Saturday, May 28, 2011

கிரகம் பிரவேசம்....

கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப் பார் என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள். அதுவும் வெளிநாட்டில் சொந்த வீடு கட்டுவது என்றால் சுலபமான வேலையா? ஒரு கல்லூரியில் விரிவுரையாளர் வேலை தனஞ்சயனுக்கு. வயது 40. கல்லூரியின் பக்கத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் குடியிருந்தார். தொடக்கத்தில் வேலைக்கு போனோமா, வந்தமா என்று சாதாரண வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருந்தார் தனஞ்சயன். சேமிப்பு கொஞ்சம் இருந்தது என்னவோ உண்மை தான். பணத்தை செலவு செய்யவே மாட்டார். ஓய்வு நேரங்களில் பிள்ளைகளுக்கு ட்யூசன் வகுப்புகள் எடுப்பார். அக்கம் பக்கம் இருந்த குழந்தைகள் கிட்டத்தட்ட 10 பேராவது தேறுவார்கள். சில அம்மாக்கள் 2, 3 பிள்ளைகளை அனுப்பினா டிஸ்கவுன்ட் கிடையாதா என்று நச்சரித்ததில் பாதிப் பேருக்கு ( அதாவது 5 பிள்ளைகளுக்கு ) தான் பணம் வந்தது. மீதி இலவசமாகவே படித்துக் கொண்டிருந்தார்கள். தொண்டை கிழிய கத்தினாலும் சிலதுகளுக்கு மண்டையில் முழுவதும் ஏறவேயில்லை.

கல்லூரியில் தமிழ் மாணவர்கள் உரிமையாக தனஞ்சயன் என்று பெயர் சொல்லிக் கூப்பிடுவது, வீட்டுக்கு வருவது எல்லாமே எரிச்சலாக இருந்தது. ஊரில் வாத்தியார் என்றால் என்ன மரியாதை. இங்கே தோளில் கை போடாத குறை தான் என்று அடிக்கடி நினைப்பார். இப்படி ஏகப்பட்ட கடுப்புகள் தனஞ்சயன் வாழ்வில்.

ஒரு நாள் ஒரு அமெரிக்கர் அறிமுகமானார். பெயர் ஜோசப். பேசும்போது வாய் காது வரை கிழிந்தது ஜோசப்பிற்கு. அவர் ஒரு நாள் சொன்னார், " ஏன் இப்படி வீட்டுக்கு வாடகை குடுக்கணும். என் கையில் நீ ஒரு துண்டு நிலமும், ஒரு இலட்சம் டாலர்களும் குடு, நான் உனக்கு அழகிய வீடு கட்டித் தருகிறேன்." என்றார்.
அவ்வளவு பணமா? என்னிடம் கொஞ்சம் இருக்கு. மீதிக்கு நான் எங்கே போவதாம்? என்று அலுத்துக் கொண்டார் தனஞ்சயன்.

இருப்பதை கொண்டு தொடங்கலாம். மிச்சத்துக்கு லோன் எடுக்கலாம் என்றார் ஜோசப். முதலில் தயங்கினார் தனஞ்சயன். பிறகு ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் சரி என்று சொல்லி விட்டார். அதன் பிறகு எப்போதும் புது வீட்டு நினைப்பாகவே திரிந்தார். அலைந்து திரிந்து கடன் வாங்கி, நிலம் வாங்கி, ஜோசப் வேலை தொடங்கவே 1 வருடத்திற்கு மேல் எடுத்தது. ஏற்கனவே கஞ்சன் என்று பெயர் பெற்ற தனஞ்சயன் மகா கஞ்சன் ஆனார். வீட்டுப்பக்கம் கல்லூரியில் கற்கும் மாணாவர்களின் தலை தெரிந்தாலே கோபம் வந்தது.

