Saturday, August 13, 2011

ஜன்னல் மாத்தலையா ( பாகம் 2 )

ஹலோ! உங்க வீட்டு ஜன்னல் மாத்தப் போறீங்களாமே ? என்றது குரல்.

நான் எப்ப சொன்னேன்?
எரிக் சொன்னாரே என்றது மீண்டும் போன் குரல்.

யாரு எரிக் ?- இது மீண்டும் நான். எதிர் முனையில் இருந்தவருக்கு கடுப்பு வந்திருக்க வேண்டும். சரி போனை எரிக் இடம் குடு, என்றார்.

ஓ! இந்த இளைஞன் பெயர் எரிக் என்று இப்ப விளங்கியது. அதோடு அவன் சேர்ட்லிருந்த பெயர் கொண்ட அடையாள அட்டை இப்பதான் என் கண்களுக்குப் பட்டது.

எரிக் தூரமாக போய் நின்று ஏதோ குசு குசுவென கதைத்து, சிரித்துக் கொண்டு நின்றான். சரியான சாவுக் கிராக்கி என்று திட்டியிருப்பார்களோ???

மீண்டும் என்னிடம் போன் கையளிக்கப்பட்டது. போனைத் தர முன்னர் எதிர் முனையில் என்ன கேட்டாலும் யெஸ் என்றே சொல்லு, நோ சொல்லாதே என்றான் எரிக். எழுந்த கோபத்தினை அடக்கிக் கொண்டே போனை வாங்கினேன்.

ஜன்னல் மாத்தப் போறியா- என்றது குரல்.
ம்ம்...

எப்ப மாத்துவதாக உத்தேசம்? மீண்டும் கேள்வி.
இப்பவே - இது நான்.

எதிர் முனையில் சிரிப்பொலி கேட்டது.
மேம், அதெல்லாம் உடனை ஆகிற காரியமா? எங்க கம்பெனி ஆள் ஒருத்தர் உங்க வீட்டுக்கு வரணும், அளவுகள் எடுக்கணும்....
கடவுளே! என்ன சோதனை என்று மனதினுள் நினைத்துக் கொண்டேன். அப்படியே எரிக் கன்னத்தில் ஒரு அறை விடலாமா என்று எண்ணம் ஏற்பட்டது.

மேம், உங்க வீட்டு ஜன்னல் மரத்தால் செய்யப்பட்டதா அல்லது அலுமினியமா?

தெரியலை. எங்கவூட்டுக் காரரை கேட்க வேண்டும் என்றேன்.

அலுமினியம் என்று சொல்லு என்றான் எரிக்.
மேலும் சில கேள்விகள், பதில்கள் சொன்ன பிறகு இந்த வாரக் கடைசியில் எங்க கம்பெனி ஆள் உங்க வீட்டுக்கு வருவார். நீங்க இரண்டு பேரும் வீட்டிலை இருக்கணும் ஓகேவா என்றது எதிர் முனை.
என்ன இரண்டு பேரையும் கட்டி வைச்சுட்டு கொள்ளை அடிக்கப் போறாங்களா என்று யோசனை ஓடியது.

போனை வைத்த பிறகு கோபம் வந்தது. ஏம்பா எரிக், இது நியாயமா? தர்மமா? நான் பாட்டுக்கு சிவனே என்று இருந்தேன். நீ என் நேரத்தையும் மண்ணாக்கியது பத்தாதா? இப்ப நாங்க இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ ஒரு கம்பெனி ஆளின் நேரத்தை மண்ணாக்கலாமா , என்று எகிறினேன்.

மேம், இதெல்லாம் அவங்களுக்கு சகஜமான விடயம். நீங்க பார்த்துட்டு பிடிக்கவில்லை, விலை அதிகம், உங்க பொருள் மட்டமா இருக்கு, அந்த ஆளின் மூஞ்சி சரியில்லை, பெரிய கொம்பன் மாதிரி பேசினான் இப்படி ஏதாவது சொல்லிடுங்க. கட்டாயம் ஜன்னல் மாத்த வேண்டிய அவசியம் இல்லை என்றபடி விடைபெற்றான்.

