நியூயோர்க் நகரின் பிரதான இடத்தில் இருந்தது தேவாவின் வீடு. அடுக்கு மாடி குடியிருப்பில் 8வது தளத்தில், சகலவசதிகளோடு கூடிய வீடு அவனுடையது. நேரம் அதிகாலை 4 மணி. தூக்கம் வராமல் புரண்டு படுத்தான் தேவா. வயது 35. இன்னும் திருமணமாகவில்லை. திருமணம் செய்யும் எண்ணமும் இல்லை. எப்போதும் வேலை, வேலை என்று அலைந்து திரிந்து, பங்கு சந்தையில் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமாகிவிட்டான். இந்த வீடு, கார், வசதிகள் எல்லாம் அவன் குறுகிய காலத்தில் ஈட்டியவை. அவனின் அப்பா காலமாகிவிட, அறுபதுகளின் ஆரம்ப பகுதியில் இருக்கும் அம்மா மட்டுமே இவனுக்கு துணை.
எழுந்து வெளியே சென்றான். பால்கனியில் நின்று கொண்டே நகரின் அழகை, பிரமாண்டத்தை பார்த்துக் கொண்டே நின்றான். எதிலும் மனது ஒட்டவில்லை. திரும்ப அறைக்குள் செல்ல நினைத்தவன் தாயின் அறையில் விளக்கின் வெளிச்சம் கண்டு சிறிது நேரம் தயங்கி நின்றான். மென்மையாக கதவினை தட்டினான்.
" தேவா, உள்ளே வா", என்றார் அம்மா.
கட்டிலில் ஒரு பக்கம் ஆடைகள் அடுக்கப்பட்டிருக்க, மறு புறம் சிறு மலை போல ஆடைகள். அம்மா கையில் லிஸ்ட் வைத்துக் கொண்டே வேலையில் முமுமுரமாக இருந்தார். தரையில் சூட்கேஸ்கள் வாயை பிளந்தபடி காத்திருந்தன. ஒரு பழைய துணியினை எடுத்து, சூட்கேஸ்கள் மீதிருந்த தூசியினை சுத்தம் செய்யத் தொடங்கினான் தேவா.
"அம்மா, கட்டாயம் போய் ஆக வேண்டுமா", என்றான்.
"ம்ம்... இப்ப ஏன் இது பற்றி பேச வேண்டும். காலை 11 மணிக்கு ப்ளைட் என்று மறந்துவிட்டாயா. போய் படு. நான் எல்லாவற்றையும் அடுக்கி வைச்சுட்டு வாறேன்", என்றார் அம்மா.
போய் கட்டிலில் அமர்ந்து கொண்டான் தேவா. ஆறு மாதங்கள் முன்பு, ஒரு நாள் வேலை முடிந்து வந்தபோது அம்மாவின் முகம் வாடிக் கிடந்தது.
"அம்மா, என்னாச்சு? உடம்பு சரியில்லையா", என்று பரிவாக கேட்டான்.
"இல்லை தேவா. ஊரில் எங்களுக்கு ஒரு வீடு இருக்கு என்று உனக்குத் தெரியும் அல்லவா", என்றார்.
"இப்ப அதுக்கென்ன அம்மா. அதில் வேறு யாரோ குடியிருப்பதாக நீங்கள் சொன்னீர்களே. மறந்துவிட்டீர்களா?", என்று கேட்டான்.
"இல்லை. மறக்கவில்லை. எனக்கு அந்த வீட்டினை இப்பவே பார்க்க வேண்டும் போலிருக்கு...." என்று தொடர்ந்த தாயை கலவரமாகப் பார்த்தான்.
"அம்மா, நடக்கிறகாரியமா அது. உங்களுக்கு இங்கே வீடு வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன். ஊருக்குப் போய், அங்கே குடியிருப்பவரை எழுப்புவது இயலாத காரியம். அங்கு குடியிருப்பவன் பெரிய ரவுடி என்று நீங்கள் தானே சொன்னீங்கள்", என்றான்.
"ம்ம்.. சொன்னேன் தான். எனக்கு இறுதிக் காலம் விரைவில் வந்து விடும் போல இருக்கு. நான் சாக முன்னர் அல்லது நோய்வாய்ப் பட்டு படுக்கையில் என் இறுதி நாட்களை கழிக்கும் முன்னர் எங்கள் வீட்டினை அதாவது உன் அப்பா ஆசையாக கட்டிய வீட்டினை ஒரு தரம் பார்க்க வேண்டும்", என்றார்.
