Saturday, April 17, 2010

கூட்டுக் குடும்பம்

ஹாய்! எல்லோரும் எப்படி இருக்கின்றீர்கள்? என் பெயர் பர்வீன். எல்லோரும் வாருங்கள் வீட்டில் இருப்பவர்களை அறிமுகம் செய்கிறேன்.
இது சபிதா அக்கா - என் பெரியப்பா மகள். ஐஸ்வர்யா ராயை விட அழகு. இவள் மட்டும் அழகி போட்டிக்கு போயிருந்தால் பிரபஞ்ச அழகி இவள் தான். அழகிப் போட்டியில் வரும் நீச்சல் உடை சுற்று தான் இவளை பங்கேற்க முடியாமல் தடுத்து விட்டது. பெரியப்பா மிகவும் கண்டிப்பானவர். இவளை காலேஜூக்கு அனுப்புவதே பெரிய அதிசயம். இந்த லட்சணத்தில் அழகிப் போட்டி எல்லாம் கனவில் தான்.

அடுத்தது ஆயிஷா - சபிதா அக்காவின் தங்கை. இவளுக்கு நினைப்பு தான் பெரிது வேறு ஒரு மண்ணும் இல்லை. என்னிடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ள மாட்டாள். இவளைப் பற்றி நானும் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் அழகிப் போட்டிக்கு போனால் ஆறுதல் பரிசாவது வாங்கும் தகுதி இவளுக்கு உண்டு.

அடுத்து என் சித்தப்பா பையன் - அன்வர். அதோ அங்கே டி.வி. பார்த்துக் கொண்டு இருகிறானே அவனே தான். பெரிய அஜித்குமார் என்று நினைப்பு. இருங்கள் வருகிறேன்.
" டேய் லூசு, ஏன்டா டி.வி. க்குள் நுழையப் போகிறாயா? தூர நின்று பாருடா." தலையில் ஒரு கொட்டு வைத்தேன். " அம்மா, இந்த பர்வீனை பாரு" அலறிக்கொண்டே ஓடினான்.
"பயப்படாதீர்கள் சித்தி வர மாட்டார். அவர் கர்ப்பமாக இருக்கின்றார். இன்றோ நாளையோ பிள்ளை பிறக்கலாம்."

இதுங்களை தவிர நண்டு சிண்டுமாக கிட்டத்தட்ட 4, 5 உருப்படிகள் தேறும். அவர்களைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமேயில்லை. அன்வர் தான் இவர்களுக்கெல்லாம் தலைவன்.


எங்கள் கூட்டு குடும்பத்தில் இருக்கும் சிறிசுகளை அறிமுகம் செய்து விட்டேன். இனி பெரிசுகள்.

பெரியப்பா.. இவர் தான் எல்லோருக்கும் தலைவர். இவர் இருந்தால் வீடே அமைதியாக இருக்கும். இவருக்கு யாராவது சத்தம் போட்டு சிரித்தாலே ஆகாது.
அடுத்து என் அப்பா. இவர் பெரியப்பா அளவிற்கு இல்லாவிட்டலும் கொஞ்சம் பரவாயில்லை ரகம்.

அடுத்து 2 சித்தப்பாக்கள். இவர்கள் இரண்டு பேருமே ஏதோ கடமைக்கு வாழ்பவர்கள். பெரியப்பா சிரி என்று சொன்னால் மட்டுமே சிரிப்பார்கள்.

பெரியப்பா வீட்டில் இல்லாத நேரம் பெரியம்மா, அம்மாவின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கும். இரண்டு சித்திகளும் இவர்களுக்கு அடங்கி ஒடுங்கியே இருப்பார்கள்.

எனக்கு இந்த கூட்டு குடும்ப வாழ்க்கையே பிடிக்கவில்லை. எப்போது பார்த்தாலும் ஒரே இரைச்சல். எப்போதும் தொ(ல்)லைக்காட்சி, ரேடியோ அலறும். இல்லாவிட்டால் வாண்டுகளின் கூச்சல், அழுகை என்று வீடே இரண்டு பட்டு விடும். அம்மா, அப்பாவிடம் மனம் விட்டு பேசி நாளாகி விட்டது.