சொன்னது போல வார இறுதியில் அந்த நபர் வந்தே விட்டார்.
ஒரு பெரிய டிரங்குப் பெட்டி சகிதம் வந்தார்.
அந்த டிரங்குப் பெட்டியில் ஒரு கண்ணாடி, சுத்தியல், பன்சன் சுடர் அடுப்பு போன்ற ஒரு அடுப்பு, இன்னும் எதேதோ பொருட்கள்.
எங்க கண்ணாடி போல நீங்க எங்கேயும் கண்ணாடி பார்க்க முடியாது. சுத்தியல், கல்லு இரண்டையும் கண்ணாடி மீது விட்டெறிந்தார். அது உடையவே இல்லை. நாற்காலியை தூக்கி வீசினார் அப்பவும் கண்ணாடி அசையவேயில்லை. சுடர் அடுப்பினால் சூடாக்கினார், கண்ணாடி அப்படியே இருந்தது.
மேம், நீங்கக் கண்ணாடியில் என்னத்தை தூக்கி வீசினாலும் இது உடையவே உடையாது என்றார்.

ஆண்டவா! நாங்கள் என்ன ஜேம்ஸ்பான்ட் படம் சூட்டிங்கா எடுக்கிறோம்? மற்ற வீடுகள் போல எங்கள் வீட்டிலும் சண்டை, சச்சரவுகள் வருவதுண்டு அதுக்காக நான் என் ஆ.காரரையோ அல்லது அவர் என்னையோ தூக்கி ஜன்னலை நோக்கி வீசுவது இல்லையே.

என் மகனுக்கு ஒரே கொண்டாட்டம்.
அம்மா, திஸ் ஹைய் இஸ் சோ கூல் ( This guy is so cool ) என்றார்.

என் ஆ.காரர் ஒரு ஜன்னல், கண்ணாடி டோர் இரண்டையும் அந்த நபருக்கு காட்டி, இரண்டுக்கும் எவ்வளவு செலவாகும் என்றார்.
அந்த நபர் சொன்ன விலையைக் கேட்டதும் மயக்கம் வராகுறைதான்.
கணவர் காட்டிய கதவின் வழியாக வின்டர் நேரங்களில் குளிர் காற்று உள்ளே கசிவதுண்டு. அந்த ஆள் சொன்ன விலையை கேட்டதும் என் ஆ.காரரின் பதில்,
Let the cold air come in.


முற்றும்






Tuesday, August 9, 2011

ஜன்னல் மாத்தலையா?


பிள்ளைகளை கூட்டிக் கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்த போது, எக்ஸ்கியூஸ் மீ என்ற குரல். குரல் வந்த திசையில் ஒடிசலாக ஒரு இளைஞன். டை, சேர்ட் என்று அமர்க்களமாக நின்றான். மிஞ்சிப் போனால் 17 வயதிருக்கும். கையில் ஃபைல் வைத்திருந்தான். நான் பெரும்பாலும் இந்த மாதிரி ஆசாமிகளை தவிர்த்து விடுவேன். வீட்டினுள் இருந்திருந்தால் தப்பித்திருக்கலாம். ஆனால் இங்கே தப்ப முடியவில்லை. எதையாவது தலையில் கட்டிய பின்னர் தான் நகருவார்கள். இல்லாவிட்டால் பேசியே கொலை செய்வார்கள்.


ஹா....ய் என்று இழுத்தேன். இப்ப அவசரமாக பிள்ளைகளின் பள்ளியில் புரோகிராமிற்கு செல்ல வேண்டும். பிறகு பார்க்கலாம் என்றேன்.
கண்டிப்பா பிறகு மீட் பண்ணலாம் என்றான்.
என் நெஞ்சினுள் பாதி தண்ணீர் ஏற்கனவே காலியாகியிருந்தது. நான் சும்மா பேச்சுக்கு சொல்லி தவிர்க்க பார்த்தா பொடியன் விபரமாகவே இருக்கிறானே என்று நினைத்தேன்.

