Wednesday, April 14, 2010

அந்தக் குழந்தை...

என் பெயர் சுகந்தி. என் கணவர் நரேன். இருவரும் 5 வருடங்களாக காதலித்து, போன வருடம் கைப்பிடித்தோம். கணிணி துறையில் வேலை.

என் கணவரின் பெற்றோர்கள் பக்கத்தில் தான் குடியிருக்கின்றார்கள். என் மாமியார் மிகவும் அற்புதமான பெண். அழகான, சாந்தமான முகம்.

எனக்கு என்னவென்றே சொல்ல முடியவில்லை. சிறிது நாட்களாக ஒரு வித பயம். இது என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று விடும் போல இருக்கு.
அன்றொரு நாள் வேலையால் வந்து சோஃபாவில் இருந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தோம். மிகவும் அசதியால் அப்படியே தூங்கி விட்டேன். ங்காகா... குழந்தையின் அழுகை ஒலி. அதனைத் தொடர்ந்து காப்பாற்றுங்கோ என்று ஒரு பெண்ணின் அலறல். திடுக்கிட்டு எழும்பி விட்டேன். என் கணவர் , " என்ன ஆச்சு? " என்று கேட்க, நான் பதில் பேசாமலிருந்தேன்.

வேலையிலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. எழும்பி டீ குடிக்கலாம் என்று போனேன், ஆனால் அசதியால் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டேன். ஏதோ ஒரு வெறுமையான உணர்வு. இருட்டத் தொடங்கியது. மீண்டும் வேலைக்குப் போய் கம்யூட்டரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

என் செல் போன் சத்தம் என்னை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது. எடுத்து காதில் வைக்கிறேன். எதிர் முனையில் என் கணவர், " என்னடா ஆச்சு? வேலை அதிகமோ? அங்கேயே இரு இதோ 5 நிமிடங்களில் வந்து விடுகிறேன் " என் பதிலை எதிர்பாராமல் தொடர்பை துண்டித்தார்.

சே... எவ்வளவு அன்பான கணவர். இப்படி பொறுப்பில்லாமல் இருக்கின்றேனே. என்ன சாப்பிட்டிருப்பார்? மணி 8 ஆச்சே என்று என் மேலே எனக்கு வெறுப்பாக வந்தது.
சொன்னபடி 5 நிமிடங்களில் என் கணவர் வந்துவிட்டார்.

வீட்டில் மாமியார் சுவையான சாப்பாட்டுடன் காத்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் மலர்ந்த முகத்துடன் , " சாப்பாடு ரெடி. சாப்பிட்டு விட்டு நல்லா ரெஸ்ட் எடும்மா." என்றார்.
நான் என் மாமியாரை வாஞ்சையுடன் நோக்குகிறேன். எப்படி இவரால் மட்டும் இப்படி அன்பாக இருக்க முடியுது? இதற்கு என்ன கைமாறு நான் செய்யப் போகிறேன்?

மாமியாரை வழியனுப்பி விட்டு, நாங்கள் சாப்பிட்டு முடித்து, படுக்கப் போனோம். நல்ல அசதியில் தூங்கி விட்டேன். திடீரென்று ஒரே கூச்சல் குழப்பம். யாரோ ஜன்னலுக்கு வெளியே இருந்து என்னை கூப்பிடுவது போன்ற உணர்வு. அதே குழந்தை, அம்மா மீண்டும் வந்து போகின்றார்கள். உடம்பு அனலாக கொதித்தது. என் கணவர் பயந்துவிட்டார்.

அடுத்த நாள் மருத்துவரிடம் போனோம். என் திடீர் மனமாற்றத்தின் காரணத்தை கண்டறிய சிறப்பு மருத்துவரிடம் அனுப்பி வைத்தார். சிறப்பு மருத்துவர் உடனடியாக எதுவுமே சொல்வது சாத்தியமில்லை என்று சொன்னார். தீவிர கவுன்சிலிங் மூலமே காரணத்தை கண்டறிய முடியும் என்றார். 3 முறை போயாச்சு நான் வாயே திறக்கவில்லை. நான்காவது தடவை போன போது என்னுள் ஏதோ ஒரு மனமாற்றம். மருத்துவரின் சாந்தமான குரல் என்னுள் ஊடுருவியது. மெல்லிய குரலில் நடந்ததை சொன்னேன்.