அப்பாவி போல இருந்த சபிதா அக்காவுக்கு ஒரு காதலன். அவன் வீடு எங்கள் தெருவில் இருந்தது. என்னைக் காவலுக்கு வைத்து விட்டு இருவரும் கதை கதையாக பேசுவார்கள். எனக்கு சாக்லேட் கொடுப்பார்கள். நானும் அதை தின்று முடிக்கும் வரை நல்லாவே காவல் காப்பேன். சாக்லேட் முடிந்ததும் மெதுவாக நழுவி விடுவேன். எந்த அசம்பாவிதமும் நேராமல் தடுக்க சபிதா அக்காவிடம் 4, 5 இனிப்புகள் கைவசம் எப்போது இருக்கும்.

நான் இவளின் காதல் விடயத்தை வீட்டில் உளறாமல் இருக்க வீட்டிலும் என்னை நன்கு கவனித்து கொள்வாள். டீ, காபி, சாப்பாடு என்று செய்து கொடுப்பாள். மற்றவர்கள் காரணம் தெரியாமல் விழிப்பார்கள். நானும் சபிதா அக்காவை நன்றாகவே வேலை வாங்குவேன்.

ஒரு நாள் சபிதா அக்கா காதலனுடன் பேசிக் கொண்டு இருந்தாள். நான் வழக்கம் போல சாப்பிடுவதில் குறியாக இருந்தேன். எங்கள் வீட்டிற்கு வரும் கீரைப் பாட்டியை கவனிக்கத் தவறி விட்டேன். அவர் பெரியப்பாவிடம் போய் தகவல் சொல்லிவிட்டார்.

நாங்கள் வீட்டிற்கு போனோம். அங்கு பெரியப்பா சாமியாடிக் கொண்டு நின்றார். சபிதா அக்காவிற்கு அடி விழுந்தது. சபிதா அக்காவிற்கு நாலு அடி, காவலுக்கு நின்ற எனக்கு 2 அடி, தடுக்க வந்த பெரியம்மாவுக்கு 1 அடி என்ற விகிதத்தில் அடி வாங்கினோம். எனக்கு உதடு கிழிந்து இரத்தம் கொட்டியது. வேலையால் வந்த அப்பா என் நிலை கண்டு பதறி விட்டார்.

இப்படியா பிள்ளைகளைப் போட்டு அடிப்பது என்று பெரியப்பாவுடன் சண்டைக்கு போய் விட்டார். பெரிய வாக்குவாதம் நடந்தது. ஒரு மாசம் டைம் தருகிறேன் எல்லோரும் வேறு வீடு பார்த்து போய் விடுங்கள் என்று அப்பா கோபமாக சொல்லி விட்டு போய் விட்டார். வீடு அப்பாவின் பெயரில் இருந்தபடியால் மற்றவர்களால் எதுவும் எதிர்த்து சொல்ல முடியவில்லை.

சபிதா அக்காவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார் பெரியப்பா. ஒரு இனிய நாளில் கடிதம் எழுதி வைத்து விட்டு ஓடி விட்டார் சபிதா அக்கா. பெரியப்பா, சித்தப்பா குடும்பத்தினர் வேறு வீடு பார்த்து போய் விட்டார்கள். அப்பா கெஞ்சிக் கேட்டும் அவர்கள் போய் விட்டார்கள். எனக்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷம். இனிமேல் நான் மட்டும் தனியாக டி. வி. பார்க்கலாம், அம்மாவுடன் விரும்பிய அளவு பேசலாம் இப்படி இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

பள்ளி விடுமுறையும் இந்த ஆரவாரத்தில் முடிந்து போனது. பள்ளி விட்டதும் வீடு வந்து சேர்ந்தேன். வீடே வெறிச்சோடிக் கிடந்ததை அப்போது தான் முதன் முறையாக உணர்ந்தேன். என்னுடன் சண்டை போட அன்வர் இல்லை, பரிவாகப் பேச சபிதா அக்கா இல்லை. வெறுப்பாக இருந்தது. புத்தகப்பையை வீசி எறிந்தேன். கூட்டுக் குடும்பம் போல வராது.

