தான் ஏஜன்ட் என்று சொன்னார்களா?. இப்ப என் நினைவு மங்கத் தொடங்கியது. என் கணவர், பிள்ளைகள் நினைவில் வந்து போனார்கள். என் மகள் மாசமாக இருக்கிறாள். அவளின் பிள்ளையை பார்க்காமல் என் கட்டை வேகாது. அந்தம்மா இப்ப வீர வசனம் பேசி முடிந்து காரில் ஏறி போனது மங்கலாக தெரிந்தது.
நீங்கள் என் தரப்பு கதையினை கேட்டு விட்டீர்கள் அல்லவா? இப்ப யார் பக்கம் நியாயம் என்று.. இருங்கள் நீங்கள் உங்கள் மனிதர்களை தான் ஆதரிப்பீர்கள். இது கூட தெரியாத வெங்காயமாக இருக்கிறேன். ஏதோ சத்தம் கேட்கிறது. சிறுவர்கள் இந்தப் பக்கம் வருகிறார்கள் போல. நான் போய் ஒளிந்து கொள்கிறேன்.