இருள் பிரியாத காலை நேரம். நிலாவொளி மேகத்தை ஊடுருவி வெளியே வர முயற்சித்து தோற்றுப் போயிருந்தது. ஒரே புழுக்கம். அகன்ற சமுத்திரத்தில் ஒரு புள்ளியாய் எங்கள் படகு. படகில் 15 பேர் அளவில் இந்தியா நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். என் பக்கத்தில் ஒரு குழந்தை. ஒரு வயது இருக்கும். அதன் பொக்கை வாயை திறந்து ங்காகா... என்று சிரித்து, என்னிடம் தாவி வந்தது. அப்போது தான் அந்தச் சத்தம். நாங்கள் யாருடைய கண்களில் மாட்டுப் படக்கூடாது என்று நினைத்தோமோ அவர்கள் இயந்திரப் படகில்.

அவர்கள் இலங்கை கடற்படை. இயந்திர துப்பாக்கி எங்களை குறிபார்த்தது. எங்கும் ஒரே அலறல் சத்தங்கள். துப்பாக்கி சில நிமிடங்கள் அதிர்ந்து ஓய்ந்தது. எங்கும் மரண அமைதி. எனக்கு தோளில் காயம். ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அப்படியே மயங்கிவிட்டேன்.

சுளீரென்று வெய்யில் முகத்தில் அடிக்க விழிப்பு வந்தது. என்னருகில் அந்த குழந்தை. நெஞ்சிலிருந்து ரத்தம் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்தக் குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை. " காப்பாற்றுங்கோ" என்று அதன் தாய் கதறினார். சிறிது நேரத்தில் அவரின் உயிரும் பிரிந்தது. நான் 2 நாட்கள் அந்த படகில் பிணங்களுக்கு நடுவில் இருந்தேன். என்னைத் தவிர யாரும் உயிர் பிழைக்கவில்லை. தமிழக மீனவர்கள் என்னைக் காப்பாற்றினார்கள்.

இதைச் சொல்லி முடித்த போது என் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. என் ஆழ்மனதிலிருந்து ஏதோ ஒன்றை இறக்கி வைத்தது போல ஒரு நிம்மதி. மருத்துவர் என்னை கவுன்சிலிங், மாத்திரைகள் மூலமே குணப்படுத்த முடியும் என்றார். அதிக ஓய்வும் அவசியம் என்றார். யோகா வகுப்பிற்கும் போய் வந்தேன்.

ஆனால் இவற்றை எல்லாம் என் கணவரின் தூண்டுதலினால் செய்தேன். என்னுள் அந்த குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. வேலையில் கவனம் செலுத்த முடியாமல் வேலைக்குப் போவதை நிறுத்தினேன். இரவானால் தனிய இருக்கப் பயந்தேன். பகலிலும் தனியே இருக்க முடியாமல் தவித்தேன். பசி, தூக்கம் இல்லாமல் போனது. மாத்திரைகளைக் கண்டாலே வெறுப்பு. என்ன வாழ்க்கை என்று விரக்தி ஏற்பட்டது.


அன்று வெள்ளிக் கிழமை. கோயில் போகலாம் என்று என்னவரிடம் சொன்னேன். என் கணவர் வேலையில் மீட்டிங் இருப்பதால் கொஞ்சம் தாமதமாகும் என்று தகவல் அனுப்பினார். நான் அழகாக பட்டு புடவை கட்டி, கணவருக்கு காத்திருந்தேன். நேரம் 6 மணியை தாண்டியிருந்தது.
மீண்டும் ஜன்னலுக்கு வெளியே அதே குரல்கள், அலறல் சத்தங்கள். நான் ஒரு முடிவுடன் எழுந்தேன். கட்டிலுக்கு கீழே எறிந்த மாத்திரை டப்பாவை தேடிப் பிடித்தேன்.

இதிலிருந்து விடுபட வேண்டும். 1,2.... என்று எண்ணி 25 மாத்திரைகளை உள்ளே தள்ளினேன். கட்டிலில் அமைதியாக படுத்துக் கொண்டேன். இப்போது சத்தங்கள் ஓய்ந்து மயான அமைதி நிலவியது.

நான் ஒளியை விட வேகமாகச் செல்கிறேன். மங்கலான ஒளி போகப் போக கண்களைக் கூச வைக்கும் பிரகாசமான ஒளியாக மாறுகிறது. என் மாமியார் என் கைகளைப் பிடிக்க ஓடி வருகிறார். ஆனால் என் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின் தங்கி விடுகிறார். அங்கே யாராது? என் கணவர். கலக்கமான முகத்துடன். நான் அவரை நோக்கி செல்ல முயற்சிக்கிறேன். என்னால் முடியவில்லை. ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி என்னை வேகமாக எதிர் திசையில் இழுத்து செல்கின்றது. இப்போது என் கணவர், மாமியார் இருவரும் புள்ளிகளாய் தேய்ந்து மறைந்து போகின்றார்கள்.