Wednesday, April 14, 2010

அந்தக் குழந்தை...

என் பெயர் சுகந்தி. என் கணவர் நரேன். இருவரும் 5 வருடங்களாக காதலித்து, போன வருடம் கைப்பிடித்தோம். கணிணி துறையில் வேலை.

என் கணவரின் பெற்றோர்கள் பக்கத்தில் தான் குடியிருக்கின்றார்கள். என் மாமியார் மிகவும் அற்புதமான பெண். அழகான, சாந்தமான முகம்.

எனக்கு என்னவென்றே சொல்ல முடியவில்லை. சிறிது நாட்களாக ஒரு வித பயம். இது என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று விடும் போல இருக்கு.
அன்றொரு நாள் வேலையால் வந்து சோஃபாவில் இருந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தோம். மிகவும் அசதியால் அப்படியே தூங்கி விட்டேன். ங்காகா... குழந்தையின் அழுகை ஒலி. அதனைத் தொடர்ந்து காப்பாற்றுங்கோ என்று ஒரு பெண்ணின் அலறல். திடுக்கிட்டு எழும்பி விட்டேன். என் கணவர் , " என்ன ஆச்சு? " என்று கேட்க, நான் பதில் பேசாமலிருந்தேன்.

வேலையிலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. எழும்பி டீ குடிக்கலாம் என்று போனேன், ஆனால் அசதியால் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டேன். ஏதோ ஒரு வெறுமையான உணர்வு. இருட்டத் தொடங்கியது. மீண்டும் வேலைக்குப் போய் கம்யூட்டரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

என் செல் போன் சத்தம் என்னை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது. எடுத்து காதில் வைக்கிறேன். எதிர் முனையில் என் கணவர், " என்னடா ஆச்சு? வேலை அதிகமோ? அங்கேயே இரு இதோ 5 நிமிடங்களில் வந்து விடுகிறேன் " என் பதிலை எதிர்பாராமல் தொடர்பை துண்டித்தார்.

சே... எவ்வளவு அன்பான கணவர். இப்படி பொறுப்பில்லாமல் இருக்கின்றேனே. என்ன சாப்பிட்டிருப்பார்? மணி 8 ஆச்சே என்று என் மேலே எனக்கு வெறுப்பாக வந்தது.
சொன்னபடி 5 நிமிடங்களில் என் கணவர் வந்துவிட்டார்.

வீட்டில் மாமியார் சுவையான சாப்பாட்டுடன் காத்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் மலர்ந்த முகத்துடன் , " சாப்பாடு ரெடி. சாப்பிட்டு விட்டு நல்லா ரெஸ்ட் எடும்மா." என்றார்.
நான் என் மாமியாரை வாஞ்சையுடன் நோக்குகிறேன். எப்படி இவரால் மட்டும் இப்படி அன்பாக இருக்க முடியுது? இதற்கு என்ன கைமாறு நான் செய்யப் போகிறேன்?

மாமியாரை வழியனுப்பி விட்டு, நாங்கள் சாப்பிட்டு முடித்து, படுக்கப் போனோம். நல்ல அசதியில் தூங்கி விட்டேன். திடீரென்று ஒரே கூச்சல் குழப்பம். யாரோ ஜன்னலுக்கு வெளியே இருந்து என்னை கூப்பிடுவது போன்ற உணர்வு. அதே குழந்தை, அம்மா மீண்டும் வந்து போகின்றார்கள். உடம்பு அனலாக கொதித்தது. என் கணவர் பயந்துவிட்டார்.

அடுத்த நாள் மருத்துவரிடம் போனோம். என் திடீர் மனமாற்றத்தின் காரணத்தை கண்டறிய சிறப்பு மருத்துவரிடம் அனுப்பி வைத்தார். சிறப்பு மருத்துவர் உடனடியாக எதுவுமே சொல்வது சாத்தியமில்லை என்று சொன்னார். தீவிர கவுன்சிலிங் மூலமே காரணத்தை கண்டறிய முடியும் என்றார். 3 முறை போயாச்சு நான் வாயே திறக்கவில்லை. நான்காவது தடவை போன போது என்னுள் ஏதோ ஒரு மனமாற்றம். மருத்துவரின் சாந்தமான குரல் என்னுள் ஊடுருவியது. மெல்லிய குரலில் நடந்ததை சொன்னேன்.

