Saturday, March 20, 2010

Ms.Rose and me!

நான் வெள்ளை உடை மாட்டிக் கொண்டு அப்படியே கம்பீரமாக நடந்து வருகிறேன். கட்டிலில் படுத்திருக்கும் நோயாளியை செக் பண்ணுகிறேன். திடீரென்று முகத்தில் ஏதோ தொப்பென்று விழுகிறது. அட தலையணை.... என் சகோதரி போகிற போக்கில் என் மேல் வீசி விட்டு போகிறார். இவ்வளவு நேரமும் நான் கண்டது கனவா?. எழுந்து நேரம் பார்க்கிறேன். காலை 6 மணி. ஸ்கூலுக்கு நேரமாச்சு.

டாக்டராக வேண்டும் என்பதே என் கனவு. என் தோழிக்கும் இதே கனவு தான். அவள் சொன்னாள், " வெளிநாட்டில் மருத்துவ படிப்பு படிப்பதென்றால் எங்காவது வாலண்டியராக வேலை செய்தால் அது ஒரு பெரிய ப்ளஸ். அதாவது ஆஸ்பத்திரி, நேர்ஸிங் ஹோம், இராணுவம்.... இப்படி எங்காவது தொண்டர் வேலை பார்க்க வேண்டும்."

இதெல்லாம் ஆவுற காரியமா?. டாக்டராக வேண்டும் என்று ஆசை தான், ஆனால் இரத்தத்தை பார்த்தால் மயக்கம் வரும். எனவே நோ ஆஸ்பத்திரியில் தொண்டர் வேலை.
இராணுவம்.... எங்காவது புயல், நிலநடுக்கம், சண்டை நடக்கும் இடத்திற்கு அனுப்பினால். நினைக்கவே தூக்கம் வரமாட்டுதாம். அம்மாவை விட்டு பிரிந்து நான் எப்படி இருப்பேன்.

இறுதியில் நானும் தோழியும் சேர்ந்து முடிவு செய்த இடம்....முதியோர் காப்பகம்.
போய் கேட்டதும் வேலையை தூக்கி தந்து விட்டார்கள்.
சம்மர் லீவில் வேலை. காலை 8 மணிக்கு வேலையில் நிற்க வேண்டும்.
முதியவர்களுக்கு பேப்பர், புத்தகம் வாசிப்பது, சில சமயம் அவர்கள் தட்டி விளையாடும் பந்துகளை தூக்கி போடுவது, கூஜா தூக்குவது என்று பல வேலைகளையும் முகம் சுழிக்காமல் செய்ய வேண்டும்,

ரோஸ்- காப்பகத்தில் மிகவும் சிடுமூஞ்சி. எவருடனும் பேச மாட்டார். கைத்தடியை தட்டி தட்டி நடப்பார்.
சில நேரங்களில் நான் அவருக்கு பேப்பர், புத்தகம் படித்து இருக்கிறேன். கைத்தடியை நிலத்தில் தட்டியபடியே கேட்டுக் கொண்டிருப்பார்.

ஒரு நாள் ரோஸின் மகள் வந்தார். இருவருக்கும் ஏதோ வாக்கு வாதம் நடந்தது. பூட்டிய அறையிலிருந்து சத்தம் வெளியே கேட்டது. சிறிது நேரத்தில் ரோஸின் மகள் கோபத்துடன் புறப்பட்டு போய் விட்டார்.

அறையை விட்டு வெளியே வந்த ரோஸ் என்னிடம் பேப்பர் படிக்க சொல்லிவிட்டு அமர்ந்தார். நான் படிக்கத் தொடங்கியதும் சிறிது நேரத்தில் கேவி கேவி அழத் தொடங்கி விட்டார். எனக்கு அவர் மகள் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு போனது ஞாபகம் வந்தது. நான் ரோஸின் தலையில் என் கையை வைத்து மெதுவாக வருடிக் கொடுத்தேன். அப்போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.....ரோஸின் டோப்பா( wig) என் கையில். அவர் விக் அணியும் விடயமே அப்போது தான் எனக்கு தெரியும். நான் திகைத்து நிற்க.... மற்றவர்கள் சிரிக்க... ரோஸ் அவமானத்தில் குறுகிப்போனார்.

