Thursday, July 8, 2010

பீன்ஸ் பிரட்டல்




பீன்ஸ் - 250 கிராம்
வெங்காயம் - 1
எலுமிச்சம் பழம்- பாதி
பூண்டு - 1 பல்
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை
உப்பு
மஞ்சள் தூள்

பீன்ஸை சுத்தம் செய்து, மிக மெல்லிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக அரிந்து வைக்கவும்.

நான் - ஸ்டிக் சட்டியில் எண்ணெய் விட்டு, சின்ன சீரகம், கடுகு, உளுந்து தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து கிளறவும்.

வெங்காயம் லேசாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய பூண்டு, பீன்ஸ், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கிளறவும். சட்டியில் சிறிது தண்ணீர் தெளித்து, அடுப்பை சிம்மரில் வைக்கவும்.

தண்ணீர் வற்றியதும் மீண்டும் சிறிது தண்ணீர் தெளிக்கவும். இடையிடையே கிளறி விடவும்.
பீன்ஸ் வேகும் வரை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து, கிளற வேண்டும்.
பீன்ஸ் நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி ( விரும்பினால் ) இறக்கவும்.


பின்குறிப்பு:
பீன்ஸை அரியும் போது பொறுமை அவசியம். எடுத்தமா கவிழ்த்தமா என்று இல்லாமல் நிதானமாக செய்ய வேண்டும்.
இந்த ரெசிப்பிக்கு நான் லைம் ஜூஸ் சேர்த்து செய்தேன்.

Wednesday, July 7, 2010

வீடு

நான் செய்த தொழில் இல்லை, செய்யாத தொழில் இல்லை என்று சொல்லுமளவிற்கு எல்லா விதமான தொழில்களிலும் என் முத்திரை பதித்து இருக்கிறேன். இதைப் படித்து விட்டு நான் தொழில் அதிபர் என்று நினைத்து விடாதீர்கள்.

முதலில் என்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். என் பெயர் வேலாயுதம். எனக்கு 8 குழந்தைகள். ஐந்து குழந்தைகள் பெற்றால் அரசனும் ஆண்டியாகி விடுவான். எட்டு குழந்தைகள் பெற்ற என் நிலையை எண்ணிப் பாருங்கள்.

என் தாத்தா மலேசியாவில் தொழில் செய்து, பல சொத்துக்கள் வாங்கி குவித்தார். நான் குடியிருக்கும் வீடு, நிலம் எல்லாமே தாத்தா வழி வந்த சொத்துக்களே. எனக்கு படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை. ஊதாரித்தனமாக செலவு செய்தே சொத்துக்களை அழித்தேன்.

எனக்கு திருமணம் ஆகி, குழந்தைகள் வரிசையாக பிறந்த பின் தான் பணத்தின் அருமை விளங்கியது. ஆனால் அது காலம் கடந்த ஞானோதயம். என் பெரிய குடும்பத்தை கொண்டு நடத்த வேண்டும். ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால் நான் நினைத்தது போல் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. என் மூளையை கசக்கிப் பிழிந்து இறுதியில் தோன்றிய யோசனை திராட்சைத் தோட்டம் .

பரந்து விரிந்த எங்கள் தோட்டத்தில் திராட்சைக் கன்றுகள் நட்டு, நீர் ஊற்றி, பந்தல் போட்டு நிறையவே நேரம் செலவு செய்தேன். பாடு பட்டதற்கு நல்ல பலன் கிடைத்தது. காய்த்து தொங்கிய திராட்சை பழங்களை வாங்க நீ, நான் என்று போட்டி போட்டுக் கொண்டு வந்தார்கள். உள்ளூர் சந்தையிலும் நல்ல விலை போனது. ஓய்வு நேரங்களில் வேப்பமர நிழலில் என் தாத்தாவின் மரக் கட்டிலில் படுத்துக் கொண்டே திராட்சைத் தோட்டத்தை ரசிப்பேன்.


என் மூத்த மகளுக்கு திருமணம் நிச்சயமானது. நாங்கள் பஞ்சத்தில் ஆண்டி என்றால் என் மருமகன் குடும்பம் பரம்பரை ஆண்டிகளாக இருந்தார்கள். மருமகன் குடும்பம் மிகவும் பெரியது. மருமகனின் அக்கா, தங்கை, குழந்தை, குட்டிகள் என்று பெரிய கும்பலே வந்து என் திராட்சைத் தோட்டத்தை ஒரு வழி பண்ணி விடுவார்கள்.