இருள் பிரியாத காலை நேரம். நிலாவொளி மேகத்தை ஊடுருவி வெளியே வர முயற்சித்து தோற்றுப் போயிருந்தது. ஒரே புழுக்கம். அகன்ற சமுத்திரத்தில் ஒரு புள்ளியாய் எங்கள் படகு. படகில் 15 பேர் அளவில் இந்தியா நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். என் பக்கத்தில் ஒரு குழந்தை. ஒரு வயது இருக்கும். அதன் பொக்கை வாயை திறந்து ங்காகா... என்று சிரித்து, என்னிடம் தாவி வந்தது. அப்போது தான் அந்தச் சத்தம். நாங்கள் யாருடைய கண்களில் மாட்டுப் படக்கூடாது என்று நினைத்தோமோ அவர்கள் இயந்திரப் படகில்.

அவர்கள் இலங்கை கடற்படை. இயந்திர துப்பாக்கி எங்களை குறிபார்த்தது. எங்கும் ஒரே அலறல் சத்தங்கள். துப்பாக்கி சில நிமிடங்கள் அதிர்ந்து ஓய்ந்தது. எங்கும் மரண அமைதி. எனக்கு தோளில் காயம். ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அப்படியே மயங்கிவிட்டேன்.

சுளீரென்று வெய்யில் முகத்தில் அடிக்க விழிப்பு வந்தது. என்னருகில் அந்த குழந்தை. நெஞ்சிலிருந்து ரத்தம் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்தக் குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை. " காப்பாற்றுங்கோ" என்று அதன் தாய் கதறினார். சிறிது நேரத்தில் அவரின் உயிரும் பிரிந்தது. நான் 2 நாட்கள் அந்த படகில் பிணங்களுக்கு நடுவில் இருந்தேன். என்னைத் தவிர யாரும் உயிர் பிழைக்கவில்லை. தமிழக மீனவர்கள் என்னைக் காப்பாற்றினார்கள்.

இதைச் சொல்லி முடித்த போது என் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. என் ஆழ்மனதிலிருந்து ஏதோ ஒன்றை இறக்கி வைத்தது போல ஒரு நிம்மதி. மருத்துவர் என்னை கவுன்சிலிங், மாத்திரைகள் மூலமே குணப்படுத்த முடியும் என்றார். அதிக ஓய்வும் அவசியம் என்றார். யோகா வகுப்பிற்கும் போய் வந்தேன்.

ஆனால் இவற்றை எல்லாம் என் கணவரின் தூண்டுதலினால் செய்தேன். என்னுள் அந்த குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. வேலையில் கவனம் செலுத்த முடியாமல் வேலைக்குப் போவதை நிறுத்தினேன். இரவானால் தனிய இருக்கப் பயந்தேன். பகலிலும் தனியே இருக்க முடியாமல் தவித்தேன். பசி, தூக்கம் இல்லாமல் போனது. மாத்திரைகளைக் கண்டாலே வெறுப்பு. என்ன வாழ்க்கை என்று விரக்தி ஏற்பட்டது.


அன்று வெள்ளிக் கிழமை. கோயில் போகலாம் என்று என்னவரிடம் சொன்னேன். என் கணவர் வேலையில் மீட்டிங் இருப்பதால் கொஞ்சம் தாமதமாகும் என்று தகவல் அனுப்பினார். நான் அழகாக பட்டு புடவை கட்டி, கணவருக்கு காத்திருந்தேன். நேரம் 6 மணியை தாண்டியிருந்தது.
மீண்டும் ஜன்னலுக்கு வெளியே அதே குரல்கள், அலறல் சத்தங்கள். நான் ஒரு முடிவுடன் எழுந்தேன். கட்டிலுக்கு கீழே எறிந்த மாத்திரை டப்பாவை தேடிப் பிடித்தேன்.

இதிலிருந்து விடுபட வேண்டும். 1,2.... என்று எண்ணி 25 மாத்திரைகளை உள்ளே தள்ளினேன். கட்டிலில் அமைதியாக படுத்துக் கொண்டேன். இப்போது சத்தங்கள் ஓய்ந்து மயான அமைதி நிலவியது.

