Saturday, April 17, 2010

கூட்டுக் குடும்பம்

ஹாய்! எல்லோரும் எப்படி இருக்கின்றீர்கள்? என் பெயர் பர்வீன். எல்லோரும் வாருங்கள் வீட்டில் இருப்பவர்களை அறிமுகம் செய்கிறேன்.
இது சபிதா அக்கா - என் பெரியப்பா மகள். ஐஸ்வர்யா ராயை விட அழகு. இவள் மட்டும் அழகி போட்டிக்கு போயிருந்தால் பிரபஞ்ச அழகி இவள் தான். அழகிப் போட்டியில் வரும் நீச்சல் உடை சுற்று தான் இவளை பங்கேற்க முடியாமல் தடுத்து விட்டது. பெரியப்பா மிகவும் கண்டிப்பானவர். இவளை காலேஜூக்கு அனுப்புவதே பெரிய அதிசயம். இந்த லட்சணத்தில் அழகிப் போட்டி எல்லாம் கனவில் தான்.

அடுத்தது ஆயிஷா - சபிதா அக்காவின் தங்கை. இவளுக்கு நினைப்பு தான் பெரிது வேறு ஒரு மண்ணும் இல்லை. என்னிடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ள மாட்டாள். இவளைப் பற்றி நானும் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் அழகிப் போட்டிக்கு போனால் ஆறுதல் பரிசாவது வாங்கும் தகுதி இவளுக்கு உண்டு.

அடுத்து என் சித்தப்பா பையன் - அன்வர். அதோ அங்கே டி.வி. பார்த்துக் கொண்டு இருகிறானே அவனே தான். பெரிய அஜித்குமார் என்று நினைப்பு. இருங்கள் வருகிறேன்.
" டேய் லூசு, ஏன்டா டி.வி. க்குள் நுழையப் போகிறாயா? தூர நின்று பாருடா." தலையில் ஒரு கொட்டு வைத்தேன். " அம்மா, இந்த பர்வீனை பாரு" அலறிக்கொண்டே ஓடினான்.
"பயப்படாதீர்கள் சித்தி வர மாட்டார். அவர் கர்ப்பமாக இருக்கின்றார். இன்றோ நாளையோ பிள்ளை பிறக்கலாம்."

இதுங்களை தவிர நண்டு சிண்டுமாக கிட்டத்தட்ட 4, 5 உருப்படிகள் தேறும். அவர்களைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமேயில்லை. அன்வர் தான் இவர்களுக்கெல்லாம் தலைவன்.


எங்கள் கூட்டு குடும்பத்தில் இருக்கும் சிறிசுகளை அறிமுகம் செய்து விட்டேன். இனி பெரிசுகள்.

பெரியப்பா.. இவர் தான் எல்லோருக்கும் தலைவர். இவர் இருந்தால் வீடே அமைதியாக இருக்கும். இவருக்கு யாராவது சத்தம் போட்டு சிரித்தாலே ஆகாது.
அடுத்து என் அப்பா. இவர் பெரியப்பா அளவிற்கு இல்லாவிட்டலும் கொஞ்சம் பரவாயில்லை ரகம்.

அடுத்து 2 சித்தப்பாக்கள். இவர்கள் இரண்டு பேருமே ஏதோ கடமைக்கு வாழ்பவர்கள். பெரியப்பா சிரி என்று சொன்னால் மட்டுமே சிரிப்பார்கள்.

பெரியப்பா வீட்டில் இல்லாத நேரம் பெரியம்மா, அம்மாவின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கும். இரண்டு சித்திகளும் இவர்களுக்கு அடங்கி ஒடுங்கியே இருப்பார்கள்.

