Friday, October 21, 2011

செல்லப் பிராணிகள்

வெளிநாடுகளில் நாய், பூனை, பாம்பு, பல்லி, இப்படி இன்னபிற செல்லப் பிராணிகள் வளர்ப்பதெல்லாம் ஒரு கலை என்றே நம்புகிறேன். நல்ல ஜாதி நாய் வாங்குவதென்றால் அதற்கு ஒரு விலை, அதை பராமரிப்பதற்கு ஒரு விலை. பராமரிப்பு என்பதில் அதன் உணவு, கால் நடை வைத்தியருக்கு பெரும் பணம், இது தவிர தொலைக்காட்சிகளில் காட்டப்படும் பொருட்களை வாங்குவதற்கு ஒருவர் தனியாக வேலைக்குப் போய் வர வேண்டும்.

சிலர் செல்லப் பிராணிகளுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் மருத்துவருக்கு தண்டமாக நிறைய அழ வேண்டி இருக்கும். என் உறவினரின் நாய்க்கு தொண்டை சரி இல்லை. கத்தும்போது விநோதமான ஒலி வந்தது. அந்த நாய்க் குட்டிக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் இல்லை. ஒரு முறை மருத்துவரிடம் சென்று வந்தமைக்கு பில் 500 டாலர்கள். மருத்துவர் ஏதோ மாத்திரைகள் குடுத்தாராம். ஃபாலோ அப் செக்கப் வேறு இருக்காம். அட ராமா! என்று நினைத்துக் கொண்டேன்.

பிள்ளைகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு விளம்பரம்.. நாய்களுக்கு தண்டர் சேர்ட் என்று ஒரு பொருள் மார்க்கெட்டில் புதுசா வந்திருக்காம். அதாவது சில நாய்களுக்கு இடி முழக்கம், வாக்கும் கிளீனர் சத்தங்கள் கேட்டால் பயந்து நடுங்குமாம். அவைகளுக்கு இந்த வகை சேர்ட்டுகளை வாங்கி மாட்டி விட்டால் அவை இடிமுழக்கம் நேரம் கூட பயமில்லாமல் கூலாக இருப்பார்களாம். எங்க ஊர்ல கூட வீட்டுக்கு நாலு நாய்கள் இருக்குமே. அவை இடிமுழக்கம், பட்டாசு சத்தங்களுக்கு எங்கே போய் ஒளிந்து கொண்டன என்று இப்ப நினைப்பதுண்டு.

இன்னொரு பொருள், பூனைகள் ஆய் போக மண்ணை நிரப்பி, அதில் பேக்கிங் சோடா கலந்த ஒரு கலவையை நிரப்பி, எடுத்து குப்பையில் போடுவதற்கு ஒரு ப்ளாஸ்டி கரண்டி போன்ற ஒரு சாமான்.

வேறு ஒரு பொருள், பூனைகள் அவற்றின் தேய்ந்து போன நகங்களை கூர்மையாக்க ஒரு பொருள். மரத்தினால் திண்டு போன்ற ஒரு அமைப்பு செய்து, அதன் மீது தடிமனான துணி வைத்து, ஓரத்தில் ஒரு குச்சியில் கொடி போன்று ஒரு துணியினை கொழுவி இருந்தார்கள். பூனைகள் நகங்களை கூர்மையாக்கிய பின்னர் அந்தக் கொடியினை தட்டி விளையாடலாம் என்பது போலக் காட்டினார்கள். " முன்னாடியெல்லாம் என்னையே பிராண்டிட்டு இருப்பான் என் வீட்டு பூனை. இப்ப பிராண்ட ஒரு பொருள் வந்த பிறகு நான் தப்பிச்சேன்", என்று ஸ்டேட்மென்ட் விடுத்தார் ஒரு அம்மா.
போன வாரம் நாய்க்கு வாயில் ஸ்மெல் வராமல் ஸ்பிரே செய்ய வாசனைத் திரவிய பாட்டில் காட்டினார்கள். இதெல்லாம் ரெம்ப ஓவரா இருக்கே என்று மலைச்சுப் போனேன்.
பக்கத்து வீட்டில் ஒரு நாய். பரம சாது. அல்ஸேஷன் வகையை சார்ந்தது. ஒரு நாள் மழுங்க, மழுங்க மொட்டையுடன் ஒரு நாய் நின்றது அவர்கள் வீட்டில். என்ன இது பழைய நாய்க்கு என்ன ஆச்சு? ஏதாவது சீக்கு வந்து போய் சேர்ந்திடுச்சா என்று நினைத்தேன். ஆனால், முகத்தைப் பார்த்தால் பழைய அப்பிராணி போல இருக்கவே பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் விசாரித்தேன்.
ஓ! அதுவா இது என் பழைய நாயே தான். அதுக்கு முடியெல்லாம் groom பண்ணிட்டோம், என்றார். முடியை வழிக்கவே பெட் ஸ்டோர்களில் ஆட்கள் இருக்கிறார்கள்.