நான் ஒளியை விட வேகமாகச் செல்கிறேன். மங்கலான ஒளி போகப் போக கண்களைக் கூச வைக்கும் பிரகாசமான ஒளியாக மாறுகிறது. என் மாமியார் என் கைகளைப் பிடிக்க ஓடி வருகிறார். ஆனால் என் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின் தங்கி விடுகிறார். அங்கே யாராது? என் கணவர். கலக்கமான முகத்துடன். நான் அவரை நோக்கி செல்ல முயற்சிக்கிறேன். என்னால் முடியவில்லை. ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி என்னை வேகமாக எதிர் திசையில் இழுத்து செல்கின்றது. இப்போது என் கணவர், மாமியார் இருவரும் புள்ளிகளாய் தேய்ந்து மறைந்து போகின்றார்கள்.

இப்போது அந்தக் குழந்தை நிற்கிறது. என் வேகம் குறைந்து விட்டிருந்தது. நான் மெதுவாக நடந்து போய் அந்தக் குழந்தையை அள்ளிக் கொள்கிறேன். என்னுள் ஒரு விதமான நிம்மதி உணர்வு பரவுகின்றது.

Tuesday, April 13, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்!இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். எல்லோர் வாழ்விலும் இன்பம் பூத்துக் குலுங்கட்டும்.

Monday, April 12, 2010

நட்பு

நானும் சந்துருவும் இணைபிரியாத நண்பர்கள். நான் சந்துருவை முதலில் பார்த்தது பேருந்து நிறுத்தத்தில். நான் பேருந்துக்கு காவல் நின்ற ஒரு இனிய காலைப் பொழுது. ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஆண் பேந்த பேந்த முழித்துக் கொண்டு நின்றான். ஏதோ ஒரு இனம் புரியாத கலவரம் அவனிடத்தில். நான் மெல்ல புன்னகை செய்தேன். அருகில் வந்தவன், " அண்ணா, நீங்கள் எங்கே போகின்றீர்கள் ? " என்று தயங்கியபடி கேட்டான். நான் அவனைக் கேள்விக்குறியுடன் நோக்கினேன். அவன் தொடர்ந்தான், " நான் கனடாவிற்கு புதிது. இங்கு எனக்கு எல்லாமே புதிதாக இருக்கு. ஒன்றுமே விளங்கவில்லை. கல்லூரிக்கு போக வேண்டும். எந்த பஸ்ஸில் ஏறுவது, எங்கு இறங்குவது என்று கொஞ்சம் விளக்கமாக சொல்வீர்களா ?" என்று கேட்டான். எங்கே போக வேண்டும் என்று கேட்டேன். அவன் ஒரு கல்லூரியின் பெயர் சொன்னான்.

" அட நானும் அங்கே தான் போகிறேன். என்னோடு நீங்கள் வரலாம் " என்று சொன்னதும் அவன் முகத்தில் ஒரு நிம்மதி. என் பெயர் சுரேஷ் என்று அறிமுகம் செய்து கொண்டேன். கனடா வந்து சில மாதங்களே இருக்கும் என்று தொடங்கி சித்தப்பா வீட்டில் தங்கியிருப்பது வரை எல்லாமே சொன்னான்.

கல்லூரி வந்தது. சந்துரு சொன்னான், " நான் சில விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும். நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் எனக்காக காத்திருக்க முடியுமா? இன்று மட்டும் தான் இனிமேல் உங்களை தொல்லை பண்ணமாட்டேன் ."

"இதிலென்ன தொல்லை எனக்கு. நீங்கள் உங்கள் வேலைகளை முடித்து விட்டு அறை எண் 100 க்கு வாருங்கள். நான் காத்திருக்கிறேன். " என்று சொல்லிவிட்டு நடந்தேன்.

