Friday, February 3, 2012

ஒரு விருதும் என் பெருமைகளும்




இது மகியின் பக்கம் பார்த்ததில் இருந்து ஒரே டென்ஷன். நானும் தைக்க வேண்டும் என்று ஒரே ஆவல். ஆவல் மட்டும் இருந்தா போதுமா? பொறுமை வேண்டாமா? இந்த டிசைனை துணியில் ட்ரேஸ் செய்யவே ஒரு வாரம் தேவைப்பட்டது. ட்ரேஸ் செய்த பிறகு மூட்டை கட்டி வைச்சு.... அப்படியே மறந்தும் போய்விட்டது. பிறகு ஒரு நாள் ஒரு பூ மட்டும் தைச்ச பிறகு மீண்டும் மூட்டைக்குள் போய்விட்டது. பிறகு கிட்டத்தட்ட 3 மாதங்களின் பிறகு ஒரு வழியா தைச்சு முடிஞ்சுது.

அடுத்தது, சங்கிலித் தையல் மட்டும் யூஸ் பண்ணி தைத்த டிசைன். ஓரங்களில் மணிகள் கோர்த்தேன். ப்ளேயின் துணியாக இருந்த மேசை விரிப்பு இப்ப மிகவும் அழகாக மாறிவிட்டது.


சமீபத்தில் என் ப்ரெண்ட் ஒருவருக்கு நான் தைச்ச பூ வேலைப்பாடுகளைக் காட்டினேன். அவர் எனக்கு ஒன்று தைச்சு தந்தா தான் ( நிசமா தான். நம்புங்க ) ஆச்சு என்று இன்னும் ஒற்றைக் காலில் நிற்கிறார். கிட்டத்தட்ட 50 வீதம் வேலை முடிஞ்சுது. கீழே படத்தில் இருக்கும் எம்ப்ராய்டரி தான் என் தோழியின் ஃபேவரைட்.


என் தோழி மகி கொடுத்த விருது. மிக்க நன்றி.
இதை 200க்கு குறைவாக ஃபாலோவர்ஸ் இருக்கும் அதிராவுக்கு கொடுக்கிறேன்.

Monday, January 30, 2012

விடியல்

நேசம்+யுடான்ஸ் இணைந்து வழங்கும் சிறுகதைப் போட்டியில் பங்கு பெறும் என் கதை. புற்றுநோய் ஒரு கொடிய நோய். அது வருவதற்கு பல காரணங்கள் இருக்கு. சிலரின் உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல், குடி, சுற்றுச்சூழல் இப்படி பல காரணங்கள் உண்டு. என் கதையில் வரும் நாயகிக்கு புற்றுநோய் வந்த காரணத்தினை விட ( ஏன் வந்தது என்று ஆராய்ச்சி செய்யாமல் ) அதை எதிர்கொள்ளும் மனத்திடம் அதிகமாக இருக்குமாறு எழுதியுள்ளேன். இதில் வரும் Randy Pausch என்பவர் ஒரு கற்பனையான கதாபாத்திரம் அல்ல.


விடியல்
ஜூலி என் அலுவலக நண்பி. நண்பி என்று சொல்வதைவிட உடன்பிறப்பு என்றே சொல்லலாம். அந்தளவுக்கு நானும் அவளும் இணைபிரியாத நண்பிகள். வேலைக்கு சேர்ந்த புதிதில் ஜூலி தான் எனக்கு வேலை பயிற்றுவிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி. அதிகாரி என்ற எந்தவிதமான தோரணையும் இன்றி அன்புடன் வேலை சொல்லிக் கொடுத்தாள். நான் டீல் பண்ணிய முதல் கஸ்டமரின் கிரெடிட் கார்ட் எண்ணை தவறுதலாக வேறு ஒரு கஸ்டமருக்கு என்டர் பண்ணிவிட்டேன். அந்தப் பழியை தன் மீது ஏற்றுக் கொண்டாள் ஜூலி. மானேஜர் வந்து உறுமி விட்டுச் சென்றார்.

நான் பலமுறை மன்னிப்புக் கேட்டேன்.
போகட்டும் விடு, என்றாள் ஜூலி.
இப்படி தொடங்கிய நட்பு நாளாக நாளாக இன்னும் வலுவடைந்தது. இருவருக்கும் பொதுவான பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தமையால் சனி, ஞாயிற்றுக் கிழமைகள் கூட இருவரும் சந்தித்து, ஒன்றாக கடைகள் ஏறி இறங்கினோம்.