"அம்மா, உங்களுக்கு ஒன்றும் ஆகாது. ஊருக்கு இப்ப போக முடியாது. வேலை தலைக்கு மேல் இருக்கு", என்று தவிர்க்கப்பார்த்தான்.
"நீ வராவிட்டால் பரவாயில்லை. நான் மட்டும் போய் வருகிறேன்", என்று தனியாக கிளம்பிய அம்மாவை தடுக்க வழி தெரியாமல் கூடவே கிளம்ப வேண்டிய கட்டாயம்.
காலை ஏழு மணியளவில் அளவில் தொலைபேசியில் அவனுக்கு கீழே பணிபுரிபவர்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து, அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள் அனுப்பி பிஸியாக இருந்தான் தேவா.
"தேவா, எத்தனை மணிக்கு விமான நிலையம் செல்ல வேண்டும்? ஊரில் வேலு மாமாவுக்கு தகவல் சொல்லிவிட்டாயா கண்ணா?", என்று தாயார் கேட்ட பின்னர் தான் அவனுக்கு ஞாபகம் வர தொலைபேசியில் வேலு மாமாவின் நம்பரை அழுத்தினான்.
அடித்துப் பிடித்து விமான நிலையம் போய்ச் சேர நேரம் சரியாக இருந்தது. தாயார் ஏதோ ஒரு புத்தகத்தில் பிஸியாகி விட. இவன் கண்களை மூடிக் கொண்டான்.
"தேவா, வேலு மாமா என்ன சொன்னர்?", என்று வினவினார் தாயார்.
"எங்கள் வருகைக்கு காத்திருப்பதாக சொன்னார் அம்மா. உங்களுக்கு ஏதாவது வேணுமா? நான் கொஞ்ச நேரம் படுக்கப் போறேன்", என்றான்.
"இல்லைக் கண்ணா. நீ படு", என்றபடி புத்தகத்தில் மூழ்கிப் போனார் அம்மா.
வேலு மாமா என்று இவன் அழைப்பது இவனின் சொந்த மாமா அல்ல. அப்பாவின் நண்பர். ஜாதி, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மிகுந்த காலங்களில் அப்பாவுக்கு அறிமுகமானவர் வேலு. அம்மாச்சி மிகவும் கண்டிப்பானவர் ஜாதி விடயங்களில். குறைந்த ஜாதி மக்கள் வீட்டினுள் வந்தால் தீட்டு என்பார்.
"என்ன தீட்டோ, இழவோ அதெல்லாம் சும்மா. நீங்க வீட்டுக்குள் வாங்கோ", என்று அவர்களை வரவேற்று, நாங்கள் சாப்பிடும் அதே தட்டில் அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து, அழகு பார்த்தவர் அப்பா. அதே போல அவர்கள் வீட்டுக்கும் சென்று அவர்கள் அன்பாக கொடுக்கும் உணவுகளை ரசித்து சாப்பிடுவார்.
அப்பா வெளிநாடு வந்த பின்னரும் நட்பு தொடர்ந்தது. தொலை பேசி, தபால் என்று நட்பு இன்னும் வலுப்பெற்றது. அப்பாவின் மறைவின் பின்னர் வேலு மாமாவின் கடிதங்களை அம்மா இன்னும் கவனமாக பேணிக் காத்து வந்தார். ஒவ்வொரு கடிதத்திலும் அன்பினை கரைத்து ஊற்றியிருப்பார் மாமா. மிகவும் கஷ்ட சூழ்நிலையில் இருந்தாலும் அதைப் பற்றி ஒரு நாளும் குறிப்பிடமாட்டார். அப்பாவே இவரின் கஷ்டம் உணர்ந்து இடைக்கிடையில் பணம் உதவி செய்ததுண்டு. அப்பாவின் மறைவின் பின்னர் தொடர்பு சுத்தமாக நின்று போனது.
இப்ப வீட்டினை பார்க்க வேண்டும் என்றதும் எங்கோ கிடந்த தொலைபேசி எண்களை கண்டு பிடித்து, அவரை அழைத்து... நான் எவ்வளவு சுயநலவாதி என்று நினைத்துக் கொண்டான் தேவா. அப்பாவின் மறைவின் பின்னர் வேலு மாமா பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டிருப்பார். ஊர் போய் அவருக்கு நிறைய உதவிகள் செய்ய வேண்டும் என்று தாயாரும் மகனும் முடிவு செய்து கொண்டார்கள்.
தொடரும்..