சந்துரு அலுவலக அறையை நோக்கி நடந்தான். ஒரு அரை மணிநேரம் கடந்திருக்கும், நான் ஏதோ ஒரு வேலையாக சந்துரு நின்ற பக்கம் போனேன். அங்கு பெரிய சிரிப்பொலி கேட்டது. எட்டிப் பார்த்தேன். வரவேற்பறை பெண் கையில் விண்ணப்ப படிவத்தை வைத்துக் கொண்டு சந்துருவிடம் ஏதோ விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். இவன் முழித்தபடி நின்றான். நானும் போய் என்ன விடயம் என்று பார்த்தேன். விண்ணப்படிவத்தில் ஒரு கேள்விக்கு சந்துரு எழுதிய விடையே அந்த பெண்ணின் சிரிப்புக்கு காரணம். அந்த கேள்வி உங்கள் பிஸினஸ் தொலைபேசி இலக்கம் என்பதை ஆங்கிலத்தில் சுருக்கமாக Bus No என்று குறிப்பிடுவார்கள். அதாவது அலுவலக தொலைபேசி இலக்கம் என்ன என்பதே கேள்வி. நாட்டிற்கு புதிதாக வந்த சந்துரு கல்லூரிக்கு வரும் பஸ் நம்பரை கேட்கிறார்கள் என்று எண்ணி, " எப்போதும் நடைராஜா ( always walk ) " என்று பதிலளித்து இருந்தான்.

வீட்டிற்கு போகும் வரை புலம்பிக் கொண்டே வந்தான். " நான் அவர்கள் கல்லூரிக்கு வரும் பஸ் நம்பரை கேட்கிறார்களே எதற்காக இருக்கும் என்று ஒரு சில கணங்கள் குழம்பி விட்டேன். நிறைய மாணவர்கள் அந்த பஸ் ரூட்டில் வந்தால் ஏதோ இலவச பஸ் பாஸ் தருவார்கள் என்று நினைத்தேன். ஆனால் பஸ் நம்பர் ஞாபகம் வரவில்லை. அது தான் அப்படி எழுதி தொலைத்துவிட்டேன். "

அன்றிலிருந்து ஆரம்பமானது எங்கள் நட்பு. முதலில் அண்ணா என்று தொடங்கிய அவன் நட்பு ஒரே மாசத்தில் வாடா போடா என்று அழைக்கும் அளவுக்கு வந்தது. ஆங்கில அறிவு, எப்படி பேசுவது போன்ற அடிப்படை விஷயங்கள் கற்க கல்லூரியில் ஆங்கில வகுப்பில் சேர்ந்து கொண்டான்.

கனடாவில் கார் ஓட்டத்தெரியாவிட்டால் வேலைக்கு ஆகாது என்று அடிக்கடி சொல்வான். அதற்கான முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டான். கல்லூரி முடிந்ததும் கார் ஓட்டப்பழகுவதாக சொன்னான்.
ஊரில் அவன் பெற்றோருக்கு பணம் அனுப்ப வேலைக்கும் சென்றான். இரவு 7 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை வேலை. அதன் பிறகே வீட்டுப்பாடம் செய்து, படுத்து எழும்பி, காலையில் கல்லூரிக்கு வருவான். ஆனால் முகத்தில் அலுப்பு, கவலை எதையுமே வெளிக்காட்டமாட்டான். எப்போதும் ஒரு புன்சிரிப்பு.

ஒரு நாள் வழக்கம் போல நான் பேருந்துக்காக காத்து நின்றேன். ஒரு பழைய டப்பா கார் என் அருகில் வந்து நின்றது. சந்துரு ஓட்டுநர் இருக்கையில் இருந்தான். நான் ஆச்சரியமாக பார்க்க, அவன் ஓட்டுநர் உரிமத்தை எடுத்து காட்டினான். லைசென்ஸை காட்டும்போது அவன் முகத்தில் அப்படி ஒரு பெருமை. "இனிமேல் நீயும், நானும் பஸ்ஸூக்காக காத்திருக்க தேவையில்லை. காரிலேயே போகலாம் "என்றான் சந்துரு.

பேசிக்கொண்டே கார் ஓட்டினான். ஊரில் இருக்கும் வரை அவன் அப்பாவின் பழைய டப்பா கார் ஓட்டிய அனுபவத்தை விலாவாரியாக சொன்னான். " ஊரில் இருக்கும் வரை ஆக்ஸிலேட்டரில் காலை வைத்து ஒரு மிதி மிதித்தால் யாழ்பாணம் வந்த பின்பு தான் பிரேக் போடுவேன். இங்கு பத்தடிக்கு ஒவ்வொரு சிக்னல் " என்று அலுத்துக் கொண்டான்.