எனக்கு இந்த கூட்டு குடும்ப வாழ்க்கையே பிடிக்கவில்லை. எப்போது பார்த்தாலும் ஒரே இரைச்சல். எப்போதும் தொ(ல்)லைக்காட்சி, ரேடியோ அலறும். இல்லாவிட்டால் வாண்டுகளின் கூச்சல், அழுகை என்று வீடே இரண்டு பட்டு விடும். அம்மா, அப்பாவிடம் மனம் விட்டு பேசி நாளாகி விட்டது.

அப்பாவி போல இருந்த சபிதா அக்காவுக்கு ஒரு காதலன். அவன் வீடு எங்கள் தெருவில் இருந்தது. என்னைக் காவலுக்கு வைத்து விட்டு இருவரும் கதை கதையாக பேசுவார்கள். எனக்கு சாக்லேட் கொடுப்பார்கள். நானும் அதை தின்று முடிக்கும் வரை நல்லாவே காவல் காப்பேன். சாக்லேட் முடிந்ததும் மெதுவாக நழுவி விடுவேன். எந்த அசம்பாவிதமும் நேராமல் தடுக்க சபிதா அக்காவிடம் 4, 5 இனிப்புகள் கைவசம் எப்போது இருக்கும்.

நான் இவளின் காதல் விடயத்தை வீட்டில் உளறாமல் இருக்க வீட்டிலும் என்னை நன்கு கவனித்து கொள்வாள். டீ, காபி, சாப்பாடு என்று செய்து கொடுப்பாள். மற்றவர்கள் காரணம் தெரியாமல் விழிப்பார்கள். நானும் சபிதா அக்காவை நன்றாகவே வேலை வாங்குவேன்.

ஒரு நாள் சபிதா அக்கா காதலனுடன் பேசிக் கொண்டு இருந்தாள். நான் வழக்கம் போல சாப்பிடுவதில் குறியாக இருந்தேன். எங்கள் வீட்டிற்கு வரும் கீரைப் பாட்டியை கவனிக்கத் தவறி விட்டேன். அவர் பெரியப்பாவிடம் போய் தகவல் சொல்லிவிட்டார்.

நாங்கள் வீட்டிற்கு போனோம். அங்கு பெரியப்பா சாமியாடிக் கொண்டு நின்றார். சபிதா அக்காவிற்கு அடி விழுந்தது. சபிதா அக்காவிற்கு நாலு அடி, காவலுக்கு நின்ற எனக்கு 2 அடி, தடுக்க வந்த பெரியம்மாவுக்கு 1 அடி என்ற விகிதத்தில் அடி வாங்கினோம். எனக்கு உதடு கிழிந்து இரத்தம் கொட்டியது. வேலையால் வந்த அப்பா என் நிலை கண்டு பதறி விட்டார்.

இப்படியா பிள்ளைகளைப் போட்டு அடிப்பது என்று பெரியப்பாவுடன் சண்டைக்கு போய் விட்டார். பெரிய வாக்குவாதம் நடந்தது. ஒரு மாசம் டைம் தருகிறேன் எல்லோரும் வேறு வீடு பார்த்து போய் விடுங்கள் என்று அப்பா கோபமாக சொல்லி விட்டு போய் விட்டார். வீடு அப்பாவின் பெயரில் இருந்தபடியால் மற்றவர்களால் எதுவும் எதிர்த்து சொல்ல முடியவில்லை.

சபிதா அக்காவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார் பெரியப்பா. ஒரு இனிய நாளில் கடிதம் எழுதி வைத்து விட்டு ஓடி விட்டார் சபிதா அக்கா. பெரியப்பா, சித்தப்பா குடும்பத்தினர் வேறு வீடு பார்த்து போய் விட்டார்கள். அப்பா கெஞ்சிக் கேட்டும் அவர்கள் போய் விட்டார்கள். எனக்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷம். இனிமேல் நான் மட்டும் தனியாக டி. வி. பார்க்கலாம், அம்மாவுடன் விரும்பிய அளவு பேசலாம் இப்படி இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

பள்ளி விடுமுறையும் இந்த ஆரவாரத்தில் முடிந்து போனது. பள்ளி விட்டதும் வீடு வந்து சேர்ந்தேன். வீடே வெறிச்சோடிக் கிடந்ததை அப்போது தான் முதன் முறையாக உணர்ந்தேன். என்னுடன் சண்டை போட அன்வர் இல்லை, பரிவாகப் பேச சபிதா அக்கா இல்லை. வெறுப்பாக இருந்தது. புத்தகப்பையை வீசி எறிந்தேன். கூட்டுக் குடும்பம் போல வராது.