இது தவிர உடல் ஊனமுற்றவர்களை கவனிக்க நாய்களை பழக்கி குடுக்க ஆட்கள் இருக்கிறார்கள். அதாவது ஊனமானவர்களுக்கு சேவைகள் செய்ய, அவர்களைப் பாதுகாக்க என்று ஸ்பெஷலாக பழக்கி இருப்பார்கள். அது மிகவும் அவசியமான ஒன்று தான். நாங்கள் முன்பு குடியிருந்த அப்பார்ட்மென்டில் ஒரு ஊனமுற்ற ஒருவர். அவர் எப்போதும் சக்கர நாற்காலியில், நாயுடன் தான் திரிவார். ஒரு நாள் எலிவேட்டருக்கு காத்திருக்கும் போது அவரும் வந்தார். அவர் வந்தார் என்று நான் சொல்வது நாயும் கூடவே வந்தது என்று அர்த்தம். நல்ல திடகாத்திரமான, பார்க்கவே ஒரு வித அச்சம் தரும் வகையில் இருந்தார் மிஸ்டர். பில். அவரின் கழுத்தில் ஒரு அட்டை தொங்கியது. பக்கத்தில் நின்றமையால் படிக்க முடிந்தது. அதில் பின்வருமாறு அறிவிப்பு இருந்தது, " நான் பொல்லாதவன். எனக்கு பிஸ்கோத்து, கேக் தர பக்கத்தில் வந்தாலோ அல்லது சோ க்யூட் என்று தடவினாலோ மிகவும் பொல்லாதவனாக மாறிடுவேன். அன்புடன், பில்." பில் என்பது நாயின் பெயரா அல்லது ஓனரின் பெயரா தெரியவில்லை. நான் நாலடிகள் தள்ளி நின்று கொண்டேன். எலிவேட்டர் வந்த பின்னர் இரண்டு பில்களும் ஏறிக் கொண்டார்கள். பில் எலிவேட்டரின் பட்டனை அழுத்திப் பிடித்துக் கொண்டே என்னை உள்ளே வருமாறு கூப்பிட்டார்.
எலிவேட்டருக்குள் போய் நாயிடம் கடி வாங்கி சாக நான் என்ன லூஸா என்று நினைத்தபடி, நோ தாங்ஸ். நீங்க போங்க... நான் என் ஆ. காரர், இல்லை எலிவேட்டர்... இப்படி எதையோ புலம்பிக் கொண்டிருக்க அவர்கள் இருவரும் சென்று விட்டார்கள்.

இது தவிர நாய்களுக்கு ஸ்வெட்டர், சப்பாத்துக்கள், விதம் விதமான உணவுகள் என்று நிறைய இருக்கு பெட் ஸ்டோர்களில்.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது எங்க ஆட்கள் ஊரில் வளர்த்ததெல்லாம் நாய் வளர்ப்பு என்றே சொல்ல முடியாது. எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு மிஞ்சும் எலும்புகள், சோறு, மீன் முட்கள்... இவைகள் தான் பெரும்பாலும் நாய்களுக்கு உணவு. சிலர் விதிவிலக்காக இருப்பார்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், பெரும்பாலும் வீடுகளில் நாய், பூனை என்றாலே ஒரு இளக்காரம் தான்.

என் பிள்ளைகளுக்கு நாய், பூனை வளர்க்க ஆசை. ஊர் போல இங்கு இல்லை. அது ஆய் போக வெளியே கூட்டிட்டு போகணும். வின்டர் குளிரில் இதெல்லாம் ஆகிற காரியமா? ரோட்டின் ஓரத்தில் நாய்கள் இரண்டுக்குப் போனால் அதை க்ளீன் பண்ணனும். அதற்காகவே சில இடங்களில் பைகள் வைத்திருப்பார்கள். நீங்க இரண்டு பேரும் நாய், பூனை ஒண்ணுக்கு, இரண்டுக்கு போனால் க்ளீன் செய்ய ரெடி என்றால் வாங்கலாம் என்றேன். அதன் பிறகு மூச் ஒரு சத்தம் கூட இல்லை.