Wednesday, January 18, 2012

நானும் தயிர் செய்திட்டேனே!!!

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி வேதாளத்தின் தலையை சதக் என்று வெட்டினான்... இது நான் சின்ன வயதில் அம்புலிமாமாவில் படித்த கதை. இப்ப அதுக்கென்ன என்கிறீர்களா? நான் தயிர் செய்த கதையும் கிட்டத்தட்ட இப்படித்தான்.

ஊரில் இருந்தபோது என் அம்மா தயிர் செய்வார்கள். பாலைக் காய்ச்சி, உறை ஊற்றி வைப்பார்கள் அடுத்த நாள் நல்ல சுவையான தயிர் கிடைக்கும். எனக்கு பருப்புக் குழம்பு, வெந்தயக் குழம்பு, உள்ளி மிளகு சொதி... இப்படி என்ன கறி என்றாலும் தயிர் வேணும். அமெரிக்கா வந்ததிலிருந்து தயிர் எப்போதும் கடையில் வாங்குவதோடு சரி.


ஒரு நாள் என் உறவினர் சொன்னார், " நான் எப்போதும் வீட்டில் தயிர் போடுவேன். கடையில் வாங்குவதில்லை", என்றார்.

சரி ரெசிப்பி சொல்லுங்கள் என்றேன். அவரும் சொன்னார்.
பாலை நன்கு காய்ச்ச வேண்டும். அதாவது 4 தரமாவது பால் பொங்கி வர வேண்டும். மீண்டும் கரண்டியால் ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் அடுப்பை சிம்மரில் வைத்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, இறக்கி வைத்து, நகச்சூடு வந்ததும் சட்டியில் ஊற்றி, உறை போட்டு, சமையல் அறையில் கொஞ்சம் வெப்பமான இடத்தில் வைக்க வேண்டும்.

சரி நானும் செய்யப் போகிறேன் என்று ஆரம்பித்தேன். பாலை காய்ச்சி, பிள்ளைகளையும் கவனித்து, ஒரு வழியா தயிரை உறை ஊற்றி வைத்தால் ... தயிர் வரவேயில்லை. பால் தான் அப்படியே இருந்தது. எங்கே பிழை விட்டேன். பாலை 3, 4 தரம் பொங்கி வர விட வேண்டும்... நான் 5,6 தரம் பொங்க விட்டிருப்பனோ தெரியவில்லை. இனிமேல் நான் தயிர் செய்யும் போது யாரும் என்னைக் கூப்பிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் மீண்டும் தயிர் செய்யும் முயற்சியில் இறங்கினேன்.
பாலை சட்டியில் ஊற்றவும் போன் மணி அடித்தது. என் கஸின் கனடாவிலிருந்து.
என்னப்பா சுகமா?, என்றார்.
ம்ம்... நான் கொஞ்சம் பிஸி. 10 நிமிடங்கள் கழித்து நானே உன்னை அழைக்கிறேன், என்றேன்.
அப்படி என்னத்தை வெட்டி முறிக்கிறியோ தெரியவில்லை, என்று அலுத்துக் கொண்டார் கஸின்.
நான் தயிர் செய்யப் போகிறேன், என்றேன்.
ஓ! எப்படி செய்யுறது என்று எனக்கும் சொல்லு பார்க்கலாம், என்றார்.
எல்லாம் விலாவாரியாக சொல்லிய பின்னர் போனை வைத்துவிட்டு, என் வேலையில் மூழ்கிப் போனேன்.
இந்த முறை கண்டிப்பாக 4 முறை பாலைப் பொங்க விட்டு.... எல்லா ப்ரோசிஜரும் சரியாக ஃபாலோ செய்து பாலினுள் உறையினை சேர்த்து மூடி வைத்தேன்.
அடுத்த நாள் காலையில் சட்டியை திறந்து பார்த்தால் ... தயிர் வரவில்லை. இதில் என் பிள்ளைகள் வேறு அம்மா தயிர் செய்கிறாங்க என்று ஒரே சந்தோஷத்தில் இருந்தார்கள். என் கஸின் அவரின் தயிர் சூப்பராக வந்தது என்று சொன்னபோது எனக்கு என் மீது எரிச்சல் வந்தது. அதெப்படி நீங்க சொல்லி உங்க கஸின் செய்கிற போது உங்களுக்கு எப்படி பிழைக்கும் என்று என் ஆ.காரர் வேறு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிக் கொண்டு...

இதன் பிறகு விக்ரமாதித்தன் கொஞ்ச நாட்கள் முருங்கை மரம் ஏறாமல் அமைதி காத்தான்.
ஒரு ஆறு மாசங்கள் போனதும் மீண்டும் தயிர் செய்யும் ஆசை வந்தது. இந்த முறை வலு கவனமாக எல்லாம் செய்து.... மீண்டும் பால் தான். ஆனால் இந்த முறை பாக்டீரியா கொஞ்சம் பல்கி பெருகி இருந்தது தெரிந்தது.
சோபாவில் இருந்து யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு யோசனை மின்னல் போல வந்தது. அதாவது சூடான/வெப்பமான இடத்தில் வைக்க வேண்டும் என்று சொன்னது நினைவில் வந்தது. நான் வைச்ச இடத்தில் சூடு போதவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

எங்கள் வீட்டு அவன் எப்போதும் சில்லென்று இருக்கும். என் பிள்ளைகளுக்கு ப்ரெட் டோஸ்ட் செய்த பின்னர் அந்த டோஸ்டர் சூட்டில் வைத்தேன். பான் கேக் டோஸ்டரில் போட வந்த என் ஆ.காரர் பால் சட்டியை எடுத்து கவுன்டரில் வைக்க, நான் சட்டியை சன் பாத் ( சூரிய குளியல் ) எடுக்க ஜன்னல் ஓரம் வைத்தேன். என் பிள்ளைகள் ஓடித் திரியும் இடம் என்பதால் சட்டியின் பக்கத்தில் நானும் காவல் இருந்தேன். பால் நான் தயிர் ஆகவே மாட்டேன் என்று அடம் பிடித்தது.
இப்படி ஏன் கஷ்டப்படுவான் என்று என் ஆ.காரர் ஓடிப் போய் தயிர் வாங்கி வந்தார். நானும் லேசாக் திக்காக இருந்த பால்/தயிர் சட்டியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு மறந்தும் போய்விட்டேன்.

ஒரு வாரம் கழித்து சட்டியை திறந்து பார்த்தால் தயிராக மாறி இருந்தது. நானும் தயிர் செய்திட்டேனே!!!!
தயிரில் மேப்பில் சிரப் விட்டு சாப்பிட்டால் யம்ம்ம்ம்ம்ம்ம்.