ஜூலிக்கு திருமணம், குழந்தைப் பேறு என்று எல்லாமே இனிமையாக நடந்தது. முன்பு போல அவள் வீட்டுக்கு நினைத்ததும் போக முடிவதில்லை. அவளும் கணவர், குழந்தைகள் என்று பிஸியாக மாறி இருந்தாள். அவள் என்னை விட்டு தூரமாக போவது போல ஒரு மனப்பிரமை.
ஏன் ஜூலி நீ முன்பு மாதிரி இல்லையே?, என்று கேட்டேன் ஒரு நாள்.
அப்படி எதுவும் இல்லையே. நீயாக எதையும் கற்பனை பண்ணாதே என்று வெடுக்கென சொன்னாள் ஜூலி.

இல்லை நீ.... நான் தொடர்வதற்குள் அவள் வெகு தூரம் போயிருந்தாள்.

அவள் புன்னகை மட்டும் அப்படியே இருந்தது. ஆனால், என்னை மட்டும் இப்படி வெறுக்கிறாள் என்று யோசனை ஓடியது.
இன்றோடு ஆறாவது நாள் ஜூலி வேலைக்கு வந்து. போனில் தொடர்பு கொண்ட போதும் பதில் இல்லை. அவள் வீடும் பூட்டியே கிடந்தது.

கிட்டத்தட்ட பத்து நாட்களின் பின்னர் வேலைக்கு வந்தாள் ஜூலி.
என்னாச்சு ஜூலி? ஏன் தொலைபேசியில் கூட பேச மாட்டாயா?, என்றேன்.
இல்லை. நான் வெக்கேஷன் போயிருந்தேன். இப்ப பேச வேண்டாம். மாலை வீட்டுக்கு வா, என்று முடித்துக் கொண்டாள்.

எனக்கு மார்பக புற்றுநோய் என்று ஜூலி சொன்னதை நம்பவும் முடியவில்லை.
உண்மையாகவே சொல்கிறாயா?, என்றேன்.
இதெல்லாம் யாரும் விளையாட்டுக்கு சொல்லமாட்டார்கள், என்றாள்.
அழுகை வந்தது. இல்லை இருக்காது. நீ வேறு மருத்துவரிடம் சென்று உறுதி செய்து கொண்டாயா, என்றேன் அழுகையினூடே.
அசட்டுப் பெண்ணே! இது வரைக்கும் மூன்று மருத்துவர்கள் அதையே தான் சொன்னார்கள் என்றாள் புன்னகைத்துக் கொண்டே.
எப்படி உன்னால் மட்டும் சிரிக்க முடியுது, என்றேன் நான்.
பின்னே என்ன செய்யச் சொல்கிறாய். பிள்ளைகள், கணவன் முன்னாடி அழச் சொல்கிறாயா?, என்றாள்.

ஜூலி ஆதரவாக என் கைகளை பிடித்துக் கொண்டாள்.
எல்லோருக்கும் வாழ்வில் ஒரு இன்ஸ்பிரெஷன் இருக்குமே அது போல எனக்கும் ஒருவர் இருக்கிறார். அவர் தான் ரான்டி போச். அவரின் இறுதி விரிவுரை கேட்டிருக்கிறாயா? நான் அவரின் பேச்சினை போன வருடம் எதேச்சையாக கேட்க நேர்ந்தது. கல்லீரல் புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில், இன்னும் சில மாதங்களே உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் சொன்னபிறகும், அதையே நினைத்து இடிந்து போகாமல் கார்னகிமெலன் என்ற பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய உரையினைக் கேட்டவர்கள் எல்லோரும் கண்ணீர் விட்டு அழ, அவர் மட்டும் சிரித்த முகத்துடன் உரையாற்றிக் கொண்டு இருந்தாரே அவர் தான் என் வாழ்வின் வழிகாட்டி.
இந்த நோய் வந்துவிட்டதே என்று மனமொடிந்து போகாமல் எப்போதும் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளவே விரும்பினேன். எதிர்மறையான எண்ணங்கள் கூட இந்த நோய்க்கு எதிரி. காலையில் எழுந்ததும் காய்கறி, பழங்கள் கலந்து ஒரு சாறு குடிப்பேன். நான் நல்ல சந்தோஷமாகவே இருக்கிறேன், என்றாள் ஜூலி.
அவள் கணவன் ஆதராவாக அவள் கைகளைப் பற்றிக் கொண்டார். என் கணவர், பிள்ளைகள் தான் எனக்கு முழு பலமே என்றாள் புன்சிரிப்புடன்.
இனிமேல் நானும் உனக்கு ஆதரவாக இருப்பேன் என்றபடி விடைபெற்றேன்.
எனக்கு புற்றுநோய் இருப்பதை வேலையில் யாருக்கும் சொல்லாதே. என் மீது யாரும் அனுதாபம் காட்டுவதை நான் அடியோடு வெறுகிறேன் , என்றாள்.

