பெரிய அறையில் எங்கும் பூனைகள். வரி வரியாக கோடு போட்ட பூனைகள், வெள்ளை, மஞ்சள், கறுப்பு வெள்ளை இப்படி ஏகப்பட்ட கலரில் ஏகப்பட்ட பூனைகள். ஆனந்த நடுவில் அமர்ந்திருக்க, சுற்றி வர பூனைகள். ஒரு பூனை இவன் மடியில், இன்னொரு பூனை இவன் காலடியில். ஆகா! இதல்லவா சொர்க்கம் என்று மனதில் எண்ணிக் கொண்டான்.
நங் என்று ஏதோ சத்தமும் அதனைத் தொடர்ந்து அப்பாவின் வழமையான அர்ச்சனையும் ஆனந்தை இந்த உலகிற்கு கொண்டு வந்தன. அம்மா தண்ணி வாளியை இவன் பக்கத்தில் வைத்து விட்டு, உள்ளே போனார். இதன் அர்த்தம் இவன் போய் தண்ணீர் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் அப்பாவிடம் வாங்கி கட்ட வேண்டும்.
ஆனந்திற்கு பூனைகள் என்றாலே கொள்ளை விருப்பம். நாலு வீடு தள்ளி இருக்கும் பூனை, நாற்பது வீடுகள் தள்ளி இருக்கும் பூனை என்று எல்லாமே இவனின் செல்லப் பூனைகள் தான். ஆசையாக வருடிக் கொடுப்பான். பூனைகள் எந்த வீட்டில் இருந்தாலும் அங்கு ஆஜராகி விடுவான். ஆனந்தின் அப்பாவிற்கு பூனைகள் என்றாலே ஆத்திரம், கோபம், எரிச்சல் ஏற்படும். அதனால் ஆனந்த் வீட்டில் பூனை வளர்க்க முடியவில்லை. அண்டை அயலார் வீட்டு பூனைகளை தடவி ஆசையினை தீர்த்துக் கொள்வான். ஆனந்தின் பக்கத்து வீட்டில் புதிதாக ஒரு பூனைக் குட்டி. பார்க்கவே அழகா இருந்தது. கொழுக் மொழுக் என்று தூக்கி மடியில் வைத்திருக்க வேண்டும் போல தோன்றும்.
அப்பா வேலைக்குப் போனதும் பக்கத்து வீட்டு பூனைக் குட்டியை தூக்கி வைத்து தடவிக் கொடுப்பான். பால், ரொட்டி என்று உணவு வகைகள் குடுப்பான். பள்ளியால் வந்தால் ஆனந்தின் ஒரே பொழுது போக்கு இந்தப் பூனை தான்.
பூனைகளால் இவனுக்கு பட்டப்பெயர் ஏற்பட்டு, அதுவே நிரந்தரமாகி விடும் என்று கனவிலும் நினைத்ததில்லை. அந்தப் பட்டப்பெயர் ஏற்பட காரணம் இவனின் பக்கத்து வீட்டுப் பூனை.
பக்கத்து வீட்டில் பெரிய சுவர் எழுப்பி, கேட் போட்டு, ஏதோ ஒரு பெரிய கோட்டை போன்ற வீடு இருந்தது. அந்த வீட்டில் புதிதாக ஒரு பூனைக்குட்டி வந்து சேர்ந்தது. சுவரில் இருந்த ஓட்டை வழியாக இவன் வீட்டுப்பக்கம் வந்து விளையாடிச் செல்லும். அப்பா வரும் வரை தொடரும் விளையாட்டு, அப்பா வரும் நேரமாகியதும் அந்த ஓட்டை வழியாக பூனைக் குட்டியை தள்ளி விடுவான். அது மீண்டும் வராமல் செங்கற்களை அடுக்கி வைத்து விடுவான். அம்மா கண்டும் காணாதது போல இருந்து கொள்வார்.
ஆனந்தின் 10 வது பிறந்தநாள் வந்தது. பெற்றோர்கள் கொஞ்சம் ஆடம்பரமாக கொண்டாட முடிவு செய்தார்கள். இவனின் பள்ளி நண்பர்கள், சொந்தங்கள் என்று அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஹாலில் மையமாக விலையுயர்ந்த கம்பளம் விரித்து, உயரமான நாற்காலி போடப்பட்டது. இங்கு இந்த கம்பளம் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அம்மாவிற்கு கம்பளிகள் என்றால் கொள்ளை விருப்பம். இந்தக் கம்பளி வட இந்தியாவிற்கு டூர் போனபோது அதிக விலை கொடுத்து, அப்பா அம்மாவிற்கு அன்பளிப்பாக வாங்கி குடுத்தார். அம்மா இதனை யார் இரவலாக கேட்டாலும் கொடுக்கமாட்டார்.
பிறந்தநாள் விழா சிறப்பாகவே நடந்தது. இரவு உணவினை எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அயலாரின் பூனைக் குட்டி உள்ளே வந்தது. கூட்டத்தினைக் கண்டதும் மலங்க விழித்த குட்டி ஆன்ந்தைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் ஓடியது. ஆனந்த் செய்வதறியாது தடுமாறினான். உயரமான நாற்காலியின் கைப் பிடியில் ஏறி அமர்ந்து கொண்டான். பூனையும் தாவி ஏறிக் கொண்டது. இவனின் தட்டில் ஒரு ஓரமாக உண்ணத் தொடங்கியது. அந்த நேரம் ஏதோ வேலையாக வந்த அப்பாவிடம் மாட்டிக் கொண்டாலும் என்ற பயத்தினால் பூனை குட்டியினை கையினால் மெதுவாக தள்ளினான். பூனை முன்பை விட வேகமாக தட்டில் உண்ண முயற்சிக்க, இவன் தள்ள, கையில் இருந்த தட்டு சிதறி விழுந்தது. சாதம், கறிவகைகள் கம்பளி முழுவதும் பரவியது.
கோபப் பார்வை வீசிய அப்பா, " அனுமார் மலை உச்சிலை இருந்து சாப்பிட்டாப் போல இது என்ன கூத்து என்று சத்தம் போட்டார்."
வந்திருந்த நண்பர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். கம்பளியினை எடுத்து வேலைகாரியிடம் கொடுத்தார் அப்பா. மஞ்சள், சிவப்பு, பச்சை என்று எல்லாக் கலரிலும் கறைகள். ஆனந்த உள் அறையினுள் ஓடி போய் ஒளிந்து கொண்டான்.
அதன் பிறகு விழா சப்பென்று ஆகிவிட்டது. அப்பாவிற்கு மனம் சரியில்லாமல் போனது. இவ்வளவு கூட்டத்தில் மகனை அப்படி திட்டியிருக்க கூடாது என்று நினைத்து கவலைப்பட்டார். கொட்டியதை வார்த்தைகளை அள்ள முடியாதே. மகனிடம் சென்று மன்னிப்புக் கேட்டார். மகன் அப்பாவை மன்னித்து அந்த சம்பவத்தினை மறக்க நினைத்தாலும் அவனின் பள்ளித் தோழர்கள் மறக்கவிடவில்லை. ஆனந்த் "அனுமான்" ஆகிய கதை இதுதான்.
மன்னிப்பு கேட்டதோடு நிறுத்தாமல் ஒரு அழகிய பூனைக் குட்டியினை அன்பளிப்பாக குடுத்தார் அப்பா. ஆனந்த் இப்பெல்லாம் தன் பட்டப்பெயர் பற்றி கவலைப்படுவதில்லை. இந்தப் பட்டப் பெயரினால் ஒரு பூனைக் குட்டி கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து கொண்டான்.