நான் பயப்படும் விடயங்கள் இரண்டு. 1. பாம்புகள் 2. ....
முதல்ல இதைப் படியுங்கள். பிறகு இரண்டாவது சொல்றேன். வீட்டினை சுத்தம் செய்து கொண்டிருந்த போது வெளியே சிறுவர்கள் எதையோ ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. வேலை முடித்த பின்னர் ஓய்வாக இருந்தபோது இரண்டு இளைஞர்கள் மீண்டும் அதே இடத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள். அட! என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேனே ஒழிய போய் பார்க்க வேண்டும் என்று எண்ணம் எழவேயில்லை. மாலை நேரம் தபால் பெட்டியில் அன்றைய தபால்களை எடுக்க சென்ற போதும் நினைவுக்கு வரவில்லை. தபால்களை எடுத்து விட்டு நிமிர்ந்த போது நீளமாக ஏதோ ஒன்று கண்ணில் பட்டது. முதலில் மனப் பிரமையாக இருக்குமோ என்று நினைத்தேன். மீண்டும் பார்த்த போது மனப்பிரமை அல்ல உண்மை என்று விளங்கியது. பக்கத்து வீட்டு கார் பார்க்கிங் செய்யும் இடத்தில் ஒரு ஓரடி நீள பாம்பு அடிபட்டுக் கிடந்தது. உடல் நடுங்கத் தொடங்கியது. சாவுக்கிராக்கி! இது சாக வேறு இடம் கிடைக்கவில்லையா? என் வீட்டருகில் தான் வந்து சாகணுமா? எனக்கு ஈரக் குலையே நடுங்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டு ஆசாமி காரை பார்க் செய்துவிட்டு இறங்கினார். செல் போனில் பயங்கர பிஸியாக இருந்தார். என் மிரண்ட விழிகளைப் பார்த்ததும் என்னாச்சு என்றார்.
பாம்...பு என்றபடி கைகளைக் காட்டினேன். ஓ! அதுவா நான் தான் கொன்றேன் இப்ப என்ன அதுக்கு, என்றபடி அதை மிதித்துக் கொண்டே கடந்து சென்றார்.
வேறு இரு வாண்டுகள் வந்து பக்கத்தில் நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். இதுங்களுக்கு பாம்பு என்றால் பயம் இல்லையா?
அன்று என் மகன் பள்ளியில் இருந்து வந்ததும் பாம்புக் கதையை சொன்னேன். இதென்ன பிரமாதம் அம்மா. எங்க ஸ்கூல் விளையாட்டு மைதானத்தில் நாங்க விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு ஸ்நேக் வந்திச்சு. எங்க கேம்ஸ் டீச்சர் காலினால் தள்ளிக் கொண்டு போய் ஓரமா விட்டாங்க. அது ஓடியே போயிருச்சு, என்றார்.
மனிதர் எங்கேயும் நிம்மதியா இருக்கவே முடியாது போலிருக்கே. இப்பெல்லாம் வெளியே இறங்கு முன்னர் பாம்பு ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்த பின்னர் தான் கீழேயே இறங்குவேன்.
இரண்டவாது பயம்... ஊசி.
சமீபத்தில் என் மருத்துவரைப் பார்க்கப் போயிருந்த போது வழமையான செக்கப் முடித்த பின்னர் ஒரு ஊசியின் பெயரைக் குறிப்பிட்டு அந்த ஊசி உனக்கு சிறு வயதில் போட்டதா என்றார்.
ம்ம்ம்... அதெல்லாம் போட்டாச்சு என்று அவசரமாக பதில் சொன்னேன்.
அதுக்கு ஆதாரம் இருக்கா, என்றார் மருத்துவர்.
ஊசி போட்ட மருத்துவரை கூட்டிட்டே அலைய முடியுமா? என்று நினைத்துக் கொண்டே, வாட் யூ மீன்?, என்றேன்.
இல்லை ஊசி போட்ட பிறகு ஒரு கார்ட் தருவார்களே அது இருக்கா என்றார்.