என் பள்ளியில் இந்த வேலை செய்தா அதிக மதிப்பெண்கள் தருவார்கள். காலையிலிருந்து அலைகிறேன் ஒரு பயலும் கதவையே திறக்க மாட்டேன் என்கிறான்.

( நானும் வீட்டுக்குள் இருந்திருந்தா அப்படித் தான் நடந்திருக்கும் என்று நினைத்தபடி) எல்லோரும் வேலைக்கு போயிருப்பார்கள் என்று சமாதானம் சொன்னேன்.

நீ எப்போ திரும்பி வருவாய், என்றான் இளைஞன்.
ம்ம்ம்.. தெரியவில்லை. சில வேளைகளில் 8 மணிக்கு வந்துவிடுவேன். சில வேளைகளில் 11 மணி கூட ஆகலாம்.. என்று சமாளித்தேன்.
அந்த இளைஞனை எப்படியாவது விரட்டி விடுவதில் குறியாக இருந்தேன்.
வரட்டா. மீண்டும் பார்க்கலாம் என்றபடி பக்கத்து வீட்டை நோக்கி ஓடினான்.
நானும் அப்பாடா விட்டது தொல்லை என்று ஓட்டம் எடுத்தேன்.

பள்ளியில் இந்த இளைஞன் பற்றி சுத்தமாக மறந்தே போய்விட்டது. கிட்டத்தட்ட 8.30 அளவில் திரும்பி வந்த போது, எங்கள் வீட்டுப் படியில் குத்த வைச்சது போல இருந்தான். திரும்பி ஓடலாமா என்று யோசிப்பதற்குள் என்னைப் பார்த்துவிட்டான்.
நான் ( நீ இன்னும் போகலையா? ) மீண்டும் ஹாய் என்றேன்.
இளைஞன் ( நீ இப்ப தான் வர்றியா என்று மனதினுள் நினைத்திருப்பான் போல. கை கடிகாரத்தை பார்த்தபடி வந்தான் ) ஃபைலை விரித்தான்.
கலவரமாகிய நான். இருப்பா! எங்க வூட்டுக்காரர் வரட்டும். அவர் தான் இந்த மாதிரி விடயங்களில் சூரப்புலி என்றேன்.
இல்லை மேம். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. இப்ப முடிஞ்சுடும் ஜெஸ்ட் 10 மினிட்ஸ் தான் என்றான்.
அவன் பாவி சொன்னதை நானும் நம்பினேன். உங்க வீட்டு ஜன்னல் எல்லாம் பழசு போல இருக்கே மாத்தவில்லையா, என்று தொடங்கினான்.

இல்லை. பிறகு பார்க்கலாம். பிள்ளைகளுக்கு இரவு சாப்பாடு குடுக்கணும் வரட்டா என்று நழுவப்பார்த்தேன்.

இரு வரேன் என்றபடி செல் போனில் நம்பரை குத்த தொடங்கினான். நான் அவனின் அம்மாவோடு பேசப் போகிறான் போல இருக்கு என்று நினைத்தபடி ஓரமாக நின்றேன்.

சில நொடிகள் பேசியவன் என்னிடம் போனை தந்தான். நீயும் கட்டாயம் பேச வேண்டும் என்று என் பக்கம் தந்தான்.

யாரு உங்க அம்மாவா? என்னத்தை பேசுறது என்று விரக்தியாக சொன்னேன். வழக்கமாக 7 மணி அளவில் வரும் ஆ.காரர் இவ்வளவு நேரமாகியும் வராத எரிச்சல் ஒரு புறம். மறுபுறம் இந்த ஆசாமி தொல்லை.

எங்க அம்மா இல்லை. இது வேறு ஒரு நபர் என்றான்.

தொடரும்.