" ஊரில் கார் ஓட்டியது போல இங்கு ஓட்டித் தொலைத்து விடாதே. பிறகு கம்பி எண்ண வேண்டியது தான் " என்று அவனுக்கு அறிவுரை சொன்னேன்.

" ம்ம்ம்..." என்று தலையாட்டியவன் , " ஏண்டா போலீஸ் பின்னாடியே வருகின்றான் " என்று கேட்டான். நானும் அப்போது தான் கவனித்தேன். " காரை நிப்பாட்டுடா. உன்னைத்தான் ஏதோ கேட்கவருகிறார். என்ன மாட்டிவிடாதே...."

போலீஸ் அதிகாரி அருகில் வந்தார். " கணவான்களே எங்கே செல்கின்றீர்கள்? " என்றார்.

சந்துரு பயத்தில் உளறத்தொடங்கினான். " நோ இங்கிலீஸ். யெஸ் டமில் " என்றான்.
அந்த அதிகாரி சொன்னார், " இது ஒரு வழிப்பாதை. நீங்கள் இதில் வந்திருக்க கூடாது. சட்டப்படி தவறு."
சந்துரு விளங்காதவன் போல லுக் விட்டான். அதிகாரி இவனுக்கு எப்படி விளங்கவைப்பேன் என்று குழம்பி பிறகு தெளிவு வந்தவர் சொன்னார், " ஒன்லி கமிங் . நோ கோயிங்."
ரோட்டில் இருந்த அம்புக்குறியிட்ட பலகையை காட்டி விளக்கம் சொன்னார்.
சந்துரு அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு மண்டையை ஆட்டினான்.
நான், " அடப்பாவி, இப்படியா நடிப்பது?" என்று சந்துருவை பார்த்து முணுமுணுத்தேன்.

இறுதியில் இனிமேல் கவனமாக ஓட்டுங்கள் என்று எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டோம்.

"ஊரில் அப்பாக்கு உடம்பு சரியில்லை. பணம் அனுப்ப வேண்டும். அது தான் இப்படி நடிக்க வேண்டியதா போச்சு. " என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.இப்பெல்லாம் சந்துரு என்னிடம் பேசுவெதே குறைவு. ஏன் என்று தெரியவில்லை?. நானே வலிந்து போய் கேட்டாலும் பதில் பேசாது நழுவி விடுவான். எனக்கு அவன் ஏன் பேசவில்லை என்று ஆராய்ச்சி செய்ய நேரமில்லாமல் வேறு வேலைகள், படிப்பு என்று நாட்கள் ஓடியது. அவன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்று எனக்கு அவன் வகுப்பு தோழன் சொன்னான்.
அதற்கு ஏன் ஓடி ஒழிய வேண்டும். முன்பே சொல்லியிருந்தால் நானும் வாழ்த்தியிருப்பேன் அல்லவா?.
ஒரு நாள் சந்துருவின் சித்தப்பாவை எதேச்சையாக கடையில் சந்தித்தேன். சந்துரு அவன் பெற்றோருக்கு பணம் அனுப்புவதில்லை என்று சொன்னார். அவன் அந்த பெண்ணை திருமணம் செய்து விட்டான் என்றும் சொன்னார்.

ஒரு நாள் மாலில் சந்துருவை சந்தித்தேன். ஒரு பெண்மணி அவன் அருகில். இவனை விட வயதில் மூத்தவராக தெரிந்தார். " என்னடா உன் சித்தியா?" என்று கேட்டேன். என்னை எரித்து விடுவது போல பார்த்தவன் சொன்னான், " இல்லை. மனைவி."
நான் வாயடைத்து போனேன்.
இந்த பெண்மணியை எங்கோ பார்த்திருக்கிறேன். நினைவு வரமாட்டுதாம். ஆ இப்போது ஞாபகம் வந்து விட்டது. இவர் சாம் என்கின்ற சாம்பசிவம் அண்ணாவின் மனைவி அல்லவா. சாம் அண்ணா தாடியோடு அலைவதன் காரணம் இப்பொது விளங்கிவிட்டது.