நல்லாக் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி. இலங்கையில் எங்க வீட்டின் மீது குண்டு போட்டவன் தலையில் இடி விழ என்று சாபம் போட்டுக் கொண்டே... இப்ப எதுக்கு அதையெல்லாம் கேட்கிறார் என்று யோசனை வந்தது.
இவ்வளவு நாட்களாக நான் இந்தியப் பெண் என்று நினைத்திருப்பார் போல என் மருத்துவர். அவருக்கு நான் என் சொந்தக் கதையினை நீட்டி முழக்காமல் சொன்னேன். அதாவது இலங்கையில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, பின்னர் கனடாவில் வளர்ந்து, இப்ப அமெரிக்காவில் ....
ஓ! ரியலி. அப்ப ஊசி போட்டுடலாம் என்று மீண்டும் ஊசி போடுவதிலேயே குறியாக இருந்தார்.
இப்ப எதுக்கு ஊசி, பூசின்னுட்டு. நான் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன், என்றேன்.
பெண்ணே! இது பத்து வருடங்களுக்கு ஒரு முறை போட வேண்டிய ஊசி. இப்ப போடுறியா அல்லாவிட்டால் அடுத்த தடவை..... இல்லை இப்பவே போடலாம் என்று அவரே பதில் சொல்லிய பின்னர், என் முதுகில் மெதுவாக தட்டி, Every thing is going to be alright என்றபடி போய் விட்டார்.
அவர் போன பின்னர் இரு நேர்ஸ்கள் உள்ளே வந்தார்கள். இரண்டும் ஆண்கள். எதுக்கு இரண்டு பேர் வரணும். ஒருவர் என்னைப் பிடிக்க, மற்ற ஆசாமி ஊசியால் குத்தப் போகிறாரோ..
நான் சமர்த்தாக இருப்பேன் என்று புலம்பிய என்னை விளங்காமல் பார்த்துக் கொண்டே மற்றைய ஆசாமி ஓரமாக நிற்க, அடுத்த ஆசாமி ஊசியை என்கையில் குத்திய பின்னர், இரண்டு நாட்களுக்கு வலி இருக்கும். ஹெவியான பொருட்கள் எதையும் தூக்காதே என்றபடி விடை பெற்றார்.
அடப்பாவிகளா! இப்பவே வலி உயிர் போகுதே. இன்னும் இரண்டு நாட்களில் கையே போயிடும் போலிருக்கே என்று புலம்பியபடி வீடு வந்து சேர்ந்தேன்.
கையை நகர்த்தவோ அல்லது வேறு எந்த வேலையும் செய்ய முடியாதபடி வலி பின்னி எடுத்தது.
விளையாடிக் கொண்டிருந்த மகனிடம் தண்ணீர் எடுத்து தரும்படி கேட்டேன்.
ஏன் உங்களுக்கு என்னாச்சு, என்றார் மகன்.
ஊசி போட்டார் மருத்துவர், என்றேன்.
அம்மா, உங்களுக்கு ஒரு ஊசி போட்டதுக்கே இவ்வளவு வலின்னா எங்களுக்கு எத்தனை ஊசி குத்தினாங்க. எவ்வளவு பெய்ன், நோவு இருந்திருக்கும்...
ராசா! தண்ணி எங்கே?
இருங்க. நான் இன்னும் பேசி முடிக்கவில்லை .....
சரி. தப்பு தான். ராசா, பழி வாங்கிற நேரமாய்யா இது. போய் தண்ணி கொண்டு வாங்க... என்றேன்.
இருங்க. போன வருடம் கூட நான் அழ அழ ஒரு ஊசி போட்டாங்களே ஞாபகம் இருக்கா அம்மா....
சே! இதுக்கு நானே போய் தண்ணியை எடுத்து குடிச்சு தொலைக்கலாம் என்று நினைத்தபடி சமையல் அறை நோக்கிப் போனேன்.