என்னை சுட்டெரிப்பது போல பார்த்தவர். அவரின் கைத்தடியை என் காலில் வைத்து அழுத்தி தன் கோபத்தை தீர்த்துக் கொண்டார். இதெல்லாம் சில நொடிகளில் யாருக்குமே தெரியாமல் நடந்து முடிந்தது.

வலியால் துடித்துப் போனேன். யாரிடம் போய் முறையிடுவது. யார் நம்புவார்கள். உயிரே போகும் அளவு வலி. நொண்டியபடியே வெளியே வந்தேன். ரோஸ் தாக்கிய இடத்தில் மெதுவாக இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
வெளியே வரும்போது என் தோழியையும் எச்சரிக்கை செய்து விட்டே வந்தேன்.

டாக்டராகும் ஆசையை கொஞ்ச நாட்கள் மூட்டை கட்டி வைத்து விட்டேன். அடுத்த லீவில் பார்க்கலாம்.

குறிப்பு:
இக்கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனை.

Thursday, March 18, 2010

சீனிச் சம்பல்


தேவையானவைவெங்காயம் - 3
புளி -கொஞ்சம்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மாசித்தூள்(விரும்பினால்) - 1/2 டீஸ்பூன்
சீனி - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
பெப்பர் ப்ளேக்ஸ்(காய்ந்த மிளகாய்) - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு
மஞ்சள் - சிறிது

வெங்காயத்தை நீளவாக்கில் மிகவும் மெல்லியதாக அரிந்து வைக்கவும்.
வெங்காயத்துடன் மிளகாய்த்தூள், உப்பு, பெப்பர் ப்ளேக்ஸ்(dried red chili flakes) , மாசித்தூள் (விரும்பினால்), கறிவேப்பிலை கலந்து வைக்கவும்.
நான்-ஸ்டிக் சட்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்க்கவும். பிறகு பட்டை சேர்க்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து 4 நிமிடங்கள் கிளறவும். புளி( 2 டீஸ்பூன் ) சேர்த்து, அடுப்பை சிம்மரில் விட்டு மூடிவிடவும். இடையிடையே திறந்து கிளறி விடவும்.
10 நிமிடங்களின் பிறகு( வெங்காயம் பொன்னிறமானதும் ) சீனி சேர்க்கவும்.
மேலும் ஒரு 7- 8 நிமிடங்கள்மூடி போடாமல் கிளறி இறக்கவும்.


இது சப்பாத்தி, நூடில்ஸ் க்கு ஏற்ற சைட் டிஷ்.

Wednesday, March 17, 2010

கத்தரிக்காய் சாம்பார்

கத்தரிக்காய் சாம்பார்

தேவையானவைகத்தரிக்காய் - 1
சின்ன வெங்காயம் - 7
புளி
பெருங்காயம்
துவரம் பருப்பு - 1/2 கப்
மைசூர் பருப்பு - 1/2 கப்
மிளகாய் - 3
தக்காளி - 1
கறிவேப்பிலை
கொத்தமல்லி தழை

சாம்பார் பொடிக்கு:
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கொத்த மல்லி விதை - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 6
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சின்ன சீரகம்- 1/4 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பருப்புடன் மஞ்சள், உப்பு, பெருங்காயம், சிறிது நெய் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.
இதனுடன் கத்தரிக்காய்,பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும்.
பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு, சிவக்க வறுத்து, அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த பொடியை பருப்புக் கலவையில் விடவும்.
புளி விடவும்.
தக்காளி, வெங்காயம் சேர்க்கவும்.
பச்சை வாடை போனதும் கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
இறுதியில் தாளித்துப் போடவும்.
சாம்பார் தயார்.

இட்லி உபயம்: மகி(ஹி)
இந்த சாம்பார் நான் ஒரு வார இதழில் இருந்து கற்றுக் கொண்டேன்.
சிறிது மாற்றங்களுடன் நான் முயற்சி செய்த இந்த ரெசிப்பி என் கணவரின் விருப்பமான டிஷ்.

