சூப்பர் மார்க்கெட் போயிருந்தேன்.
" ஹேய் ! யாரு என் கார் மேலை அழுக்கு பண்ணியது ", என்ற குரல் கேட்டு திரும்பினேன்.
அங்கு ஒரு பெண், அவரின் 2 வாரிசுகள் நின்றார்கள்.
என்ன அழுக்காக இருக்கும் என்று பார்த்தேன். குக்கியோ அல்லது ஏதோ ஒரு சாப்பாட்டு பொருளை காரின் முன் ( car bonnet ) பாகத்தில் கொட்டியிருந்தார்கள்.
என்னைப் பொறுத்தவரை அது ஒரு பெரிய குற்றம் போல தெரியவில்லை. ஆனால், அந்த அம்மா குழந்தைகளை திட்டித் தீர்த்தார்.
சும்மா ஒரு பேப்பரினால் துடைச்சா வந்திட்டு போவுது. இந்த உயிரில்லாத பொருளுக்காக ஏன் உயிருள்ள ஜீவன்களை வதைக்கிறார் என்று ஆத்திரம் வந்தது.
பின்னர் கடையினுள்ளும் அவரின் அர்ச்சனை ஓயவேயில்லை. மகனுக்கு 10 வயசும், மகளுக்கு 8 வயசும் இருக்கலாம். திட்டு வாங்கிய போது இருவரின் முகமும் வாடிப் போய் இருந்தது. சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு மாறி, ஓடி ஓடி தாய்க்கு உதவிகள் செய்தார்கள்.
மகன் மீண்டும் ஏதோ தவறு செய்ய, மீண்டும் மகனுக்கு திட்டு, திட்டு,.. இப்படியே தொடர்ந்து கொண்டே இருந்தார்.
சிலர் புன்முறுவலுடன் கடந்து போனார்கள், சிலர் முகம் சுழித்தார்கள்.
இப்படிக் கூட தாய் இருப்பாளா என்று நினைத்துக் கொண்டேன்.
எனக்கு மட்டும் ஆண்டவன் இன்விஸிபிளா மாறும் சக்தியை குடுத்திருந்தா அந்த அம்மாவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டிருப்பேன்.
**********************
பொருள் வாங்கிய பிறகு காசு குடுக்கோணும் அல்லவா? அதுக்காக போய் லைனில் நின்றேன். அங்கு ஸ்டான்டில் இருந்த புத்தகங்களை சும்மா மேலோட்டமா ஒரு பார்வை பார்த்தேன். பில் கிளின்டனின் மகள் கணவரை விட்டுப் பிரியப் போவதாக ஒரு கிசுகிசு மாகஸினில் போடிருந்தார்கள். அடடா! 6 மாசம் கூட இல்லையே அதற்குள் கசந்திடுச்சா.....
பின்னாலிருந்து ஒரு குரல், " இந்த பால் பாட்டிலை இங்கு வைக்கவா ?", என்று கேட்டது. ஒரு வெள்ளைக்கார அக்கா நின்று கொண்டிருந்தார்.
நான் என் பொருள்களே மூவிங் பெல்ட்டில் இன்னும் வைக்கவில்லை.
" சரி. அதுக்கென்ன வையுங்களேன்", என்றேன்.
அந்தப் பெண்மணியின் கைகளில் வேறு பாட்டில்கள், சாமான்கள் என்று வைத்திருந்தார். ஏன் ஒரு ஷாப்பிங் கார்ட் அல்லது கூடை எடுத்திருக்கலாமே என்று நினைத்துக் கொண்டேன்.
" கொஞ்ச சாமான்கள் சமாளிக்கலாம்ன்னு நினைச்சேன். முடியலை. இப்ப பால் பாட்டிலை எடுத்திர்றேன் ", என்றார்.
" பரவாயில்லை. நீங்கள் முதலில் போங்கள். நான் பின்னாடி வர்றேன்", என்று சொல்லி என் பொருட்களை எடுத்துக் கொண்டு அவருக்கு வழி விட்டேன்.
சிறிது தயங்கியவர். பிறகு புன்முறுவலுடன் என்னைக் கடந்து போய் லைனில் நின்று கொண்டார்.
நன்றி என்று குரல் வந்தது.
அட! நன்றி என்று தமிழில் சொன்னவர் யாராக இருக்கும் என்று யோசித்தேன். லைனில் முன்னுக்கு போய் நின்றவர் புன்முறுவலுடன், " நான் தான் நன்றி என்றேன்", என்றார்.
தமிழ் எப்படி? நீங்க? யாரிடம்? என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டேன்.
" நான் ஒரு வயசான இலங்கை பாட்டியை பார்த்துக் கொள்கிறேன். அவங்க எனக்கு தமிழ் சொல்லிக் குடுத்தாங்க", என்றார்.
குளிக்க வாங்கோ, சாப்பிட வாங்கோ, புறா... இப்படி பல தமிழ் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போனார்.
தமிழ் அழகான மொழி. இனிமேல் எழுதப் பழக வேண்டும் என்றார்.
போகும் முன்பு சொன்னார், " இலங்கை, இந்தியா, சைனா போன்ற நாடுகளில் வயசான பெற்றோர்களை முதியோர் காப்பகத்துக்கு அனுப்பாமல் பிள்ளைகளே வைச்சு பொறுப்பா பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், அமெரிக்காவில் தான் மூலை முடுக்கெல்லாம் முதியோர் காப்பகங்கள். அங்கு போய் அதிகபட்சம் 18 மாதங்கள் உயிரோடு இருப்பார்கள். பிறகு இறந்து போகிறார்கள். நான் என் ( 74, 78 ) தாய், தந்தை
இருவரையும் அவர்களின் இறுதிக் காலங்களில் வைச்சு கவனமா பார்த்துக் கொள்ளப் போகிறேன். இதை என் அம்மாக்கும் உறுதியா சொல்லியாச்சு ", என்றபடி விடை பெற்றார்.
இவர் எங்கே, தொட்டதற்கெல்லாம பிள்ளைகளை திட்டிய மற்றப் பெண்மணி எங்கே என்று நினைத்துக் கொண்டேன்.