Thursday, May 3, 2012

படை படுக்கட்டும்

என் அம்மாச்சி சமையலில் ஒரு புலி. அவர் செய்யாத சாப்பாடு வகைகள் இல்லை. கேக், பாட்டீஸ் தொடக்கம் உள்ளூர் சாப்பாடுகள் வரை எல்லாமே நல்ல சுவையாக செய்வார். என் அமாச்சிக்கு என் அம்மா உட்பட 6 குழந்தைகள். அவர் ஏதாவது சாப்பாடுகள் செய்வது எனில் இரவு தான் செய்வார். எனக்கு ஒரே மர்மமாக இருக்கும். எதுக்கு இரவு செய்கிறார் என்று. ஒரு நாள் சொன்னார், ஓ! அதுவா. இந்தப் படை எல்லாம் படுத்த பிறகு தான் செய்வேன், என்றார்.
ஏன்?, இது நான்.
என் அம்மாச்சி பதில் சொல்லவில்லை.
உள்ளூர் சாப்பாடு வகைகள் செய்வது எனில் பகலிலும், கேக், லட்டு, அல்வா ஆகியவை செய்யும் போது இரவிலும் செய்வார்.

இந்தப் பழக்கம் என் அம்மா, அவரின் சகோதரர்கள், பிறகு நாங்கள் வளர்ந்த பிறகும் தொடர்ந்தது. என் அம்மாச்சி அல்வா செய்வது எனில் வீட்டில் போர்க்களம் போவது போல அப்படி ஒரு ஆரவாரம். மாவினை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் தெளிய வைத்து, மாவினை பிசைந்து கழுவி, அதில் வரும் தண்ணீரை எல்லாம் சேமித்து... இது ஒரு பெரிய வேலை. ரகசியமாக நடக்கும். ஆனால், நாங்கள் எல்லோரும் சூப்பராக மோப்பம் பிடித்துவிடுவோம்.
இன்று இரவு அல்வா செய்யப் போகிறார்கள், என்று எங்கள் கஸின்ஸ் எல்லோருக்கும் தகவல் போய் விடும். அவர்களும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.
ஆனால் முந்திரிப்பருப்பு, வற்றல் என்று எதையும் கண்ணில் காட்டவே மாட்டார்கள். நாங்கள் முற்றத்தில் அல்வா கிண்டும் இடத்திற்கு பக்கத்தில் பாய் விரித்து, தலையணை போட்டு, எதற்கும் ரெடியாகவே இருப்போம்.
நித்திரை தூங்கி விழுபவர்களையும் சத்தம் போட்டு எழுப்பி விடுவோம்.


இந்தக் கூத்து எல்லாமே ஒரு 12 மணி வரை தான் செய்ய முடியும். அதன் பின்னர் பாதி தூக்கம், பாதி முழிப்பு என்று ஒரு நிலை வரும்.
அப்ப தான் என் அம்மாச்சி முந்திரிப்பருப்பு, வற்றல் இரண்டையும் நெய்யில் வறுத்து வைப்பார். கைக்கெட்டும் தூரத்தில் வைத்தாலும் போய் எடுக்க முடியாதபடி தூக்கம் சுழற்றி அடிக்கும். இதை சாப்பிடத் தானே இப்படி ஆளாய் பறந்தோம் என்பது மறந்து போயிருக்கும்.  அடுத்த நாள் விடிந்தெழுந்து பார்க்கும் போது அழகிய பச்சை அல்லது சிவப்பு நிறத்தில், முந்திரி தூவப்பட்ட அல்வா தட்டில் இருக்கும். ஆனால், நாங்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.
படை பறந்திச்சு. ஆனால் இப்ப யாரும் தேடுவார் இல்லாமல் இருக்கே, என்று அம்மாச்சி வருவோர் போவோருக்கெல்லாம் சொல்லிக் கொண்டே அவர்களுக்கு அல்வா கொடுப்பார்.