இயலுமானவரை அவர்களைத் தவிர்த்தார். அப்படியும் மீறி வருபவர்களை வேண்டா வெறுப்பாக வரவேற்பார். இவரின் கஞ்சத்தனத்தையோ, எரிச்சலையோ எவரும் பெரிதாக எடுத்துக் கொண்டாத தெரியவில்லை. மாணவர்கள் வழக்கம் போலவே வந்தார்கள். உரிமையாக சமையல் அறை வரை சென்றார்கள்.
தனஞ்சயனின் வீட்டு அஸ்திவாரம் போடப்பட்டது. ஒரு வாரம் கழித்து சென்று பார்த்தபோது மள மளவென இடுப்பளவு உயரத்திற்கு மரப்பலகைகள் வைத்து, வீட்டினை எழுப்பி இருந்தார்கள். ஊரில் ஒரு வீடு கட்டுவதெனில் 1 வருடங்களாவது வேணும். இங்கே 2 மாசத்தில் கட்டி முடித்து விடுவார்கள் போலிருக்கே என்று யோசனை ஓடியது. அஸ்திவாரம் உறுதியா இருக்கிறதா? ஆணிகள் ஒழுங்கா அடிக்கிறார்களா என்று சோதனை செய்ய நேரம் கிடைக்கும் போது போய் பார்வையிட்டு வருவார்.

வேலையால் வந்தால் சுத்தியலுடன் கிளம்பி விடுவார். சில நேரங்களில் இவரின் மாணவர்களும் கூடவே போவார்கள். அதுமட்டுமல்லாது, தனஞ்சயன், இன்று உங்கள் வீட்டில் ஒரு ஆணி வெளியே நீட்டிட்டு இருந்தது. நான் போய் சுத்தியலால் இரண்டு தட்டு தட்டினேன். நான் போன வாரம் 3 ஆணி அடிச்சேன் என்று புள்ளி விபரங்களோடு மாணவர்கள் ஆணி அடித்த கதைகள் சொன்னார்கள். தனஞ்சயனும் தனி ஆளாக கிடந்து அல்லாடமல் மாணவர்களின் உதவியை மறை முகமாக விரும்பினார். ஆனால், அதை வெளிக்காட்டாமல் இருந்து விடுவார்.
தனஞ்சயனின் வீடு ஒரு வழியாக உருப் பெற்றது. அழகிய இரண்டு அடுக்கு வீடு. முன் பக்கம் சிறிய தோட்டம் என்று அவரின் கனவு போலவே அழகிய குட்டி வீடு. எதிர்பார்த்ததை விட நிறையவே செலவு தான்.
ஐயர் நாள் பார்த்து குறிப்பிட்ட நாளில் பால் காய்ச்சி, குடி போகச் சொன்னார். தனஞ்சயன் ஒரு சிறு விருந்துக்கு ஏற்பாடுகள் செய்தார். வீடு கட்டும் போது உதவி செய்த மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மனசாட்சி சொல்லியது.

ஒரு நாள் கல்லூரியில் கணிணியில் வேலை செய்து கொண்டிருந்த போது இரண்டு மாணவர்களின் பேச்சுக் குரல் கேட்டது. இவரின் பெயர் அடிபடவே மெதுவாக ஒட்டுக் கேட்டார். என்னடா! ஞாயிற்றுக்கிழமை பிஸியா, என்றான் ஒரு மாணவன்.
ஓ! அதுவா. எங்க கஞ்சூஸ் தனஞ்சயன் வீடு கட்டி, அங்கே குடி போறார். ஞாயிற்றுக்கிழமை விருந்து குடுக்கிறார், என்ற மாணவன் தொடர்ந்தான். டேய், நம்ம கிரகம் அன்று தான் வீட்டில் பிரவேசிக்கணும் என்று ஐயர் சொல்லிட்டாராம் என்றான்.

தனஞ்சயனை நிற்பதை பிறகு தான் அந்த மாணவன் அறிந்து கொண்டான். சின்ன சிரிப்புடன் கிட்ட வந்தவன். நான் வரட்டா, என்றபடி கடந்து போனான்.

கிரகம் பிரவேசிக்க போவுதாம் என்ற சொல்லாடல் அவரையும் அறியாமல் அவரின் முகத்தில் புன்னகை தோன்ற வைத்தது. விருந்துக்கு மறக்காமல் வந்திடுப்பா என்று சத்தமாக சொன்னார். அவன் கையை அசைத்து விட்டு மறைந்து போனான். தனஞ்சயன் முகத்தில் ஒரு புன்சிரிப்புடன் கணிணியை நோக்கினார் . நீயும் இந்த வயதில் இந்த சேட்டைகள் செய்திருப்பாய் தானே என்று உள்ளே ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.