Tuesday, March 16, 2010

Iris Foldingபேப்பர்
க்ராஃப்ட் பேப்பர்ஸ்
டேப்
பென்சில்

ஒரு பேப்பரில் உங்களுக்கு பிடித்த டிசைன் வரைந்து கொள்ளவும்.
அதில் படத்தில் காட்டியபடி கோடுகள் போட்டு கொள்ளவும்.

இந்த படத்தின் அவுட் லைனை மட்டும் வாழ்த்து அட்டையில் ட்ரேஷ் பண்ணவும்.


பின்னர் கூரான கத்தியால்/கத்தரிக்கோலால் படத்தில் காட்டியபடி டிஸைனை வெட்டி எடுக்கவும்.


வாழ்த்து அட்டையை திருப்பி வைத்து, கோடுகள் போட்ட பேப்பரின் மேலே வைத்து ஓரத்தில் டேப்(அசையாமல்)ஒட்டி விடவும்.

க்ராஃப்ட் பேப்பரை நீளமாக வெட்டி, ஓரத்தில் மடித்து நன்கு அழுத்தி(crease) விடவும்.அழுத்தி மடித்த பேப்பரை 1 என்ற இலக்கமிட்ட இடத்தில் வைத்து இருபுறமும் டேப் (வாழ்த்து அட்டையின் மேல்) ஒட்டவும்.
வேறு கலரில் பேப்பர் எடுத்து, மடித்து 2 என்ற இலக்கமிட்ட இடத்தில் வைத்து டேப்பால் ஒட்டவும்.


ஒற்றைப்படை(odd numbers) இலக்கத்திற்கு ஒரே கலரிலும், இரட்டைப்படை (even numbers)இலக்கத்திற்கு வேறு கலரிலும் ஒட்டவும்.
1, 2, 3 என்ற வரிசைப்படியே ஒட்ட வேண்டும்.
நடுவில் நம்பரில்லாத பகுதிக்கு பூ, இலை என்று விரும்பிய டிஸைன் ஒட்டலாம்.


அழகிய ஐரிஸ் ஃபோல்டிங் கார்ட் தயார்.

Sunday, March 14, 2010

முள்ளங்கி சுண்டல்


தேவையானவை:


முள்ளங்கி - 1 கட்டு
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - 8
பூண்டு - 2 பல்
தேங்காய்பூ - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் - 1 டீஸ்பூன்
கடுகு, சீரகம்- தலா 1 டீஸ்பூன்
குடமிளகாய் - பாதி
வெந்தயம் சோம்பு பவுடர்- 1 டீஸ்பூன்

முள்ளங்கியை சுத்தம் செய்து, துருவிக் கொள்ளவும்.
துருவும் போது வரும் தண்ணீரை நன்கு பிழிந்து கொள்ளவும்.
முள்ளங்கியின் இலைகளை சுத்தம் செய்து, பொடியாக அரிந்து வைக்கவும்.


வெங்காயம், பூண்டு, மிளகாய், குடமிளகாய் பொடியாக அரிந்து வைக்கவும்.
சட்டியில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், பூண்டு, குடமிளகாய், மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், மஞ்சள், தேங்காய் துருவல் சேர்க்கவும்.
துருவிய முள்ளங்கி சேர்த்து கிளறவும்.
முள்ளங்கி போட்டு 1 நிமிடத்தின் பிறகு பொடியாக நறுக்கிய முள்ளங்கி இலைகளை சேர்க்கவும்.
இறுதியில் வெந்தயம் சோம்பு பவுடர் சேர்க்கவும்.
சுவையான முள்ளங்கி சுண்டல் தயார்.


குறிப்பு:
அடுப்பிலிருந்து இறக்கிய பின்பே உப்பு போட வேண்டும்.
முள்ளங்கி தண்ணீரை ரசத்தில் சேர்க்கலாம்.
முள்ளங்கியின் தோலை நீக்கியும் செய்யலாம். தோலுடனும் துருவி செய்யலாம்.