என் அப்பாவுக்கு இதில் உடன்பாடு இல்லை. பிள்ளைகளுக்கு தானே செய்கிறோம். பகலில் செய்தா என்னவாம், என்று குறைபட்டுக் கொள்வார்.
இவர் ஈஸியா சொல்லிட்டுப் போயிடுவார். நான் இந்தப் படையோடு படும் பாடு... என்று அம்மாச்சி முணுமுணுப்பார்.
என் அம்மா கேக் செய்ய ஆரம்பித்த போது என் அப்பாவின் ஆணைப்படி பகலில் செய்யத் தொடங்கினார்.

ஆனால் பாருங்கள் அல்வா செய்வது எனில் முந்திரிப் பருப்பு, வற்றல் இரண்டுக்கு மட்டுமே பறப்போம். கேக் செய்வது எனில் எவ்வளவு பொருட்களுக்கு பறக்க வேண்டும்... பட்டர், சீனி அடிக்கும் போது அதை அள்ளிச் சாப்பிடுவது ஒரு தனி சுகம். பின்னர் மா சேர்த்து அடிக்கும் போது, அடித்த பின்னர் இப்படியே தொடரும். என் அம்மா ஒரு பெரிய சட்டியில் பட்டர், சீனி சேர்த்து மத்தினால் தான் அடிப்பார். சட்டி நகராமல் பிடிக்க ஒரு ஆள் வேணும். அந்த பொறுப்பான பதவி வகிக்க பெரிய சண்டையே நடக்கும். ஏனெனில் சட்டியை பிடிப்பவர்  எதேச்சையாக கைகளை மேல் விளிம்பு வரை கொண்டு சென்று, விபத்து போல கேக் கலவையினை அடிக்கடி விரல்களினால் தொட்டு நக்க சந்தர்ப்பம் அதிகம் அல்லவா. ஆனால், என் அம்மா மத்தினை சுழற்றும் வேகத்துக்கு ஏற்றாப்போல சட்டியை நகராமல் பிடிக்க வேண்டும். ஒழுங்கா பிடிக்காமல் இருந்தால் அந்த வேலை வேறு யாருக்காவது கொடுக்கப்படும்.


அதன் பிறகு முந்திரிப் பருப்பு, வற்றலுக்கு பறந்து, கேக் கலவையினை ட்ரேயில் ஊற்றிய பிறகு சட்டி, மத்து இவற்றுக்கு ஒரு பெரிய சண்டையே நடக்கும். மத்து ஒருவருக்கு கொடுக்கப்படும், சட்டியில் கோடு போட்டு ஒரு பகுதி ஒருவருக்கு, மற்றைய  பகுதி இன்னொருவருக்கு என்று கொடுக்கப்படும்.
நான் அப்பவே சொன்னேன் இந்தப் படை படுத்த பிறகு செய்யலாம் என்று நீ தான் கேட்கவில்லை, என்று அம்மாச்சி என் அம்மாவிடம் குறைபட்டுக் கொள்வார்.
பிறகு நாட்டுப் பிரச்சினையால் அண்ணன்கள் ஒவ்வொரு பக்கம், நாங்கள் ஒரு பக்கம் என்று பிரிந்து போனோம். கேக் செய்வது எல்லாம் அடியோடு நின்று போனது.
இப்ப நினைத்தவுடன் கேக் செய்ய முடிகிறது. ஆனால், என் பிள்ளைகள் எதற்கும் பறப்பதில்லை. என்ன இப்படி இருக்கிறார்கள் என்று நினைப்பேன். நாங்கள் சட்டி, மத்து இப்படி எல்லாவற்றுக்கும் சண்டை பிடித்த கதைகள் சொன்னால் சிரித்துக் கொள்வார்கள்.
இப்ப நினைத்தால் சிரிப்பு வந்தாலும் திரும்ப அந்தப் பருவம் வராதா என்று அடிக்கடி ஏங்குவதுண்டு. இப்பவும் பழைய நினைவில் சட்டியை வழித்து ஒரு டீஸ்பூன் சாப்பிட்டாலும் பிறகு ஏனோ மூட் வருவதில்லை. என் அம்மாச்சி சொல்வது போல " படை படுக்கட்டும் " என்ற வரி தான் இப்பெல்லாம் கேக் செய்யும் போது ஞாபகம் வரும்.