14 comments:

 1. //கூட்டுக் குடும்பம் போல வராது.//

  இன்னைய கால கட்டத்துல அவசியம்.

  ReplyDelete
 2. க‌தை ந‌ல்லா இருக்கு... கூட்டு குடும்ப‌த்தில் ந‌ட‌க்கும் நிக‌ழ்வுக‌ளை அழ‌காக‌ சொல்லியிருகிறீர்க‌ள்.. முடிவும் அருமை.

  ReplyDelete
 3. த‌மிழிஷ், த‌மிழ்ம‌ண‌த்தில் இணைக்க‌வில்லையா?.... வோட்டு ப‌ட்டைக‌ள் காண‌வில்லை.. இணைக்க‌வில்லை என்றால் விரைவில் இணைத்துவிடுங்க‌ள்..

  ந‌ட்புட‌ன்
  ஸ்டீப‌ன்

  ReplyDelete
 4. ///கூட்டுக் குடும்பம் போல வராது.////
  கண்டிப்பா. நாம நிறைய நல்ல விஷயங்களை தொலைத்துவிட்டோம்

  ReplyDelete
 5. சில விஷயங்களில் கூட்டுக்குடும்பம் நல்லது.சில விஷயங்களில் நல்லது இல்லை.இக்கரைக்கு அக்கரைப்பச்சை.கதையை வெகு அழகாக எழுதி இருக்கின்றீர்கள் வானதி.

  ReplyDelete
 6. கதையில் மிக சுருக்கமாக சொல்ல வந்ததை சொல்லீருக்கீங்க.அருமை.

  ReplyDelete
 7. அருமையான கதை வானதி!!

  ReplyDelete
 8. ///கூட்டுக் குடும்பம் போல வராது.////
  கண்டிப்பா. நாம நிறைய நல்ல விஷயங்களை தொலைத்துவிட்டோம்.

  ReplyDelete
 9. ஜெய்லானி, தொடர்ந்து வந்து பின்னூட்டம் இடுவதற்கு என் நன்றிகள்.
  ஸ்டீபன், தகவலுக்கு நன்றி. வெகு விரைவில் இணைத்து விடுகிறேன்.
  L.K. , மிக்க நன்றி.
  ஸாதிகா அக்கா, பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 10. ஆசியா அக்கா, நல்வரவு. உங்கள் கருத்துக்கு நன்றி.
  இமா, மிக்க நன்றி.
  மேனகா, நலமா? மிக்க நன்றி.
  குமார், ரொம்ப நன்றி. ஆதரவுக்கு நன்றி.

  ReplyDelete
 11. Sree Viji, வாங்க, நல்வரவு.

  ReplyDelete
 12. //சபிதா அக்காவிற்கு நாலு அடி, காவலுக்கு நின்ற எனக்கு 2 அடி, தடுக்க வந்த பெரியம்மாவுக்கு 1 அடி என்ற விகிதத்தில் அடி வாங்கினோம்//

  ஹாஹா..

  வெயிலின் அருமை நிழலில்.. ம்ம்.. என்னைக் கேட்டால் ஒரே வீட்டில் இல்லாமல் ஒரே ஊரில் இருந்தாலே போதுமானது.. தக்க சமயத்தில் உதவிக்கலாம்.. பிரச்சனையும் வராது..

  ReplyDelete
 13. சந்தனா, நன்றி.

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!