இப்போது அந்தக் குழந்தை நிற்கிறது. என் வேகம் குறைந்து விட்டிருந்தது. நான் மெதுவாக நடந்து போய் அந்தக் குழந்தையை அள்ளிக் கொள்கிறேன். என்னுள் ஒரு விதமான நிம்மதி உணர்வு பரவுகின்றது.

16 comments:

 1. //அந்தக் குழந்தையை அள்ளிக் கொள்கிறேன். என்னுள் ஒரு விதமான நிம்மதி உணர்வு பரவுகின்றது. //

  கண்ணில் வழியும் நீரை தடுக்க முடிய வில்லை!!!

  ReplyDelete
 2. இது கருத்துச் சொல்லிவிட்டுப் போகக் கூடிய கதை இல்லை வாணி. வெளிப் பார்வைக்கு ஆழ்மனது தெரிவதில்லை.

  //இதிலிருந்து விடுபட வேண்டும். 1,2.... என்று எண்ணி 25 மாத்திரைகளை உள்ளெ தள்ளினேன்// இது விடுபடும் வழி அல்ல. ;) கதைக்கு இப்படி எல்லாம் கருத்துச் சொல்லக் கூடாது. ;) தெரியும். கதை முடிவில் மறைந்திருந்ததாகத் தோன்றிய முடிவு இதைச் சொல்ல வைத்தது. ;) கண்ணீர் மறைத்த விழிகளோடு படித்து முடித்தேன்.

  உங்கள் எழுத்துத் திறமைக்கு என் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. உங்கள் எழுத்துத் திறமைக்கு என் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  வானதி, உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

  ReplyDelete
 5. மிகவும் அருமையாக இருக்கின்றது..மிகவும் அழுத்தமாக கஷ்டமாக இருக்கின்றது...

  ReplyDelete
 6. மனதினில் அழுத்தமாக பதிந்த கதை

  ReplyDelete
 7. ஜெய்லானி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.

  இமா, நன்றி. நீண்ட நாட்களாக மனதில் இருந்த கதை இது.

  மேனகா, நன்றி.

  குமார், மிக மிக நன்றி. உங்கள் வருகைக்கு என் நன்றி.

  ஸ்டார்ஜன், நன்றி. உங்கள் வலைச்சரம் மிகவும் அருமை.

  கீதா ஆச்சல், வாங்கோ. நலமா? பின்னூட்டத்திற்கு என் நன்றிகள்.

  ஸாதிகா அக்கா, நல்வரவு. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

  ReplyDelete
 8. புது வரவு Shana . நலமா? வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 9. வாணி.... சூப்பராக, நிஜங்களைத் தொகுத்து கற்பனையாக வடிக்கிறீங்கள். இப்படியான மனப்பயம் நீங்காமல் வாழ்பவர்கள் இன்னும் எத்தனைபேரோ?

  என் நண்பி ஒருவர் பொம்பர் குண்டுபோடும் காலத்தில், யாழிலிருந்து குழந்தையோடு வெளிநாட்டுக்கு வந்த புதிதில் சொன்னார்... ஏதாவது இரச்சல் சத்தம் கேட்டால், அவர் குழந்தை ஓடிச்சென்று கட்டிலுக்குக் கீழே படுத்துக்கொண்டு பொம்பர் வருகிறது ஓடிவாங்கோ எனத் தன்னையும் அழைப்பாவாம் என.

  பசுமரத்தாணிபோல மனதில் பதிந்த காயங்கள் ஆற நீண்ட நாள் ஆகும்.

  ReplyDelete
 10. மிக உருக்கமான கதை. உங்கள் எழுத்து அருமையாக உள்ளது தொடருங்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. அதிரா, நீங்கள் சொல்வது சரி தான். மனக்காயங்கள் அவ்வளவு எளிதில் ஆறுமா தெரியவில்லை. பின்னூட்டத்திற்கு நன்றி.

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. LK, நன்றி. உங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றிகள். தொடர்ந்து வாங்கோ.

  ReplyDelete
 14. வானதி.. அழுகை வந்துவிட்டது.. எனக்கு இந்தக் கதையின் முடிவை மட்டும் நீங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கீங்கள்.. ம்ம்... இதுதான் முழுக்கதையா? கொடூரமான மனிதர்கள்.. அமைதியான முடிவு..

  ReplyDelete
 15. சந்தனா, இதில் நிறைய நான் கற்பனை செய்து எழுதியது. எனக்கும் எழுதி முடித்த உடனே மனசு சரியில்லை. நீண்ட நாட்களின் பின்பே போட்டேன்.

  நன்றி.

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!