அவர்களிடமிருந்து என் திராட்சை செடிகளை காப்பாற்ற பூச்சி மருந்து அடித்திருப்பதாக சொன்னேன். அவர்கள் எதற்கும் அசரவில்லை. அவர்களின் தொல்லை தாங்காமல் நான் பாவித்த பூச்சி மருந்தோ, உரமோ அல்லது காலநிலையோ தெரியவில்லை திராட்சைக் கொடிகள் எல்லாமே பட்டுப் போய் விட்டன.
அடுத்து கோழி வளர்த்தேன். அதிலிருந்து வந்த கொடிய மணம் தாங்காமல் அதையும் கைவிட்டேன். அடுத்து மாடு, ஆடு, எருமை இப்படியெல்லாமே வளர்த்தேன். ஆனால் எதுவுமே சரி வரவில்லை.

அடுத்து சோடா ஃபாக்டரி தொடங்கினேன். ஃபாக்டரி என்றதும் ஏதோ பெரிதாக கற்பனை செய்ய வேண்டாம். வீட்டின் ஒரு பக்கத்தை அடைத்து, அதில் சோடா செய்ய தேவையான உபகரணங்கள் வாங்கிப் போட்டேன். எல்லா வேலைகளையும் நானே செய்வேன்.
கலர் தண்ணியில் வாயு செலுத்தி, நுரை வரச் செய்து நல்லாவே தொடங்கியது என் தொழில். நல்ல இலாபம் வந்தது. பெயரில்லா சோடா என்று எல்லோரும் அழைக்க, ஏதாவது பெயர் தேடினேன். இறுதியில் வேல் & சன்ஸ் என்று என் 2 மகன்களையும் சேர்த்துக் கொண்டேன். பெயர் சூட்டு விழாவின் பின் என் சோடா ஃபாக்டரி நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டது. முதலுக்கே மோசம் வரும் போல இருந்தது. மூடு விழா நடத்தி மூடி விட்டேன்.

அடுத்து என்ன செய்வது என்று மிகவும் நிதானமா யோசித்து தோன்றிய ஐடியா பலசரக்கு கடை. டவுனுக்கு போய் உப்பு, புளி, மிளகாய், எண்னெய் இன்னபிற பொருட்கள் எல்லாம் மூட்டை கட்டிக் கொண்டு வந்து கடையில் போட்டேன். கடை கல்லாவை மனைவியின் பொறுப்பில் விட்டேன். சுற்று வட்டாரத்தில் இருந்து மக்கள் பொருள்கள் வாங்க வந்தார்கள். ஆனால் வாங்கி விட்டு, காசு குடுக்காமல் கணக்கில் எழுத சொல்லி விட்டு போய் விடுவார்கள். பல சரக்கு கடை சில சரக்கு கடையாக மாறியது. ஊராரின் கடன் விபரங்கள் எழுதிய நோட்டுக்கள் கடை எங்கும் நிரம்பி வழிந்தது. காசு குடுக்காமல் இழுத்தடித்தார்கள். நான் டவுனுக்கு பொருள் வாங்க போகாமல் கடன் வசூல் செய்வதிலேயே நேரம் போனது. இறுதியில் கடையை மூடி விட்டேன்.


மூத்த மகளைத் தவிர மற்றவர்கள் யாரும் திருமணம் செய்யவில்லை. முதிர் கன்னிகளாக அவர்கள் நிற்க, வயது முதிர்ந்து போய் நான் தடுமாறினேன். அப்போது தான் அந்த யோசனை தோன்றியது. நாங்கள் இருக்கும் வீட்டினை விற்று மகள்களை கரையேற்றலாமே என்று மனைவியிடம் சொன்னேன்.

அதன் பிறகு மளமளவென வேலைகள் நடந்தது. வீட்டினை விற்கும் நாளும் வந்தது. மனசே சரியில்லை. தாத்தா கட்டிக் கொடுத்த வீடு. நான் பிறந்து, தவழ்ந்து, நடை பழகிய வீடு. வீட்டினை வித்தாயிற்று. கிடந்த சாமான்களை எல்லாம் மாட்டு வண்டியில் அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்பினோம். வீட்டை திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தேன். கண்களில் கண்ணீர் திரையிட்டது. கன்னத்தில் வழிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.