Saturday, July 27, 2013

வானதியின் ஆக்கங்கள்


இந்த டிசைன்கள் எல்லாமே இணைய தளங்களில் இலவசமாக எடுக்கப்பட்டவையே.




நான் தைத்த எம்ப்ராய்டரி வேலைகள். உங்களுக்காக. முதலாவது சங்கிலித் தையல். மிகவும் இலகுவான, அழகான தையல் வகை இதுவாகும். நூலினை துணியின் கீழிலிருந்து மேலாக குத்தி எடுக்கவும். படத்தில் காட்டியபடி. பின்னர் ஊசியினை நூலின் பக்கத்தில் நெருக்கமாக குத்தி சிறிது இடைவெளி தூரத்தில் ஊசியினை துணியின் மேல் கொண்டு வரவும். இப்போது முன்பே துணியின் கீழிலிருந்து மேல் கொண்டு வந்த நூலினை ஊசியினை சுற்றி மாலை போல் ( அப்பாடா விளக்கிட்டோமில்லை ) போட்டு, மெதுவாக இழுக்கவும். இங்கு மெதுவாக என்பது மிகவும் மெதுவாக என்று எடுக்கவும். பலம் கொண்ட மட்டும் நூலை இழுத்தால் சங்கிலித் தையல் கன்றாவியாக இருக்கும்.


  
 
 



அடுத்து மொட்டுக்கள் தைக்க இந்த தையல்
அழகாக இருக்கும். இது ஒரு ஸ்பானிஷ் அக்கா யூட்யூப்பில் தைத்தார்கள். ஏதோ ஒரு பெயர் சொன்னார்கள். ஞாபகம் இல்லை. முதலில் மொட்டு டிசைன் வரைந்து கொள்ளவும். டார்க் கலர் நூலினை இப்படி இந்த முனையில் இருந்து அந்த முனை வரை நேர்கோடு போல தைத்துக் கொள்ளவும்.


வேறு கலர் நூலினை அடைப்பு தையல் மூலம் மொட்டினை நிரப்பிக் கொள்ளவும்.


இப்போது படத்தில் உள்ளது போல ஊசியினை குத்தி துணியின் மேல் இழுக்கவும். பின்னர் அடைப்பு தையல் நூலினை 3 அல்லது 4 பிரிவாக பிரித்து, முதல் பிரிவின் கீழாக அதாவது முன்பு தைத்த கறுப்பு நூலின் கீழாக ஊசியினை நுழைத்து, V ஷேப்பில் மேல் நோக்கி இழுத்து மறுமுனையில் ஊசியை துணியின் கீழ் கொண்டு போனால் இந்த வகை டிசைன் கிடைக்கும்.



பிறகு ஊசியினை மறுபக்கம் குத்தி இதே போல கறுப்பு நூலின் கீழாக கொண்டு சென்று எதிர் முனையில் V ஷேப் கிடைக்குமாறு நூலினை இழுத்து துணியின் கீழாக முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.






முடிச்சு தையல் ( Knot stitch )



ஊசியினை துணியின் கீழ் இருந்து மேலாக குத்தி இழுக்கவும். திரும்பவும் ஊசியினை குத்தி, சிறிது இடைவெளியில் மீண்டும் எடுக்கவும், இப்போது நூலினை எடுத்து உங்கள் விருப்பபடி 2, 3, 4... ஊசியினை சுற்றிக் கொள்ளவும். பின்னர் ஊசியினை மெதுவாக இழுக்கவும். முடிச்சு போல தையல் வரும். இப்போது ஊசியினை எதிர் பக்கமாக ( உங்களை நோக்கி ) இழுத்து துணியின் கீழே குத்தி இழுக்கவும். இந்தச் சிறுமியின் தொப்பியில் இருப்பது முடிச்சு தையல் தான். சிறுமியின் பாவாடை, தொப்பி சங்கிலித் தையலும், Bee க்கு அடைப்பு தையலும் பயன்படுத்தினேன். இதில் பயன்படுத்தியுள்ள  cross stitch , ஹெர்ரிங் போன், நரம்பு தையல், ரன்னிங் ஸ்டிச் போன்ற தையல் வகைகள்..... ( தொடரும் )