Sunday, February 16, 2014

குறட்டை


என் தூக்கம் தொலைந்துவிட்டது. காரணங்கள் என்ன? அப்படி ஒன்றும் பல காரணங்கள் இல்லை. ஒன்றே ஒன்று தான். குறட்டை. 



என்னது நீ குறட்டை விடுவியா, என்று புருவத்தை சுருக்க கூடாது. என் ஆ.காரர் தான் அதில் புலி. திருமணத்தின் முன்னர் என் அப்பா சும்மா ஊதூவார் பாருங்கள். டீசல் எஞ்சின் போல அப்படி ஒரு சத்தம். சில நேரங்களில் ஸ்டீம் எஞ்சின் போல சத்தமும் வரும். ஆனால், பாருங்கள் என் அம்மா ஒரு நாள் கூட புகார் சொன்னதில்லை. கல்லானாலும் கணவன், குறட்டை விட்டாலும் புருஷன் என்று வாழ்கிறார் அம்மா. 

என்னால் அப்படி இருக்க/படுக்க முடிவதில்லை. அவர் படுக்க செல்லும் முன்னர் அதாவது குறைந்தது 30 நிமிடங்களின் முன்பு நான் படுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நான் சோஃபாவுக்கு சிஃப்ட் ஆகிவிடுவேன்.
 நீங்கள் நினைப்பது போல உடனே எழுந்து சோஃபாவுக்கு போய்விடுவேன் என்று நினைத்தால் அது பெரும் தவறு. கையால் மெதுவாக தள்ளிவிட்டு பார்ப்பேன், குப்புற படுத்திருந்தால் எழுந்து நேராக படுக்க சொல்வேன்.. கடைசி ஆயுதமாக எழுந்து சோஃபாவுக்கு போய் விடுவேன் என்று சொன்னால் என் கணவர் மிரண்டு விடுவார். ஏதோ விவாகரத்து செய்துவிடுவேன் என்று சொன்னது போல மிரண்டு போய் பார்ப்பார். ஆனால், இதெல்லாம் சில நொடிகள் தான் திரும்ப குறட்டை ஒலி காதை பதம் பார்க்கும். 

எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. என் கணவருக்கு குறட்டை என்பது பரம்பரையில் வந்ததா அல்லது இடையில் வந்து ஒட்டிக் கொண்ட பழக்கமா, என்று விளங்கவில்லை. ஒரு நாள் அவரின் பெற்றோர் வீட்டுக்கு சென்ற போது என் சந்தேகம் தீர்ந்தது. இரவு என் மாமனார், மாமியார் அறையில் இருந்து ஒரே குறட்டைச் சத்தம். என் கணவர் இங்கிருந்து ஊத, பதிலுக்கு அவர்கள் அறையில் இருந்து யாரோ பதில் கொடுக்க, நான் பொறுத்தது போதும் பொங்கி எழு என்று தலையணையுடன் எழுந்து சோஃபா தேடிச் செல்ல, அங்கு என் மாமானாரும் தலையணையுடன் வர, குறட்டையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தான் இன்னொரு குறட்டையால் பாதிக்கப்பட்டவரின் வலி, வேதனை புரியும் என்பதால் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொன்ன பிறகு கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தது. மாமா எனக்கு சோஃபாவை விட்டுக் கொடுத்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டார். ஆனால் பாருங்கள் ஒலி காற்றில் பயணம் செய்யும் என்று எனக்கு விஞ்ஞானத்தில் படித்தது அப்போது தான் தெளிவாக விளங்கியது. 
ஏதோ ஒரு படத்தில் சிவாஜியும் பாலையாவும், நீ மாமா, நீ மாப்ளே என்று கச்சேரி செய்வார்களே அது போல இரவு முழுவதும் ஒரே குறட்டை கச்சேரி தான். 
விளம்பரங்களில் காட்டும் பந்து போன்ற பொருளை வாங்கி, அதனை அவரின் முதுகின் பின்னால் ஒரு உறையில்  அந்தப் பந்தினை வைத்தால்  குறட்டை குறையும் என்று நினைப்பேன். ஆனால், விளம்பரங்களில் வரும் ஆண்கள் போல என்னவர் மல்லாக்கா படுத்து மட்டும் குறட்டைவிடும் ஆள் அல்ல. நின்று கொண்டே குறட்டைவிடும் ஆள். இவருக்கு அதெல்லாம் சரியாக வராது. உடம்பு முழுக்க பந்து வைச்சாக் கூட கூலாக குறட்டை விடுவார். 
என் தோழி சொன்னார், நீச்சல் வீரர்கள் காதினுள் தண்ணீர் போகாமல் பயன்படுத்தும் இயர்ப்ளக் பயன்படுத்தினால் பலன் கிட்டும், என்று... இதெல்லாம் நடக்கிற காரியமா? திருடன் வந்தால் அல்லது பிள்ளைகள் எழுந்து அழுதால்....இப்பதைக்கு சோஃபா தான் ஒரே கதி. 

நீங்கள் இப்படி குறட்டை விடும் துணையோடு வாழ்க்கை நடத்தினால் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன்!