அந்த பெண்மணி கையில் ஐ-பாட் வைத்து தட்டிக் கொண்டிருந்தார். மிகையான அலங்காரம், விலையுயர்ந்த ஆடைகள் என்று பகட்டாகவே இருந்தார்.
அப்போது ஒரு 5 வயது மதிக்கத்தக்க குழந்தை வந்து அப்பா என்று இவனைக் கட்டிக் கொண்டது.

அதற்குள் பிள்ளை பிறந்து 5 வயது ஆகிவிட்டதா? எப்படி?.
நான் குழம்பி நிற்க அவன் சொன்னான், " இது என் மனைவியின் குழந்தை....." இதன் பிறகு அவன் சொன்னது எதுவுமே என் காதில் விழவில்லை.
அதிர்ச்சியுடன் அவனை திரும்பி பாராமல் நடந்தேன்..

Sunday, April 11, 2010

விருது

ஸாதிகா அக்கா கொடுத்த விருது.
என் சிறு கதைகளை பாராட்டி விருது கொடுத்துள்ளார். என் கதைகளுக்கு கிடைத்த பெரிய அங்கிகாரம். என் மனதில் தோன்றும், அல்லது என் கண் முன்னே நடந்த சிறு சம்பவங்கள், நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்து, அதை வார்த்தைகளால் அலங்கரித்து, படிப்பவர்களுக்கு அலுப்புத் தட்டாமல் எழுத வேண்டும். இந்த கதைகளை எப்படி முடிப்பது என்பதே எனக்கு பெரிய சவாலான விடயம். பெரும்பாலான நேரங்களில் கதை எழுதி எப்படி முடிப்பது என்று தெரியாமல் வாரக்கணக்கில் யோசித்து இருக்கிறேன்.

திருமதி. ரோஸூம் நானும் கதை ஒரு நகைச்சுவையான கதை. ஒரு உண்மையான சம்பவத்தை வைத்து மீதி 99% என் கற்பனை கலந்து எழுதினேன்.
சிவகாமி, ஆயா இரு கதைகளும் முடிவு எழுத மிகவும் நாட்கள் எடுத்தன.

என் கதைகளின் முதல் வாசகர் என் கணவரே. அவருக்கு என் நன்றி.
அடுத்தது என் தோழி இமா.
தொடர்ந்து எழுதுங்கள் என்று என்னை எப்போதும் உற்சாகப்படுத்துபவர்.
தனிப்பட்ட முறையில் மெயில் அனுப்பியோ அல்லது பின்னூட்டம் மூலமோ என்னை ஊக்கப்படுத்துபவர்.
நன்றி, இமா.

அத்திபூத்தாற்போல வந்தாலும் என் கதைகளை விமர்சிப்பவர் சந்தனா.
எனக்கும் எழுத வரும் என்று சந்தனா தந்த உற்சாகமான வரிகள் எனக்கு எப்போதும் டானிக்.
சந்து, நன்றி.
அடுத்தது.... அதிரா.
ஒரு மாமங்கத்துக்கு ஒரு தடவை வந்தாலும் இவரின் பின்னூட்டங்கள் படிக்க சுவாரசியமானவை.
தொடர்ந்து எழுதுங்கோ யார் படிக்காவிட்டாலும் நான் படிப்பேன் என்று பின்னூட்டம் இடும் உற்சாக ஊசி.

அதீஸ், நன்றி.

ஒரு வரியில் பின்னூட்டம் இடும் அண்ணாமையானுக்கு, நன்றி.

பல வேலைகளுக்கு இடையிலும் என்னை வந்து ஊக்கப்படுத்தும் மனோ அக்கா, செல்வி அக்கா, மகி, மேனகா, விஜி, ஹர்சினி அம்மா, பிரபா, மற்றும் என் கதைகளை படிக்கும் எல்லோருக்கும் என் நன்றிகள்.

எனக்கு விருது கொடுத்த ஸாதிகா அக்காவிற்கு என் நன்றிகள்.