சில வருடங்களின் முன்பு என் சித்தி மார்பக புற்றுநோய் வந்த போது அவர் பட்ட கஷ்டங்கள் எல்லாம் கண் முன்னே விரிந்தன.

அனலில் இட்ட புழு போலத் துடித்தேன் என்று சொல்வார் கீமோதெரபி முடிந்து வந்ததும். அதே போல தான் ஜூலியும் துடிப்பாளே என்ற எண்ணம் தோன்ற மனது வலித்தது. என் சித்தி போல இவளும் முடி கொட்டி, இறுதி நாட்களில் மூளை மங்கி.... என்ற நினைப்பே வேதனையைக் கொடுத்தது.

ஆனால், நான் நினைத்தது போல ஜூலி அழுது ஆர்பாட்டம் பண்ணவில்லை. முடி கொட்டினால் விக் போடலாம் என்பாள். அது போல விக் அணிந்து கொண்டாள்.

ஜூலி தைரியமாகவே இருந்தாள். ஆனால் நான் மார்பக புற்றுநோய் வந்தவள் போல ஆடிப்போய் இருந்தேன்.
அடுத்த முறை ஜூலியுடன் நானும் மருத்துவரிடம் வருவதாக சொன்னேன். அவள் முதலில் தயங்கினாள். பின்னர் சரியென்று அழைத்துச் சென்றாள்.
இப்படி மனதைரியத்துடன் இருக்கும் பெண்மணியை நான் சந்தித்ததே இல்லை. உங்கள் மன உறுதியை கண்டு மலைத்துப் போனேன் என்றார் மருத்துவர். இரத்த பரிசோதனை செய்ய இரத்தம் எடுக்கப்பட்டது.

டாக்டர், இந்த முறை எனக்கு புற்றுநோய் கட்டிகள் அறவே இல்லை என்று நீங்கள் சொல்லத் தான் போறீங்க. என்ன பந்தயம்?, என்றாள் ஜூலி.

மருத்துவர் சிரித்துக் கொண்டே விடைபெற்றார்.
ஜூலி சொல்வது உண்மை தான். எங்கள் எதிர்மறையான பேச்சுகள் கூட என் சித்தியை கொன்று இருக்கலாம். குடும்பத்தில் ஒருவர் கூட சித்தியிடம் பாஸிட்டீவ் எண்ணங்களை வளர்க்கவில்லை. புற்றுநோய் வந்திடுச்சி. இனிமேல் என்ன மரணம் தான் என்று அவருக்கு நினைப்பை ஊட்டி அவரைக் கொன்றுவிட்டோம். சினிமாக்களில் வரும் கதாநாயன், நாயகிக்கு புற்றுநோய் வந்தால் மரணம் தான் இறுதி முடிவு என்பது போல காட்டுவார்கள். அதை பார்த்து மக்களும் புற்றுநோய் ஒரு கொடிய நோய் என்று எண்ணங்களை வளர்த்துக் கொண்டார்கள். நோயினை வென்றவர்களை வைத்து ஒரு விழிப்புணர்வு படம் எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஜூலியின் கைகளை ஆதரவாக பிடித்துக் கொண்டேன்.
மருத்துவமனையினை விட்டு வெளியே நடந்தோம். மேற்கு வானில் சூரியன் நாளை மீண்டும் கிழக்கில் தோன்றுவேன் என்றபடி விடைபெற்றான். நம்பிக்கை தானே வாழ்க்கை. பக்கத்தில் இருந்த காஃபி ஷாப்பினை நோக்கி நடந்தோம்.